Published:Updated:

என்றும் 16

மா.நந்தினி, படங்கள்: செ.சிவபாலன்

என்றும் 16

மா.நந்தினி, படங்கள்: செ.சிவபாலன்

Published:Updated:
##~##

'பூவுலகில் பூதவுடலுடன் பிறந்த மனிதன், எதை நோக்கி ஓடிக்கொண்டே இருக்கிறான்..?’ - இப்படியொரு கேள்வியை எழுப்பினால்...

'நிம்மதியான, தீர்க்கமான ஆயுள்கொண்ட வாழ்க்கை அமைய வேண்டும் என்பதற்காகத்தான்...'

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

- இதுதான் பெரும்பாலானவர்களின் பதிலாக இருக்கும்.

தேவலோகத்தில் வாழும் தேவாதி தேவர்களே, தங்களின் ஆயுள் நீடிக்கவும், பதவியும் புகழும் பறிபோகாமல் வாழ்வாங்கு வாழவும் மும்மூர்த்திகளையும் வேண்டி நிற்கும்போது... மனிதர்கள் எந்த மூலைக்கு?

அதிலும், 'என்றும் பதினாறு' என்று ஒரு மானுடனுக்கு அருளிய இறைவன் என்றால் கேட்கவா வேண்டும்?

அவர்... திருக்கடையூர், ஸ்ரீஅமிர்தகடேஸ்வரர்.

நாகப்பட்டினம் மாவட்டம், மயிலாடுதுறையில் இருந்து இருபது கிலோ மீட்டர் தொலைவிலும், தரங்கம்பாடியில் இருந்து எட்டு கிலோ மீட்டர் தூரத்திலும் அமைந்திருக்கிறது இந்த அற்புத தலம்.

என்றும் 16

''மிருகண்ட முனிவர், பிள்ளைப் பேறு இல்லாத காரணத்தினால், இறைவனை வேண்டி நின்றார். ஒரு கட்டத்தில் வேண்டிய வரமும் கிடைத்தது... கடுமையான நிபந்தனையுடன். ஆம், 'உனக்குப் பிறக்கும் பிள்ளை, பதினாறு ஆண்டுகள் மட்டுமே உயிர் வாழ்வான்’ என்றபடி அவருடைய வேண்டுதலை நிறைவேற்றினார் இறைவன்.

அதன்படி பிறந்த மார்க்கண்டயேன், செல்லக் குழந்தையாக வளர ஆரம்பித்தான். தினமும் இறை பூஜையிலும் இடைவிடாது ஈடுபட்டான். ஒரு நாள் அமிர்தகடேஸ்வர பெருமானை வழிபட்டுக் கொண்டிருந்தான் மார்க்கண்டேயன். அன்றுடன் அவனுடைய பதினாறு ஆண்டு கால வாழ்க்கை முடிவுக்கு வருகிறது என்பதால், தன்னுடைய பணியை நிறைவேற்ற அங்கு வந்து சேர்ந்தார் எமதர்மன்.

வழிபாட்டுக்கு நடுவே, எமனைப் பார்த்து பயந்து போன சிறுவன், கருவறைக்குள் ஓடி, இறைவனைக் கட்டிப்பிடித்தான். ஆனால், தன் முயற்சியில் சற்றும் சளைக்காதவராக முன்னேறிய எமன், பாசக்கயிறை கோபத்துடன் மார்க்கண்டேயன் மீது வீசி, அவனை வளைத்து இழுத்தார். அந்தக் கயிறு இறைவனையும் சேர்த்து இழுத்ததால்... கோபம் கொண்ட இறைவன், எமதர்மனை உதைத்தெறிந்து, சூலாயுதத்தால் சம்ஹாரம் செய்தார். பிறகு, தன்னையே சதாசர்வகாலமும் வழிபட்டுக் கிடக்கும் மார்க்கண்டேயன் மீது கனிவு கொண்ட இறைவன், 'என்றும் பதினாறு’ என்கிற வரத்தையும் அளித்து தன்னுடன் அமர்த்திக் கொண்டார்.

என்றும் 16

எமன் இல்லாததால்... பூமியில் 'அழித்தல்’ தொழில் தடைபட்டது. பூமியின் பாரம் கூடிக்கொண்டே போனது. பாரம் தாளாது துடித்த பூமாதேவி, இறைவனை வேண்டினாள். இதையடுத்து எமனை உயிர்ப்பித்தார் இறைவன். காலன் எனப்படும் எமனையே சம்ஹாரம் செய்ததால், இவர் 'காலசம்ஹாரமூர்த்தி' என்றழைக்கப்படுகிறார். எமனையே அழித்த தலம் என்பதால், ஆயுள் கூடுவதற்கான வேண்டுதலுக்கு இது பிரசித்தி பெற்ற தலமாகவும் இருக்கிறது'' என புராண வரலாறு சொன்ன, கோயிலில் திருமுறை பாடும் நடராஜன் குருக்கள்,

''ஆயுள் விருத்திக்காக செய்யப்படுவது ஆயுஷ்ய ஹோமம்; 59 வயது முடிந்து 60 வயது தொடங்குபவர்களுக்காக உக்ரரத சாந்தி ஹோமம்; 60 வயது பூர்த்தியடைந்து 61 வயது தொடங்குபவர்களுக்கு சஷ்டியப்த பூர்த்தி ஹோமம்; 70 வயது முடிந்து 71 வயது தொடங்குபவர்களுக்கு பீமரத சாந்தி ஹோமம்; 81 வயது தொடங்குபவர்களுக்கு சதாபிஷேகம் போன்ற ஹோமங்களை இந்த கோயிலில் செய்வது புண்ணியத்திலும் புண் ணியமாகும். நீண்ட ஆயுள் வேண்டி, திருமணத்தை இக்கோயிலில் நடத்திக்கொள்பவர்களும் உண்டு'' என்றார்.

தமிழகத்திலிருந்து மட்டுமல்லாமல், உலக அளவில் வாழ்ந்து கொண்டிருக்கும் பலரும்கூட இக்கோயிலைத் தேடிவந்து, மேற்சொன்ன ஹோமங்களை நிறைவேற்றிக் கொள்வதற்காக குவிவதால், திரும்பிய பக்கமெல்லாம் அறுபதாம் கல்யாணம்... எண்பதாம் கல்யாண ஜோடிகளை நிறையவே பார்க்க முடியும். கூடவே, புத்தம்புது திருமண ஜோடிகளுக்கும் இங்கே பஞ்சமில்லை.

என்றும் 16

அபிராமி அம்பாள் சந்நிதியில், திருமணம் செய்துகொண்ட திருவிடைமருதூர் ரம்யா, ''நான் இந்தக் கோயிலுக்கு சின்னப் புள்ளையிலஇருந்து வந்துட்டு இருக்கேன். இங்க திரும்புற இடமெல்லாம் வயசான தாத்தா, பாட்டிக்கெல்லாம் கல்யாணம் நடக்குறதை பாக்கும்போதே... ரொம்ப சந்தோஷமா இருக்கும். அப்பல்லாம் நம்ம கல்யாணமும் இங்கதான் நடக்கணும்னு நினைப்பேன். பதினாறு வயசுல, அறுபதை பார்த்து பொறாமைப்பட்ட காலம் அது. இப்ப அது நடந்துடுச்சு'' என்று புன்னகைத்த மனைவியைத் தொடர்ந்தார் ஆனந்த பிரபு.

''இவ எனக்கு மாமா பொண்ணுதான். அதனால ஜாதகத்தை எல்லாம் பாக்கல. கல்யாணம் முடிவு பண்ணினதும்... உடனே சின்னப்புள்ளையில ஆசைப்பட்டது போலவே மனசுக்குப் பிடிச்ச கோயில்லயே கல்யாணம் பண்ணிகிட்டோம். 'என்றும் பதினாறு'னு மார்க்கண்டேயனுக்கு அருள் செய்த ஆண்டவன்... என்றென்றும் எங்களுக்கும் அருள்வார். அந்த நம்பிக்கையோட எங்க வாழ்க்கை நல்லபடியாவே நகரும்'' என்றபடி அவர் ரம்யாவை அணைத்துக் கொள்ள, வெட்கத்தில் அவர் முகம் சிவக்க, மொத்தக் குடும்பமும் உற்சாகத்தில்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism