Published:Updated:

சுடர்விட வைக்கும் சுடர்க்கொடி!

த.வா.நல்லிசை அமிழ்து , படங்கள்: கா.முரளி

சுடர்விட வைக்கும் சுடர்க்கொடி!

த.வா.நல்லிசை அமிழ்து , படங்கள்: கா.முரளி

Published:Updated:
##~##

தொடக்கப்பள்ளி என்றாலே நமக்கு நினைவில் வரும் பிம்பங்கள்... அழும் குழந்தைகள், கையில் குச்சியோடு நிற்கும் டீச்சர், 'முட்டி போடு’, 'வாயைப் பொத்து’ போன்ற சத்தங்கள். ஆனால், திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே உள்ள வெள்ளை (அட ஊர் பேரே நல்லாயிருக்குல்ல!) கிராமத்தின் தொடக்கப்பள்ளியில் காட்சிகளே வேறு!

'உள்ளே வரலாமா டீச்சர்..?’ என்று கேட்பதற்காக இருக்கையில் டீச்சரைத் தேடினால், காணவில்லை. குழந்தைகளுடன் தரையில் அமர்ந்து 'சொற்கோபுரம்' விளையாடிக் கொண்டிருந்தனர் அந்தப் பள்ளியின் இரண்டே இரண்டு ஆசிரியைகளான தலைமையாசிரியை சுடர்க்கொடி மற்றும் ஆசிரியை நளினி இருவரும்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மொத்தம் 450 நபர்களே உள்ள இந்தக் கிராமத்துக்கு, செங்கல் சூளை மட்டுமே ஆதாரத் தொழில். பெரும்பாலானோர் சூளை வேலையை மட்டும் நம்பி வாழும் ஏழை பெற்றோர்களே!

''அம்மா, அப்பா படிக்கலைனாகூட, நம்ம புள்ள படிச்சு பெரிய ஆளா ஆகணும்னு நினைக்கறதுதான் எங்கயுமே வழக்கம். அப்படி நினைக்கறவங்களுக்கு உதவுற வகையில, அதுக்கான அடிப்படையை வலுவா அமைக்கறதைத்தான் எங்களோட கடமையா நினைக்கிறோம்!'' என்று அம்மாவாகவும், அன்பான ஆசிரியையாகவும் பேசுகிறார் சுடர்க்கொடி.

''இந்த ஊரு சனம், 'தரமான கல்வினா... அது கான்வென்ட் கல்விதான். ஆனா, அதெல்லாம் நம்ம சக்திக்கு மீறுனது’னு சொல்லிட்டிருந்தது ஒரு காலம். அதையெல்லாம் மாத்தி, தரமான பள்ளிக்கூடமா இந்த தொடக்கப்பள்ளியை நடத்திட்டு இருக்காங்க சுடர்க்கொடி டீச்சர்!'' என்று நன்றியுடன் சொல்கிறார் ஊர் துணைத்தலைவர் முனியன்.

சுடர்விட வைக்கும் சுடர்க்கொடி!

முனியனின் வார்த்தைகளில் உள்ள உண்மை, பள்ளியைக் கவனிக்கும்போது புரிகிறது. வகுப்பறைகளே கண்காட்சிபோலதான் இருக்கின்றன. அந்தளவுக்கு செயல்வழிக் கற்றல் முறையைப் பின்பற்றுவதுடன், இன்னும் பல புதிய முயற்சிகளையும் செய்துவருகிறார் சுடர்க்கொடி. இதனால் பிள்ளைகளுக்கு படிப்பின் மேல் ஆர்வம் ஏற்படுவதுடன், குழந்தைகளின் திறமை அறிந்து அதில் அவர்களை மிளிரவும் வைக்க முடிகிறது அவரால்!

''இதெல்லாம் எப்படி..?'' என்றால், எந்தப் பெருமையும் பூசிக்கொள்ளாமல் இயல்பாக ஆரம்பிக்கிறார் சுடர்க்கொடி.

''நாமெல்லாம் பள்ளிக்கூடத்துல சேர்ந்தப்போ... அடிச்சு பிடிச்சு இழுத்துட்டுப் போயிருப்பாங்க. அதுலயே பள்ளிக்கூடம் நமக்கு பயமான இடமா போயிடும். அதனால, பள்ளிக்கூடத்துல புதுசா சேர்ற குழந்தைகளை வரவேற்கறதையே 2003-ம் வருஷத்துல இருந்து ஒரு விழாவாவே நடத்திட்டிருக்கேன். ஏற்கெனவே படிச்சுட்டிருக்கற மாணவர்கள், ஆசிரியர்கள்னு எல்லாரும் சேர்ந்து... மேளதாளம், மாலை மரியாதை, கிரீடத்தோட புதுவரவுக் குழந்தைகளோட வீட்டுக்கே போய், ராஜா மாதிரி அழைச்சுட்டு வருவோம். இதனால பள்ளிக்கூடத்து மேல மிரட்சி ஏற்படாம, ஆர்வம் பொங்கக் கிளம்பி வருவாங்க. ரெண்டாவது நாள், அவங்களே பையை எடுத்துட்டு கிளம்பி வந்துடுவாங்க!'' என்று சுடர்க்கொடி சொன்னதும், அந்த நிகழ்வை அப்படியே மனக்கண்ணில் ஓடவிட்டுப் பார்த்தபோது... நமக்கும் ஆனந்தம் பொங்கியது!

சுடர்விட வைக்கும் சுடர்க்கொடி!

''இப்ப இருக்கற பசங்களுக்கு சினிமா பாட்டுகள் எல்லாம் சர்வ மனப்பாடம். அதனால, அதே மெட்டுல பாடங்களை மட்டுமில்ல, கல்வி உரிமைச் சட்டம், பிளாஸ்டிக் பத்தின விழிப்பு உணர்வுனு பாட்டுகளாவே சொல்லிக் கொடுப்போம். அதனால பசங்க மறக்கவே மாட்டாங்க. இன்னும் பொம்மலாட்டம் மூலமா கதைகள் சொல்றது, முதல் வகுப்பு பசங்களுக்கு தனியா கவனம் செலுத்தி வார்த்தை கட்டமைப்பு, எழுத்து தனிமைப்படுத்துதல்னு அடிப்படையை அழகா, அன்பா, அழுத்தமா சொல்லித் தர்றோம். கையெழுத்து மெருகேறுறதுக்காக தனிக்கவனம் செலுத்தி உதவுறோம். தன் வேலையைத் தானே செய்துக்கறது; பெரியவங்ககிட்ட மரியாதையா நடந்துக்கறது; இய லாதவங்களுக்கு உதவுறதுனு அற வகுப்புகளும் உண்டு'' என்று டீச்சர் சொன்னபோது, அந்தத் தொடக்கப்பள்ளி... ஒரு முன்மாதிரி பள்ளிக்கூடமாகவே ஜொலித்தது!

''சுடர் விளக்கானாலும் தூண்டுகோல் தேவை. இங்க இருக்குற குழந்தைகள் பலப்பல திறமைகளோட இருக்காங்க. அதைக் கண்டறிஞ்சு வெளிக்கொண்டு வர்றதுலயும் அக்கறையா இருக்கோம். ரோஜா, பேருக்கு ஏற்றாற்போல ரொம்ப மலர்ச்சியான பொண்ணு. அவளோட தெளிவான தமிழ் உச்சரிப்பையும், மனன சக்தியையும் கவனிச்சு, அவளுக்கு தேவாரம் சொல்லிக் கொடுக்க ஆரம்பிச்சோம். இப்போ அவ 250 தேவாரப் பாடல்களை அட்சரம் பிறழாம பாடுவா. பக்கத்து ஊர் கோயில் திருவிழாக்களுக்கு எல்லாம் இவள தேவாரம் பாட அழைச்சுட்டுப் போறாங்க. நானும் கூடவே போய் பாடல்களுக்கான விளக்கத்தை எல்லாம் சொல்றேன்.

தீனா, ஐந்தாம் வகுப்பு மாணவன். வீடு, சூரியன், மலைனு மத்த பசங்க மாதிரியே இவனும் வரைஞ்சுட்டிருப்பான். ஆனா, இவனோட கோடுகள்ல இருந்த நேர்த்தி... இவன் ஒரு நல்ல ஓவியனா வருவான்ங்கிற நம்பிக்கையைக் கொடுத்துச்சு. அவனுக்கு சிறப்பு பயிற்சி கொடுக்கவே, இப்போ ஓவியப் போட்டிகள்ல கலக்கிட்டிருக்கான். இப்படி ஒவ்வொரு குழந்தைகிட்டயும் ஒளிஞ் சுட்டிருக்கற திறமைகளைக் கண்டறிஞ்சு, அதை வெளிப்படுத்த வெச்சு, அதுலயே அவங்கள இன்னும் திறமையானவங்களா வளர்த்தெடுக்கறதுக்கான வேலைகளையும் செய்துட்டிருக்கோம்'' என்று சொல்லும் சுடர்க்கொடி, பதவி உயர்வோடு மடிப்பாக்கம் எனும் ஊருக்கு மாறுதல் தரப்பட்டபோது, அதை மறுத்துவிட்டு வெள்ளை கிராமத்தை, படிப்பறிவுள்ள கிராமமாக மாற்றும் முடிவுடன் இங்கேயே தொடர்கிறார். இந்த லட்சிய பயணத்துக்கு உறுதுணையாக நிற்கும் கண வர் ராஜா மற்றும் பிள்ளைகள் என்று குடும் பத்தினரையும்... தன் முயற்சிகளுக்கு உதவி செய்யும் உயர்அதிகாரிகளையும் நன்றிபெருக் கோடு குறிப்பிடும் சுடர்க்கொடி,

''இந்த ஊருக்கு மாற்றலாகி வந்தபோது, 'மொட்டை கிராமமா இருக்கே’னு புலம்பியிருக்கேன். ஆனா... செங்கல் சூளையில் வேலை செய்யுற இளம்தலைமுறையைப் பார்த்தப்போ, 'இந்தத் தலைமுறையை, சூளை வேலைக்குப் போகவிடாம செய்து, தொடக்கப்பள்ளியில் பட்டை தீட்டி, மேல்நிலைப் பள்ளி, கல்லூரினு அனுப்ப வேண்டிய பொறுப்பு நம்முடையது'னு மனசுல ஏத்திக்கிட்டேன். இப்ப அந்த சூளையில இருக்கற பசங்க, 'டீச்சர்... நீங்க முன்னாடியே எங்க ஊருக்கு வந்திருந்தா... எங்க தம்பி, தங்கச்சிகள போல நாங்களும் படிச்சுருப்போம்...’னு ஏக்கமா சொல்லுறப்ப, மனசு கனக்குது. எதிர்காலத்துல இந்த கிராமத்து டாக்டர், இன்ஜினீயர், பாடகி, ஓவியர் எல்லாம் கிளம்பி வந்து, 'எங்க சுடர்க்கொடி டீச்சர்!’னு என் பெயரை பெருமையா சொல்லப்போகும் ஆனந்தத்தை நினைச்சு... ஆசையாசையா வேலை பார்த்துட்டிருக்கேன்!''

'ஆசிரியர் பணி அறப்பணி, அதற்கு உன்னை அர்ப்பணி!’

- மெய்ப்பிக்கிறார் சுடர்க்கொடி!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism