##~##

சென்னை, கிழக்குக் கடற்கரைச் சாலை... மஞ்சள் வெயில் மாலை நேரம்...

சாலையின் ஒருபுறத்தில் படப்பிடிப்பு பரபரப்பில் இயங்கிக் கொண்டிருந்தேன். கண்ணுக்கு எட்டிய தூரத்தில், ஆர்ப்பரித்துக் கொண்டிருந்த கடலலைகள், கரையின் மணலை முத்தமிட்டு விளையாடிக் கொண்டிருந்தன. அந்தி நேரத்தின் இந்த இயற்கை அழகு... பலரையும் போலவே, என்னையும் கொள்ளை கொண்டிருந்தது. காதலைப் பரிமாறிக் கொள்ள, பெரும்பாலான காதலர்கள் கடற்கரையைத் தேர்வு செய்வதற்கான காரணத்தையும் புரிய வைத்துக் கொண்டிருந் தது! அதேசமயம், அந்த அழகுச் சாலையில் நான் கண்ட காட்சிகள், காதலின் இன்னொரு முகத்தைக் காட்டி பயமுறுத்தத் தவறவில்லை!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சர்ர்ர்ர்ர்ர்ர்...

அலைபாயும் நெஞ்சினிலே! - 2

கண்மூடித் திறப்பதற்குள் சீறிக் கடக்கின்றன, மோட்டார் பைக்குகள்... பார்ப்பவர்களின் ஈரக்குலையை நடுநடுங்க வைத்தபடி! பெரும்பாலும் துப்பட்டாவால் முகத்தை மூடியபடியோ அல்லது காற்றில் பறக்கவிட்டபடியோ பின்னால் அமர்ந்து இருக்கிறார்கள், இளம்பெண்கள். ஒரு பைக் சீறிக் கொண்டு வருகிறது. தூரத்திலிருந்து பார்ப்பதற்கு சிறகு முளைத்திருக்கிறது அந்த பைக்குக்கு. அதில் உட்கார்ந்திருக்கும் பெண்ணின் வெள்ளை நிற துப்பட்டா... காற்றில் இரண்டு பக்கமும் அன்னப் பறவையின் சிறகுகள்போல படபடக்கிறது. பைக் நெருங்கி வரவர... எனக்குள் 'பக்பக்’. பைக் ஓட்டும் பையனை அப்படியே கட்டிப் பிடித்து மாறிமாறி முத்தம் கொடுக் கிறாள். அவன் உலகையே மறந்த நிலையில், இரண்டு கைகளையும் பைக்கிலிருந்து எடுத்து சிறகு விரித்தது போல காற்றில் பறக்கவிடுகிறான்.

அந்த நொடி... அந்த நொடி... கதிகலங்கியது எனக்கு. உள்ளுக்குள் ஆயிரமாயிரம் கேள்விகள் எனக்கு.

'இங்கே என்ன நடக்கிறது; எதற்காக இதெல்லாம்; எந்த மாதிரியான உலகில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்; கண்மூடித்தனமான வேகத்தில் செல்வதற்கு பெயர்தான் காதலா; இந்த விபரீத வேகம், விபத்தில் முடிந்தால்; இதையெல்லாம் நினைத்துப் பார்த்தால்... வண்டி இப்படிச் சீறுமா?'

அலைபாயும் நெஞ்சினிலே! - 2

கிழக்குக் கடற்கரைச் சாலையின் நீள் நெடுந்தூரம் முழுக்க... இத்தகைய காட்சிகள் பலருக்கும் தினம் தினம் பழகிப் போன சங்கதியே!

காட்சி ஒன்றுதான்... ஆனால், அதைப் பார்க்கும் ஐந்து வயது, பத்து வயது குழந்தைகளின் மனதில் என்ன தோன்றும்..? 'நாமளும் பெருசானா இப்படித்தான் வண்டியில கட்டிப் பிடிச்சுப் போகணும்’ என நினைக்கத்தானே செய்யும்...

வயது வந்த பிள்ளைகளை வைத்திருக்கும் பெற்றோர் பார்த்தால், 'ஐயோ....நம்ம பொண்ணோ/பையனோ இதே மாதிரிதான் ரோட்ல சுத்திட்டு இருப்பாங்களோ?’ என்று பதறத்தானே வைக்கும்...

'காலம் கெட்டுக்கெடக்கு... இந்த கண்றாவிஎல்லாம் நடந்தா... ஏன்டா சுனாமி வராது..!’ என வயதானவர்கள் சபிக்கத்தானே செய்வார்கள்...

'நாமளும் காதலிக்கணும்டா... காதலிச்ச பிறகு இதே ஈ.சி.ஆர்-ல மின்னல் வேகத்துல பைக்குல போகணும்டா’ என இளசுகள் நினைக்கத்தானே செய்வார்கள்...

'காதல் என்றால், இப்படித்தான் சீறிக் கொண்டு போக வேண்டும்' என சிலர் தொடங்கி வைக்கும் இதுபோன்ற தவறுகள்... சங்கிலித் தொடராக பற்றி பரவிவிடுகிறது. காதல் போதையில் இருக்கும் பலரின் கண்களையும் மறைத்து, அவர்களையும் தவறான பாதையில் சீற வைக்கிறது.

ஆர்வம்... அவசரம்... இவை மட்டுமே இன் றைய காதலை பெரும்பாலும் ஆட்கொண்டிருக்கின்றன. முன்பெல்லாம் ஓர் இளைஞன், தன் காதலைச் சொல்லவே குறைந்தது இரண்டு, மூன்று ஆண்டுகள் ஆகிவிடும். இன்றைக்கு... பார்த்த மூன்றாவது நிமிடத்தில், 'ஐ லவ் யூ', மூன்றாவது நாளில் ஓ.கே; மூன்றாவது மாதத்தில் திருமணம்; மூன்றாவது ஆண்டுக்குள்ளாகவே விவாகரத்து கேட்டு கோர்ட் வாசலில் காத்திருப்பு!

அலைபாயும் நெஞ்சினிலே! - 2

ப்ளஸ் டூ படித்துக் கொண்டிருந்த அந்தப் பெண் எனக்குத் தெரிந்தவள். தோற்றத்தைப் பார்த்தால், எட்டாம் வகுப்புதான். பார்க்க ரொம்ப அழகாக இருப்பாள். படிப்பிலும் சுட்டி. துறுதுறு சுட்டிக் குழந்தை போல எல்லோர் மனதிலும் இடம் பிடித்துவிடுவாள். பெற்றோருக்கு நல்ல மகளாய், அண்ணனுக்கு நல்ல தங்கையாய், ஆசிரியைக்கு நல்ல மாணவியாய்... அனைத்து ரோல்களிலும் அசத்தல். அவளைப் பற்றிய இந்த பிம்பம்தான் எல்லோர் மனதிலும். ஆனால், ஒரு நாள் திடீர் என்று என்னைப் பார்க்க வந்தவள், 'அண்ணா, ஒரு பையனை லவ் பண்றேன். நீதான் சேர்த்து வைக்கணும்’ எனச் சொல்லி, கைகளைப் பிடித்துக் கொண்டு கெஞ்சினாள்.

பதினேழு வயதுதான்... அது, காதலிக்கும் வயதே இல்லை. பக்கத்து பள்ளியில் படிக்கும் காதலனுக்கும் அதே வயதுதான். அந்த மேல்நிலைப் பள்ளிகளில் சேர்ந்த ஓராண்டுக்குள்ளாகவே இருவருக்கும் காதல் பற்றிக் கொண்டுவிட்டது.

'பொண்ணு காதல்... கீதல்னு விழுந்துடக் கூடாது’ என்பதற்காகவே, பெண்கள் மட்டுமே படிக்கும் பள்ளியில் அவளைச் சேர்த்தனர் பெற்றோர். ஆனால், நடந்ததோ... நேர் எதிர்.

'சினிமா ஹீரோ மாதிரி, இந்தக் காதலைச் சேர்த்து வைப்பதா... இல்லை, 'வயசு கோளாறு' என்று எடுத்து சொல்லி புரிய வைப்பதா... பெற்றோர் கவனத்துக்குக் கொண்டு செல்வதா’ என்று குழம்பி நின்றேன். நான் என்ன சொன்னாலும் கேட்காமல் ஊரைவிட்டே ஓடிப்போகும் மனநிலைக்கு இருவருமே வந்துவிட்ட கடைசி கட்டம் அது! அடுத்தடுத்த நாட்களில் எப்படியோ அப்பாவுக்கு விஷயம் தெரிந்து, மகளிடம் பேசிப் பேசி அவள் மனதை மாற்றியது தனிக்கதை!

நீங்களே சொல்லுங்கள், இதற்குப் பெயர்தான் காதலா..? பெற்றோரை எதிர்த்துக் கொண்டு, வீட்டை விட்டு ஓடிப்போய் திருமணம் செய்து கொள்வது எளிது. ஆனால், அதற்குப் பிறகு பிழைப்புக்கு வழி? அடுத்தவேளை கஞ்சிக்குக் கூட, அடுத்தவர்களை எதிர்பார்த்துக் கொண்டே இருப்பதுதான் காதலா..?

'ம்க்கும்... வேலையெல்லாம் கிடைச்சு, செட்டில் ஆன பிறகுதான் காதல் சொல்லிட்டு வருமா?’ என்று கேட்கத் தோன்றலாம். என்னைப் பொறுத்தவரை, 'படிக்கணும். படிச்சு நல்ல மார்க் வாங்கணும். அது மூலமா வேலைக்கு போயோ... ஏதாவது தொழில் செய்தோ சம்பாதிக்கணும். பெற்றோரோட கண்ணீரைத் துடைக்கணும்’ என்கிற வைராக்கியம் இருந்தால், சத்தியமாகச் சொல்கிறேன்... காதல் வந்தாலும், தான் தெரிவு செய்திருக்கும் நபரிடம் சொல்லும் தகுதி வரும் வரை, காதலை யாராலும் சொல்லவே முடியாது.

கடந்த தலைமுறை காதலர்கள் இருக்கட்டும். இப்போது காதலிக்கும் யாராவது... இங்கே நான் சொல்வதையெல்லாம் செய்கிறீர்களா என்று சொல்லுங்களேன்...

ராத்திரி அப்பா, அம்மா தூங்கின பிறகு காதல் கடிதம் எழுதறவங்க எத்தனை பேர்? கண்ணாடி முன்ன நின்னுட்டு தனக்குத் தானே பேசிக்கறவங்க எத்தனை பேர்? 'பொண்ணு, திருவிழாவுக்கு வருவாளா... அவளை பாக்க முடியுமா’னு ஏங்கறவங்க எத்தனை பேர்... உறியடிச்சுதான் காதலி மனசுல நிக்க முடியும்ங்கிற கட்டாயம் எத்தனை பேருக்கு இருக்கு?

'என்ன பாஸு நீங்க? இ-மெயில், இன்டர்நெட், ஃபேஸ்புக், வாட்ஸ்அப்னு எக்கச்சக்க சமாசாரங்களோட.... காதலே இங்க டிஜிட்டல் மயமாகிக் கிடக்கு. இந்தக் காலத்துல நீங்க இன்னும் மாட்டுவண்டி கட்டிக்கிட்டு போறதை பத்தி பேசிட்டு இருக்கீங்களே?'னு கேட்கத் தோன்றுகிறதுதானே!

ஆனால், அந்தக் காலமாக இருக்கட்டும்... இந்தக் காலமாக இருக்கட்டும். காதல் என்பதே ஒரு மாயை, திருட்டுத்தனம், ஒரு போதை... என்றெல்லாம்தான் சொல்லத் தோன்றுகிறது எனக்கு.

'என்ன... இப்படி ஒரேயடியாக, போட்டுத் தாக்குகிறாரே’ என்று நினைக்காதீர்கள். சுரேஷின் கதையைக் கேட்டீர்களானால்... உங்களுக்கே எல்லாம் புரியும்.

யாரந்த சுரேஷ்?!

அலைபாயும்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism