Published:Updated:

வாலாட்டும் ஜீவனை தாலாட்டும் தாய்!

பொன்.விமலா, படம்: எம்.உசேன்

வாலாட்டும் ஜீவனை தாலாட்டும் தாய்!

பொன்.விமலா, படம்: எம்.உசேன்

Published:Updated:
##~##

 ''அம்முக்குட்டி... செல்லக்குட்டி... புஜ்ஜிக்குட்டி... பட்டுக்குட்டி... பட்டு... தங்கம்... வைரம்...'' - அந்தச் சாலையோரம் இப்படி கொஞ்சல் மொழிகளைக் கேட்டு திரும்பிப் பார்த்தால், அட... உமா ரியாஸ்கான்! ஏகப்பட்ட நாய்க்குட்டிகள் சுற்றி சுற்றி வர, அள்ளி அள்ளி கொஞ்சிக் கொண்டிருக்கிறார். அவை அத்தனையுமே... தெரு நாய்கள்!

''என்ன இது... நாய்ங்க மேல இத்தனை பாசமா?''

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''சின்ன வயசுல இருந்தே 'டாக்’ஸ்னா ரொம்பப் பிடிக்கும். அது இந்த வயசுலயும் தொடருது. எந்த வேலை இருந்தாலும், செல்லங்களோட விளையாடாம தூக்கமே வராது. காலையில எழுந்ததும் முதல் வேலையா நாய் குட்டிகளைத்தான் தேடுவேன். என்னோட ராக்கியை (வீட்டில் வளரும் செல்ல நாய்) விட, நான் அதிகமா நேசிக்கறது... இந்த தெரு நாய்களைத்தான். இங்க இருக்கற எல்லா நாய்களுக்கும் செல்லப் பேரு வெச்சுதான் கூப்பிடுவேன்'' என்று சொன்ன உமா, அடுத்து விவரித்தது... தாய்மையின் உச்சம்!

வாலாட்டும் ஜீவனை தாலாட்டும் தாய்!

''இதுல... ஒரே ஃபேமிலியைச் சேர்ந்த நாலு நாய்களும் இருக்கு. அதுல அக்கா, தங்கச்சிங்க மூணும் ஒரே நேரத்துல சினையா இருந்துச்சுங்க. ஒரு நாள் ராத்திரி, 'ச்சோ’னு மழை. மரமெல்லாம் புயல் காத்துல பேயாட்டம் போடுது. தெருவே அசந்து தூங்கிட்டிருக்கு. அப்ப 'ஊஊஊஊஊ’னு ஒரு சத்தம், என்னை தூங்க விடல. ராத்திரி 2 மணியிருக்கும். சத்தம் வந்துட்டிருந்த இடத்தை தேடிப் போனேன். அங்க, என் கருப்பச்சி செல்லம் பிரசவ வலியால துடிச்சுட்டு இருந்தா. அவள அப்படியே அள்ளித் தூக்கிட்டு, என் வீட்டுக்கு ஓடி வந்துட்டேன்.

கருப்பச்சியை டவலால துவட்டி, ஒரு போர்வையை விரிச்சு படுக்க வெச்சேன். சாப்பிட பால், பிஸ்கட் கொடுத்தேன். மெள்ள கருப்பச்சிய தடவிக் கொடுத்துட்டே இருந்தேன். என் கண்ணு முன்னயே 'க்யூட்’டா ஆறு குட்டிகள். பாக்க அத்தனை சந்தோஷம். குட்டிகளை வாரி அணைச்சு கருப்பச்சிக்கிட்ட கொடுத்து பால் குடிக்கற வரைக்கும் நான் நானாவே இல்ல. பிரசவம் முடிஞ்ச பிறகு, எதையோ சாதிச்ச ஒரு பெருமிதம் எனக்குள்ள'' - அந்த அற்புத நிகழ்வை உமா விவரிக்கும்போது... நமக்குள் ஏகப் பரவசம். அவருடைய கண்களிலோ... ஆனந்த ஈரம்!

''கருப்பச்சி குட்டி போட்ட ரெண்டு நாட்கள்லயே அதோட சகோதரிகளுக்கும் என் வீட்டில்தான் பிரசவம். மூணும் சேர்ந்து மொத்தம் 19 குட்டிகள் போட்டுச்சுங்க. என் வீடு முழுக்க குட்டிகள். அதுங்களோட அழகான முணுமுணுப்பு சத்தம், என்னை புது உலகத்துக்கே கூட்டிட்டு போச்சு. சாப்பாடு வெக்கிறது, தலை கோதிவிடுறது, பாத்ரூம் போனா கிளீன் பண்றதுனு எல்லா வேலையையும் நானே பாத்துகிட்டேன். அந்த நிமிஷங்கள்ல... இந்த 19 பிள்ளைகளுக்கும் அம்மாவான ஃபீலிங்!'' கண்களை மூடித் திறக்கிறார்.

வாலாட்டும் ஜீவனை தாலாட்டும் தாய்!

''கணவர் ரியாஸ்கான், தினமும் பத்து நிமிஷமாவது செல்லங்களோட விளையாடினதுக்குப் பிறகுதான் வெளியவே கிளம்புவார். அவரு மட்டுமில்ல... என்னோட பெரிய பையன் ஷாரிக், சின்னப் பையன் சமர்த் ரெண்டு பேரும் அதுங்களோட விளையாடுறது... சாப்பாடு கொடுக்கறது ரெண்டு வேலையையும் மிஸ் பண்ணவே மாட்டாங்க. மொத்தத்துல எங்க குடும்பத்துக்கே டாக்ஸ்னா... ரொம்ப இஷ்டம்! அதனாலதான் தெரு நாய்கள் தங்கறதுக்கு டென்ட் உருவாக்கினோம். எங்க வீட்டுலயும் அதுங்களுக்கு தனி இடம் எப்பவுமே தயாரா இருக்கு.

ஷூட்டிங், அது, இதுனு அலைச்சல் அதிகமானதால... வேற வழியே இல்லாம 14 குழந்தைகள ப்ளூகிராஸுக்கு கொடுத்துட் டேன். மீதியிருக்கிற இந்த 5 குட்டிகளும் கருப்பச்சியோடது. இப்ப இதுங்கதான் என்னோட எனர்ஜி பூஸ்டர். என்ன பெரிய டென்ஷன்ல இருந்தாலும்... இந்த பப்பீஸோட விளையாடும்போது... அத்தனையும் பஞ்சா பறந்துடும்'' சொல்லிக் கொண்டே கருப்பச்சி குட்டியைத் தூக்கி உச்சி முகர்கிறார்... உமா!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism