Published:Updated:

ரயிலு ஓட்டும் மயிலு!

அனிதா ஓர் ஆச்சர்யம்ஜே.வி.நாதன், படங்கள்: ரா.ராம்குமார்

ரயிலு ஓட்டும் மயிலு!

அனிதா ஓர் ஆச்சர்யம்ஜே.வி.நாதன், படங்கள்: ரா.ராம்குமார்

Published:Updated:
##~##

'பயணிகளின் பணிவான கவனத்துக்கு... நாகர்கோவிலில் இருந்து இரணியல், பாரசாலா வழியாக கொச்சிவேலி (திருவனந்தபுரம் ஏர்போர்ட்) வரை செல்லும் நாகர்கோவில்  கொச்சிவேலி பாசஞ்சர்... இன்னும் சில நிமிடங்களில் மூன்றாவது பிளாட்பாரத்தில் இருந்து புறப்படும்’

- நாகர்கோவில் ரயில் நிலையத்துக்கு காலை நேரத்தில் வழக்கமாக வரும் அனைவருக்கும்... இந்த அறிவிப்போடு... அந்த ரயிலின் டிரைவர் அனிதாவும் ரொம்பவே அறிமுகம்தான்! ஆனால், புதிதாக வரும் பெண்களுக்கோ... அவர் ஆச்சர்யம்! ''அக்கா... நீங்க, இந்த ரயிலை ஓட்டுவியளா?'' என்று அவர்களெல்லாம் விழிகளை விரிக்க... ''ஆமாம்மே'' என்று சிரித்த முகத்துடன் பதில் சொன்னபடியே அனிதா இன்ஜினில் தாவுவதே அழகுதான்!  

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''ரயில் எனக்கு புதுசில்ல. எங்க அப்பா, அம்மா ரெண்டு பேருமே ரயில்வே பணியாளர்கள். கணவர் சரவணக்குமாரும், ரயில்வே சிக்னல்-டெலிகம்யூனிகேஷன் பிரிவுலதான் வேலை பார்க்கறாரு. சின்ன வயசுல இருந்தே ரயிலைப் பாத்து பாத்தே வளர்ந்ததால, அது மேல எனக்கொரு காதல். அதுவும் அவ்வளவு நீளமான ரயிலை இழுத்துட்டுப் போற இன்ஜினை ஆச்சர்யமா பாப்பேன். 'பெரியவளா ஆனதும் ரயில் ஓட்டுற லோகோ பைலட் (இன்ஜின் டிரைவர்) ஆகிடணும்'கறதுதான் கனவா இருந்துச்சு. முயற்சி திருவினையானதால... இப்ப ஏ.எல்.பி. (அசிஸ்டன்ட் லோகோ பைலட்) ஆகிட்டேன்'' வெற்றியின் பெருமிதம் முகமெங்கும் பொங்கும் அனிதா, நான்காம் வகுப்பு படிக்கும் லாபரண்யா, முதல் வகுப்பு படிக்கும் ஸ்ரீசபரிநாதன் என இரண்டு குழந்தைகளையும் நமக்கு அறிமுகப்படுத்திவிட்டு, பேச்சைத் தொடர்ந்தார்.

ரயிலு ஓட்டும் மயிலு!

''மதுரைதான் சொந்த ஊர். அங்க இருக்கற அரசினர் பெண்கள் பாலிடெக்னிக்கில் 'எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன்’ படிச்சுட்டு, 'அசிஸ்டன்ட் லோகோ பைலட்’ பதவிக்காக 'ரயில்வே சர்வீஸ் கமிஷன்’ எக்ஸாம் எழுதி தேறினேன். ஆவடி, திருச்சி, எர்ணாகுளம்னு எலெக்ட்ரிக், டீசல் இன்ஜின்கள்ல ஆறரை மாசம் பயிற்சி கொடுத்து, 2011-ம் வருஷம் அக்டோபர்ல வேலையில நியமிச்சாங்க. நாகர்கோவில்ல 15 லோகோ பைலட், 35 அசிஸ்டன்ட் லோகோ பைலட் இருக்காங்க. என்னைத் தவிர, எல்லாருமே ஆண்கள்தான். அவங்க எல்லாருமே வேலையில எனக்கு பல வகையிலயும் உதவியா இருக்காங்க. அதனால, இந்த வேலை எனக்கான தன்னம்பிக்கையையும், சந்தோஷத்தையும் கொடுத்துட்டே இருக்கு.

இன்ஜின்ல எரிபொருள் இருக்கானு பாக்கறதும், சிக்னலை கவனிச்சுக்கிறதும் என்னோட வேலை. ஒவ்வொரு அசிஸ்டன்ட் லோகோ பைலட்டும், குறைஞ்சபட்சம் அஞ்சு வருஷம் பைலட்டுக்கு உதவியா இருந்து, வேலையைக் கத்துக்கணும். பிறகுதான் தனியா ரயிலை இயக்க அனுமதிப்பாங்க. ரெண்டு வருஷம் முடிஞ்சுருச்சு. இன்னும் மூணு வருஷத்துக்கு பிறகு, நானே தனியா ரயிலை ஓட்டப்போற அந்த நாளுக்காக ஆவ லோட காத்துட்டு இருக்கேன்'' - கண்களில் கனவு மின்ன சொல்லும் அனிதா,

''என்னைப் பார்க்கற பலரும், 'வீட்டு வேலைகளையும் பார்த்துட்டு, ரயில்லயும் வேலை பார்க்குறது சிரமமா இல்லையா?’னு கேட்பாங்க. 'இந்த உலகத்துல சிரமம் இல்லாத வேலை என்ன இருக்கு..? வேலைக்குப் போகாம வீட்டுல இருக்கற பெண்கள் எல்லாம் கால் ஆட்டிகிட்டு படுத்து தூங்கிட்டிருக்காங்கனு நினைக்கறீங்களா?'னு கேக்கத் தோணும். ஆனா, சிரிச்சுக்கிட்டே கடந்துடுவேன். என்னைப் பொறுத்தவரை, வேலைக்குப் போற பெண்களை விட, வீட்டுல இருக்கறவங்களுக்குத்தான் கூடுதல் கஷ்டம்'' என்று அழுத்தம் கொடுக்கிறார்.

ரயிலு ஓட்டும் மயிலு!

''தினமும் குழந்தைகளை தயார் செஞ்சு, சொந்தக்காரங்க வீட்டுல விட்டுட்டு போயிடுவேன். வார இறுதி நாட்கள்ல கணவரும் வந்துடுவாரு. இந்த சிஸ்டம் குழந்தைகளுக்கு பழக்கமாகிப் போனதால சிரமம் இல்லாம வண்டி ஓடிட்டு இருக்கு'' என்று நிம்மதி பெருமூச்சுவிடும் அனிதா,

''சின்ன வயசுல 'நீ என்னவாகப் போறே?'னு கேட்டா... டாக்டர், வக்கீல், இன்ஜினீயர்னு ஆளாளுக்கு ஒண்ண சொல்வாங்க. வளர்ந்த பிறகு பார்த்தா... வேற எங்கயோ நின்னுட் டிருப்பாங்க. ஆனா, சின்ன வயசுல சொன் னதை அப்படியே நிரூபிச்சவ நான். அதனால இந்த வேலையை நான் ரொம்ப ரொம்ப நேசிக்கிறேன்'' என்று சிரிக்கிறார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism