Published:Updated:

தித்திக்கும் திபெத் காலனி..!

பூலோக சொர்க்கம்....ஜி.பழனிச்சாமி, படங்கள்: க.தனசேகரன்

தித்திக்கும் திபெத் காலனி..!

பூலோக சொர்க்கம்....ஜி.பழனிச்சாமி, படங்கள்: க.தனசேகரன்

Published:Updated:
##~##

 'சொர்க்கம் எங்கே இருக்கிறது?’ என்று யாராவது கேட்டால், தைரியமாகச் சொல்லலாம்... அது, சாம்ராஜ் நகர் பக்கத்தில் என்று! ஆம்... கர்நாடக மாநிலம், சாம்ராஜ் நகர் அருகில் உள்ள உடையார்பாளையா, 'திபெத் காலனி’தான் அந்த சொர்க்கம்.

மேகங்கள் மேயும் மலை முகடுகள், ஏற்றமும் இறக்கமுமான பச்சை பசேல் பூமி, அதில் வகிடு எடுத்தாற்போல் செல்கிற தார் சாலை, சலசலத்து ஓடும் சிற்றாறு, கரணம் அடித்து குளிக்கும் சிறுசுகள், எப்போதாவது தென்படும் மனிதர்கள், சுத்தமான தெருக்கள், அமைதி குடியிருக்கும் தலங்கள், புத்த பிட்சுகள், பாசிமணி உருட்டி 'ஸ்லோகம்’ முணுமுணுக்கும் முதியோர், சலவை செய்த சந்திரனாய் வாகனத்தில் பறக்கும் இளசுகள், கண்ணுக்கு தெரியும் தொலைவு வரை ஒரே சீராக பச்சைகட்டி நிற்கும் மக்காச்சோளம், இடையிடையே சில ஏக்கரில் உருண்டு திரண்டு கிடக்கும் உருளைக்கிழங்கு தோட்டங்கள்... என பார்க்கப் பார்க்கக் கிறங்குகிறது, மனது!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

1970-களில் திபெத் நாட்டின் மீது சீனா போர் தொடுத்தபோது, பாதிக்கப்பட்ட திபெத் மக்கள், அகதிகளாக பல்வேறு நாடுகளில் தஞ்சம் புகுந்தனர். அப்படி, அவர்களை அரவணைத்த இந்தியா, திபெத் பீடபூமி போன்றே நில அமைப்பு கொண்ட மலை சார்ந்த இடங்களில் முகாம் அமைத்து தங்க வைத்தது. அந்த வகையில், இங்கு, 22 கிராமங்கள் உருவாக்கப்பட்டன. அவற்றுக்கு வில்லேஜ்-ஏ, வில்லேஜ்-பி, வில்லேஜ்-சி... என்று வரிசையாக வில்லேஜ்-வி வரை பெயரிடப்பட்டிருக்கிறது. அந்த கிராமங்கள்தான், 'சொர்க்கம்' என்று சொல்ல வைக்கும் அளவுக்கு... ஜொலிக்கின்றன!

தித்திக்கும் திபெத் காலனி..!

முறைப்படி அனுமதி பெற்று, இந்தக் கிராமங்களில் வலம் வந்தோம். ஏ-வில்லேஜில் இருக்கும் புத்த கோயில்... காண்போரின் கண்களைக் கொள்ளை கொள்கிறது. சிவப்பு, மஞ்சள், பச்சை, நீலம் என அடர் வண்ணங்களில் ஜொலிக்கும் அழகு மற்றும் அமைதிக் கோயில் அது. அங்கே மரங்கள் அடர்ந்த மைதானத்தில் சிலர் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர்.

''இவர்கள் எல்லாம் இறைபணிக்கு அர்ப்பணித்துக் கொண்ட இளம் பிட்சுகள். எங்கள் மண்ணை விட்டு இங்கு வந்து பல ஆண்டுகளாகிவிட்டாலும், எங்களின் கலாசாரத்தை பொக்கிஷமாக காப்பாற்றி வருகிறோம். அந்த வகையில் இன்று 'குஹுரு’ எனும் எங்கள் பாரம்பரிய வீர விளையாட்டை இளம்பிட்சுகளுக்கு சொல்லிக் கொடுக்கிறேன்'' என்ற மூத்த பிட்சு லோங் வர்,

மினி ராக்கெட் ஏவுகணை வடிவத்தில் உள்ள கூர்மையான விளையாட்டுக் கருவி ஒன்றை நம்மிடம் இயக்கிக் காட்டினார். 100 மீட்டர் தொலைவில் உள்ள மரத்தில் தொங்கும் ஒரு பழத்தைக் குறி வைத்து அதை வேகமாக வீச, குறி தப்பாமல் பழத்தை கீழே வீழ்த்தியதுடன், ஆகாயத்தில் வட்டமடித்து மீண்டும் வீசியவர் கைக்கே வந்தது அந்தக் கருவி.

தித்திக்கும் திபெத் காலனி..!

ஆச்சர்யத்தில் உறைந்து நின்ற நம்மிடம், ''குஹுரு என்பது ஒரு போர் முறை. நூறு வருஷங்களுக்கு மேலாக கடைபிடிக்கிறோம். மிருகங்கள் நடமாட்டம் உள்ள பகுதிகளில் பயணிக்கும் புத்த பிட்சுகளின் பாதுகாப்புக்குத்தான் இந்தக் கருவி. புலம் பெயர்ந்து இந்த மண்ணுக்கு வந்த பிறகும் இது அழியக்கூடாது என்பதால், இதை வீர விளையாட்டாக மாற்றிவிட்டோம்'' என்றார் லோங் வர்.

தித்திக்கும் திபெத் காலனி..!

அங்கே நம்மை சுண்டி இழுத்தது உருளைக்கிழங்கு தோட்டமொன்று. அதில் இருபதுக்கும் மேற்பட்ட பெண்களுடன் அறுவடையில் மும்முரமாக இருந்தார் 'அக்ரி' வேலைக்கு வந்த ஐ.டி.பெண் போல நவநாகரிக உடையில் காட்சி அளித்த யங்சோவ். ''ஆரம்பத்தில் விவசாயம் மட்டும்தான். இப்போது, 'ஸ்வெட்டர்’ வியாபாரத்தையும் செய்கிறோம். வெளி மாநிலங்களுக்கு எல்லாம் சென்று ஸ்வெட்டர் விற்பனை செய்கிறோம்'' என்றவரிடம், காதல், கலாசாரம், கல்யாணம் குறித்தெல்லாம் கேட்டபோது,

''நானே காதல் கல்யாணம் செய்துகொண்டவள்தான். ஒரு பெண்ணுக்கு இரண்டு மூன்று கணவர்கள் என்பது இங்கு சாதாரண விஷயம். ஆண்தான் பெண்ணுக்கு வரதட்சணை கொடுக்க வேண்டும். பெண்களைக் கொண்டாடுகிற சமூகம் எங்களுடையது. ஆடை விஷயத்தில் மிகவும் அப்டேட்டாக இருக்கிறோம். மும்பை, பெங்களூரு, கொல்கத்தா போன்ற நகரங்களில் 'புதிய ஃபேஷன்’ அறிமுகம் ஆவதற்கு முன்பே இங்கு அறிமுகமாகிவிடும். பாரம்பரிய உடையை விசேஷங்களுக்கு மட்டும்தான் போடுவோம்'' என்று ஃபேஷன் பெருமை பேசினார்.

அந்தப் பகுதியில் க்யூட் கைக்குழந்தையுடன், ஐஸ்வர்யா பச்சனை மிஞ்சும் அழகிய ஆப்பிள் தேவதையாக ஒரு பெண் தென்பட...

''ஹலோ!'' சொல்லி பேரைக் கேட்டோம்.

''யங்யா'' என்றவரின் கணவர், வெளியூரில் ஸ்வெட்டர் கடை நடத்துகிறாராம். திருமணத்துக்கு முன்பு மாடலிங் துறையில் இருந்திருக்கிறார். தற்போது பெங்களூருவில் வேலை. ''என்னைப் பார்க்கும் எல்லோருமே... உங்கள் அழகின் ரகசியம் என்ன? என்றே கேட்பார்கள். 'நான் பிறந்து வளர்ந்த திபெத் காலனிக்கும், கோயிலுக்கும் அடிக்கடி சென்று வருவேன். சில நாட்கள் சொந்தபந்தங்களுடன் தங்கி, புத்துணர்ச்சி ஊட்டிக் கொள்வேன். இவைதான் என் அழகின் ரகசியம்' என்பதே அனைவருக்கும் நான் தரும் பதில்'' என்று, நாம் கேட்க நினைத்த கேள்விக்கும் பதிலைச் சொல்லி, புன்னகை ஒன்றையும் வீசினார்! திபெத் காலனியில் வசிக்கும் முதிய பெண்கள்கூட வசீகர அழகுடன் திகழும் ரகசியம், நமக்கும் புரிந்தது.

தித்திக்கும் திபெத் காலனி..!

பின்குறிப்பு: அகதிகள் முகாம் என்றாலே, முள்கம்பி வேலி, மூச்சு முட்டும் நெரிசல் வீடு, குப்பைகளின் உறைவிடம், குமட்டும் துர்நாற்றம், தொற்றும் நோய்கள்... என்றே பார்த்துப் பழக்கப்பட்டுவிட்ட நமக்கு, பெருநகரங்களில் இருக்கும் அனைத்து அம்சங்களுடனும் ஜொலிக்கும் 'திபெத் காலனி’, ஆதங்கம் பொங்க வைத்தது!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism