Published:Updated:

உங்களை மெருகேற்றும் கண்ணாடித் தொடர்!

உங்களை மெருகேற்றும் கண்ணாடித் தொடர்!

உங்களை மெருகேற்றும் கண்ணாடித் தொடர்!

உங்களை மெருகேற்றும் கண்ணாடித் தொடர்!

Published:Updated:

உங்களை மெருகேற்றும் கண்ணாடித் தொடர்!
பாரதி பாஸ்கர்
உங்களை மெருகேற்றும் கண்ணாடித் தொடர்!
உங்களை மெருகேற்றும் கண்ணாடித் தொடர்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நீ நதி போல ஓடிக் கொண்டிரு! பாரதி பாஸ்கர்

நேரில் நின்று...பேசும் தெய்வம்!

தீபாவளியன்று என் அம்மாவைப் பார்க்கப் போயிருந்தேன். சமீப காலமாக உடல் நலம் குன்றிப் படுக்கையிலிருக்கும் அம்மா, பிறர் பேசுவதை உள்வாங்கவும், திரும்பப் பதில் சொல்லவும் சிரமப்படுகிறார். கொஞ்ச நேரம் அம்மாவின் கைகளை ஆதரவாகப் பிடித்து அமர்ந்திருக்கையில், அவளின் நேற்றைய உருவங்கள் என் நினைவுத் திரையில் மாறி மாறி வந்து போயின.

எம்.எஸ்சி&யில் 'கோல்டு மெடல்' வாங்கிய அம்மா, மத்திய அரசு அலுவலக அதிகாரியாக கம்பீரமாக வலம் வந்த அம்மா, என் சிறு வயதில் பேச்சுப் போட்டிக்குத் தயார் செய்து எனக்கு இலக்கிய ஆர்வமூட்டிய அம்மா, மதிய உணவை மறந்துவிட்டு வந்த ஒரு கல்லூரி நாளில், டிபன் பாக்ஸை தூக்கிக் கொண்டு கல்லூரிக்கு வியர்க்க விறுவிறுக்க ஓடி வந்த அம்மா... நெஞ்சை நிறைத்த அம்மாவின் வடிவங்களை நினைத்து நெகிழ்ந்தேன்.

அம்மா... நம் வாயிலிருந்து வார்த்தைகளை வரவழைத்தவள். இந்த உலகம் அவள் சுட்டு விரல் நமக்குக் காட்டியது. எல்லா உறவுகளும் அவள் அறிமுகப்படுத்தியவை. அவள்தான் நம் முதல் குரு. நம் பசி, ருசி, விருப்பு, வெறுப்பு, சந்தோஷம், கவலை எல்லாவற்றையும் நம் உடல் மொழியாலேயே உணர்ந்து கொள்பவள். 'உனக்கு என்ன தெரியும்?' என்று இளமை வேகத்தில் அவளை ஆயிரம் முறை அலட்சியம் செய்திருந்தாலும், ஒரு நாளும் அவள் நம்மை வெறுத்ததில்லை. மகளின் திருமணத்துக்காக நாள் குறிக்கப்பட்ட இரவின் அமைதியில் 'பெண் தூங்கி விட்டாள்' என நினைத்து அவளின் தலையை மெல்ல வருடும் அம்மாவின் கைகளின் வழியே கசியும் கவலையும் கரிசனமும் எந்தக் கடலையும்விட ஆழமானது.

ஒவ்வொரு பெண்ணும், தன் முதல் பிரசவத்தில் ஒரு உயிரை உலகுக்குக் கொண்டு வரும் வலி நிரம்பிய போராட்டத்தில்தான் அம்மாவின் மகத்துவத்தையும் தாய்மையின் தூய்மையான சிகரங்களையும் தரிசிக்கிறாள். எனக்கும் அப்படித்தான்.

எக்கித் தள்ளப்பட்ட ஊஞ்சல் குறிப்பிட்ட தாள லயத்தில் திரும்பத் திரும்ப வருவது போல, ஒரு தாள லயத்துடன் போய்ப் போய்த் திரும்ப வரும் வலி. உச்சகட்ட வலியில், முழுக்க முழுக்க முள்ளால் செய்த சாட்டை சுழன்று சுழன்று நம் உடலை விளாசும் வேகம். 'அம்மா... அம்மா...' என்று அழுது அரற்றிய எனக்குள் உயிர் போய் உயிர் வருவது போல் ஒரு அலறல். சில நிமிடங்களுக்குப் பின், 'ரோஜாப் பூ' மாதிரி குழந்தையை மெல்லிய துணியில் சுற்றித் தன் கைகளில் ஏந்தி என் அருகில் வந்தார் ஒரு தாதி. அந்த நொடியில் என் அம்மாவின் கருவறைக்குள் மீண்டும் போக எனக்குள் ஒரு ஆசை.

'பெண்ணென்று பூமிதனில் பிறந்து விட்டால் மிகப் பீழையிருக்குதடி' என்று பேசுவதில் உண்மை இருக்கத்தான் செய்கிறது. பெண்ணுக்கென்றே பிரச்னைகள். பிரத்தியேக நெருக்கடிகள். காலம் காலமாக கட்டம் போட்டுப் பாண்டி ஆடுவது போன்ற கட்டுப்பாடுகள்... வீட்டுக்குள். 'எல்லா துறைகளிலும் நீ வளரலாம்... ஆனால், என் தோளுக்கு மேல் வளரக் கூடாது' என்று நசுக்கும் ஆணாதிக்கம்... வெளியில். பத்திலிருந்து ஐம்பது வரை எல்லாப் பெண்களையும் 'ஃபிகர்' என்று நோக்கும் வக்கிரப் பார்வையின் அக்னித் தீண்டல்கள், அவமானங்கள், ஆபத்துகள்.

ஆனால், இத்தனைக்கும் மத்தியில் ஒரு அம்மாவாக வாழும் அனுபவமும், தாயாகும்போது தன் அம்மாவைப் போற்றும் அனுபவமும் எந்த ஆணுக்கும் கிடைக்கவே முடியாத மிகப் பெரிய வரம்! இறைவன் பெண்ணுக்கே கொடுத்த பிரத்தியேகக் கொடை!

மீண்டும் என் அம்மாவின் முகத்தைப் பார்க்கிறேன். அவளின் பேச்சு நாவிலிருந்து கண்களுக்கு மாறிவிட்டதை உணர்கிறேன். ''பாட்டி சீக்கிரம் பேசுவாம்மா... கவலைப்படாதே. எங்க கிளாஸ்ல நேத்து ஒரு 'ஜோக்'மா... 'முகேஷ்'ன்னு ஒரு மொக்கைப் பையன் இருக்கான்ல...'' என்று எதையெதையோ பேசி என் மனசை மாற்ற முயலும் என் மகளின் சொற்களில் மெல்லியதாக ஒரு தாய்மையின் கீற்று.

காசிக்குச் சென்றவர்களுக்கு கங்கையின் பிரவாகத்தில் லயிப்பது ஒரு தனி அனுபவம். வடஇந்தியாவின் வாழ்வே கங்கையோடு பிணைந்தது. 'கங்கா மாதா' என்று கண்ணீர் மல்கப் போற்றி அனைவரும் வழிபடும் புனிதத்துக்குரியவள் கங்கை.

ஆயினும், தள்ளாத வயதில் புலன்களின் வீரியம் குறைந்து போன முதுமையிலும் தன் பிள்ளைகளின் நலனுக்காகவே பிரார்த்திக்கும் அம்மாக்களையும், படுக்கையிலேயே பலநாள் இருக்கும் தன் அம்மாவை ஒரு குழந்தையாகப் பாவித்துப் பொறுமையாகப் பார்த்துக் கொள்ளும் மகள்களையும் விடவா கங்கை புனிதமானவள்?!

ஓவியம் ஷிவராம்

 

உங்களை மெருகேற்றும் கண்ணாடித் தொடர்!
-
உங்களை மெருகேற்றும் கண்ணாடித் தொடர்!
உங்களை மெருகேற்றும் கண்ணாடித் தொடர்!
   
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism