Published:Updated:

இவர் கேரம் கில்லி !

இவர் கேரம் கில்லி !

பிரீமியம் ஸ்டோரி

தமிழகத்தின் முக்கிய இளம் கேரம் சாம்பியன், பரிமளாதேவி! இதுவரை ஸ்டேட், நேஷனல், இன்டர்நேஷனல் என தன் சுட்டுவிரல் சுறுசுறுப்பால் 150-க்கும் மேற்பட்ட பரிசுகளைக் குவித்துள்ளவர். மாலத்தீவில் நடந்த 'சார்க்' மற்றும் 'ஏஷியன்' கேரம் போர்ட் போட்டிகளில் 'சிங்கிள்ஸ்', 'டபுள்ஸ்' 'மிக்ஸ்டு டபுள்ஸ்' என பல பிரிவுகளிலும் விளையாடி ஆறு அவார்டுகளைப் பெற்று, ஆசிய அளவில் இந்தியா இரண்டாமிடம் பெற முக்கியப் பங்காற்றியிருப்பது, பரிமளாதேவியின் சமீபத்திய சாதனை!

ஓர் இளம் மாலை வேளையில் சந்தித்தோம் பரிமளாதேவியை, சென்னை, சூளைமேட்டில் உள்ள அவருடைய வீட்டில். ஆசையாக தான் வளர்க்கும் கிளிகள், புறாக்களின் 'கீச் கீச்’களுக்கிடையே கசிந்தது பி.ஏ. பட்டதாரியான பரிமளாவின் குரல்.

இவர் கேரம் கில்லி !
##~##

''மிடில் கிளாஸ் ஃபேமிலினாலும்... விளையாட்டுல அதிக ஆர்வம் இருக்கற குடும்பம். தாத்தா, வாலிபால் சாம்பியன். அப்பா, ஃபுட்பால் சாம்பியன். கேரம்லயும் மெடல்கள் வாங்கியிருக்காரு. ஒரு விளையாட்டா எனக்கு இதை அறிமுகப்படுத்தினாரே தவிர, 'இதுலதான் நீ சாதிக்கணும்’னு எந்த எதிர்பார்ப்பையும் திணிக்கல.

ஏழாவது படிக்கறப்ப வாலிபால்ல ஆர்வம் வந்தது. ஆனா, எவ்வளவு சிறப்பா விளையாடினாலும், அந்தக் குழு விளையாட்டுல நமக்கு தனியா ஒரு அங்கீகாரம் கிடைக்கலையேனு மனசு டல்லாச்சு. அப்போதான், அதுவரை பொழுதுபோக்கா விளையாடிட்டு இருந்த கேரம் விளையாட்டு, 'நம்மளோட தனித்திறமையை இதுல நிரூபிக்கலாமே’னு என்னைத் திரும்பிப் பார்க்க வெச்சது. ஒரு வேகத்தோட கோடம்பாக்கம் ஓ.ஆர்.சி கிளப்ல பயிற்சிகள் எடுத்து, பத்தாம் வகுப்பு படிக்கும்போது முதல் போட்டிக்குப் போனேன். அதிலிருந்து இப்போ வரைக்கும் தோல்வியே இல்ல'' என்ற பரிமளாதேவி, பி.எஸ்.என்.எல். நிறுவன ஊழியரான அப்பா, இல்லத்தரசியான அம்மா, இரண்டு தங்கைகள் என்று அவர் குடும்பமும் ஊக்கப்படுத்த, பக்காவாக காய்களை பாக்கெட் செய்து பரபரவென முன்னேறி இருக்கிறார் கேரம் விளையாட்டில்!

''பள்ளிகளுக்கு இடையேயான போட்டிகள்ல கலந்துக்கிட்டப்போ, முதல், இரண்டாம் சுற்றுகள்ல பயமா, பதற்றமா இருந்தது. ஆனா, இறுதிச் சுற்றுல போய் உட்கார்ந்தவொடன 'நாமதான் ஜெயிப்போம்!’னு மனசுக்குள்ள ஒரு தைரியம் வந்துடுச்சு. அந்த போட்டியில நான் ஜெயிச்ச பிறகுதான் என் மேல எனக்கு அசாத்திய நம்பிக்கை. அடுத்தடுத்த போட்டிகள்ல சர்வ சாதாரணமா எதிர் அணிய வீழ்த்திட்டு ஸ்டேட், நேஷனல், இன்டர்நேஷனல்னு மேல போக ஆரம்பிச்சேன்'' எனும் பரிமளாதேவி, தன் சமீபத்திய வெற்றியைப் பகிர்ந்து கொண்டார்....

''மாலத்தீவு நாட்டுல மே மாசம் சார்க் நாடுகளுக்கான கேரம் சாம்பியன் போட்டி நடந்துச்சு. அதுல 'சிங்கிள்ஸ்'ல முதல் இடம் பிடிச்சேன். ஜூலை மாதம் அதே மாலத்தீவுல நான்காவது ஏசியன் கேரம் சேம்பியன்ஷிப் நடந்துச்சு. 'டபுள்ஸ்'ல முதலிடம், 'சிங்கிள்’ல இரண்டாவது இடம்... 'மிக்ஸ்டு டபுள்ஸ்’ல முதலாவது இடம்னு மொத்தம் 5 அவார்டுகளை அள்ளினேன். அந்தப் போட்டியில ஆசிய அளவுல இந்தியா இரண்டாவது இடம் வாங்கறதுக்கு நான் முக்கியக் காரணமா இருந்தேங்கறதுல எனக்கு அவ்வளவு சந்தோஷம்!'' என்று மகிழ்ந்தவர்,

''இந்தியாவிலேயே முதன் முதலா கேரம் போட்டிக்காக அர்ஜுனா விருது வாங்கின மரிய இருதயம்தான் என்னோட ரோல் மாடல். ஆர்வமும் திறமையும் இருந்தும்கூட, ஸ்பான்ஸர் இல்லாம நான் தவற விட்ட போட்டிகளும் வெற்றிகளும் நிறைய. கடந்து நாலு வருஷமா இந்தியன் வங்கி எனக்கு ஸ்பான்ஸர் பண்ணிச்சு. நான் ஆசிய போட்டியில கலந்துக்கறதுக்கு ஆர்.கே.எனர்ஜி லிமிடெட் நிறுவனர் தாஸ் ஸ்பான்ஸர் பண்ணினார். எனக்கு இப்போ அதிக அளவுல ஊக்கம் தந்திட்டு இருக்கறவர்... கிறிஸ்துதாஸ் காந்தி ஐ.ஏ.எஸ். சார். என் வலிமையான விரலுங்களும், இதுமாதிரியான நல்ல உள்ளங்களோட உதவிகளுமே போதும்... கேரம் விளையாட்டுல நான் உலக சாம்பியன் ஆக!''

- எதிர்காலத்துக்காகக் காத்திருக்கிறார் பரிமளாதேவி!

- வே.கிருஷ்ணவேணி
படம்: சொ.பாலசுப்ரமணியன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு