##~##

ந்தத் தொடரைப் படிப்பவர்களில் பலர்... ''நீ காதலித்திருக்கிறாயா... காதலைப் பற்றி உனக்கு என்ன தெரியும்?'’ என்றெல்லாம் கேள்விகளை வைக்கிறார்கள்.

'அறியாத வயதில், புரியாத காதல்கள் வராதவர்கள் இங்கே யாரும் இருக்கவே முடியாது' என்பதை தீர்க்கமாக நம்புகிறவன் நான். நானும் அதற்கு விதிவிலக்கல்ல. எனக்குள்ளும் அந்தக் காதல்கள் வந்திருக்கின்றன. ஆனால், காதலை நேரில் சொல்கிற தைரியம் கடைசி வரை ஒரு தடவைகூட என்னுள் வரவே இல்லை. அதற்குக் காரணம்... பெற்றோர் என்னை வழி நடத்திய விதம்தான். சிறு வயதில், அவர்கள் எனக்கு போதித்த வாழ்க்கை பற்றிய அனுபவப் பாடங்கள், எதையும் சீர்தூக்கிப் பார்த்து முடிவெடுப்பவனாக என்னை வளர்த்தெடுத்திருக்கிறது... இன்று, ஒரு சினிமா இயக்குநராக நான்கு பேர் மதிக்கும் அளவுக்கு என்னை உயர்த்தி வைத்திருக்கிறது! அறியும் வயதில் வரும் புரியும் காதல்களுக்கும் இதுவேதான் ஃபார்முலா! இதைத்தான் நிரூபித்திருக்கிறது... சரவணன் - லட்சுமி காதல் ஜோடி.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சரவணன் அப்போது ப்ளஸ் டூ படித்துக் கொண்டிருந்தான். அரும்பு மீசையும் குறும்புப் பார்வையுமாக அனைவரையும் கவர்ந்திழுக்கும் விடலைப் பையன். 'கீச்..கீச்...கீச்..கீச்...’ என சத்தமிடும் கிளிகள்... கண்களுக்கு முன் கலர்கலராய் பறக்கும் பட்டாம்பூச்சிகள்... என காலைப் பொழுதை, மொட்டை மாடியில் ரசித்துக் கொண்டிருந்த சரவணனின் கண்ணில் பட்டது, அந்தக் காட்சி. இவன் வீட்டு மொட்டை மாடி ரோஜாவை, பக்கத்துவீட்டுப் பட்டாம்பூச்சி, தாவி வந்து பறித்துக் கொண்டிருந்தது! நிஜ பட்டாம்பூச்சிகள், அவன் கண்களை விட்டு விலகிப் போக... தாவணி கட்டிய பக்கத்துவீட்டு பட்டாம்பூச்சி, இவன் கண்களை கொள்ளைகொள்ள ஆரம்பித்தது!

''டேய் சரவணா, என்ன மாயமோ, மந்திரமோ தெரியல... ரோஜா செடியில ராத்திரி பார்க்கற மொட்டு எதுவும் காலையில இருக்க மாட்டேங்குதுடா. யாரோ பறிச்சுட்டுப் போயிடறாங்க'’ என்று அம்மா அடிக்கடி புலம்பவது, நினைவிலாடிக் கொண்டிருக்க... பூ பறிக்கும் பட்டாம்பூச்சியை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான். தன் வீட்டு மொட்டை மாடிக்குத் தாவியவள், லேசாகத் திரும்பிப் பார்க்க... உள்ளத்தை ஊடுருவி பாய்ந்த பார்வை, வைரஸ் புகுந்த கணினி போல செய்வதறியாது திக்கமுக்காட வைத்தது சரவணனை. 'கொஞ்சம் அதட்டிப் பேசினாலே அழுதுவிடும் லட்சுமியா மாடிச்சுவரின் மேல் ஏறிக்குதித்து ரோஜாவை பறிப்பது?' - அவனால் நம்பவே முடியவில்லை!  

அலைபாயும் நெஞ்சினிலே..! - 5

அடுத்தடுத்த நாட்களும் ரோஜாக்கள் பறிபடும்போதொல்லாம்... தன் நெஞ்சத்தையும் சேர்த்தே பறிகொடுத்துக் கொண்டிருந்தான். ஒரு நாள் இரவு ரோஜா செடியைப் பார்த்தவனுக்கு பலத்த அதிர்ச்சி. மறுநாள் காலையில் லட்சுமிக்காக பூப்பதற்கு... அவற்றில் மொட்டுகள் எதுவும் இல்லை. 'ஐயையோ, நாளைக்கு பூப்பறிக்க வந்து ஏமாந்துடுவாளே!' பதறியவன், இரவோடு இரவாக மஞ்சள் ரோஜாக்களை வாங்கி வந்து, செடிகளில் ஒட்டி வைத்தான். பொழுது விடிகிறது... வழக்கம் போல ரோஜாவைப் பறித்துச் செல்கிறாள்... அது ஒட்டிய ரோஜா என்று தெரிந்தும்! அன்றிலிருந்து, அவள் மனதில் பதியமானான் சரவணன். அன்று இரவும் அவன் ஒட்டி வைத்தான்... மறுநாள் காலையில் வழக்கம்போல அவளும் பறித்தாள். ஒட்டப்பட்டதும், பறிக்கப்பட்டதும் ரோஜாவல்ல... காதல் கடிதம்!

வழக்கம்போல ஒரு நன்னாளில், இந்த 'ரோஜா காதல்', சரவணனின் அப்பாவுக்குத் தெரியவர, அவர் ஊரைக் கூட்டவில்லை. தான் மட்டும் ஓடிப்போய் நின்றார்... லட்சுமியின் வீட்டில்! ''உங்க பொண்ணு லட்சுமியை, என் பையனுக்குப் பிடிச்சிருக்கு. ஆனா, இப்ப உங்க பொண்ணைக் கல்யாணம் பண்ணிக்கிற தகுதி அவனுக்கு இல்ல. கண்டிப்பா அதை வளர்த்துக்குவான்னு நம்புறோம். அதுவரைக்கும் கொஞ்ச காலம் லட்சுமியைக் காத்துட்டு இருக்க சொல்லுங்க'' என்று நாசூக்காக எடுத்து வைக்கிறார். லட்சுமியின் பெற்றோருக்கும் விஷயம் நன்றாகவே புரிகிறது!

''பாருப்பா தம்பி...  உங்க ரெண்டு பேருக்குமே காதலிக்கிற வயசுதான். இருந்தாலும், கல்யாணம் பண்ணிக்குற தகுதியோ, பக்குவமோ இல்ல. இந்த வயசுலதான் காதலும் வரும். ஆனா, இந்த வயச விட்டா... அதுக்கப்புறம் நினைச்சாலும் வெறியோட படிக்க முடியாது. அதனால படிச்சு ஜெயிச்சுட்டு வாங்க. உங்க கல்யாணத்துக்கு முதல் ஆசீர்வாதம் எங்களோடதுதான்'' என்று இருவரையும் ஒன்றாக அழைத்து வைத்து வெளிப்படையாகவே பேசுகிறார், லட்சுமியின் அப்பா.

'முதல்ல நாங்க படிச்சு ஜெயிச்சுக் காட்டுறோம்’ என்கிற வாக்குறுதியைத் தந்து இருவருமே பிரிகின்றனர். அதன் பிறகு, மொட்டை மாடியில் ரோஜாக்கள் மட்டுமே பூத்தன... காகித ரோஜாக்கள் காணாமல் போயின! எதிர்பாராதவிதமாக படிப்பதற்காக லட்சுமியும் வெளியூருக்கு இடம்பெயர... சரவணனின் நெஞ்சில் படிப்பு மட்டுமே நிறைந்திருந்தது. லட்சுமியோ... மறைந்திருந்தாள்!

5 ஆண்டுகளுக்குப் பிறகு...

சரவணன், இன்று பெங்களூரில் ரோஜா பண்ணை உரிமையாளர். லட்சுமி, அரசு பள்ளிக்கூடத்தில் டீச்சர்! ரோஜாவைப் பறிக்க சுவர் ஏறி குதிக்கவேண்டிய அவசியமே இப்போதில்லை லட்சுமிக்கு. பின்னே.... கணவன்தான் ரோஜா பண்ணையே வைத்திருக்கிறானே! ஆம், வாழ்க்கையில் சாதித்த தம்பதியராக ஜொலிக்கிறார்கள் சரவணன் - லட்சுமி!

பெற்றோர்கள் மட்டுமல்ல... தாத்தா, பாட்டி, அத்தை, மாமா, சித்தி, சித்தப்பா என்று அத்தனை உறவுகளின் அன்பு, அரவணைப்புடன் வாழும் குழந்தைகளின் போக்கே தனிதான்! ஆம், இப்படிப்பட்ட உறவுகளை எல்லாம் மதித்து, நெருக்கம் காட்டி வளரும்போது... பெற்றோருக்கு பயப்படாவிட்டாலும்கூட, உறவுகளின் அன்புக்கு அடங்கிவிடுவார்கள். அத்தகைய உறவுகளின் அன்பு, அரவணைப்பு, நம்பிக்கை எல்லாம், குழந்தைகளுக்குக் கிடைக்கும்படி பார்த்துக் கொண்டாலே போதும்... 'எல்லை மீறுதல்' பெரும்பாலும் இருக்காது.

அத்தனையையும் மீறி வழிமாறிப் போகிறவர்களையும் நீங்கள் கைநீட்ட முடியும். அவை, விதிவிலக்குகள். அவை, ஒருபோதும் வழிகாட்டிகளாக முடியாது! ஆனால், பலரையும் விழித்துக்கொள்ள வைப்பதற்கு அவை உதவும். 'காணாமலே காதல்' செய்த விஜியின் கதையும் அந்த ரகம்தான்! டெக்னாலஜி தந்த வரமே, சாபமாக மாற... விதி வலையில் சிக்கிய விஜி என்னவானாள்?

அலைபாயும்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism