Published:Updated:

"மாற்றத்துக்கான விதையை பள்ளியில் விதைக்க வேண்டும்..."

இணைந்து மிரட்டும் இளைய தலைமுறை!

"மாற்றத்துக்கான விதையை பள்ளியில் விதைக்க வேண்டும்..."

##~##''இளைஞர்கள்தான் இந்தியாவோட பலம். அவங்களுக்கு அந்தப் பொறுப்பை உணர வைக்கற முயற்சியிலதான் எங்களோட 'விவேகானந்தா இளைஞர் மன்றம்’ பயணிச்சுட்டு இருக்கு''

- சந்தோஷமாக இருக்கிறது தீர்க்கமாகப் பேசும் ஸ்ரீகாவைப் பார்க்க!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

சென்னை, எஸ்.ஆர்.ஆர். பொறியியல் கல்லூரியின் இறுதியாண்டு மாணவி ஸ்ரீகா. சமூக அக்கறை, இவரின் அடையாளம். அதன் வெளிப்பாடாக நண்பர்களுடன் கைகோத்து இவர் ஆரம்பித்திருக்கும் 'விவேகானந்தா இளைஞர் மன்றம்’, பள்ளிக் குழந்தைகளிடம் சமூக சிந்தனையை விதைக்கும் முயற்சிகளில் ஆக்கபூர்வமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

மன்றத்தின் பொறுப்பாளராக இருக்கும் ஸ்ரீகாவின் வார்த்தைகளில் அத்தனை பொறுப்பு... ''நானும் நார்மலான ஒரு கல்லூரி மாணவி. ஆனா, பொறுப்பற்ற மாணவர்கள், சமுதாயத்து மேல அக்கறை இல்லாத இன்றைய சுயநல இளவயதினர், இளைஞர்கள் குற்றவாளி களாகும் செய்திகள்... இதையெல்லாம் என்னால் எளிதா கடக்க முடியல. 'ஏன் இப்படி..?’னு எனக்குள்ள நிறைய வருத்தங்கள்; 'இதுக்கு நம்மளால என்ன பண்ண முடியும்...?’னு நிறைய கேள்விகள். அதுக்கான பாஸிட்டிவ் தீர்வாதான், 'விவேகானந்தா இளைஞர் மன்றம்’ ஆரம்பிக்கறதுக்கான விதை விழுந்தது.

"மாற்றத்துக்கான விதையை பள்ளியில் விதைக்க வேண்டும்..."

இருபது வயசுப் பையன்கிட்டயோ, பொண்ணுகிட்டயோ 'இதெல்லாம் பண்ணாதீங்க’னு சொல்லி திருத்திட முடியாது. ஆனா, எட்டு வயசுக் குழந்தைகள்கிட்ட 'இதெல்லாம் பண்ணுங்க’னு நல்ல விஷயங்கள சொல்லிக் கொடுத்து வார்க்க முடியும்'' என்று அற்புதமாக ஆரம்பித்தவர்,

''இதை நடைமுறைக்கு கொண்டு வர எனக்கு தோள் கொடுத்தாங்க தோழிகளும், நண்பர்களும். ஒருவேளை, 'வேண்டாம்ப்பா... எதுக்கு உனக்கு இந்த வெட்டி வேலை..?’னு அவங்கள்லாம் என்னை சோர்வாக்கியிருந்தா, என்னால பயணத்தை தொடங்கியிருக்கவே முடியாது. அடுத்ததா, என் அக்கறை, ஆர்வத்துக்கு அணை போடாத என் பெற்றோர், 'நல்ல விஷயம் பண்ற... வாழ்த்துகள்!’னு உற்சாகப்படுத்தின என் கல்லூரி... எல்லாருக்கும் என்னோட நன்றிகள்.

நண்பர்களோட நண்பர்கள், அவங்களோட நண்பர்கள்னு நிறைய இளைஞர், இளைஞிகள்னு அம்பது பேருக்கும் மேல உறுப்பினர்கள் இருக்காங்க.

குழந்தைகளுக்கு கிளாஸ் எடுக்கறதுக்கு முன்ன எங்களை அதுக்கு தகுதிப்படுத்திக்கிட்டோம். விவேகானந்தரோட வாழ்வியல் கோட்பாடுகளை முழுசா படிச்சுட்டு மனசுல வாங்கிக்கிட்டோம். மயிலாப்பூர்ல இருக்கற 'கற்பகவள்ளி வித்யாலயா’ பள்ளியில ஏழு, எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு சமூக சிந்தனை உட்பட பல விஷயங்கள கலந்துரையாடல் மூலம் புரிய வைக்கிறோம்.

இந்தியாவின் வளர்ச்சிக்கான வளம் என்ன, தடை என்ன, அதை களையறதுல அவங்களோட பங்கு என்ன, அவங்க இந்தச் சமூகத்துல மாற்ற நினைக்கற தவறுகள் என்ன, அதுக்கு என்னவெல்லாம் பண்ணலாம்னு குழந்தைகளோட சேர்ந்து பேசறோம். அந்த பிஞ்சுக் குரல்கள்ல இருக்கற தீவிரமும், உண்மையும் எங்க முயற்சிக்கு அவ்வளவு நம்பிக்கை சேர்க்கறதா இருக்குது'' என்று ஸ்ரீகா நிறுத்த, தொடர்ந்தனர் மன்ற உறுப்பினர்கள் உமாபாரதி, ராஜேஸ்வரி இருவரும்...

"மாற்றத்துக்கான விதையை பள்ளியில் விதைக்க வேண்டும்..."

''ஆரணி பக்கத்துல இருக்கற 'விண்ணமங்களம்’ கிராமத்தை தத்தெடுத்து, குழந்தைகளுக்கு சமுதாயச் சிந்தனைகளை ஊட்டறோம். 'எம்.ஜி.ஆர். காது கேளாதோர்’ பள்ளியிலயும் அதை தொடரப் போறோம்'' என்றார்கள் ஆர்வத்துடன்.

''ஏதாச்சும் பாஸிட்டிவ்வா செய்யணும்ங்கற எண்ணம் மனசுக்குள்ள இருந்தாலும், அதுக்கு செயல் வடிவம் கொடுக்கத் தெரியாம இருந்த எங்களுக்கு ஸ்ரீகா காட்டியிருக்கறது நேர்த்தியான வழி. நாளைய இந்தியாவுக்கு நல்ல இளைஞர்களை கொடுக்க, இன்றைய இளைஞர்கள் நிறைய பேர் இதுல இணையணும்!''

- மன்ற இளைஞர்கள் விக்னேஷ், ராம்குமார், சந்தோஷ் வார்த்தைகளில் அக்கறை!

ரசிகர் மன்றங்கள் அமைக்கும் இளசுகளுக்கு நடுவே... தீர்க்கமாகப் பேசும் இந்த இளம் ரத்தங்களைப் பார்க்க சந்தோஷமாக இருக்கிறது!

- ரா.ஷர்மிளா

படங்கள்: ச.இரா.ஸ்ரீதர்