##~## |
இரு பெரும் மாநிலங்களை இணைக்கும் குஜராத் சாலையில் துவங்குகிறது படம். தான் இறந்தால் மட்டும்தான் குடும்பத்துக்கு பணம் கிடைக் கும், அதன் மூலம் குடும்ப வறுமை தீரும் என்ற எண்ணத்தோடு வண்டியைக் கிளப்பும் லாரி டிரைவர் பாப்பு; காரில் வந்தபோது பெற்றோரைத் தொலைத்துவிட்டு நெடுஞ்சாலையில் தவிக்கும் சிறுவன் ஆதி; தன் பாட்டியைத் தேடும் பயணத்தில் விபரீதத்தை சந்திக்கும் சிறுமி பூனம்... என சம்பந்தமில்லாத மூன்று கேரக்டர்கள் நெடுஞ்சாலையின் ஒரு புள்ளியில் சந்தித்தால் என்னவாகும் என்பதைத்தான் ஒன்றரை மணி நேரத்தில் சொல்கிறது 'தி குட் ரோட்’ எனும் குஜராத்தி மொழி படம்.
பெற்றோரைத் தொலைத்த சிறுவன் ஆதியை தன் வண்டியில் ஏற்றிக் கொண்டு பயணத்தைத் தொடர்கிறார் பாப்பு. மறுபுறம், பாட்டியைத் தேடி தனி ஆளாக பயணிக்கும் பூனம், நெடுஞ்சாலையில் உள்ள சாயப்பட்டறைக்குள் நுழைகிறாள். அங்கே தன் வயதுடைய ரிங்கில் உடன் நட்பு கிடைக்கிறது. ஆனால், லேட்டாகத்தான் தெரிகிறது... அது பாலியல் தொழிலாளிகளுக்கான இடம் என்று. 'ஐயோ, அந்த பொண்ணு என்னாவா?’ என்று நமக்குள்ளே இயல்பான பதைபதைப்பை வரவைக்கின்ற இயல்பான காட்சிகள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''நீ சின்ன பொண்ணு... இந்த இடம் உனக்கு வேண்டாம். நீ கிளம்பு'' என்று வலுக்கட்டாயமாக சிறுமி பூனத்தை, அந்த இடத்தின் பொறுப்பாளர் மற்றொரு லாரியில் ஏற்றி விடும்போது கைதட்டல் அள்ளுகிறது. படத்துக்கு பாடல்கள் என்றெல்லாம் மெனக்கிடாமல், கதாபாத்திரமாக வரும் சிறுவர்கள் ரைம்ஸ் பாடுவதற்கு இசை அமைத்துக் கொடுத்து வித்தியாசத்தை புகுத்தியிருக்கிறார் இயக்குநர் கியான் கோரியா.
அடுத்து என்னவாகும் என்று யோசித்து கொண்டிருக்கும்போதே, சிறுமி பூனம் பயணித்த லாரி, பாப்புவின் லாரியை இடித்து குப்புற தள்ளிவிட்டு செல்கிறது. பாப்பு, சிறுவன் ஆதி, கிளீனர் எல்லோரும் லாரியில் சிக்கிக் கொள்கிறார்கள். படத்தின் முடிவு நிச்சயம் கோரமாக இருக்கும் என்று நம் நினைப்பை மாற்றி நெகிழ்ச்சியாக்கி இருக்கிறார் இயக்குநர்.
மனிதர்களின் இயல்பான மனப் போராட்டங்களை, வாழ்வியல் உண்மைகளை, யதார்த்தங்களை 'சுள்’ளென சொல்லியிருக்கும் இயக்குநர் கியானுக்கு இதுதான் முதல் திரைப்படம் என்றால் நம்பவே முடியவில்லை. இதற்கு முன்பு ஆவணப்படங்கள் இயக்கி வந்திருக்கிறார். குஜராத் மாநிலத்தின் தேசிய விருதை பெற்றுள்ள இந்த படம், ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
பதைபதைக்கும் நெகட்டிவ் எண்ணங்களை மனதில் வளரவிட்டு, நம்மை பயமுறுத்தி... இறுதியில் நெடுஞ்சாலைகள் நல்ல மனிதர்களையும் கொண்டது என்று பாஸிட்டிவ் செய்தி சொல்லும் 'தி குட் ரோட்', ஆஸ்காரை விட மதிப்பான மனித மனங்களை வென்று கொண்டே இருக்கிறது!
ரெவ்யூ டீம்