Published:Updated:

“கற்றுக்கொண்டே இருங்கள்... காத்திருக்கிறது எதிர்காலம்!”

ஸ்டூடென்ட் வித் செலிப்ரிட்டி!

“கற்றுக்கொண்டே இருங்கள்... காத்திருக்கிறது எதிர்காலம்!”

ஸ்டூடென்ட் வித் செலிப்ரிட்டி!

Published:Updated:
##~##

'பணபலம், அதிகார பலம், ஆள் பலம் என்று பல்வேறு ஆயுதங்களால் அப்பாவி மக்கள் நசுக்கப்படும்போதெல்லாம், அவர்களுக்குக் கைகொடுத்துக் காப்பாற்றுவது... சட்டத்துறைதான். அத்தகைய சட்டத்துறையைக் கையில் எடுத்து, நீதியை நிலைநாட்டக் கூடிய, மிகப்பெரிய பொறுப்பை சுமக்க இருக்கும் சட்டக் கல்லூரி மாணவர்களுக்கு... புத்தகங்களுக்கும் மேலாக, அனுபவப் பாடம்... மிகவும் அவசியமானதுதானே!

இங்கே... தான் பெற்றிருக்கும் 25 ஆண்டுகால அனுபவங்களிலிருந்து, இளம்தலைமுறைக்கு பாடம் சொல்ல, நம் அழைப்பின் பேரில் சென்னை, 'சவீதா ஸ்கூல் ஆஃப் லா' கல்வி வளாகத்துக்கு ஆர்வத்துடன் வருகிறார்... சென்னை உயர் நீதிமன்றத்தின் பிரபல வழக்கறிஞர் அருள்மொழி!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மழை தூறும் காலைவேளை ஒன்றில் ''யாருக்கும் தலைவணங்காது, நீதியை இறுதிவரை கடைபிடிப்பதற்காக தயாராகிக் கொண்டிருக்கும் உங்களுக்கு என் வணக்கங்கள்'’ என்று வாழ்த்தியபடியே நுழைந்தவரை, அன்புடன் வரவேற்கிறார்கள் மாணவர்கள்.

இனி, அனுபவப் பகிரல்...  

''நீங்கள் ஆஜரானதில் மறக்க முடியாத ஒரு வழக்கு பற்றி..?''

''நிறைய இருந்தாலும்... குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியது சின்னச்சாமியின் வழக்கைத்தான். 1964-ம் ஆண்டு, புதுக்கோட்டை, வேளாண்துறை கிடங்கில் இரவுக் காவலாளி சின்னச்சாமி. அவ ருடைய உயர் அதிகாரிகள், அந்த கிடங்கில்இருக்கும் வேளாண் பொருட்களைத் திருட்டுத்தனமாக விற்பது கண்கூடாக தெரிந்திருந்தும், வறுமை மற்றும் வேலை போய்விடுமோ என்கிற பயம் காரணமாக... கண்டுகொள்ளாமல் விட்டிருக்கிறார். ஒருகட்டத்தில் அதிகாரிகளின் திருட்டுத்தனம் அம்பலமாக, அவர்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர். ஆனால், சின்னச்சாமிக்கோ வேலையே பறிபோனது. குற்றத்தை மறைத்த குற்றத்துக்கான தண்டனை!

நீதிமன்ற படியேறினார் சின்னச்சாமி. 1982-ம் ஆண்டு வரை வழக்கு இழுபட, நடுத்தெருவுக்கே வந்துவிட்டார். இந்நிலையில், என் மூத்த வழக்கறிஞர் மூலமாக வழக்கு என்னிடம் வந்தது. சின்னச்சாமி மீது ஏற்பட்ட இரக்கத்தினாலும் என்னுடைய கடுமையான உழைப்பினாலும், 90-ம் ஆண்டில் சின்னச்சாமியின் 26 ஆண்டு கால போராட்டம் முடிவுக்கு வந்தது. 'குற்றம் செய்தவர்களுக்கு இடமாறுதல் மட்டுமே தண்டனையாக தரப்பட்டுள்ளது. ஆனால், அதை வேடிக்கை பார்த்தவருக்கு... வேலையே பறிக்கப்பட்டுள்ளது. இது சமநீதியாகாது' என்கிற என் வாதம் நீதிமன்றத்தில் எடுபட்டது. சம்பளம், சலுகைகள் எல்லாம் அவருக்குக் கிடைத்தன. கண்ணீரோடு அவர் நன்றி நவில்ந்ததை வாழ்நாள் முழுக்க மறக்கவே முடியாது.''

“கற்றுக்கொண்டே இருங்கள்... காத்திருக்கிறது எதிர்காலம்!”

''25 ஆண்டுகால அனுபவத்தில் நீங்கள் கற்றுக்கொண்டவை?''

''ஆர்வம், நேரம், கவனம், உழைப்பு... இந்த நான்கும் இருந்தால் வாழ்க்கையிலும், வழக்கறிஞர் பொறுப்பிலும் உயரலாம் என்பதைத்தான் கற்றுக் கொண்டேன். வழக்கறிஞராக வரும்போதே எப்படி காசு சேர்க்கலாம் என்று நினைப்பவர்களால்தான் இந்தத் தொழில் மீது கறை படிந்திருக்கிறது. அதனால் நேர்மையாக நம் பணியைச் செய்தாலே... பெயருக்கேற்ப பணமும் தேடி வரும்.''

''சட்டத் துறையில் பெண்களுக்கு ஏகப்பட்ட இன்னல்கள் இருக்குமோ?''

''இன்னல்கள் என்று சொல்லிவிட முடியாது. ஆனால், சில கஷ்டங்களையும், அவமானங்களையும் எதிர்கொண்டுதான் ஆகவேண்டும். உதாரணத்துக்கு... ஒரு வழக்கு, பெண் வழக்கறிஞரிடம் ஒப்படைக்கப்படுகிறது என்றால்... 'போயும் போயும் ஒரு பொம்பளகிட்ட போய் கேஸை கொடுத்திருக்கான் பாரு’ என்று கேவலமாக பேசும் காலம் இருந்தது. சில இடங்களில் பெண் வழக்கறிஞர்களைப் புறக்கணிப்பது இன்னமும் தொடர்கிறது. நீதிபதி பதவிக்கு பெண்களை வரவிடாமல் ஒதுக்குவதுகூட சில மாநிலங்களில் தொடர்கிறது. தமிழ்நாட்டில் மட்டும் விதிவிலக்காக எட்டு பெண் நீதிபதிகள் உயர் நீதிமன்றத்தில் இடம்பிடித்துள்ளனர். பெண் வழக்கறிஞரை திருமணம் செய்துகொள்ள யோசிப்பது தொடங்கி, இன்னும் எத்தனை எத்தனையோ. ஆனால், அத்தனையையும் மீறித்தான் நாம் ஜெயித்தாக வேண்டும்.''

''சட்டத்துறையின் எதிர்காலம் எப்படி இருக்கும்?''

''தலைவலி வரவழைக்கக் கூடிய வழக்குகளைத்தான் வருங்காலங்களில் சட்டத்துறை அதிகம் சந்திக்கப் போகிறது. எல்லாமே கம்ப்யூட்டர் மயமாகிக் கொண்டிருக்கிறது. கம்ப்யூட்டர் சிஸ்டத்தை பின்பற்றிதான் அனைவருமே வேலை செய்கிறார்கள். அவர்களை எதிர்கொள்ளும்போது அவர்களுடைய பதில்களும் 'எஸ்’, 'ஓ.கே’, 'நோ’ போன்ற ஒற்றை வார்த்தைகளில்தான் வருகின்றன. அவர்களுடைய நடத்தையும் மெஷின் போலத்தான் இருக்கிறது. எனவே, ஒரு குற்றவாளியை நீதிமன்றத்தில் நிறுத்தி கேள்வி கேட்கும்போது, தெளிவான பதில்களை பெறுவது கடினமாகவே இருக்கும். சொல்லப்போனால்... நோட்பேட், ஐபேடில் என்றெல்லாம் கையில் வைத்துக் கொண்டு, அதைப் பார்த்தே பதில் சொல்பவர்களையும் நீதிமன்றங்கள் சந்திக்க வேண்டியிருக்கும்''என்று அருள்மொழி சொல்ல, குபுக்கென சிரித்தார்கள் மாணவர்கள்.

“கற்றுக்கொண்டே இருங்கள்... காத்திருக்கிறது எதிர்காலம்!”

''சட்டம் படிக்கும் எங்களுக்கான உங்களின் அட்வைஸ்?''

''தினமும் செய்தித்தாள்களில் பொழுதுபோக்கு விஷயங்களை மட்டும் படிக்காமல் சமூக விஷயங்களை, அவலங்களைப் படித்துத் தெரிந்து கொள்ளுங்கள். தொலைக்காட்சியில் விவாத நிகழ்ச்சிகளைப் பாருங்கள். பரபரப்பாக தீர்ப்பு வழங்கப்பட்ட வழக்குகளைத் தேடிப்பிடித்து, படித்துத் தெளிவடையுங்கள். இன்றைக்கு உள்ள தொழில்நுட்ப வளர்ச்சியை எந்தளவுக்கு படிப்போடு ஒன்றிணைத்து உபயோகப்படுத்திக் கொள்ள முடியுமோ, அந்தளவுக்கு கற்றுக்கொண்டே இருங்கள். வாரத்தில் ஒரு நாள் நீதிமன்றத்துக்கு சென்று, வழக்குகளை நேரடியாகப் பாருங்கள். அப்போதுதான் அறிவு விஸ்தாரமாகும்.''

''சரி, என்னிடம் இவ்வளவு கேள்வி கேட்கிறீர்களே... நீங்கள் உங்கள் படிப்பில் எந்தளவுக்கு அப்டேட்டட் ஆக இருக்கிறீர்கள் என்று பார்ப்போம்'' என்ற அருள்மொழி, ''விவாகரத்து கோரி நீதிமன்ற படியேறுபவர்களில், இந்தத் துறையினர்தான் குறைவான எண்ணிக்கையினராக இருக்கிறார்கள். யார் அவர்கள்?'' என்றதும்...

பட்டென்று, ''வழக்கறிஞர்கள்தான்'' என்று கோரஸாக பதில் வந்தது!

''மிகச்சரி. அதற்கான காரணம்...?'' என்று அருள்மொழி கேட்க...

''பல்வேறு பிரச்னைகளை ஆராயும் அவர்களுக்கு, தங்கள் குடும்பத்தில் ஏற்படும் பிரச்னைகளை எளிதில் சரிபடுத்திக் கொள்ளும் திறமையும், மனதும் இருக்கிறது'' என்று மாணவர்கள் சொல்ல...

''சட்டத்துறையை தேர்ந்தெடுத்த நீங்கள் எல்லோரும் வருங்காலத்தில் பெரிய அளவில் சாதிக்க வாழ்த்துக்கள்'' என்று சொல்லி விடைபெற்றார்.

- சா.வடிவரசு படங்கள்: எம்.உசேன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism