Published:Updated:

ஒரு கல்... ஒரு கண்ணாடி!

இ.கார்த்திகேயன், படங்கள்: ஏ.சிதம்பரம்

ஒரு கல்... ஒரு கண்ணாடி!

இ.கார்த்திகேயன், படங்கள்: ஏ.சிதம்பரம்

Published:Updated:
##~##

 வர்... எட்டாவது வரை மட்டுமே படித்திருக்கும் விவசாயி. அந்தப் பெண்ணோ... எம்.சி.ஏ. என்கிற பெரிய படிப்பை முடித்திருக்கும் பெண். ஆனால், இருவருக்குள்ளும் ஒரு காதலை ஏற்படுத்தி, கல்யாணத்தையும் முடித்து 'ஓகே... ஓகே’ போட்டிருக்கிறது ஒரு கல்... ஆம், அது இளவட்டக்கல்!

முந்தைய காலங்களில் எல்லாம் ஏறு தழுவி, மாடு பிடித்து, இளவட்டக் கல் தூக்கி... என்று திருமணங்களுக்கே ஏகப்பட்ட சவால்களைக் கடக்க வேண்டியிருக்கும். அதிலும் இந்த இளவட்டக்கல் என்பது, ஊருக்கு ஊர் மந்தை, பஞ்சாயத்து மரத்தடி, கோயில் வாசல் என்று பொது இடங்களில் கிடக்கும். 100 கிலோவுக்கும் மேல் எடையில் ஆன உருண்டையான அந்தக் கருங்கல்லை, உள்ளூர் இளவட்டங்கள் தினமும் தூக்கிப் பார்த்து பயிற்சி எடுத்து, ஒரு கட்டத்தில் தூக்கிக் காண்பித்து, அவரை விரும்பும் பெண்ணை மணம் முடிப்பார்கள். கால ஓட்டத்தில், இந்தக் கற்களுக்கு... ஓய்வு கொடுக்கப்பட்டுவிட்டது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இதற்கு நடுவே, இந்த இருபத்தியோராம் நூற்றாண்டிலும், இப்படி இளவட்டக் கல்லை தூக்கி ஒரு பெண்ணை கைபிடித் திருக்கிறார் என்றால், ஆச்சர்யம்தானே!

ஒரு கல்... ஒரு கண்ணாடி!

தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் அருகில் இருக்கிறது அயன்வடமலாபுரம். இங்கே ஆண்டுதோறும் காளியம்மன் கோயில் திருவிழாவில், 'இளவட்டக்கல் தூக்கும் போட்டி' என்று தற்போதும் தொடர்கிறது! கூடவே... திருவைக்கல் சுத்தும் போட்டி, உரலில் நெல் குத்தும் போட்டி, அம்மி அரைக்கும் விளையாட்டு என்றெல்லாம் வித்தியாசமான போட்டிகளை நடத்தி... ரொக்கப் பணம், கருப்பட்டி மிட்டாய், சீனி மிட்டாய், காராச்சேவு, கடலை மிட்டாய், மாவு உருண்டை, தேன்கலந்த தினை மாவு என ஓலைப்பெட்டிகளில் வைத்து பரிசு கொடுத்து வருகிறார்கள். இதில்தான் வித்தியாசமாக ஒரு பெண்ணையே பரிசாகப் பெற்றிருக்கிறார் விவசாயி சீனிவாசன்.

''வைகாசி மாசத்துல நடக்கற போட்டிக்காக, பங்குனி மாசத்துல இருந்தே பயிற்சியில இறங்கிடுவோம். காலையில ஆறு மணிக்கெல்லாம் கண் முழிச்சி, ஒரு செம்பு தண்ணிய மட்டும் குடிச்சுப்புட்டு, முந்தின நாள் ஊறப்போட்ட கொண்டைக்கடலையை ஒரு குத்து எடுத்து வாயில போட்டு சவைச்சிக்கிட்டே ஊரைச் சுத்தி ஓடி பயிற்சி எடுப்போம். பிறகுதான் கல்லைத் தூக்கி பார்ப்போம். 120 கிலோ எடை கொண்ட அந்தக் கல்லை நகர்த்தி உருட்டிவிடுறதே முடியாத காரியம். ஆனா... தரையில மண்டி போட்டு உட்கார்ந்து, கல்லை இறுக்கமா பிடிச்சு தொடை வழியா உருட்டி நெஞ்சுல கொண்டு வந்து நிறுத்தி, கழுத்து வழியா சுத்தணும்கிறதுதான்... இளவட்டக்கல் தூக்குற போட்டியோட விதிமுறை. இப்படி யாரு அதிக தடவை சுத்துறாங்களோ அவங்கதான் ஜெயிச்சவங்க.

ஒரு கல்... ஒரு கண்ணாடி!

எங்க ஊருல மட்டும்தான் இந்த போட்டி நடக்கறதுனால எல்லா ஊருலயும் இருந்து நிறைய சுடிதார்களும், தாவணிகளும் தவறாம வந்து முதல் வரிசையில இடம் பிடிச்சி, கல்தூக்கற இளவட்டங்களை கிண்டல் அடிக்குறது வழக்கம். அந்த வருஷம், எங்க ஊருல பல பேர் தூக்கிப் பார்த்துட்டு... ஒண்ணு, ரெண்டு தடவையிலயே சோர்ந்துட்டாங்க. நானும் முதல் தடவை கை நழுவி கல்லை கீழ போட்டுட்டேன். ரெண்டாவது தடவ முக்கி தக்கி கல்லை தூக்கிட்டேன். அதுவரை சும்மா இருந்த ஆண்டாள்தேவி... நான் தூக்குனதும் கைதட்ட ஆரம்பிச்சா... அவளோட கைதட்டல் எனக்கு புது தெம்ப கொடுத்துச்சு. அந்த வேகத்துல... பதினாறு தடவ சுத்தி தூக்கிட்டேன். அந்த வருஷம் எனக்குத்தான் முதல் பரிசு. திருவிழா எல்லாம் முடிஞ்சு கூட்டம் கலைஞ்சுருச்சு. என் கண்ணுங்க மட்டும்... சுத்தி சுத்தி தேவியைத் தேடுது. எங்க தேடியும் அவள காணோம். நம்மள உற்சாகப்படுத்தி கைதட்டி, முதல் பரிசு வாங்கிக் கொடுத்தவளுக்கு நன்றி சொல்ல முடியாம போச்சேனு... வருத்தத்தோட வீட்டுக்கு போனேன்'' என்று சொல்லிக் கொண்டிருந்த சீனிவாசனை இடைமறித்த ஆண்டாள்தேவி, தொடர்ந்தார்.

''இவரு அசால்ட்டா தூக்கிப் போட்ட ஸ்டைலை பார்த்ததுமே எனக்கு இவரைப் பிடிச்சுப் போச்சு. அதனாலதான் என்னையும் மறந்து நான் கைதட்டினேன். இவரோ இன்னும் உற்சாகமாகி... பிரமாதப்படுத்திட்டார். அம்மாகிட்ட என் ஆசையை சொன்னேன். அம்மா, அப்பா ரெண்டு பேரும் திருவிழாவுக்கு வந்திருந்ததால... மாப்பிள்ளையை நேர்லயே பாத்துட்டாங்க. அடுத்த வாரமே நிச்சயம் பண்ணிட்டாங்க. நான் எம்.சி.ஏ ஃபைனல் இயர் படிச்சுட்டு இருந்ததால... போன வருஷம்தான் கல்யாணம் செஞ்சுகிட்டோம். அவர் விவசாயத்தை திறமையா பார்க்க, நான் அவருக்கு தோள் கொடுத்துட்டிருக்கேன்'' என்று ஆண்டாள் தேவி சொல்ல... ஆசையாக இளவட்டக் கல்லைத் தடவிக் கொடுக்கிறார் சீனிவாசன்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism