Published:Updated:

அ முதல் ஃ வரை! - 1

- படிக்கலாம்... பறக்கலாம்!சா.வடிவரசுபடங்கள்: பொன்.காசிராஜன், ச.இரா.ஸ்ரீதர், எஸ்.கேசவசுதன்

அ முதல் ஃ வரை! - 1

- படிக்கலாம்... பறக்கலாம்!சா.வடிவரசுபடங்கள்: பொன்.காசிராஜன், ச.இரா.ஸ்ரீதர், எஸ்.கேசவசுதன்

Published:Updated:
##~##

புதிய பகுதி

'விமானப் பயணம்' என்றதுமே... பலருக்கும் நினைவுக்கு வருவது, இன்முகம் காட்டி, நிறைவான உபசரிப்பு செய்யும் 'ஏர்ஹோஸ்டஸ்' எனப்படும் விமானப் பணிப்பெண்கள்தானே! அனைவரின் மனங்களிலும் இப்படி பதிவது என்பது, இந்தப் பணியை, ஒரு வேலையாக நினைப்பவர்களுக்கு சாத்தியமில்லை. அதற்கு அதீத சேவை மனப்பான்மையோடு.... தகுந்த பயிற்சியும் அவசியம்! இன்றைய சூழலில் வளர்ச்சியை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கும் துறைகளில், விமானப் பணியாளர் துறையும் ஒன்று.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''சும்மா மெஷின் மாதிரி ஒரே வேலையை தினமும் செய்றது எங்களுக்கு சுத்தமா பிடிக்காது. அதனாலதான் இந்தத் துறையை தேர்ந்தெடுத்தோம். தினமும் புதுப்புது மனிதர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கறதோட, பல்வேறு இடத்துக்கும் போயிட்டு வர வாய்ப்பும் இருக்கும். எங்களுக்குப் பிடித்தமான ஒரு வாழ்க்கையை அமைச்சுக்கறதுக்காக நல்ல சம்பளமும் கிடைக்கும்.''

''டிகிரி படிச்சுட்டு வேலை தேடி அலைஞ்சுட்டு இருக்கணும். அதுக்குப் பதிலா ப்ளஸ் டூ முடிச்சதுமே இந்தத் துறையைத் தேர்ந்தெடுத்தா... ஒரு வருஷத்துலயே வேலையில சேர்ந்துடலாம்.''

- சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள 'ஃபிராங்க்ஃபின் இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஏர்ஹோஸ்டஸ்’ பயிற்சி மையத்தில் ஆவல் பொங்க பயிற்சி பெற்று வரும் மாணவிகள் சிலரின் உற்சாக வாக்குமூலம்தான் இது!

அ முதல் ஃ வரை! - 1

விமானப் பணிக்கான பயிற்சியை முடித்து, பணியில் சேர்பவர்களுக்கென சில முக்கிய கடமைகள் இருக்கின்றன. அதில் தலையாய கடமை - 'பயணிகளின் சேஃப்டி மற்றும் செக்யூரிட்டி’. விமானப் பணி பயிற்சி முடித்த எல்லோரும் நேரடியாக விமானத்தில் பணியாளர்களாகச் செல்ல முடியாது. குறிப்பிட்ட காலம் வரை, 'கிரவுண்ட் வேலை' என்கிற வகையில் விமான நிறுவனங்களின் அலுவலகங்களில் தகுந்த அனுபவம் பெறவேண்டும். அதன் பிறகே, விமானத்தில் செல்ல அனுமதிக்கப்படுவார்கள். இப்படி 'ஏர்ஹோஸ்டஸ்’ பயிற்சியளிப்பதற்கான மையங்கள், தமிழகத்தின் பெரும்பாலான நகரங்களில் இருக்கின்றன. இதற்கான தகுதி மற்றும் கட்டணம் பற்றி இங்கு விவரிக்கிறார், 'ஃபிராங்க்ஃபின் இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஏர்ஹோஸ்டஸ்’ மையத்தின் பயிற்சியாளர் ஸ்வர்ணா கணேஷ்.

அ முதல் ஃ வரை! - 1

''17 வயது நிரம்பிய, 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இப்பயிற்சி யில் சேரலாம். ஆண்களுக்கு 171 சென்டி மீட்டர் உயரமும், பெண் களுக்கு 154 சென்டி மீட்டர் உயரமும் அவசியம். முதல் 3 மாதங்களுக்கு பயிற்சி வகுப்புகளும், அதன் பிறகு நேரடி பயிற்சியும் வழங்கப்படும். இப்பயிற்சியில் விமானப் பணியாளருக்கு தேவையான அடிப்படை பயிற்சிகளான தகவல் தொடர்பு தொடங்கி, பயணிகளுக்கான முதலுதவி, உபசரிப்புகள், ஆபத்துக்களை எதிர்கொள்ளும் சூழல் உள்ளிட்ட அனைத்துமே கற்றுத்தரப்படும். அதோடு பயிற்சி பெறுபவர்களில் 99 சதவிகிதத்தினருக்கு அந்தந்த பயிற்சி மையங்களே உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான நிறுவனங்களில் வேலை வாய்ப்புகளையும் ஏற்படுத்தித் தருகிறோம். இப்பயிற்சிக்கு, 50 ஆயிரம் ரூபாய் முதல் 80 ஆயிரம் ரூபாய் வரை கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. வேலையில் சேர்ந்தவுடனேயே மாதத்துக்கு 30 ஆயிரம் ரூபாய் முதல் பல லட்ச ரூபாய் வரை சம்பாதிக்கும் வாய்ப்பு இருக்கிறது. இப்பயிற்சி பெற்றவர்களுக்கு உலகெங்கிலும் வேலை வாய்ப்புகள் காத்திருக்கின்றன'' என்ற ஸ்வர்ணா கணேஷ்,

''இந்தத் துறையில் சேர்வதற்கு சிறப்பான உடற்தகுதியும், எடுப்பான தோற்றமும் கூடுதல் தேவைகள். மேலும் பயிற்சியை முடித்து, டிக்கெட் பரிசோதகர்கள் தொடங்கி, விமான பணியாளர்கள், ஹெட் அட்டெண்டன்ட் மற்றும் சீனியர் ஃபிளைட் அட்டெண்டன்ட் உள்ளிட்ட பதவி உயர்வுகளையும் பெறலாம். அதிக அனுபவம் பெற்றவர்களுக்கு பின்னாளில் விமானப் பணியாளர் பயிற்சி மையங்களில் பயிற்சியாளர் ஆகும் வாய்ப்பு உண்டு. மேலும் அவர்கள், சொந்தமாக பயிற்சி மையம்கூட தொடங்கலாம்'' என்று தெளிவாக விவரங்களைத் தந்தவர், நிறைவாகச் சொன்னது...

''இத்துறையில் பயிற்சி பெறவேண்டும்  என்று விரும்பினால், முதலில் உங்களுடைய குடும்பச் சூழல், பெற்றோரின் வருமானம், உங்களுடைய கூர்மையான அறிவுத்திறன், நேர்த்தியாக உங்களது தோற்றத்தை வெளிக்காட்டும் திறன், அர்ப்பணிப்பு உணர்வு உள்ளிட்ட காரணிகளை மனதில் வைத்துக்கொண்டு, கவனமாக முடிவெடுத்த பிறகு தேர்ந்தெடுங்கள்.’'

அறிவோம்...

அ முதல் ஃ வரை! - 1

பார்த்ததும் இன்டர்வியூ... அடுத்த மணித்துளிகளில் வேலை!

கடந்த இதழில், நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணின் ஆட்டிடியூட், வேலையைப் பெற்றுத் தந்தது பற்றிக் குறிப்பிட்டிருந்தோம். கொஞ்சம்கூட அச்சப்படாமல், அந்த ஏர்போர்ட்டில் அதிரடியாக தன்னுடைய ஆட்டிடியூடை வெளிப்படுத்தி அவர் வெற்றி கொண்டது... 'ஏர்ஹோஸ்டஸ்' எனும் விமானப் பணியாளர் வேலையைத்தான்! தற்போது, விமான நிலையத்தில் 'கிரவுண்ட் ஹேண்ட்லிங்' பணியை செய்துவரும் அந்தப் பெண்ணின் பெயர் ஃப்ரெண்ட்ஜி.

''பிறந்து வளந்தது எல்லாமே பாண்டிச்சேரியிலதான். 2008-ல ப்ளஸ் டூ முடிச்சுட்டு, குடும்ப கஷ்டத்தால... எதைப் படிக்கிறதுனு யோசிச்சு, யோசிச்சே... கடைசியில எதுலயும் சேர முடியாம போயிடிச்சு. லைப்ரரி, ஃபிரெஞ்சு, கீ-போர்டு கிளாஸ்னு ஒரு வருஷத்தை ஓட்டினேன். பிறகு சிங்கப்பூர்ல வேலை செய்த அக்காகிட்ட போனேன். அங்கயே 3 வருஷம் ஹாஸ்பிட்டாலிட்டி படிச்சு முடிச்சேன். அந்த நேரம்தான்... 'இனி, இந்தியர்களுக்கு சிங்கப்பூர்ல வேலை கிடையாது'ங்கற பிரச்னை ஆரம்பமாச்சு. இந்தியா திரும்பிட்டேன்.

ஒரு தடவை, அக்காவை சிங்கப்பூர் அனுப்பறதுக்காக சென்னை ஏர்போர்ட்டுக்கு அப்பாவோட போயிருந்தேன். அக்காவை அனுப்பிட்டு வெளியில வரும்போது, வழியில நின்னுட்டிருந்த விமான பணிப்பெண்கிட்ட, 'இந்த வேலைக்கு வர்றதுக்கு என்ன செய்யணும்?’னு கேட்டேன். சிரிச்சிக்கிட்டே ஒரு ஆபீஸை கைகாட்டினாங்க. வாசல்ல நின்ன செக்யூரிட்டிகிட்ட... 'இங்க வேலைக்கு ஆள் எடுக்குறாங்களா?’னு கேட்டப்ப... 'உங்களுக்கு என்ன வேணும்?’னு கேட்டார் உள்ள நின்னுட்டிருந்த இன்னொருத்தர். 'வேலை வேணும்'னு சட்டுனு சொன்னேன். கொஞ்சம் யோசிச்சவர்... 'உங்களோட பயோடேட்டா கொடுத்துட்டு போங்க. கூப்பிடறோம்’னு சொன்னார்.

'இப்போதைக்கு கையில இல்லை. அக்காவை ஃபிளைட் ஏத்திவிடத்தான் வந்தேன்’னு சொன்னதும் சிரிச்சுட்டாரு. அவரோட இ-மெயில் ஐ.டி-யை கேட்டு வாங்கி, செல்போன் மூலமா உடனடியா பயோடேட்டாவை அனுப்பிட்டு அங்கயே காத்திருந்தேன். என்னோட ஆர்வம், நம்பிக்கை எல்லாமும் பிடிச்சுப் போக.... அடுத்த 2 மணி நேரத்துலயே இன்டர்வியூக்கான அழைப்பு. அவங்க கேட்ட எல்லா கேள்விக்கும் பதில் சொல்ல... 'எப்போ வேலையில சேரப்போறீங்க?'னு கேட்டாங்க. 'நாளைக்கே'னு சொன்னதும் அவங்களோட ஆச்சர்யம் இன்னும் கூடிடுச்சு. 'இப்படி ஒருத்தரை இதுவரைக்கும் பார்த்ததே இல்லை'னு சொல்லி அனுப்பிட்டாங்க. அடுத்த நாளே வேலையில சேர்ந்துட்டேன்'' என்று சொல்லிச் சிரிக்கிறார்... ஃப்ரெண்ட்ஜி!

அ முதல் ஃ வரை! - 1

வீட்டிலிருந்தே வேலை..!

நாகர்கோவிலைச் சேர்ந்த ரம்யா, நான்கு ஆண்டுகளாக விமானப் பணியிலிருக்கிறார். ''டிகிரி முடிச்சுட்டுதான் இந்தப் பயிற்சியில சேர்ந்தேன். உடனடியா வேலையும் கிடைச்சுடுச்சு. 2010-ம் வருஷம் திருமணம் முடிஞ்சுது. சமீபத்தில் குழந்தையும் பிறந்திருக்கறதால... லீவு கேட்டேன். 'வீட்டிலிருந்தே வேலை பாருங்க'னு சொல்லி, ஆன்லைன் மூலமா தகவல்களை பரிசோதிச்சு அனுப்புற வேலையைக் கொடுத்திருக்காங்க. குழந்தையையும், குடும்பத்தையும் கவனிச்சுக்கிட்டே... வேலையையும் செய்துட்டிருக்கேன். கூடிய சீக்கிரமே... எனக்கு ரொம்பவும் பிடிச்ச பறக்கற வேலைக்கு பழையபடி கிளம்பிடுவேன்'' என்கிறார் உற்சாகமாக.

ஓய்வுக்குப் பின்னும் வேலை!

ற்றவேலைகளில 58 வயது வரை தொடர்ந்து பணியாற்றலாம். ஆனால், விமானப் பணிப் பெண்கள் என்றால்... பெரும்பாலானவர்களுக்கு, சுமார் 35 வயதாகிவிட்டால், அந்தப் பணியில் தொடர முடியாத நிலை தற்போது காணப்படுகிறது. இது, இந்த வேலையில் மிகப்பெரிய மைனஸ் என்கிறார்கள் சிலர். இதைப் பற்றி இந்தியன் ஏர்லைன்ஸ் ஏர்ஹோஸ்டஸாக பணியாற்றி ஓய்வுபெற்றிருக்கும் வசந்தியிடம் கேட்டதற்கு, ''இப்போதுதான் இதுமாதிரியான பிரச்னைகள். ஆனால், 1973-ம் வருஷம் தொடங்கி 2003 வரை கிட்டத்தட்ட 30 வருஷத்துக்கு மேல் நான் விமான பணியாளராகவே வேலை பார்த்தேன். இதில் கற்ற அனுபவங்கள், வளர்த்துக்கொண்ட திறமைகள் இதெல்லாம் ஓய்வுக்குப் பின்னும் நல்லதொரு நிலைமையில் என்னை வைத்திருக்கின்றன.

அ முதல் ஃ வரை! - 1

இப்போது 35 வயதிலேயே ஓய்வு பெற்றாலும் எத்தனையோ வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கத்தான் செய்கின்றன. உதாரணத்துக்கு சொந்தமாக ஹோட்டல் தொடங்கலாம்; பெரிய பெரிய ஹோட்டல்களில் பணிக்குச் சேரலாம்; பயிற்சி நிறுவனங்களில் வகுப்பு எடுக்கலாம்; பெரிய கம்பெனிகளில் வேலைக்குச் சேரலாம்; சொந்தமாக பயிற்சி நிறுவனம் தொடங்கலாம்... இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். மற்ற துறைகளைவிட, ஓய்வுபெற்ற பின்னும் அதிகமாகச் சம்பாதிக்கக்கூடிய ஒரு துறைதான் விமானப் பணியாளர் துறை என்பது இதன் கூடுதல் சிறப்பு'' என்று சொல்லும் வசந்தி, தற்போது விமானப் பணிப் பயிற்சி மையங்களில் சிறப்பு பயிற்சியாளர், பயணிகளிடம் பழகுவது தொடர்பான 'சாஃப்ட் ஸ்கில் டிரெய்னர்' என செயல்பட்டு வருகிறார்.

ப்ளஸ்!

பட்டப்படிப்பு அவசியமில்லை. குறைந்தபட்சம் மாதம் 30 ஆயிரம் ரூபாய் சம்பளம். ஒரு வேளை, திருமணத்துக்குப் பிறகு பணியைத் தொடர முடியாமல் போகும் பெண்கள், விமான அலுவலகங்களிலும், பயிற்சி மையங்களிலும், ஹோட்டல்களிலும்கூட பணியில் சேரலாம்.

மைனஸ்!

இரவு, பகல் என நேரம்காலமின்றி பணி புரிய வேண்டியிருக்கும். பெரும்பாலான பெண்களால் திருமணத்துக்கு பிறகு, வேலையைத் தொடர முடிவதில்லை. 'நாங்க பாராசூட் கொடுப்போமே' என்று சொல்லும்போது... 'ஏங்க... உயிர் போற நேரத்துல தேங்காய் எண்ணெயை வெச்சுக்கிட்டு நாங்க என்னங்க பண்றது?' என்று கேட்கும் 'ஓகே...ஓகே' சந்தானங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். பணியாளர்கள், தம் மீது தவறே இல்லையென்றாலும்கூட, இதுபோன்ற சமயங்களில், பயணிகளிடம் மன்னிப்பு கேட்டு அமைதி காக்க வேண்டும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism