Published:Updated:

மருத்துவம் வெறும் படிப்பல்ல!

ஸ்டூடென்ட் வித் செலிப்ரிட்டி!

##~##

  'பெரிய டாக்டர் என்று உருவெடுத்து, மக்களுக்குச் சேவை செய்யவேண்டும்’ என்கிற கனவோடு மருத்துவக் கல்லூரிக்குள் நுழைபவர்கள், என்னதான் படிப்பு, படிப்பு... என்று புத்தகத்தையே புரட்டிக் கொண்டிருந்தாலும், அதிலே அவர்களுக்குத் தேவையான அறிவும், திறமையும் முழுமையாகக் கிடைத்துவிடுவதில்லை. அதையும் தாண்டி அவர்கள் கற்றுக்கொள்ள வேண்டியவை, பல உண்டு. அதில் முக்கியமானது, துறையில் சிறந்து விளங்கும் விற்பன்னர்களின் அனுபவங்களிலிருந்து பாடம் கற்பதுதான்!

அந்த வகையில், சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மாணவர்களை நாம் சந்திக்க வைத்தது... சென்னை, ஸ்ரீராமச்சந்திரா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தரும், இதயவியல் மைய தலைவர் மற்றும் இயக்குநருமான டாக்டர் தணிகாசலத்தைத்தான்! தன்னுடைய பிஸியான வேலைகளுக்கு நடுவில், நம் அழைப்பை ஏற்று ஸ்டான்லி மருத்துவக் கல்லூரிக்கு வந்த தணிகாசலம், ''உயிரைப் பாதுகாத்து, மக்களுக்குச் சேவை செய்யக்கூடிய சிறப்பான துறையைத் தேர்ந்தெடுத்த உங்கள் எல்லோருக்கும் வாழ்த்துக்கள்’' என்று சொல்ல... அவருக்கு தங்களின் நன்றியைச் சொல்லிவிட்டு, ''கல்லூரி காலத்தில் எங்களை எப்படி மெருகேற்றிக் கொள்வது?'' என்கிற கேள்வியுடன் தங்களுடைய வேலையைத் தொடங்கினார்கள்....வருங்கால டாக்டர்கள்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
மருத்துவம் வெறும் படிப்பல்ல!

''பாடத்தை மட்டுமே படித்து வெளியேறுபவரால், சிறப்பான மருத்துவராக செயல்பட முடியாது. தொடர் பயிற்சியும் இருந்தால்தான் புதுப்புது அனுபவங்களைப் பெற்று, திறமைகளை மென்மேலும் வளர்த்துக் கொள்ள முடியும். இன்டர்நெட் உள்ளிட்ட பல்வேறு வசதிகளும், வாய்ப்புகளும் இன்று கொட்டிக் கிடக்கின்றன. அதையெல்லாம் பயன்படுத்தி, உங்களை நீங்கள் மெருகேற்றிக் கொள்ள வேண்டும்.

மருத்துவர் என்று மட்டுமல்லாமல், மற்ற துறைகளைப் போலவே, இதிலும் எத்தனையோ வேலை வாய்ப்புகள் உள்ளன. உதாரணமாக... பேராசிரியர், கல்லூரி மற்றும் மருத்துவமனைகளில் பொறுப்புப் பணிகள், ஆராய்ச்சியாளர்... என அந்தப் பட்டியல் நீளமானது. குறிப்பிட்ட ஒரு பிரிவில் மேற்கொண்டு படித்து சிறப்பு நிபுணராகக்கூட உயர முடியும்.''

''உங்களுடைய அனுபவத்தில் எதிர்கொண்ட மிகக்கடினமான சூழலைச் சொல்லுங்களேன்...''

'நிறையவே இருக்கின்றன. கடந்த மாதம் கூட, உயிர்ப் போராட்டத்திலிருந்த 25 வயதான கர்ப்பிணிப் பெண் ஒருவரை, பெரும் போராட்டத்துக்குப் பிறகு காப்பாற்றினோம். அவர், சீரியஸான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருடைய இதய வால்வின் பரப்பளவு 4 செ.மீ. இருக்கவேண்டும். ஆனால், வெறும் 1 செ.மீ. அளவுக்கு சுருங்கிவிட்டது. இந்த இக்கட்டான சூழலில் பரபரப்பாக செயல்பட்டோம். சுருங்கிவிட்ட அவருடைய இதய வால்வை, இன்னோ பலூன் (Inoue balloon) உதவியோடு 2.5 செ.மீ. அளவுக்கு விரிவுபடுத்தினோம். இதன் காரணமாக அவருடைய உயிரைக் காப்பாற்றினோம். அடுத்த ஒன்றரை மாதத்தில் அவருக்கு அழகான, ஆரோக்கியமான குழந்தையும் பிறந்திருக்கிறது.''

மருத்துவம் வெறும் படிப்பல்ல!

''ஒரு டாக்டர், தன்னுடைய பணியை செவ்வனே செய்தாலும், சமயங்களில் அவருடைய முயற்சி தோல்வியில் முடிகிறதே..?''

''அதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. முக்கியமான காரணம்... அவருடைய உடலில் பலவிதமான நோய்கள் இருந்திருக்கும் என்பதுதான். உதாரணத்துக்கு, ஒரு நோயால் ஒருவர் பாதிக்கப்பட்டிருப்பார். அதற்கான சிகிச்சையின்போது அவருக்கு இருக்கும் மற்றொரு நோய், அவருக்குச் செய்கிற மருத்துவத்தை தோல்வியில் முடிய வைத்துவிடும். எனவே, சிகிச்சை செய்வதற்கு முன்பாக வேறு என்னென்ன நோய்கள் இருக்கின்றன என்பதையும் அறிந்து, அதற்கேற்றவாறு சிகிச்சை அளிப்பதுதான், வெற்றியைத் தரும்.''

''நீங்கள் ஏதும் ஆராய்ச்சிகளை மேற்கொண்டிருக்கிறீர்களா?''

''கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக... சித்த மருந்துகளை, நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, இன்றைய சூழலுக்கேற்றவாறு மாற்றிக் கொடுப்பது எப்படி என்பதை ஆராய்ச்சி செய்து வருகிறோம். சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவருக்கு கொடுக்கப்படும் மருந்துகள் பற்றிய ஆய்வில் பல நிலைகளைத் தாண்டியிருக்கிறோம். கூடிய விரைவில் எங்களுடைய ஆய்வின் வெற்றிச் செய்தி வெளியில் வரும்.

எங்களிடம் தற்போது 40 பேர் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளனர். இதில் பிஹெச்.டி படிப்பவர்களும் இருக்கிறார்கள். இதுவரை என்னிடத்தில் 5 பேர் பிஹெச்.டி முடித்துள்ளார்கள். எனக்குத் தெரிந்த விஷயங்களை மற்றவர்களுக்குச் சொல்லிக் கொடுப்பதில் எனக்கு எப்போதுமே அதிக ஆர்வம் உண்டு.''

''எல்லா துறைகளுமே... வளர்ச்சியை நோக்கித்தான் பயணிக்கும். அந்த வகையில் மருத்துவத் துறையின் வருங்காலம் எப்படியிருக்கும்?'

'

மருத்துவம் வெறும் படிப்பல்ல!

'இன்றைக்கு இருக்கக்கூடிய எல்லாவிதமான மருத்துவ முறைகளுமே மிகப்பெரிய வளர்ச்சிதான். நான் படித்து முடிக்கும்போது இதுபோன்ற வசதிகளும், வாய்ப்புகளும், வளர்ச்சிகளும் இல்லை. வருங்காலத்தில் இதெல்லாம் இன்னும் பல்வேறு படிகளை எட்டும். அதிலே ஒருவருக்கு வியாதி என்பதே வராமல் தடுப்பதற்கான மருத்துவ முறையும்கூட அறிமுகமாகும் வாய்ப்பிருக்கிறது. அதையெல்லாம் யாரோ கொண்டு வருவார்கள் என்று காத்திருக்கக் கூடாது. அதற்கான முயற்சி மற்றும் ஆராய்ச்சிகளில் நீங்களும் ஈடுபட வேண்டும். கடுமையாக உழைத்து, புதிய கண்டுபிடிப்புகளை மேற்கொள்ள வேண்டும்.

பிறக்கப்போகும் குழந்தையின் இதயம் எப்படி இருக்கிறது... ஏதாவது பிரச்னைகள் இருக்கின்றனவா என்பதையெல்லாம் பிறப்பதற்கு முன்பே துல்லியமாக கண்டறிந்து, பிறந்ததும் உரிய சிகிச்சை மூலமாக சரிசெய்வது தற்போது சாத்தியமே. 30 சதவிகித குழந்தைகளுக்கு இதை வெற்றிகரமாக சரிசெய்யமுடியும்'' என்ற தணிகாசலம்...

''இது நான்கரை ஆண்டு படிப்பு என்றாலும், விடுமுறை நாட்களை எல்லாம் கழித்தால்... ஏறக்குறைய ஆயிரம் நாட்கள்தான் வரும். அதனால், ஒவ்வொரு நாளையும், நேரத்தையும், மணித்துளியையும் முக்கியம் என்று கருதி கடினமாக உழைத்து செயல்பட வேண்டும். அப்போதுதான் நீங்கள் படித்து முடிக்கும்போது தரமுள்ள மருத்துவராக வெளியே வருவீர்கள்'' என்று சொல்ல,

மீண்டுமொரு முறை அவருக்கு நன்றி பகிர, இனிதே நிறைவுற்றது சந்திப்பு!

- சா.வடிவரசு, படங்கள்: ஜெ.வேங்கடராஜ்