Published:Updated:

காகிதக் கம்மல்கள்... ஏற்றுமதிக்கு என்ன வழி?

காகிதக் கம்மல்கள்... ஏற்றுமதிக்கு என்ன வழி?

காகிதக் கம்மல்கள்... ஏற்றுமதிக்கு என்ன வழி?
##~##

  சுயதொழில் தொடங்க ஆர்வம் கொண்ட பெண்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை அவர்கள் கேள்விகளாக கேட்க... அதற்கு தெளிவான பதில்களைப் பெற்றுத் தரும் பகுதி இது. இங்கே உங்கள் கேள்விகளுக்கு திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம், தொழில் முனைவோர் சுய வேலை மேம்பாட்டு நிறுவனத்தின் திட்ட மேலாளர் சி.ராமசாமி தேசாய் பதில் அளிக்கிறார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz


"வண்ணக் காகிதங்களை உபயோகப்படுத்தி, நிறைய டிசைன்களில் காதணிகள் (கம்மல்கள்) உள்ளிட்டவற்றைச் செய்து வருகிறேன். பார்ப்பவர்கள் மிகவும் அழகாக இருப்பதாகக் கூறுகிறார்கள். 'வெளிநாட்டில் இதை மிகவும் விரும்புவார்கள்’ என்றும் கூறுகிறார்கள். வெளிநாட்டுக்கு அனுப்புவதென்றால் என்ன செய்ய வேண்டும்... யாரை அணுக வேண்டும்?''

- ஐ.வெண்ணிலா, சென்னை-2

''நாமே உற்பத்தி செய்தோ அல்லது பிறரிடம் விலைக்கு வாங்கியோ வெளிநாடுகளுக்கு அனுப்பி விற்பனை செய்வதுதான், ஏற்றுமதி. இதில் இறங்க விரும்புவோர், முதலில் என்ன பொருளை ஏற்றுமதி செய்யப் போகிறோம் என்பதை முடிவு செய்ய வேண்டும். அதற்கான சந்தை எந்தெந்த நாடுகளில் உள்ளது என்பதையும் தெரிந்துகொள்ள வேண்டும். பிறகே ஏற்றுமதி முறையைத் தேர்வு செய்ய வேண்டும்.

ஏற்றுமதியில், நேரடி ஏற்றுமதி, மறைமுக ஏற்றுமதி என இரண்டு முறைகள் உள்ளன. மறைமுக ஏற்றுமதி சுலபமானது. இது, சிறிய அளவு உற்பத்தி செய்பவர்களுக்கு ஏற்றது. உங்கள் பொருளை வேறு ஒரு ஏற்றுமதியாளர் அல்லது ஏற்றுமதி நிறுவனம் மூலமாக ஏற்றுமதி செய்வதுதான் இந்த முறை. சில நாடுகளில் இருந்து வந்து பொருட்களை வாங்கிச் செல்வார்கள். அவர்களைக் கண்டறிந்து, அவர்களிடம் விற்பதும் மறைமுக ஏற்றுமதிதான்.

உற்பத்தியாளர்களே, நேரடியாக வெளிநாட்டினரிடம் ஆர்டர் பெற்று, ஆவணங்கள் தயார் செய்து பொருட்களை அனுப்புவது நேரடி ஏற்றுமதி. பெரிய நிறுவனங்கள் இந்த முறையில் செய்வார்கள். இதில், லாபம் அதிகம் கிடைக்க வாய்ப்பு உண்டு. ஏற்றுமதியாளர்கள், 'டைரக்டர் ஜெனரல் ஆஃப் ஃபாரின் டிரேட்' (DGFT) அலுவலகத்தில் 'ஐ.இ கோடு' (IE Code) வாங்க வேண்டும்.

ஏற்றுமதியாளர், சந்தை பற்றி ஆய்வு செய்த பிறகு, பொருளுக்கான விலையை நிர்ணயம் செய்ய வேண்டும். உற்பத்திச் செலவு, தேவை மற்றும் விற்போரின் போட்டி அடிப்படையில் விலை நிர்ணயம் செய்யலாம். கலைப்பொருட்களுக்கு தரம், பார்வை, தேவை போன்ற அடிப்படையில் விலை நிர்ணயம் செய்தல் அவசியம். ஆர்டர் கிடைத்த பிறகு, உங்கள் பொருளை எடுத்துச் சென்று உங்கள் வாடிக்கையாளரிடம் கொடுக்கும் சரியான ஒரு முகவரை (Agent) தேர்ந்தெடுத்தல் அவசியம். சில நல்ல ஏற்றுமதியாளர்கள்கூட சரியான முகவர்கள் இல்லாததால் வாய்ப்புகளை தவறவிட்டு விடுவர். எனவே, முகவரைத் தேர்வு செய்யும்போது அவருடைய சேவை, அவருடைய திறமை அவருடைய தொடர்பு அனைத்தையும் ஆராய வேண்டும்.

காகிதக் கம்மல்கள்... ஏற்றுமதிக்கு என்ன வழி?

உங்களுக்கான பணம் எப்படி உங்களை வந்தடையும்... அதற்கான ஆவணங்கள் என்னென்ன என்பதையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும். பணப்பரிமாற்று முறையும் உங்களுக்குத் தெரிந்து இருக்க வேண்டும். ஏற்றுமதிக்கு முன் உங்கள் உற்பத்தி அல்லது பொருள் வாங்கும் செலவு மற்றும் ஏற்றுமதி செய்து அது உரிய இறக்குமதியாளரை அடையும் வரை ஆகும் செலவுகளுக்கும் தயார் நிலையில் இருக்க வேண்டும்.

இனி உங்கள் விஷயத்துக்கு வருவோம்...

தாங்கள் உற்பத்தி செய்யும் பொருள், கைவினைப் பொருள் (Handicrafts) பட்டியலில் வரும். இதற்கான சந்தையை அறிய உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் நடைபெறும் கைவினை கலைப்பொருட்கள் கண்காட்சியில் கலந்துகொள்ள வேண்டும். இங்கேதான் வெளிநாட்டு வியாபாரிகள் அதிகம் வருவர். அவர்களைச் சந்தித்து ஏற்றுமதி வாய்ப்பை பெற முடியும். தனியாக இணையதளம் உருவாக்கி அதன் மூலமும் சந்தை வாய்ப்பைப் பெற முடியும்.

இதற்கெல்லாம், கைவினை கலைப்பொருட்கள் ஏற்றுமதி செய்யும் குழு (Export Promotion Council for Handicrafts) என்ற நிறுவனம் உங்களுக்கு பல உதவிகளை செய்யும். இந்நிறுவனத்தில் உங்கள் உற்பத்தி பொருட்களின் தொழில்நுட்பம், வடிவம் எப்படி இருக்க வேண்டும்; எப்படி பாதுகாப்பாக ஏற்றுமதி செய்ய வேண்டும்... என்பது பற்றிய அனைத்து விவரங்களும் கிடைக்கும். உங்களுக்கான சந்தை வாய்ப்பு உள்ள நாடு எது என்பதையும் இங்கு தெரிந்து கொள்ளலாம். சர்வதேச கண்காட்சிகளில் பங்கு பெறுவதற்கான உதவிகளும் கிடைக்கும்.

இந்நிறுவன அதிகாரிகளே, மத்திய, மாநில மற்றும் ஏற்றுமதி சார்ந்த அனைத்துத் தரப்பு அலுவலகங்களுக்கும் உங்கள் சார்பில் பேசி, அவர்களின் கூட்டமைப்பிலும் பேசி ஏற்பாடு செய்வார்கள். இவர்களே பல கருத்தரங்குகளை நடத்தி, ஏற்றுமதி செய்வது பற்றிய முறைகளையும் சொல்லித் தருகிறார்கள். வாங்குவோர் - விற்போர் கூட்டம் மற்றும் அரசு அதிகாரிகளுடனான கலந்துரையாடல் என பல நிகழ்ச்சிகளுக்கும் இவர்கள் ஏற்பாடு செய்கிறார்கள்.

இந்த உதவிகளைப் பெற, நுழைவுக் கட்டணமாக 1,000 ரூபாயும், ஆண்டு உறுப்பினர் கட்டணமாக 2,500 ரூபாயும் செலுத்த வேண்டி இருக்கும். உறுப்பினர், விற்பனை ஏற்றுமதியாளர், உற்பத்தியாளர் ஏற்றுமதியாளர் என ஏதாவது பிரிவில் உறுப்பினராகச் சேரலாம். நீங்கள் எந்த வகையில் வருகிறீர்கள் என்பதற்கான அத்தாட்சி படிவங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

உங்கள் கைவினைப் கலைப்பொருட்கள் ஏற்றுமதி சிறக்க வாழ்த்துக்கள்.''

ஹேண்டிகிராஃப்ட் எக்ஸ்போர்ட் புரமோஷன் கவுன்சில் முகவரி:

Export Promotion Council for Handicrafts, 302, 3-rd Floor, Cears Plaza, 136, Residency Road, Bengaluru - 560 025.
போன்: 080-22107367
ஒருங்கிணைப்பாளர்: 099010-42048.

வெற்றிக் கோட்டை தொடுவதற்கு நீங்கள் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி...
'வாருங்கள்... வழிகாட்டுகிறோம்’, கேள்வி - பதில் பகுதி, அவள் விகடன்,  757, அண்ணா சாலை, சென்னை - 600 002