Published:Updated:

திருப்பதி யாத்திரையா..? இக்கட ச்சூடண்டி...

எஸ்.கதிரேசன்

திருப்பதி யாத்திரையா..? இக்கட ச்சூடண்டி...

எஸ்.கதிரேசன்

Published:Updated:
##~##

 'கௌசல்யா சுப்ரஜா ராம பூர்வா ஸந்த்யா ப்ரவர்த்ததே
உத்திஷ்ட நர ஸார் தூல கர்த்தவ்யம் தைவமாஹ்நிகம்’

- விடியற்காலைப் பொழுதில், காற்றின் திசையெல்லாம் ஒலிக்கும் சுப்ரபாதத்தைக் கேட்கும்போது பக்தர்களுக்கு ஏற்படும் பரவச உணர்வுகளை விவரிக்க, எந்த மொழியிலும் வார்த்தைகளில்லை. திருமலை - திருப்பதியில் ஒவ்வொரு நாள் காலையிலும் பாடப்படுகின்ற முதல் பாடல் இதுதான்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சேஷாசலம், வேதாசலம், கருடாசலம், அஞ்சனாசலம், விருஷபாசலம், நாராயணாசலம் மற்றும் வேங்கடாசலமென ஏழு மலைகளையும் ஏ.சி செய்தது போல குளிர வைத்து... தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்களுக்கு அருளும்பாலித்துக் கொண்டுஇருக்கிறார்... ஏழுமலையான்!

'உலகிலேயே பணக்கார சாமி'யான ஏழுமலையானை தரிசிக்க பலருக்கும் ஆவல் பொங்கினாலும்... தாறுமாறான கூட்டம், மணிக்கணக்கிலான க்யூ போன்றவற்றை நினைத்து... 'திருப்பதி' என்றதுமே நடுக்கம்தான் எல்லோருக்குமே! 'எப்பாடு பட்டாவது ஏழுமலையானை தரிசித்தே தீருவது' என்று பலவித கஷ்டங்களுக்கு நடுவே பலரும் மலையேறினாலும்... இதுபோன்ற காரணங்களுக்கு பயந்தே... 'ஏடுகொண்டலவாடா... கோவிந்தா... கோவிந்தா...' என்று இருந்த இடத்திலேயே கும்பிடு போடும் பக்தர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்!

திருப்பதி யாத்திரையா..? இக்கட ச்சூடண்டி...

ஆனால், ''பலரும் பயப்படும்படியாக இல்லை திருப்பதி தரிசனம். சரியாக திட்டமிட்டால், ஏழுமலையான் தரிசனம் என்பது... நொடிகளில் முடிந்துவிடக் கூடியது என்பதே உண்மை. சாதாரணமான ஒரு நபரை பார்ப்பதற்கே போனில் அப்பாயின்மென்ட் எல்லாம் வாங்கிக் கொண்டு புறப்படும் காலமிது. அப்படியிருக்கும்போது... வெங்கடாஜலபதி... எவ்வளவு பெரியவர். அவருக்காக முன்கூட்டியே சின்னதாக ஒரு திட்டமிடக் கூடாதா?'' என்று கேட்கிறார்... திருமலை - திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு பிரதான உறுப்பினரும், தென்னக ரெயில்வே மஸ்தூர் யூனியன் பொதுச்செயலாளருமான என்.கண்ணையா.

''பொதுவாக, 'குருவாயூர் போயிருக்கியா... மூகாம்பிகை கோயில் போயிருக்கியா... காசி போயிருக்கியா..?' என்று எவரிடம் கேட்டாலும்... 'ஓ போயிருக்கேனே’ என்பார்கள். அல்லது 'போனதில்லை’ என்று ஒற்றை வரியில் முடிப்பார்கள். 'திருப்பதி போய் இருக்கியானு கேட்டா, 'போகணும்னு நெனைச்சுக்கிட்டு இருக்கேன்... எப்போனு தெரியலை’ என்றுதான் சொல்வார்கள். சமீபத்தில் சென்று வந்தவர்களாக இருந்தாலும்கூட இப்படித்தான் சொல்வார்கள். அப்படியரு மனோவசீகரம் மிக்க கோயில்தான் திருப்பதி. காலத்துக்கேற்ப தேவஸ்தான நிர்வாகம் செய்துவரும் சீர்திருத்தங்கள் மற்றும் வசதி வாய்ப்புகளும் அதற்கு ஒரு காரணம்.

தற்போது... இந்தியா முழுக்க இருந்து என்றில்லாமல்... அமெரிக்கா, ஃபிரான்ஸ், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா என வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களும் பெரிய அளவில் குவிகிறார்கள். காசி, கைலாஷ், பத்ரிநாத், கேதார்நாத் யாத்திரை செல்வது போல... 'வாழ்நாளில் ஒருமுறையாவது திருமலைக்கு செல்ல வேண்டும்' என்றும் வர ஆரம்பித்துவிட்டனர். வார நாளில் 50 ஆயிரம் பேர். இதுவே சனி, ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாட்கள் என்றால்... ஒரு லட்சம் பேருக்கு மேல் வருகிறார்கள்.

திருப்பதி யாத்திரையா..? இக்கட ச்சூடண்டி...

சென்னையிலிருந்து தினமும் மூன்று ரயில்கள் கீழ்திருப்பதி வரை செல்கின்றன. பாசஞ்சர் ரயில் ஒன்றும் செல்கிறது. இவை தவிர, 9 எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரேணிகுண்டா வரை செல்கின்றன. அங்கிருந்து திருப்பதிக்கு 12 கிலோ மீட்டர்தான். விழுப்புரம் - காட்பாடி வழியாகவும் திருப்பதிக்கு ரயில்கள் விடப்பட்டுள்ளன. எலெக்ட்ரிக் டிரெய்ன் விடுவது பற்றியும் கேட்டுக் கொண்டிருக்கிறோம். ஆந்திர அரசுப் பேருந்துகள் அரை மணி நேரத்துக்கு ஒன்று என்கிற விதத்தில் சென்னையிலிருந்து இயங்குகின்றன'' என்று பட்டியலிட்ட கண்ணையா,

''சுவாமியை தரிசனம் செய்வதற்கு சர்வ தரிசனம் (இலவச தரிசனம்), சுதர்ஸன தரிசனம், சீக்கிர தரிசனம் என மூன்று வழிமுறைகள் உள்ளன. சீக்கிர தரிசனம் என்பது எந்தவித முன்னேற்பாடுகளும் இல்லாமல், மலைக்கே போய் 300 ரூபாய் டிக்கெட் எடுத்துச் சென்று தரிசனம் செய்வது. சர்வ தரிசனத்தில், சாதாரண நாட்களில்    8 மணி நேரமும், சுதர்ஸன தரிசனத்தில் மூன்று மணி நேரமும் ஆகும். சுதர்ஸன தரிசனத்துக்கு மட்டும் இந்தியா முழுக்க இருக்கும் 75-க்கும் மேற்பட்ட கிளைகளில் பதிவு செய்துகொள்ள முடியும்'' என்று சொல்லி, திருவேங்கடமலையானை தரிசிக்க வரும் பக்தர்களின் பயணத்தை எளிதாக்குவற்கான குறிப்புகளையும் தந்தார்.

திருப்பதி யாத்திரையா..? இக்கட ச்சூடண்டி...

• சனி, ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாட்கள் இல்லாமல், வார நாட்களில் திட்டமிட்டால், எளிதாக தரிசனம் செய்யலாம்.

•  ரயில் மற்றும் பஸ் டிக்கெட்டுகள், திருமலையில் தங்கும் அறை வசதிகள் மற்றும் தரிசனம் மற்றும் சேவா டிக்கெட்டுகளுக்கு முன்பதிவு செய்து கொள்வது நல்லது. ஆன்லைனில் 90 நாட்களுக்கு முன்பாகவும், தேவஸ்தான அலுவலகங்களில் 60 நாட்களுக்கு முன்பாகவும் பதிவு செய்யலாம்.

•  தமிழகத்தின் முக்கிய நகரங்களில் திருமலை தேவஸ்தான அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. திருமலையில் தங்கும் வசதியைப் பெற கணவன், மனைவி இருவரும் செல்ல வேண்டும். தனிநபராக செல்பவருக்கு அறைகள் தரப்படுவதில்லை.

•  சுதர்ஸன டோக்கன்கள் சுவாமி தரிசனத்துக்காக காத்திருக்கும் நேரத்தை வெகுவாக குறைக்க உதவும். இதைப் பெறுவதற்கு, திருமலைக்குச் செல்ல திட்டமிட்டுள்ள அனைவரும், தங்கள் பகுதியிலிருக்கும் தேவஸ்தான கிளை அலுவலகத்துக்கு ஒன்றாகச் சென்று தரிசன நாள், நேரம் ஆகியவற்றை கைரேகை மற்றும் புகைப்படப் பதிவைச் செய்தாக வேண்டும்.

•  அறை வசதி கிடைக்காவிட்டாலும், கொண்டு செல்லும் பொருட்களை வைக்க லாக்கர் வசதிகள் உள்ளன. அதில் பொருட்களை வைத்துவிட்டு தரிசனம் செய்யலாம்.

திருப்பதி யாத்திரையா..? இக்கட ச்சூடண்டி...

திடீரென்று பயணம் மேற்கொள்பவர்களின் வசதிக்காக... ரேணிகுண்டா, திருப்பதி பஸ் ஸ்டாண்டு எதிர்புறம் ஸ்ரீனிவாசம் காம்ப்ளக்ஸ், திருப்பதி ரயில் நிலையம் அருகே உள்ள விஷ்ணுநிவாஸ்., அலிப்பிரி டோல்கேட் ஆகிய இடங்களில் அதிகாலை 5 மணிக்கு  தொடங்கி 7 மணி வரை சுதர்சன டோக்கன்கள் வழங்கப்படுகின்றன.

•  நடந்து செல்பவர்களுக்கு திருப்பதி ரயில் நிலையத்திலிருந்து அலிப்பிரி வரை இலவசப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. உடைமைகளை அலிப்பிரி அடிவாரத்தில் உள்ள கவுண்டரில் செலுத்தி, மலை மீது சென்றதும் திருமலை சி.ஆர்.ஓ. அலுவலகம் அருகில் உள்ள மண்டபத்தில் இலவசமாக பெற்றுக் கொள்ளலாம்.

•  தரிசனம் செய்யச் செல்லும்போது செல்போன்களை அறையிலேயே விட்டுச் செல்வது நல்லது.

•  அளவுக்கதிகமான நகைகளையோ, பணத்தையோ எடுத்துச் செல்லக் கூடாது. முன்பின் அறியாதவர்களிடம் தங்குவதற்கு அறைகள் உள்ளிட்ட எதையுமே கேட்காமல்இருப்பது நல்லது. அனைத்து தகவல்களுக்கும் திருமலை திருப்பதி தேவஸ்தான அலுவலர்களை மட்டுமே தொடர்பு கொள்வது நல்லது. அல்லது http://www.tirumala.org/ இணைய தளத்தைப் பார்க்கலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism