##~##

'பெண்கள் எதிலும் குறைந்தவர்கள் இல்லை’ என்பதற்கு உதாரணமாக, ஏற்கெனவே இருக்கும் பட்டியலில், இப்போது போலீஸ் துறையையும்  சேர்த்துச் சொல்லலாம். கடினமான, உயிரைப் பணயம் வைத்து பணி செய்யக் கூடிய இந்தத் துறையில், இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதிகமான எண்ணிக்கையில் பெண் கள் பணிபுரிகிறார்கள் என்பது பெருமைக் குரிய விஷயம்!

1973-ல் கருணாநிதி முதல்வராக இருந்தபோதுதான் தமிழக காவல் துறையில் பெண்கள் சேர்த்துக் கொள்ளப்பட்டனர். 1991-96-ம் ஆண்டில் ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, பெண்களுக்கு எதிரான குற்றங்களைக் கட்டுப்படுத்தவும், வரதட்சணைக் கொடுமையை ஒழிக்கவும் பெண் காவலர்கள் மட்டுமே பணியாற்றும் 'அனைத்து மகளிர் காவல் நிலையங்கள்’ தமிழ்நாடு முழுவதும் தொடங்கப்பட்டன. மீண்டும் ஜெயலலிதா முதல்வராக (2001-06) வந்தபோது... பெண்கள் மட்டுமே இருக்கும் 'சிறப்பு பெண்கள் ஆயுதப்படை’யும் தொடங்கப்பட்டது. இது, அதிக அளவில் பெண்கள் காவல் துறையில் சேர்வதற்கு பெரிதும் வழிவகுத்தது. இன்று தமிழகத்தில் 198 அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் செயல்பட்டுவருவது, குறிப்பிடத்தக்கது!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தகுதி மற்றும் தேர்வு!

'தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம்’ எனும் அமைப்பு நடத்தும் தேர்வுகள் மூலமாகவே காவல்துறையின் கீழ்நிலை பதவிகளுக்கு ஆண்கள் மற்றும் பெண்கள் என இருபாலரும் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். இரண்டாம் நிலை காவலர் பணியில் சேர விரும்பும் ஆண்கள் மற்றும் பெண்கள் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 18 வயது முதல் 24 வயதுக்குள் இருக்க வேண்டும். ஆண்கள் 170 சென்டி மீட்டர், பெண்கள் 159 சென்டி மீட்டர் உயரமும்... எஸ்.சி/எஸ்.டி பிரிவினராக இருந்தால்... ஆண்கள் 167 சென்டி மீட்டர், பெண்கள் 157 சென்டி மீட்டர் உயரமும் இருந்தால் போதுமானது. ஆண்களின் மார்புப் பகுதி சாதாரண நிலையில் 81 சென்டி மீட்டரும், விரிந்த நிலையில் 5 சென்டி மீட்டர் அதிகமாகவும் இருக்க வேண்டும். சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான தேர்வில் கலந்துகொள்ள விரும்புகிறவர்களுக்கு மேலே சொன்ன விதிமுறைகளோடு... ஏதேனும் ஒரு பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். வயது... 20 முதல் 28 வரை இருக்க வேண்டும்.

அ முதல் ஃ வரை..! - 2

எழுத்துத் தேர்வில் வெற்றி பெற்ற பிறகு, உடல் தேர்வும் நடத்தப்படும். ஆண்களுக்கு ஓட்டப் பந்தயம், நீளம் தாண்டுதல், கயிறு ஏறுதல் போன்றவற்றிலும், பெண்களுக்கு ஓட்டப் பந்தயம், குண்டு எறிதல் போன்றவற்றிலும் தேர்வுகள் நடத்தப்படும். இதில் கிடைக்கும் மதிப்பெண்களை அடிப்படையாகக் கொண்டு 'கட்-ஆஃப் மதிப்பெண்’ணுடன் பொருத்தி தேர்வு செய்யப்படுவார்கள்.

இதில் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு, சென்னை, அசோக் நகரில் உள்ள காவலர் பயிற்சிக் கல்லூரி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் 6 மாதங்கள் முதல் 7 மாதங்கள் சிறப்பு பயிற்சிகள் வழங்கப்படும். அதன் பிறகு, பணியில் அமர்த்தப்படுவார்கள். இரண்டாம் நிலை காவலராக பணியில் சேர்பவர்கள், தங்களது பணிக்காலத்தில் பட்டம் படித்து, உதவி ஆய்வாளருக்கு விண்ணப்பித்தால்... தேர்வில் அவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். அதோடு என்.சி.சி போன்ற சான்றிதழ்களுக்கு தேர்வின்போது கூடுதல் மதிப்பெண்களும் அளிக்கப்படும். மற்ற பதவிகளுக்கு 'சிவில் சர்வீஸ்’ தேர்வுகள் மற்றும் 'தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்' மூலமாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

காவல்துறை... பெண்களுக்கான துறை!

'’இது பெண்களுக்கான ஒரு துறைதான். ஒரு காலத்தில் வீட்டுக்குள்ளே அடங்கிக் கிடந்த பெண்கள், இன்றைக்கு மக்களைப் பாதுகாக்கும் முக்கியப் பணிக்கு வருகிறார்கள் என்றால், அது இந்தத் துறையின் முக்கியத்துவ மும், சேவை மனப்பான்மையும் பெண்கள் மத்தியிலே வேரூன்றி இருப்பதுதான் காரணம்'' என்று சொல்லும் தமிழகத்தின் முதல் பெண் ஐ.பி.எஸ் அதிகாரியாக இருந்து ஓய்வுபெற்ற திலகவதி,

''1976-ம் ஆண்டு நான் பணியில் சேர்ந்தபோது எல்லோரும் என்னை ஒரு மாதிரி பார்த்தார்கள். அன்றைக்கு ஒரு பெண் காவலருக்கு வேண்டிய கழி வறை வசதிகூட காவல்துறையில் கிடையாது. ஆனால், இன்றைக்கு மளமளவென வளர்ந்து 15 ஆயிரத்துக் கும் மேற்பட்ட பெண்கள் பணிபுரியும் துறையாகவும், பல்வேறு வசதிகளை ஒருங்கே பெற்றுள்ள துறையாகவும் மாறிவிட்டது. இதுதான் இந்தத் துறைக்கு கிடைத்த பெரும் வளர்ச்சி'' என்றார் பெருமை பொங்க!

அ முதல் ஃ வரை..! - 2

விரும்பிய பணி... வந்து குவிந்த பரிசுகள்!

''தப்பு செய்யற ஆண்களைத் தண்டிக்கணும்'' என்கிற கனவோடு போலீஸ் பணி யில் சேர்ந்து 'ஸ்பெஷல் போலீஸ் பிரிவில்’ பணிபுரிந்து வரும் சித்ரா... ரன்னிங், லாங் ஜம்பில் தேசிய சாம்பியன் மற்றும் நான்கு வயதுக் குழந்தையின் அம்மா!

'’பெரம்பலூர் மாவட்டம், பூலாம்பாடி கிராமம் என்னோட சொந்த ஊர். எங்க ஊருல எப்பவும் யாராவது குடிச்சுட்டு சண்டை போட்டுட்டே இருப்பாங்க. அவங் களை எல்லாம் தட்டிக் கேட்கணும்னு கோபம் கோபமா வரும். அதுக்காகவே போலீஸ் வேலையில சேரணும்னு ஆசைப் பட்டேன். படிப்பு ஓரளவுதான். ஆனா, விளையாட்டுல அதிக ஆர்வம் இருந்ததால, ரன்னிங், லாங் ஜம்ப் பிராக்டீஸ்னு என் அப்பாவோட உதவியோடு பள்ளி அளவுல தொடங்கி தேசிய அளவுல பரிசுகளைக் குவிச்சேன். அதனால என் ஆசைப் படியே ஸ்போர்ட்ஸ் கோட்டாவுல  வேலை கிடைச்சுது. கல்யாண ஏற்பாடு கள் நடந்தப்போ, 'விளையாட்டுக்கு முற்றுப்புள்ளி விழுந்துடுமோ’னு பயந் தேன். ஆனா, கணவர் தொடர்ந்து ஊக் கம் தரவே... மாநில, தேசிய அளவுல இதுவரை ஐம்பதுக்கும் மேலான தங்கம், முப்பதுக்கும் மேலான வெள்ளி, நாப்பதுக்கும் மேலான வெண்கலப் பதக்கம்னு ஜெயிச்சுருக்கேன். இதுல இந்த ஆண்டுத் தொடக்கத்துல, மைசூர்ல நடந்த தேசிய அளவிலான ஓட்டப் பந்தயத்துல 10 கிலோ மீட்டர் தொலைவை, வெறும் 39.40 நிமிடங்கள்ல ஓடி ரெக்கார்ட் பிரேக் பண்ணினத மறக்கவே முடியாது.

வேலையை மட்டும்தான் செய்யணும்னு சொல்லாம... எனக்கு இருக்குற திறமையில இன்னும் ஜெயிக்கணும்னு சொல்லி காவல் துறை கொடுக்குற ஊக்கமும், கணவரோட தொடர் சப்போர்ட்டும்தான் இந்த அளவுக்கு ஜெயிக்க வைக்குது. வேற ஏதாவது வேலைக்குப் போயிருந்தா, இந்த அளவுக்கு சாதிச்சிருக்க முடியுமானு தெரியல'' என்று மகிழ்ச்சியோடு சொன்னார் சித்ரா.

போலீஸ் துறையில், காவலர் பணி மட்டு மல்லாது, இன்னும் பத்துக்கும் மேற்பட்ட துறைகளும் இருக்கின்றன. அவற்றைப் பற்றிய விவரங்கள்... 'என்னதான் கௌரவமான துறை என்று சொன்னாலும், போலீஸ் துறையில் பெண்களுக்கு எதிரான பாலியல் கொடு மைகள் அதிகம்' என்று முன் வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள்... இன்னும் சில விவரங்கள் பற்றியெல்லாம் அடுத்த இதழில்...

அறிவோம்...

அ முதல் ஃ வரை..! - 2

பிளஸ்!

அரசாங்க வேலை; நல்ல சம்பளம்; சேவையாகவும் செய்யலாம்; வீட்டு வசதி, படிக்க உதவித்தொகை, கடனுதவி, பதவி உயர்வு, சம்பள உயர்வு, கர்ப்ப காலத்தில் மஃப்டி உடையில் பணிக்கு செல்ல அனுமதி, ஆறு மாத விடுமுறை மற்றும் மருத்துவ சலுகைகள். மாத சம்பளத்தோடு தினமும் 100 ரூபாய் (எஸ்.ஐ மற்றும் அதன் கீழ் பதவியில் உள்ளவர்களுக்கு) கூடுதலாக வழங்கப்படும். பணியின்போது உயிரிழந்தால் குடும்பத்தாருக்கு உதவித்தொகை.

மைனஸ்!

உயிருக்கு உத்தரவாதம் இல்லை. இரவு, பகல் பாராமல் வேலை. குடும்பம், உறவுகள் நிகழ்ச்சிகளுக்குக் கூட செல்ல முடியாது. பந்தோபஸ்து நேரங்களில் தொடர்ந்து 5 மணி நேரத்துக்கும் மேலாக நிற்க வேண்டி வரும். சாப்பிடக் கூட நேரம் கிடைக்காது. குடும்பம், வேலை இரண்டையும் பெண்கள் சவாலாகவே எதிர்கொள்ள வேண்டும். 'போலீஸ் பெண்ணா?' என்று திருமணம் செய்ய யோசிக்கக் கூடும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism