Published:Updated:

டுமீல் டுமீல் சந்தியா!

##~##

'நேஷனல் ரைஃபிள் அசோஸியேஷன் ஆஃப் இண்டியா’ சார்பில் சமீபத்தில் தேசிய அளவில் டெல்லியில் நடத்தப்பட்ட 'பத்தாவது சர்தார் சஜ்ஜா சிங் சேத்தி மெமோரியல்' துப்பாக்கி சுடும் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றிருக்கிறார், சென்னை, எம்.ஓ.பி வைஷ்ணவா கல்லூரி மாணவி சந்தியா.

'வீட்டுக்கு கடைக்குட்டியான நான், அப்பா அம்மாவுக்கு ரொம்ப செல்லம். 'பட் பட்’னு பேசுற ஆளு நான். அதேபோல... 'டப் டப்’னு சுட்டுத் தள்ளுறதிலும் கில்லாடி!'' - கையில் 6 கிலோவுக்கும் அதிகமான எடையுள்ள துப்பாக்கியை லாகவமாக ஏந்தியவாறே முன்னுரை கொடுக்கிறார், பதினெட்டு வயது சந்தியா.

அழகாகவும் சமர்த்தாகவும் இருக்கும் சந்தியா, 40 கிலோ தாஜ்மகால். முதலாம் ஆண்டு விஷ§வல் கம்யூனிகேஷன் படிக்கும் இவர், ஒரு கையில் கேமரா, மறுகையில் துப்பாக்கி என அசால்டாக பல மெடல்களை அள்ளிக் குவித்துக் கொண்டிருக்கிறார். ஓவியம், நீச்சல், எறிபந்து, படிப்பு, புகைப்படக்கலை.... என சகலகலாவல்லியும்கூட!

''அப்பா, அம்மா ரெண்டு பேருமே டாக்டர். அம்மா அவங்க காலத்துல ஜூனியர் ஸ்டேட் லெவல் ரைஃபிள் ஷூட்டிங்ல சேம்பியன். அம்மாதான் என்னோட ஃபுல் அண்ட் ஃபுல் கோச்சர். பன்னிரண்டாவது வயசுலயே சப்-ஜூனியர் பிரிவில் 10 மீட்டர் ரைஃபிள் ஷூட்டிங்ல மாநில அளவுல வெள்ளி பதக்கம் வாங்கிட்டேன். பதினாலு வயசுல தேசிய ஜூனியர் பிரிவில் ஜெயிச்சு, துப்பாக்கி லைசன்ஸுக்கான அங்கீகாரமும் வாங்கியிருக்கேன்.

டுமீல் டுமீல் சந்தியா!

பதினேழு வயசுல மாநில ஜூனியர் பெண்கள் பிரிவில, அறுநூறுக்கு 549 பாயின்ட்ஸ் எடுத்து, முந்தைய சாதனையை முறியடிச்சுருக்கேன். 2012-ம் வருஷம், டெல்லியில நடந்த 56-வது நேஷனல் சேம்பியன்ஷிப் போட்டியில 'புரோன் பொஸிஷன்' குழு பிரிவுல நடந்த போட்டிகள்ல தங்கம், வெள்ளி, வெண்கலம்னு பதக்கங்களை அள்ளியிருக்கேன்''

- கழுத்து நிரம்பிய மெடல்களை தூக்கிப் பிடித்துக் கொண்டே சிரித்த சந்தியா, தொடர்ந்தார்...

''போன மாசம் நடந்த நேஷனல் லெவல் போட்டி... வாழ்க்கையில மறக்க முடியாத நிகழ்வு. த்ரீ பொஸிஷன்ல வெண்கலப் பதக்கம் கிடைச்சுது. இதுல ஜெயிச்ச பிறகு துப்பாக்கி சுடுதல் பெண்கள் பிரிவுல, முதல் 15 பேர்ல நானும் ஒருத்தியா தேர்வாகியிருக்கேன். இந்தப் போட்டிகளைப் பொறுத்தவரை நம் கவனம் முழுக்க முழுக்க ரைஃபிள் மீதுதான் இருக்கணும். கண்களுக்கு கூடுதல் அக்கறை எடுத்துக்கணும். தினமும் ஆரோக்கியமான சாப்பாடு எடுத்துக்கணும். நான் படிப்பு, விளையாட்டு ரெண்டையுமே ரெண்டு கண்களாதான் பார்க்கிறேன். அடுத்ததா ஈரான்ல நடக்கப்போற உலக அளவிலான ரைஃபிள் ஷூட்டிங் போட்டியில் கலந்துக்கப் போறேன். என்னோட லட்சியம்... ஒலிம்பிக் கோல்டு மெடல்!'

- சந்தியாவின் 'பளிச்’ சிரிப்பில், அவருடைய கைளில் இருக்கும் தங்க மெடல் ஜொலிக்கிறது!

- பொன்.விமலா, படம்: அபிநயா சங்கர்