Published:Updated:

சின்ன மலை... பெரிய நம்பிக்கை!

எம்.மரிய பெல்சின், படங்கள்: சொ.பாலசுப்ரமணியன்

சின்ன மலை... பெரிய நம்பிக்கை!

எம்.மரிய பெல்சின், படங்கள்: சொ.பாலசுப்ரமணியன்

Published:Updated:
##~##

 ''சின்ன மலை இறங்கு...'’,

''லிட்டில் மவுண்ட் இதுதாம்மா... சீக்கிரம் இறங்குங்க!’'

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

- சென்னையிலிருந்து தாம்பரம் நோக்கிச் செல்லும் மாநகரப் பேருந்துகளில் தினம் தினம் கேட்கும் டயலாக் இது.

சரி... இந்த சின்னமலைக்கு என்ன முக்கியத்துவம்?

கிட்டத்தட்ட இரண்டாயிரம் ஆண்டுகள் வரலாறு கொண்டது சைதாப்பேட்டை அருகே இருக்கும் இந்த சின்னமலை! ஆம், இயேசுவின் 12 சீடர்களில் ஒருவரான புனித தோமையர், தங்கியிருந்த சிறிய மலைதான்... சின்ன மலை. அவர், இங்கே தங்கியிருந்து ஊழியம் செய்ததோடு, புதுமைகள் பலவற்றையும் நடத்திக் காட்டியிருக்கிறார் என்பது கிறிஸ்தவர்களின் நம்பிக்கை! அந்த சிறிய மலை மீது ஓர் ஆலயம் எழுப்பப்பட்டுள்ளது. இது 'ஆரோக்கிய அன்னை ஆலயம்' என்று அழைக்கப்படுகிறது.

463 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட ஆலயத்தில் ஆண்டுதோறும், ஈஸ்டர் பண்டிகை முடிந்த 4-வது வாரத்தில் கொடியேற்றப்பட்டு, 5-வது வாரத்தில் தேர்பவனியுடன் திருவிழா களைகட்டுவது வாடிக்கை! இத்துடன், கிறிஸ்துமஸ் தினத்துக்கு முந்தைய 4 வாரங்கள்... 'திருவருகைக் காலம்' என்கிற பெயரில் விமர்சையாகக் கொண்டாடப்படுகிறது!

சின்ன மலை... பெரிய நம்பிக்கை!

இந்த ஆலயத்தின் சிறப்புகளைப் பற்றி அறிந்துகொள்ள... பங்குத்தந்தை எம்.வி.ஜேக்கப்பிடம் பேசியபோது, ''புனித தோமையர், கி.பி 52-ம் ஆண்டில் கேரளாவுக்கு வந்திருக்கிறார். அந்தப் பகுதியின் அன்றைய முக்கிய துறைமுகமான கொடுங்கல்லூர் வழியாக வந்து சேர்ந்தவர், ஏழு திருச்சபைகளை கேரள மண்ணில் உருவாக்கியிருக்கிறார். கொடுங்கல்லூர், கோட்டக்காவு, பாலயூர், கொல்லம், கோக்கமங்கலம், நிரணம், சேறயில் ஆகியவைதான் அந்த ஏழு சபைகள். கி.பி 62-ம் ஆண்டு கிழக்கு கடற்கரைக்கு இடம் பெயர்ந்திருக்கிறார். அதாவது சென்னை, மயிலாப்பூர், சின்னமலை மற்றும் பரங்கிமலை பகுதிகளில் வலம் வந்தவர், அந்தந்த பகுதி மக்களுக்கு போதனைகளைத் தந்திருக்கிறார்.

சின்ன மலை... பெரிய நம்பிக்கை!

சின்னமலையில் இருக்கும் குகையில் தோமையர் தங்கியிருந்தபோது, இப்பகுதியில் கடும் வறட்சியால் மக்கள் அவதிப்பட்டுள்ளனர். துயரப்படும் மக்களைப் பார்த்து பரிதாபப்பட்டவர், அவர்களின் இன்னல் தீர்ப்பதற்காக தன் கையில் இருந்த தடியால் பாறையைத் தட்டியிருக்கிறார். என்ன அதிசயம்... அங்கிருந்து பொங்கிக் கிளம்பிய நீரூற்று, மக்களின் தண்ணீர் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது. இன்றைக்கும் அந்த நீரூற்று வற்றாமல் வந்து கொண்டிருக்கிறது. தோமையர் மண்டியிட்டு ஜெபம் செய்ததற்கான தடம், இங்கிருக்கும் கல்லில் ஆழப் பதிந்திருக்கிறது. அவர் செதுக்கிய சிலுவையும் இங்கே இருக்கிறது!

சின்ன மலை... பெரிய நம்பிக்கை!

ஒரு கட்டத்தில், இந்தப் பகுதியை ஆண்டுவந்த அரசர், தன் பணியாளர்களை ஏவி தோமையரை பிடித்துவர உத்தரவிட்டிருக்கிறார். இதையறிந்து அவர் தப்பி சென்றவர், கி.பி 72-ல் புனித தோமையார் குன்றின் (செயின்ட் தாமஸ் மவுன்ட்) மீது குடியேறியிருக்கிறார். அங்கிருந்தபடி போதனைகளை செய்து கொண்டிருந்த வேளையில், எதிரி ஒருவரால் கொல்லப்பட்டிருக்கிறார். பின் னர், அவருடைய உடல், மயிலாப்பூரில் அடக்கம் செய்யப்பட்டது. சாந்தோம் சர்ச் வளாகத்தில் இருக்கும் அவருடைய சமாதி, இன்றைக்கும் வழிபடப்படுகிறது'' என்று புளகாங்கிதப்பட்டுச் சொன்ன பங்குத்தந்தை,

''புனித தோமையர் இங்கே தங்கியிருந்தபோது... பேய் பிசாசு, கெட்ட ஆவிகளின் பிடியில் சிக்கியிருந்தவர்களை மீட்டெடுப்பது; நோயாளிகளைக் குணப்படுத்துவது; திருமணம் நடக்காதவர்களுக்கு வேண்டுதலை நிறைவேற்றுவது... என தொண்டாற்றி வந்தார். இன்றைக்கும் அந்தத் தொண்டுகள் தொடர்கின்றன. அதுமட்டுமல்ல, புனித தோமையர் தொடங்கி வைத்த அதிசயங்கள், இன்றைக்கும் தொடர்கின்றன. உதாரணமாக... 1998-ம் ஆண்டு மும்பையைச் சேர்ந்த மார்வாடி ஒருவர், தன் தாயின் இதய அறுவை சிகிச்சைக்காக சென்னையில் இருக்கும் மருத்துவமனை ஒன்றுக்கு வந்திருந்தார். அப்போது இங்குள்ள புனித நீரூற்றில் இருந்து நீர் எடுத்து, தாய்க்கு அருந்த கொடுத்திருக்கிறார். அடுத்தடுத்த நாட்களில் சிகிச்சை தொடங்கியபோது அந்தப் பெண்மணியை பரிசோதித்த டாக்டர்கள், அவர் குணம் அடைந்திருந்ததைக் கண்டு அதிசயித்துப் போனார்களாம்'' என்று நெகிழ்ந்து போய்ச் சொன்னார் ஜேக்கப்.

இப்படி பல்வேறு புதுமைகள் நிகழ்வதால்தானோ... சாதி - மத பேதமின்றி தினந்தோறும் ஏராளமான மக்கள் இங்கே படை எடுக்கிறார்கள் போலும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism