Published:Updated:

80 வருஷ ஃபேஷன்!

மோ.கிஷோர் குமார், படங்கள்: ஜெ.வேங்கடராஜ்

##~##

 பிரிட்டிஷ் ஏர்வேஸ் ஊழியர்களின் உடை அலங்காரம், கடந்த 80 ஆண்டுகளில் எப்படியெல்லாம் மாற்றம் கண்டிருக்கிறது என்பதை காட்சிப்படுத்துகிற நிகழ்ச்சி... சென்னை, நுங்கம்பாக்கம், பிரிட்டிஷ் டெபுடி ஹை கமிஷன் வளாகத்தில் சமீபத்தில் நடைபெற்றது.

முன்னாள் இந்திய அழகி மனிஷா கோலி சிறப்பு விருந்தினராக பங்கேற்ற இந்நிகழ்ச்சியை, பிரிட்டிஷ் ஏர்வேஸ் மற்றும் பிரிட்டிஷ் டெபுடி ஹை கமிஷன் இணைந்து ஏற்பாடு செய்திருந்தன.

முதலில் நம்ம ஊர் போலீஸ் போன்ற உடை அணிந்து ஒருவர் வந்து நிற்க... 'ஆரம்ப காலங்களில் இதுதான் பைலட்களுக்கான உடை’ என்று கூடவே விளக்கம் தரப்பட... ஆச்சர்ய கைதட்டல்கள் அரங்கை நிறைத்தன. அடுத்து, அந்தக் காலம்... இந்தக் காலம் என ஏர்ஹோஸ்டஸ்களுக்கான உடைகளில் சிலர் வலம் வந்தனர். ஆரம்ப காலங்களில் பிரிட்டிஷ் இளவரசிகள் போன்ற உடைகளை உடுத்தியிருந்த ஏர்ஹோஸ்டஸ்கள், கால மாற்றத்துக்கு ஏற்ப சேலைக்கும் வந்துவிட்டனர்... தற்போது!

விமானத்தில் பணிபுரியும் விதம், உச்சரிப்பு, உபசரிப்பு முதற்கொண்டு அவர்களுடைய சேவைகள் அன்று முதல் இன்று வரை எப்படியெல்லாம் மெருகேறியிருக்கின்றன என்பதையும் எடுத்துச் சொல்லியது ஹைலைட்!

80 வருஷ ஃபேஷன்!

நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் மற்றும் ஒருங்கிணைப்பாளர் ஜேம்ஸ் டேவிஸ், 'எந்தப் பெண்ணுக்கு... எந்த மாதிரியான உடை பொருந்தும்' என்று டெக்னிகல் பியூட்டி டிப்ஸ் வழங்கியது அனைவரையும் கவர்ந்தது! ''விமானத்தில் பயணிக்கும் தமிழ்ப் பெண்களைக் கவரும் வகையில, பணிப்பெண்களுக்கு சேலை கொடுத்து, தமிழில் பேசி வரவேற்கும் பழக்கத்தை 90-களிலேயே ஆரம்பித்துவிட்டோம்'' என்றும் சொன்னார் ஜேம்ஸ் டேவிஸ்.

''நாங்கள், சென்னையில் இருந்து லண்டனுக்கு நேரடி விமான சேவையை ஆரம்பித்து இருபத்தைந்து ஆண்டுகள் ஆகின்றன. அதையும் கொண்டாடும் வகையில்தான் இந்த நிகழ்ச்சியை இங்கே ஏற்பாடு செய்தோம்'' என்று சொல்லி, 'சென்னைக்கு ஜே' போட்டனர், பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனத்தினர்!

அடுத்த கட்டுரைக்கு