அந்தப் பெண் கல்லூரி நாட்களில் ஒருவனை காதலித்திருக்கிறார். ஆனால், சூழ்நிலையால் இருவரும் பிரிந்துவிட்டார்கள். இருவருமே மணம் முடிந்து, குடும்பம்... குழந்தைகள் என்று திசைகள் மாறிப்போன பின்னும், கல்லூரி நண்பர்களிடம் இப்பெண்ணின் தொடர்பு எண் பெற முயற்சித்தவனுக்கு, மெயில் ஐ.டி. கிடைத்திருக்கிறது.
"இன்னிக்கு ஈவினிங் 'சாட்'க்கு வா... இல்லைனா நீ எனக்கு எழுதின லவ் லெட்டர்ஸ், போட்டோஸ் எல்லாத்தையும் ஸ்கேன் பண்ணி, உன் ஹஸ்பண்டுக்கு மெயில் அனுப்பிடுவேன்" என்று அவன் அனுப்பிய மெயிலில் சாம்பிளாக பழைய புகைப்படத்தைப் பார்த்து அரண்டு போனார். வேறு வழியில்லாமல் அவனுடன் 'சாட்' செய்ய, "மிரட்டினதுக்கு மன்னிச்சுக்கோ. சாகறதுக்குள்ள உன்னை ஒரு தடவையாச்சும் பார்த்துட மாட்டோமானு எவ்ளோ ஏங்கியிருக்கேன் தெரியுமா..? ப்ளீஸ்... 'வெப் கேம்'ஐ ஆன் பண்ணு..." என்று சொல்ல, இப்போது கொஞ்சம் பயம் தணிந்து ஒருவித குழப்பமான நிலையில் அவரும் 'வெப் கேம்'ஐ ஆன் செய்திருக்கிறார்.
"வாவ்! பத்து வருஷத்துல இன்னும் அழகாயிட்டியேடி..." என்று ஆரம்பித்தவன், வக்கிரமாக பேச ஆரம்பிக்க, அதிர்ந்து சிஸ்டத்தை ஷட் டவுன் செய்திருக்கிறார். மறுநாள் மறுபடியும் (பிளாக்)மெயில்... " 'சாட்'க்கு வா. இல்லைனா... இதானே உன் புருஷனோட மெயில் ஐ.டி..?" என்று! வேறு வழியில்லாமல் சென்றவரை மிகக் கடுமையாக அச்சுறுத்தி, அவன் வைத்த டிமாண்ட் என்ன தெரியுமா..? 'வெப் கேம்'-ஐ ஆன் செய்துவிட்டு, அவரது ஆடைகளை நீக்கச் சொல்லியுள்ளான். இவர் அதிர, அவன் மிரட்ட, இறுதியாக பணிந்துவிட்டார். பிறகு, "மொத்தத்தையும் என் சிஸ்டம்ல பதிஞ்சுட்டேன்... இதையும் சேர்த்து மெயில் தட்டிடுவேன்..." என்று தொடர்ந்தன மிரட்டல்களும், பணிதல் களும். இதுதான் அவரின் நிம்மதி பறிபோனதற்கு காரணம்.
ரகசிய மென்பொருளை பொருத்திய பிறகு, அவர்கள் இருவருக்கும் இடையே நடந்த 'சாட்' விவரங்கள் மூலமாகவே... மொத்த கதையையும் அறிந்து கொண்ட பின், அப்பெண்ணின் கணவர் கூறிய வார்த்தைகள்தான் எங்களை நெகிழ வைத்தது. "பாவம்... அவ வேணும்னே செய்யல. இதுலயிருந்து எப்படியாச்சும் அவளைக் காப்பாத்தணும். அந்த அயோக்கியனை எங்க வாழ்க்கையில இருந்து விரட்ட நீங்க உதவினா போதும்..." என்று அவர் கோர, அக்கயவனின் அலுவலக முகவரியை அவனின் சமூக வலைதளத்தில் இருந்து பெற்று, நேரில் சென்று எச்சரித்தோம்.
"ராஸ்கல்... எங்கிட்ட சொல்லிடுவேன்னுதானேடா என் மனைவிய மிரட்டற. எனக்கு எல்லாம் தெரியும். மரியாதையா விலகிப் போயிடு. இல்லைனா, இத உன் மனைவிகிட்ட கொடுக்க வேண்டியிருக்கும். அவ உன்னை மன்னிக்கறதுக்கு வாய்ப்பே இல்ல. ஏன்னா, ஒரு பெண்ணோட வாழ்க்கையில எவ்வளவு வக்கிரமா நீ விளையாடி இருக்கேங்கறதுக்கான சாட்சி இது..." என்று இணையத்தில் அவன் நடத்திய அத்தனை உரையாடல் பதிவின் காப்பியை அவனிடம் கொடுக்க, இதைச் சற்றும் எதிர்பார்க்கவில்லை அவன்.
"ஐயோ சார்... இனிமே இந்தத் தப்பை பண்ண மாட்டேன்..." என்றான் பயத்தில் முகம் வெளிறி!
புரிதலோடு, பக்குவத்தோடு தன் மனைவியை மீட்ட அக்கணவரின் இல்லறத்தில் மீண்டும் திரும்பியது வசந்தம்!
'வெப்கேம்'மின் வில்லங்க வடிவத்துக்கு இது ஒரு சாம்பிள். இன்னும் நல்ல குடும்பத்தைச் சேர்ந்த இளம் பெண்கள் பலரும், சூழ்நிலை காரணமாக 'வெப் கேமரா'வை வியாபாரமாக்கி பணம் சம்பாதித்துக் கொண்டிருக்கும் விபரீதமும் அரங்கேறிக் கொண்டிருக்கிறது. அதைப் பற்றிய அந்த வழக்கு... சந்தேகமே இல்லாமல்... ஆயிரமாயிரம் வாட் ஷாக்!
|