Published:Updated:

பொம்மை நாயகி

பொன்.விமலா, படம்: சு.குமரேசன்

பொம்மை நாயகி

பொன்.விமலா, படம்: சு.குமரேசன்

Published:Updated:
##~##

 ''ஜூனியர்... ஜூனியர்...'' 70-களில் மிகப்பிரபலமான பாடல்... அன்றைய குழந்தைகளை மட்டுமல்ல, பெரியவர்களையும், ஆச்சர்யத்துடன் பார்க்க வைத்த பாடல் இது. 'அவர்கள்’ படத்தில் இடம்பெற்ற இந்தப் பாடலில் கமல்ஹாசனுடன் நடித்த பொம்மை கதாபாத்திரம்தான் அதற்குக் காரணம்! வெளிநாடுகளில் மிகவும் புகழ்பெற்றிருக்கும் இந்தக் கலைக்கு... 'வெண்ட்ரிலோகுயிஸ்ம்' (Ventriloquism) என்று பெயர்!

இந்தியாவில் இந்தக் கலையில் நிபுணத்துவம் பெற்றிருக்கும் முதல் பெண்ணாகக் கலக்கிக் கொண்டிருக்கிறார் பெங்களூருவைச் சேர்ந்த 27 வயது இந்துஸ்ரீ. 'மிமிக்ரி' மற்றும் 'வெண்ட்டிரிலோகுயிஸ்ட்' (Ventriloquist) கலைஞரான இவர், 2008, 2009, 2010 என தொடர்ந்து மூன்று ஆண்டுகள் லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்திருக்கிறார். 35 வகையான வெவ்வேறு செயல்களோடு பொம்மைகளை இயக்கி, இதுவரை மூன்றாயிரம் மணி நேரத்துக்கும் அதிகமான நிகழ்ச்சிகளை நடத்தியிருக்கிறார். என்.டி.டி.வி-யில் முழுக்க முழுக்க பொம்மைகளை வைத்தே நடத்தப் படும் 'தி கிரேட் இண்டியன் தமாஷா' என்கிற நிகழ்ச்சி மூலமாக இந்த இந்துஸ்ரீ ஏக பிரபலம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கையில், 'க்யூட் டால்’ டிங்குவை பிடித்துக் கொண்டு சிரித்தபடியே பேசுகிறார் இந்துஸ்ரீ. 'பளிச்’ சிரிப்புடன் கண் சிமிட்டுகிறது டிங்கு.

பொம்மை நாயகி

''கிட்டத்தட்ட மிமிக்ரி போலத்தான் இந்தக் கலையும். கையில் இருக்கும் பொம்மை தலையாட்டி வாயசைத்து பேசுவதைப்போல இருந்தாலும், உண்மையாகவே பொம்மை பேசாது. அதை, இயக்கும் நாங்கள்தான் பேசுவோம். ஆனால், அதை எளிதில் கண்டுபிடிக்க முடியாது. அதில்தான் திறமை அடங்கியிருக்கிறது. இந்த பொம்மைகளை 'டம்மி' என்பார்கள்.

எட்டு வயதிலேயே எனக்கு மேஜிக் மீது ஆர்வம். அடிக்கடி மேஜிக் செஞ்சு பார்ப்பேன். யாராவது ஒருவர் பேசும்போது, அவர்களின் உதடு அசைவுகளை உற்றுப் பார்த்து, அதேபோல மிமிக்ரி செய்துகொண்டே இருப்பேன். இதைப் பார்த்த நண்பர்கள், 'உனக்கு மிமிக்ரி நன்றாக வருகிறது' என்று உற்சாகப்படுத்தினார்கள். சின்ன வயதில் கிடைத்த கைதட்டல்கள், ஏதாவது செய்து கொண்டே இருக்க வேண்டும் என்கிற ஆர்வத்தை உண்டாக்கியது. மோனோ ஆக்டிங், மியூசிக் இன்ஸ்ட்ரூமென்ட், வாய்ப்பாட்டு என எல்லா வித்தைகளிலும் பயிற்சி பெற்று, போட்டிகளில் பங்கேற்று நிறைய பரிசுகளை வாங்க ஆரம்பித்தேன். மிமிக்ரி, மேஜிக் இரண்டையும் விடாமல் மேடையேற்றினேன். இதற்காக யாரிடமும் பயிற்சி எடுக்கவில்லை. என் இன்ஸ்ப்ரேஷன்... 'வெண்ட்ரிலோகுயிஸ்ம்' நிகழ்ச்சிகளை நடத்தும் பெங்களூரு, உதய் ஜாதுகர்தான். என் அப்பாவும் அம்மாவும் தொடர்ந்து உற்சாகப்படுத்தியதும் காரணம்'' என்று சிரிக்கும் இந்துஸ்ரீ, அமெரிக்கா, கனடா, சிங்கப்பூர், தாய்லாந்து என உலக நாடுகள் பலவற்றிலும் தன் பொம்மையால் ரசிகர்களைச் சம்பாதித்திருக்கிறார். 'உலகிலேயே 10 அடி உயரமுள்ள டம்மியுடன் நிகழ்ச்சி நடத்திய முதல் பெண்மணி' என்கிற பெருமையும்!

''பொதுவாக எல்லோரும் ஒரு டம்மி அல்லது இரண்டு டம்மிகளுடன்தான் ஷோ நடத்துவார்கள். நான் ஒரே நேரத்தில் 5 டம்மிகளுடன் ஷோ செய்து காட்டுவேன். இது சாதாரண விஷயம் இல்லை. ஒரு பொம்மை பேசும்போது மற்ற பொம்மைகள் ஆக்ஷனில் இருக்க வேண்டும். இந்த 5 கேரக்டர்களுடன் ஒன்றிப் போய் நானும் பேச வேண்டும். இதில் கவனிக்க வேண்டிய விஷயம்... என்னோடு சேர்த்து மொத்தம் 6 குரலுக்கு மிமிக்ரி செய்வதுதான். ஒவ்வொரு டம்மியின் குரலையும் ஞாபகம் வைத்துக் கொண்டு, ஆறு பேருக்கும் சேர்த்து முப்பத்தைந்துக்கும் மேற்பட்ட வித்தியாசமான ஆக்ஷன்கள் கொடுக்க வேண்டும். ஏதாவது ஒன்றில் சொதப்பினாலும்... மொத்தமாக மொக்கை வாங்க வேண்டியதுதான். கண், காது, மூக்கு, வாய், கால், கை, மூளை என உடம்பில் இருக்கும் மொத்த உறுப்புகளும் திட்டமிட்டு வேலை செய்ய வேண்டும்'' என்று தலையசைத்து தலையசைத்து பேசும் இந்துஸ்ரீ, கேன்சர் மற்றும் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்காக ஷோ நடத்தி நிதி திரட்டிக் கொடுத்திருக்கிறார்.

இவருடைய கனவு... இந்தக் கலையை எல்லோரிடமும் கொண்டு சேர்ப்பதுதானாம். அதற்காக 'வெண்ட்ரிலோகுயிஸ்ம்' கலை பயிற்சிப் பள்ளி ஒன்றை விரைவில் ஆரம்பிக்க இருக்கிறார்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism