Published:Updated:

'அக்கரை’ சேர்க்கும் 'அக்கறை’ பாட்டி!

ஜே.வி.நாதன், படங்கள்: ரா.ராம்குமார்

'அக்கரை’ சேர்க்கும் 'அக்கறை’ பாட்டி!

ஜே.வி.நாதன், படங்கள்: ரா.ராம்குமார்

Published:Updated:
##~##

ளிய மனிதர்களின் எதிர்பார்ப்பில்லாத தியாகங்கள்தான், இந்த இயந்திரமய உலகிலும் மனித வாழ்க்கையை மலர்த்திக் கொண்டிருக்கின்றன. 78 வயது மூதாட்டி ரத்னாபாய்... அப்படி ஓர் எளிய மனுஷி! தள்ளாத வயதிலும், கைகளையே துடுப்பாக மாற்றி, கிட்டத்தட்ட ஐநூறு பேரை தினமும் தன் படகில் ஏற்றிக் கரை சேர்த்துக் கொண்டிருக்கிறார்!

கன்னியாகுமரி மாவட்டம், விளவங்கோடு தாலுகா முன்சிறை ஊராட்சி, தாமிரபரணி ஆற்றங்கரையின் அழகிய கிராமம், அஞ்சாலிக்கடவு. இக்கரை மக்களின் அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்வது... அக்கரையிலுள்ள மாரையபுரம். இங்கேதான் அண்டி (முந்திரி) ஆலைகள், செங்கல் சூளைகள், பள்ளிக்கூடங்கள் என எல்லாமும் இருக்கின்றன. வேலை, படிப்பு என்று சாலை மார்க்கமாக செல்வதென்றால், குழித்துறை, வெட்டுவன்னி கிராமங்கள் வழியாக சுமார் 10 கிலோ மீட்டர் சுற்ற வேண்டும். ஆற்றை குறுக்காகக் கடந்தால்... அரை கிலோ மீட்டர் தூரம்தான். இங்கேதான், தன் ஓட்டைப்படகு மூலம் உதவிக்கரம் நீட்டிவருகிறார், ரத்னாபாய்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மதியவேளையொன்றில் சற்றே ஓய்வாக இருந்த ரத்னாபாயைச் சந்தித்தபோது.... ''என் மக்க (இரண்டு மகள்கள், ஒரு மகன்) எல்லாம் கல்யாணம் காச்சி பண்ணி வெளியூர்ல இருக்காவ. அவரு இருந்தவரை ஊர் ஜனங்கள இக்கரைக்கும் அக்கரைக்குமா கொண்டு விட்டுட்டு இருந்தாரு. மவராசன் போன பிறகு, 'என்ன செய்றது?’னு தெரியாம தவிச்சுக்கிட்டு இருந்தேன். ஒரு தடவை ஆத்துல வெள்ளம் வந்தப்ப, எங்கனயிருந்தோ இந்த 'போட்’ மிதந்துட்டு வந்து, என் கையில சிக்குச்சு. 'திக்கத்தவங்களுக்கு தெய்வந்தான் துணை’ங்கறது என்மட்டுல உண்மைதான்யா. 25 வருஷமா இதுதான் எனக்கு கஞ்சி ஊத்திட்டு இருக்கு.

'அக்கரை’ சேர்க்கும் 'அக்கறை’ பாட்டி!

முன்னயெல்லாம் நீளமான கழியை தண்ணிக்குள்ள விட்டு, படகு விட்டுட்டு இருந்தேன். நிறைய மணல் அள்ளிட்டதால, ஆழம் அதிகமாயிடுச்சு. அதோட, துடுப்புப் போடுற அளவுக்கு உடம்புல தெம்பும் இல்லை. அதனால, இக்கரைக்கும் அக்கரைக்கும் இடையில ஒரு கயித்தைக் கட்டி வெச்சுருக்கேன். அதைப் பிடிச்சுக்கிட்டே படகை முன்னும் பின்னும் நகத்தி சமாளிச்சுட்டிருக்கேன். ஒரு ஆளுக்கு ரெண்டு ரூபா கூலி. நம்மள மாதிரி ஏழை பாழைங்க கொடுக்காம போயிருவாங்க. யாருகிட்டயும் கண்டிசனா கேக்கறதில்ல. கெடைக்குறதுல கூழோ, கஞ்சியோ குடிச்சுக்குவேன். இந்தக் கட்டைக்கு அது போதும்ல...'' என்று தன்னிறைவாக பேசும் ரத்னாபாய், தொடர்ந்தார்...

''இருபது வருசத்துக்கு முந்தி பெரிய வெள்ளம் வந்து படகோட கொண்டுபோய் மூங்கில் காட்டுல சொருகி விட்டுடுச்சு. உடம்பெல்லாம் முள் குத்தி ரத்தம். 'வெடவெட’னு நடுங்கிட்டு கிடந்த என்னை, ஊர் ஜனங்கதான் தேடிக் கண்டுபிடிச்சு, காப்பாத்தினாங்க. இந்த உசுரும் உடம்பும் ஊர்க்காரங்களாலதான் இன்னும் இருக்கு. அதனால, 'அவங்களுக்கு ஒழைச்சே சாவுற வரைக்கும் காலத்தை ஓட்டிப்புடலாம்’னு இருக் கேன்'' என்று சொல்லும்போது... பாட்டியின் கண்களில் ஏக மலர்ச்சி!

'அக்கரை’ சேர்க்கும் 'அக்கறை’ பாட்டி!

''நானோ எம் புள்ளைங்களோ ஸ்கூலு பக்கம் போனதில்லை. ஆனா, என் படகுல ஏறிப் போய்ப் படிக்கிற புள்ளைக ராஜா மாதிரி, ராணிமாரு மாதிரி வரணும்னு... அவங்கள கூட்டிப் போறப்ப மனசு நெறய சந்தோஷம் பொங்கும்யா!'' என்று நெகிழும் ரத்னாபாய், கஞ்சி குடித்துக் கொண்டிருக்கும்போதுகூட, ''பாட்டீ'' என்று யார் குரல் கொடுத்தாலும், அப்படியே போட்டு விட்டு கரை சேர்க்கக் கிளம்பிவிடுவாராம்.

'அக்கரை’ சேர்க்கும் 'அக்கறை’ பாட்டி!

''வர்றவங்களுக்கு எத்தினியோ முக்கியமான சோலி இருக்கும்யா. நம்மளால தாமசப்பட்டுடக்கூடாதுல்ல...'' என்கிறார், சிரித்துக் கொண்டே.

அந்த ஆற்றங்கரையில் நாம் சந்தித்த அப்பகுதியைச் சேர்ந்த சந்திரகலாதரன், ''கொஞ்ச தூரத்துல இதே ஆத்துக்கு குறுக்க 'முளைமொட்டுக்கடவு’ங்கற இடத்துல நெடுஞ்சாலைத் துறையே ஆள்போட்டு படகு விட்டிருக்குது. அதைவிட அதிகத்தேவை உள்ள இடம் இது. தினமும் ஐநூறுக்கும் அதிகமான மக்கள் இங்க ஆத்தைக் கடக்கறாங்க. 25 வருஷமா எதையும் எதிர்பாராம உழைச்சுகிட்டிருக்கிற இந்த அம்மைக்கும் மாதச் சம்பளத்துக்கு ஏற்பாடு செஞ்சா... இவங்க இத்தினி காலம் செஞ்ச சர்வீஸை மதிக்கிற மாதிரியும் இருக்கும்'' என்று சொன்னார்.

ஆனால், ''சம்பளம் இருக்கட்டும்யா. இந்தப் படகுல நிறைய ஓட்டை. ஒவ்வொண்ணையும் கல் வெச்சு அடைச் சுருக்கேன். கெவுர்மென்ட்டுல நல்ல போட் கொடுத்தா... ஜனங்களையும், ஸ்கூல் கொழந்தைகளையும் பயமில் லாம கரை சேர்க்க முடியும்'' என்று படகு பற்றிய கவலையே பாட்டியிடம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism