Published:Updated:

உங்கள் பாதுகாப்பு உங்கள் கையில்!

ஏ.டி.எம். மைய பயங்கரங்கள்...சா.வடிவரசு, படங்கள்: எஸ்.கேசவசுதன்

உங்கள் பாதுகாப்பு உங்கள் கையில்!

ஏ.டி.எம். மைய பயங்கரங்கள்...சா.வடிவரசு, படங்கள்: எஸ்.கேசவசுதன்

Published:Updated:
##~##

பெங்களூரு, கார்ப்பரேஷன் வங்கி, மேலாளராகப் பணியாற்றும் ஜோதி உதய் எனும் 38 வயது பெண், நவம்பர் 19 அன்று... பெங்களூரு மாநகராட்சி அலுவலகம் அருகில் உள்ள ஏ.டி.எம். மையத்துக்கு பணம் எடுக்கச் சென்றபோது நடந்த கொடூரம்... நாட்டையே பதைபதைக்க வைத்திருக்கிறது!

ஏ.டி.எம் மையத்துக்குள் ஜோதியைப் பின்தொடர்ந்து புகுந்த மர்மநபர், அவரை மிரட்டி, அரிவாளால் வெட்டிவிட்டு பணத்தைப் பறித்துக்கொண்டு ஓடிய காட்சிகள் கண்காணிப்பு கேமராவில் பதிவாக... அவை டி.வி-க்களில் திரும்பத் திரும்ப ஒளிபரப்பாக... பெண்கள் சமூகமே கதிகலங்கிக் கிடக்கிறது. ரத்த வெள்ளத்தில் மூன்று மணி நேரம் மயங்கிக் கிடந்த ஜோதி, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, உடல் உறுப்புகள் ஒருபக்கம் செயலிழந்த நிலையில், உயிர்ப் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஒருவருக்கே பல வங்கிகளில் கணக்குகள் இருப்பது, இப்போது சர்வசாதாரணம். ஏகப்பட்ட ஏ.டி.எம் கார்டுகளும் பர்ஸை அலங்கரிக்கின்றன. பல வீடுகளில் வங்கிக் கணக்கை வீட்டில் உள்ள பெண்கள்தான் பராமரிக்கிறார்கள். காரணம்... 'நிதி அமைச்சர்' பொறுப்பு அவர்களின் தலையில் இறங்கியிருப்பதுதான். தவிர, பெருமளவில் பெண்களும் வேலைக்குப் போய் சம்பாதிக்க ஆரம்பித்திருப்பதால், அத்தனை பேரின் கைகளிலும் ஏ.டி.எம். கார்டுகள் பளபளக்கின்றன.

உங்கள் பாதுகாப்பு உங்கள் கையில்!

இத்தகைய சூழலில், ஏ.டி.எம். மையங்களின் பாதுகாப்புக் குறித்து நாலா பக்கமும் கேள்விக் கணைகள் பாய்ந்தபடி இருக்கின்றன!

''பாதுகாப்பு விஷயங்களில் வங்கிகள் அக்கறை யற்று இருப்பதுதான் இதற்கெல்லாம் காரணம்'' என்று குற்றம்சாட்டுகிறார் மாநில மனித உரிமை ஆணைய முன்னாள் உறுப்பினர் பரமசிவன்.

''ஏ.டி.எம். மையம் அமைப்பதற்கு முன்பு அது பாதுகாப்பான இடம்தானா... அனைத்துவிதமான பாதுகாப்பு வசதிகளும் நடைமுறைப்படுத்தப் பட்டுள்ளனவா.... என்பதையெல்லாம் உறுதிசெய்த பிறகே அனுமதி வழங்க வேண்டும்.

டெபிட் கார்டு/கிரெடிட் கார்டை ஏ.டி.எம். மையத்தின் வாயில் கதவில் இருக்கும் துவாரத்தில் செருகினால் மட்டுமே கதவு திறக்கும் வகையிலான பாதுகாப்பு ஏற்பாடு முன்பு இருந்தது. தற்போது, பல இடங்களில் இது போயே போச்சு! பெரும்பாலான ஏ.டி.எம். மையங்களில் பாதுகாவலர்களே கிடையாது. விரல்விட்டு எண்ணக்கூடிய இடங்களில் செக்யூரிட்டிகள் உள்ளனர். அவர்களில் பலரும் சொற்ப சம்பளத்துக்கு வேலை பார்க்கும் வயதானவர்களே! ஒரு ஏ.டி.எம். மையத்தில் 20 முதல் 30 லட்ச ரூபாய் வரை பணம் வைக்கப்படுகிறது என்கிறார்கள். ஆனால், பாதுகாப்பு என்று வரும்போது, தகுதியானவர்களை நியமித்து சம்பளம் கொடுக்க வங்கிகள் யோசிக்கின்றன'' என்று  குற்றம்சாட்டுகிறார் பரமசிவன்.

இதுதொடர்பாக வங்கிகள் என்ன நினைக்கின்றன என்பதையறிய, தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஒன்றின் உயரதிகாரி ஒருவரிடம் பேசினோம். தன் பெயரை வெளியிடக்கூடாது என்கிற நிபந்தனையோடு பேசியவர், ''வாடிக்கையாளரின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டியது சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் முக்கியக் கடமை. இது ஏ.டி.எம். மையங்களுக்கும் பொருந்தும். ஆனால், இதுவரை எந்த வங்கியும் இதுகுறித்து பெரிதாக விதிமுறைகளை வகுத்துப் பின்பற்றவில்லை. சொல்லப் போனால், இன்றைய சூழலில் வங்கி களுக்கே சரியான பாதுகாப்பு கிடையாது'' என்று உண்மையை உடைத்தார்!

உங்கள் பாதுகாப்பு உங்கள் கையில்!

சரி, பாதுகாப்புக்கு என்னதான் வழி?

''யாராவது வந்து நம்மைக் காப்பாற்றுவார்கள் என்று காத்திருக்காமல், தங்களைத் தாங்களே பாதுகாத்துக் கொள்வதுதான் முதல் வழி'' என்கிறார் தற்காப்புக் கலை நிபுணர் 'கோபுடோ' கிருஷ்ணமூர்த்தி.

''தற்காப்புக்கான சின்னச் சின்ன விஷயங்களையாவது ஒவ்வொருவரும் தெரிந்து வைத்திருக்க வேண்டும். முதலில், சாதுர்யமாக யோசித்து முடிவெடுக்கும் அளவுக்கு திறமையை வளர்த்துக்கொள்ள வேண்டும். இந்த பெங்களூரு சம்பவத்திலேயே... மர்மநபரின் கத்திமுனையிலிருந்து தப்பிக்க, முதலில் அந்தப் பெண் ணுக்கு நம்பிக்கையும், துணிவும் இருந்திருக்க வேண்டும். அதுவே அவரை பாதி காப்பாற்றி இருக்கும். அப்படி இல்லையென்றால் கேட்ட பணத்தை கொடுத்திருக்கலாம். உயிரைவிட, பணமா முக்கியம்?

உங்கள் பாதுகாப்பு உங்கள் கையில்!

சரி, பாதுகாப்புக்கு வருவோம். பெண்கள் வெளியில் செல்லும் போது... குடை, பேனா, பென்சில், சாவிக் கொத்து, ஹேர்பின், வார இதழ்கள், செல் போன், துப்பட்டா போன்றவற்றில் ஏதேனும் ஒன்றை வைத்திருந்தால்கூட போதுமானது. கத்தியைக் காட்டி மிரட்டும் ஒருவரிடமிருந்து, சுலபமாக தப்பிவிட முடியும். மேலே சொல்லியிருக்கும் ஒவ்வொரு பொருளையும் தகுந்தவாறு பயன்படுத்தி,  எதிராளியின்  உடலில்  எளிதாகத்  தாக்கக்  கூடிய  பாகங்களான  கண், வாய்,  மூக்கு போன்ற பகுதிகளில்  தாக்கித் தடுமாறச் செய்துவிடலாம்.

உதாரணமாக... 'யாவாரா' எனப்படும் இருபக்கமும் கூரான, கைக்கு அடக்கமான ஆயுதம் ஒன்று இருக்கிறது. இது நிறைய கடைகளில் கிடைக்கும். இது கையிலிருப்பதே தெரியாது. இதை வைத்து எதிராளியைத் தாக்கலாம். இரண்டு  விரல்களையே ஆயுதமாகப் பயன்படுத்தி,  கண்களைக் குத்தலாம்.  இப்படிப்பட்ட சின்னச் சின்ன தற்காப்பு நுணுக்கங்களை, குறைந்த கால பயிற்சியின் மூலமாகக் கற்றுக் கொண்டால், ஆபத்துக் காலத்தில் நிச்சயம் கைகொடுக்கும்'' என்று அக்கறையோடு சொன்னார் கிருஷ்ணமூர்த்தி.

நம் பாதுகாப்பு... நம் கையில்!

சில யோசனைகள்!

• தனியாக பணம் எடுப்பது, நகை வாங்குவது போன்ற வற்றைத் தவிர்த்து, ஆண்கள் பாதுகாப்புடனோ... அல் லது, மூன்று நான்கு பெண்கள் ஒன்றாகவோ சேர்ந்து செல்வதுதான் நல்லது.  

•  இன்றைக்கு அதிகமான ஏ.டி.எம். மையங்கள் ஒதுக்குப் புறங்களிலும், ஆள் நடமாட்டம் இல்லாத இடங்களிலுமே அமைக்கப்பட்டுள்ளன. பெருவணிக வளாகங்களில் இருந்தாலும், ஓரமான இடங்களிலேயே இருக்கின்றன. கண்ணாடிகள் இருந்தாலும், ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டு மறைக்கப்பட்டுள்ளன. உள்ளே ஆட்கள் இருக்கிறார்களா என்பதே தெரிவதில்லை. இதுபோன்ற இடங்களில் அதீத எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்.

•  ஏ.டி.எம். மையத்துக்குள் ஒரே சமயத்தில் ஒரு நபருக்கு மேல் சென்றால், ஆபத்துக்கான எச்சரிக்கை ஒலி அடிக் கும் ஏற்பாடுகளை வங்கிகள் செய்யலாம். பெரும்பாலான ஏ.டி.எம். மையத்தின் ஷட்டர் கதவுகள், யார் வேண்டுமானா லும் இழுத்து மூடும்படியே இருக்கின்றன. இதையெல்லாம் மாற்றி, வங்கி சார்ந்தவர்கள் மட்டுமே பூட்டித் திறக்கும்படி அமைக்கலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism