"தலைக்கு மேல் வந்துவிட்ட துன்பத்தையும் புறம்தள்ளி, தலையாக நின்று நம்மைக் காப்பாற்றிக் கரை சேர்ப்பவள்தான்... ரேணுகாம்பாள்!''
'வேப்பிலை ஆடை உடுத்தி, அவள் சந்நிதியை வலம் வந்தால், நம் சங்கடங்கள் யாவும் பறந்தோடிப் போகும். நாம் நினைத்ததையெல்லாம் நாம் கேட்காமலே நடத்தி வைக்கும் கருணை மிகுந்த சக்தி அவளுடையது!''
- இப்படியெல்லாம் பக்தர்கள் புகழும் அன்னை ரேணுகாம்பாள் கோயில் கொண்டுஇருப்பது... திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள படைவேடு எனும் கிராமத்தில்!
கோயிலுக்குள் நுழையும் முன்பாக... இந்த படைவேடு, எத்தனை புராண சிறப்பு வாய்ந்தது என்பதைத் தெரிந்துகொண்டால்... இன்னும் உள்ளார்ந்த பக்தியோடு நடைபோடலாம்.
விதர்ப்ப தேசத்து அரசனான இரைவதனின் மகள் ரேணுகா. அவளுக்கு ஏற்ற மாப்பிள்ளை யைத் தந்தை தேட, அவளோ 'என்னை எதிர்த்து நின்று போரிடும், எனக்குச் சமமான ஒரு வீரனைத்தான் மணமுடிப்பேன்' என்று சொல்லி, படையோடு கிளம்பி, இங்கிருக்கும் சந்தவாசல் என்ற இடத்தில் தங்கினாள் (அந்தப் 'படைவீடு' மருவி, இப்போது 'படைவேடு' ஆகியிருக்கிறது). அருகே தவம் செய்து கொண்டிருந்தார் ஜமதக்னி முனிவர். அவர்தான் தனக்கேற்ற கணவர் என்பதை அசரீரி மூலம் உணர்ந்த ரேணுகா, அவர் தன்னைப் போரிட்டு ஜெயிப்பதற்காக அவரைச் சீண்டினாள். அந்தச் சண்டையில் முனிவர் துரத்தியபோது... ஒரு புற்றுக்குள் நுழைந்து, தன் கழுத்துக்கு கீழே கல்லாக்கிக் கொண்டு தலையை மட்டும் காண்பித்தாள் ரேணுகா. நிறைவாக, இருவரும் மணம் புரிந்தனர்.
|