Published:Updated:

ஸ்மைல் ப்ளீஸ்!

பொன்.விமலா, படங்கள்: அபிநயா சங்கர்

ஸ்மைல் ப்ளீஸ்!

பொன்.விமலா, படங்கள்: அபிநயா சங்கர்

Published:Updated:
##~##

''என்னது... முதியோர் இல்லத்துக்கு ஹெல்ப் பண்ணணுமா... காலேஜ் படிக்கிற உங்களால, அட்லீஸ்ட் பத்தாயிரம் ரூபாயை உடனே கலெக்ட் பண்றதுக்கு தெம்பிருக்கா... சும்மா பேசிட்டு நிக்காம போய் படிக்கிற வேலையைப் பாருங்க...''

- இப்படி ஒரு கல்லூரி முதல்வர் பேசிய கடுகடு வார்த்தைகளின் விளைவு... இன்று, 'ஸ்மைல் வெல்ஃபேர் ஃபவுண்டேஷன்’ எனும் பெயரில் இயங்கும் தங்களுடைய தொண்டு நிறுவனத்தின் ஒன்பதாம் ஆண்டு விழாவை சீரும் சிறப்புமாகக் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள், அன்று மாணவர்களாக இருந்தவர்கள். படிக்க வசதியற்ற குழந்தைகளைத் தத்தெடுத்து படிக்க வைப்பதில் தொடங்கி பலவிதங்களில் உதவுகின்றனர் இந்த அமைப்பினர். இப்படி இதுவரை படித்து வெளியில் வந்த மாணவர்களின் எண்ணிக்கை மட்டும் 400-க்கும் மேல்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

'ஸ்மைல்' அமைப்பின் நிறுவனர் ராஜேஷ் நாயர் நம்மிடம் அதைப் பற்றி பேசும்போது, ''ஈரோடு ஐ.ஆர்.டி.டி காலேஜ்ல பொறியியல் படிச்சுட்டு இருந்தப்ப ஸ்டூடென்ட்ஸ்கிட்ட இருந்து வேஸ்ட் நோட்புக், அவங்க வீட்ல வாங்குற நியூஸ் பேப்பர் எல்லாத்தையும் சேகரிச்சோம். அதை எடைக்குப் போட்டதுல கிடைச்ச ஏழாயிரம் ரூபாயை முதியோர் இல்லத்துக்கு கொடுத்தோம். இதுதான் முதல் முயற்சி. உடனே, 'ஸ்டூடென்ட்ஸ் வெல்ஃபேர் ஃபவுண்டேஷன்’னு ஒரு அமைப்பை ஆரம்பிச்சு தொடர்ந்து உதவிகள் செய்ய முடிவெடுத்தோம்.

பிறகு, அந்த முதியோர் இல்லத்துல உள்ளவங்க, குடியிருக்கறதுக்கு சரியான இடம் இல்லாம கஷ்டப்படுறதைப் பார்த்துட்டு, காலேஜ் பிரின்ஸிபால்கிட்ட போய், 'நாம ஏதாவது உதவி பண்ணலாமா?'னு கேட்டப்பதான் அவர் கடுகடுத்தார். அது ரொம்ப காயப்படுத்தவே, எங்க காலேஜ் பசங்க, பொண்ணுங்ககிட்ட பெயின்ட்டிங் பண்ணி தரச்சொன்னோம். அதையெல்லாம் காலேஜுலயே டிஸ்ப்ளே பண்ணினோம். சடசடனு விற்பனை ஆக, 15 ஆயிரம் ரூபாய் கிடைச்சுது. 'விடியல்’ங்கிற பேர்ல காலேஜ் பசங்களோட கல்ச்சுரல் ஷோ நடத்தினோம். எங்க நோக்கம் தெரிஞ்சதும் டிக்கெட் எல்லாம் அதிரடியா வித்து 75 ஆயிரம் ரூபாய் கிடைச்சுது. அதை, அந்த முதியோர் இல்லத்துக்கு கொடுத்தோம்'' என்றவரை பெருமையோடு நோக்கினோம். தொடர்ந்தவர்,

''அதுக்குப் பிறகு எங்களைப் பாராட்டின பிரின்ஸிபால், 'நம்ம காலேஜ்லேயே நிறைய பசங்க ஃபீஸ் கட்ட முடியாம கஷ்டப்படுறாங்க. அவங்களுக்கு ஏன் ஹெல்ப் பண்ண கூடாது?’னு கேட்டார். மறுபடியும் கல்ச்சுரல் ஷோ மூலமா உதவ ஆரம்பிச்சோம். பிறகு, என் ஜூனியர் குணா, இந்த பணியைத் தொடர்ந்தார். அவர் படிச்சு முடிச்சு வெளியில வந்தாலும், இது தொடரணும்ங்கிறதுக்காகவே... 'ஸ்மைல் வெல்ஃபேர் ஃபவுண்டேஷன்'னு பேரை மாத்தி... என்கூட படிச்சவங்க, ஜூனியர்ஸ், நண்பர்கள் என பலரையும் சேர்த்தோம். கிட்டத்தட்ட 600 பேர் உறுப்பினர்களா இருக்காங்க'’ என்கிறார் பெருமையுடன்.

ஸ்மைல் ப்ளீஸ்!

திருவண்ணாமலை, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், நாமக்கல் என பல ஊர்களைச் சேர்ந்த 1,500 மாணவ - மாணவிகளைக் கண்டறிந்து, அவர்களில் 40 பேரை இறுதி செய்து, வங்கிக் கடன் வாங்கிக் கொடுத்து  படிக்கவைக்கும் இந்த அமைப்பினர், கடந்த 9 ஆண்டுகளாக தங்களின் சம்பளத்திலிருந்து இந்த கடன்களுக்கு வட்டியாக 40 லட்சம், கல்விக் கட்டணமாக 35 லட்சம் என 75 லட்ச ரூபாய் கட்டியிருக்கிறார்களாம். இதைச் சொல்லும் இந்த அமைப்பின் பொருளாளர் குணா, ''பசங்க படிச்சு வேலைக்குப் போனதும், லோனை அடைச்சுருவாங்க'' என்கிறார் புன்னகையோடு.

ஸ்மைல் ப்ளீஸ்!

இந்த அமைப்பின் மூலமாக தன் கல்விச் செலவுகளை ஈடுசெய்து வெற்றிகரமாக படித்து முடித்திருக்கிறார் சென்னை, சைதாப்பேட்டை நிர்மலா. தற்போது, தானும் இந்த அமைப்பில் இணைந்து, ஏழை - எளிய மாணவர்களுக்கு பாடம் சொல்லிக்கொடுத்துக் கொண்டிருக்கிறார்.

''சொத்து பிரச்னையில் எங்க அப்பாவை ஓடஓட விரட்டி கொலை பண்ணிட்டாங்க. அப்ப நான் பத்து வயசு பொண்ணு. எனக்கு ஒரு தம்பி... ஒரு தங்கை. அந்த ஊரைவிட்டே கிளம்பிட்டோம். எங்க மூணு பேரையும் ஹாஸ்டல்ல சேர்த்துட்டாங்க அம்மா. குடும்பச் சூழல் காரணமா கவனம் சிதறவே... படிப்புல மந்தமாதான் இருந்தேன். 9-ம் வகுப்புக்கு வந்தப்ப... 'ஸ்மைல்' எனக்கு உதவிக்கரம் நீட்டிச்சு. அதுக்குப் பிறகு, ஃபர்ஸ்ட் ரேங்க் எடுக்க ஆரம்பிச்சேன்'' என்கிறார் நிர்மலா.

இந்த அமைப்பின் மூலம் கல்வியைப் பெற்ற கீதா, தானும் தற்போது சேவையில் இணைந்துள்ளார். ''எனக்கு அப்பா கிடையாது. ப்ளஸ் டூ-வுக்குப் பிறகு படிக்க வசதி இல்லைங்கற நிலையில... 'ஸ்மைல்' எனக்கு உதவி செஞ்சுது. நான் பி.எஸ்சி, டி.சி.ஏ... இதையெல்லாம் படிக்கறதுக்கு ஸ்மைல்தான் காரணம். இன்னிக்கு ஒரு சாஃப்ட்வேர் கம்பனியில வேலை பார்க்கிறேன். இதுக்கு காரணமே... ஸ்மைல்தான்'' என்கிறார் வெற்றிப் புன்னகையுடன்.

''ஒரு அரசாங்கம் செய்ய வேண்டிய வேலையை... நீங்க செய்துட்டு வர்றீங்க''

- இது, இந்த அமைப்பின் ஒன்பதாவது ஆண்டு விழாவில் திரைப்பட இயக்குநர் பாண்டிராஜ் சொன்ன வார்த்தைகள்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism