##~##

 யாரந்த சுரேஷ்?

''டேய் எருமை... அறிவுகெட்ட முண்டம்... மாங்கா மண்டையா... டயர்ல காத்து இருக்கானு செக் பண்ண சொன்னா, எங்கடா வேடிக்கை பாத்துட்டு இருக்கே?''

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

- சுரேஷ் பற்றி நினைக்கும்போதெல்லாம், அந்த லாரி டிரைவர், அவனைத் திட்டுவதுதான் ஞாபகத்துக்கு வரும். உண்மையில் சுரேஷ் கண்டவர்களிடமும் திட்டு வாங்கும் அளவுக்கு மடையனோ... முட்டாளோ அல்ல. ஐந்து ஆண்டுகளுக்கு முன், அவன் 'டாக்டர் சுரேஷ்'. இப்போது, கிளீனர் சுரேஷ்.

கேட்கவே அதிர்ச்சியாக இருக்கிறதல்லவா..! இப்படி நான் அதிர ஆரம்பித்து, ஐந்தாறு ஆண்டுகளாகிவிட்டன.

அன்று காலையில் அவனைப் பற்றிய யோசனையோடு, வழக்கம்போல தினசரியைப் புரட்டியபோது... அந்தச் செய்தி, என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. நீங்கள், நான் என்று அந்தச் செய்தியைப் படித்த அத்தனை பேரின் கண்ணீரையும் கறந்த தினா - மகேஷ்வரன் காதல் ஜோடியின் சோக முடிவு... கொடுமையிலும் கொடுமைஅல்லவா!

பத்தொன்பது வயது தினா மற்றும் மகேஷ்வரன் இடையே பூத்த அந்த மெல்லிய காதல், ரயில் சக்கரங்களுக்கு அடியில் கொடூரமாக நசுங்கி, அடங்கிப் போகும் என்று யாராவது நினைத்திருப்பார்களா!

அலைபாயும் நெஞ்சினிலே..! - 3

படிக்கப் போன இடத்தில் இருவரிடையே காதல் பற்றிக் கொண்டது. பையன், வீட்டுக்குக் கடைக்குட்டி. படம் வரைவது... படிக்கும் குழந்தைகளுக்கு பாடம் சொல்லித் தந்து உதவுவது என்று சில சினிமாக்களில் வரும் துறுதுறு ஹீரோவேதான். இப்படிஇருந்தால்.. யாருக்குத்தான் பிடிக்காது. பெண்ணின் அப்பா, சப் - இன்ஸ்பெக்டர். 'போலீஸ் மகளுக்கு காதல் வரக் கூடாது' என்று எதுவும் இல்லையே. ஆயிரமாயிரம் கனவுகள் சுமந்தபடி சிறகடித்த காதல் ஜோடிக்கு முதல் சிக்கல், தினாவின் வீட்டில் மாப்பிள்ளை பார்ப்பதாக மகேஷ்வரனுக்குக் கிடைத்த செய்திதான்!

'இன்று வரை நம் நெஞ்சத் திரையில் உறவாடிக் கொண்டிருப்பவள், நாளை வேறொருவனை மணக்கப் போகிறாள்' என்பதை நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. துளி தைரியத்தைக்கூட வெளிப்படுத்தி, காதலுக்காக போராட முடியாதவனாகிப் போனவன், பச்சை வயல்களுக்கு மத்தியில், காற்றைக் கிழித்துக் கொண்டு சீறி வந்த ரயிலின் சக்கரத்தில் தன்னோடு சேர்த்து, காதலையும் சிதைத்துக் கொண்டான்.

தினா?

காதலன் போய்ச் சேர்ந்த சோகம்... ஊர்ப்பேச்சு... என நடைபிணமானவள், கல்லூரிக்கு போகாமல் வீட்டிலேயே அடைந்து கிடந்தாள். ஒரு மாதம் உருண்டோடிய நிலையில், 'அப்பா நான் காலேஜ் போறேன்' என்றபோது... குடும்பமே குஷியானது. 'இனி, இவள் வாழ்க்கையில் வசந்தம் வந்துவிடும்' என்று தன் பைக்கில் கொண்டுபோய் கல்லூரி வாசலில் இறக்கிவிட்டார் அப்பா. அடுத்த சில மணி நேரங்களில் வீடு தேடி வந்த செய்தி...

'மகேஷ்வரன், ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட அதே தஞ்சாவூர் ரயில்வே தண்டவாளத்தில், தினாவும் ரயில் முன் பாய்ந்து உயிரை மாய்த்துக் கொண்டாள்'.

'காதல் போயின் சாதல்!' எனும் கொடுமை, இன்னும் இருநூறு நூற்றாண்டுகளுக்கும் இங்கே தொடரத்தான் செய்யுமோ!

கண்மூடித்தனமாக காதலிக்கும் காதலர்களைப்போலவே, கண்மூடித்தனமாக எதிர்க்கும் பெற்றோர்களும் இதற்கெல்லாம் ஒரு காரணம் என்றே தோன்றுகிறது!

'பதினெட்டு, பத்தொன்பது வருஷம் ஆளாக்கினதுக்கு இதுதான் தண்டனையா?' என்கிற கதறல்கள் ஒருபோதும் இதற்கு மருந்திட முடியாது. வேண்டுமென்றால், 'நாற்பது, நாற்பத்தைந்து வயதையெல்லாம் கடந்து, ஏகப்பட்ட அனுபவங்களுடன் வாழ்ந்து கொண்டிருப்பதற்கு தண்டனை' என்று உணர்ந்தால், ஒருவேளை அது மருந்தாக அமையலாம்.

நீங்கள் நினைத்திருந்தால், இதைத் தடுத்து நிறுத்தியிருக்க முடியும் என்பதற்காகவே இப்படி உங்களை நோக்கி கை நீட்டுகிறேன்!

''ரத்தமும் சதையுமாக உயிர்களை பலிகொடுத்துவிட்டு நிற்பவர்களுக்குத்தான் தெரியும்... பிள்ளைகளின் மரணம் தரும் சோகத் தாக்குதல் எத்தகையது என்று'' என பெற்றோர்களின் பிரதிநிதிகளாக பலரும் குமுறுவது புரிகிறது.

''20 ஆண்டுகளா பெத்து, வளர்த்து ஆளாக்கின அப்பா, அம்மாவுக்கு ஏதாவதுனா... யாராவது தற்கொலை செய்துக்கறாங்களா? ஆனா, 2 நாள்... 2 மாசம்... 2 வருஷம்னு பழகின யாரோ ஒருத்தருக்காக தற்கொலை செய்துக்கறாங்களே...?'' என்று அவர்களில் ஒருவர் எழுப்பும் கேள்வியும் என் காதுகளை எட்டுகிறது.

யாருக்காகவும் இப்படிப்பட்ட முடிவுகள் தேவையே இல்லை. என்றாலும் ஒரு பேச்சுக்காக அதையே திருப்பிக் கேட்கிறேன்... ''யாரோ ஒருவனுக்காக உயிரையே மாய்த்துக் கொள்ள நினைக்கும் பிள்ளைகள், உங்களுக்காக அப்படிப்பட்ட முடிவுகளுக்கெல்லாம் போவதில்லையே... ஏன்?''

அட... மகேஷ்வரன் - தினா சோகத் தாக்குதலில்... நான் பேச வந்த சுரேஷை மறந்தே போனேன்.

அலை பாயும்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism