Published:Updated:

அ முதல் ஃ வரை! - 5

இவர்கள்.... கடவுளுக்கு நிகரானவர்கள்!சா.வடிவரசு படங்கள்: பா.காளிமுத்து, எஸ்.கேசவசுதன், க.பாலாஜி 

அ முதல் ஃ வரை! - 5

இவர்கள்.... கடவுளுக்கு நிகரானவர்கள்!சா.வடிவரசு படங்கள்: பா.காளிமுத்து, எஸ்.கேசவசுதன், க.பாலாஜி 

Published:Updated:
##~##

 நோயுற்றவரை அக்கறையுடன் கவனித்துக் கொள்ளும் செவிலியர் துறைக்கென்று இருக்கும் படிப்புகள், பயிற்சிகள், பணி வாய்ப்புகள் போன்றவற்றைப் பற்றி கடந்த இதழில் பார்த்தோம். செவிலியர் துறையின் சிறப்பு, கடமை, ப்ளஸ், மைனஸ், இத்துறையில் ஆண்களுக்கான வேலை வாய்ப்புகள், வெளிநாட்டு பணி வாய்ப்புகள் போன்றவற்றை இந்த இதழில் பார்ப்போம்...

சிறப்பும் கடமையும்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பணி ஓய்வுக்குப் பிறகும், அதே வேலையைத் தொடர்ந்து செய்கிற வாய்ப்புகள் உள்ள வெகுசில துறைகளில் இதுவும் ஒன்று! அரசு மருத்துவமனை மற்றும் அரசு சார்ந்த இடங்களில் பணிபுரிபவர்கள், ஓய்வுக்குப் பிறகு, தனியார் மருத்துவமனைகளில் பணியைத் தொடர முடியும். நர்ஸ் வேலைக்கு அடிப்படைத் தேவை... சகிப்புத்தன்மை. நோயாளியைத் தன்னைப் போல, தன் குடும்ப உறுப்பினரைப் போல நினைத்துக் காக்க வேண்டும். அவருக்குத் தேவையான அனைத்தையும், முகம் சுளிக்காமல் செய்ய வேண்டும். பதற்றமும், அவசரமும் கூடவே கூடாது. சொந்த வாழ்க்கையில் ஆயிரம் பிரச்னைகள் இருந்தாலும், அவையெல்லாம் பணிக்கு எந்தவகையிலும் இடைஞ்சல் ஏற்படுத்தாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது, இந்த துறையிலிருப்பவர்களுக்கு மிகமிக அவசியம். நேரம்காலம் பார்க்காமல் உழைக்கவும் தயாராக இருக்க வேண்டும்.

அ முதல் ஃ வரை! - 5

சமூகத்தின் தவறான பார்வை!

''நர்ஸாக வேலை செய்யும் பெண்களை, தவறான கண்ணோட்டத்தில் பார்க்கும் பழக்கம், வெகுகாலமாகவே சமூகத்தில் நீடித்துக் கொண்டிருப்பது... வருந்தத்தக்க விஷயம். நோயாளியிடம் சகஜமாக, நெருக்கமாக பழக வேண்டியிருப்பதும்... இரவு நேரத்திலும் பணியை மேற்கொள்ள வேண்டியிருப்பதும்தான் இதுக்கு முக்கிய காரணங்கள். இதைஎல்லாம் வைத்து பத்திரிகைகள், சினிமாக்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நகைச்சுவை என்கிற பெயரில் நர்ஸ்களின் நடவடிக்கைகள் தவறாக சித்திரிக்கப்படுவது, மக்கள் மனங்களில் தவறான பார்வையை ஏற்படுத்தி வைத்துள்ளன. 'நேரம் காலம் பார்க்காமல் பணியாற்றுவது ஒரு நர்ஸின் கடமை’ என்று புரிந்துகொள்ள இயலாதவர்கள்தான், தவறான கண்ணோட்டத்தில் பார்ப்பார்கள். ஊடகங்களும் இதே பார்வையைக் கொண்டிருப்பதுதான் வேதனை. ஒவ்வொரு நர்ஸும் ஒரு தாயாக இருந்து, நோயாளிகளைத் தம் சேயாக நினைத்து சிகிச்சை அளிக்கும் புனிதப் பணியைச் செய்கிறார்கள் என்பதுதான் உண்மை'' என்று வருத்தத்தோடு சொன்னார், மூத்த நர்ஸ் ஒருவர்.  

அ முதல் ஃ வரை! - 5

ஆண்களும் வரலாம்!

''பெரும்பாலும் பெண்கள் மட்டுமே இருக்கும் இந்தப் பணியில் நீங்கள் எப்படி?''

- 33 ஆண்டுகள் அரசு மருத்துவமனையில் பணி புரிந்து, 93-ம் ஆண்டு ஓய்வுபெற்றிருக்கும் ஆண் செவிலியர் ராமச்சந்திரனிடம் கேட்டோம்.

''நர்ஸ் பணி, பெண்களுக்கு மட்டுமேயான பணி என்று முழுமையாகச் சொல்லிவிட முடியாது. ஆண்களும் கட்டாயம் இருக்க வேண்டிய பணி என்றுதான் சொல்ல வேண்டும். ஏனென்றால் ஜெயில், ராணுவம், மனநல மருத்துவமனை, கப்பல் போன்ற பல இடங்களில் பெண் செவிலியர்களால் முழுமையாகப் பணியாற்ற முடியாது. இதுபோன்ற இடங்களில் கட்டாயம் ஆண் செவிலியர்கள் தேவை. இன்றைக்கு நூற்றுக்கு பத்து என்கிற விகிதத்தில் ஆண் செவிலியர்களுக்கான தேவை இருக்கிறது. அதனால், ஆண்களும் இந்தப் படிப்பைத் தேர்ந்தெடுத்தால், நல்ல சம்பளத்தோடு வேலைவாய்ப்புகளைப் பெறமுடியும்'' என்ற ராமச்சந்திரன்,

''நான் நர்ஸ் வேலைக்கு வந்தபோது, வேடிக்கையாகப் பார்த்தார்கள். அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் ஒவ்வொரு நாளும் சிறப்பாக பணி செய்தேன். பல கல்லூரிகளில் சிறப்பு விரிவுரையாளராக பாடம் நடத்தியிருக்கிறேன். என் பணியை நேசித்து சிறப்புடன் செய்ததற்காக எனக்கு கிடைத்த அங்கீகாரத்தில் ஒன்றுதான் 2008-ம் ஆண்டு இந்திய அரசு எனக்கு வழங்கிய 'நைட்டிங்கேல்’ விருது. இதுபோன்று இன்னும் பல விருதுகளையும் வாங்கியிருக்கிறேன். ஓய்வுபெற்ற பிறகு, இப்போது சென்னை, ஸ்ரீ ராமச்சந்திரா நர்ஸிங் கல்லூரியின் சேர்மனாக பணியைத் தொடர்ந்துவருகிறேன்'' என்றார், பெருமிதத்துடன்!

வெளிநாட்டு வேலை!

இந்தத் துறைக்கு இருக்கும் வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் பற்றி பேசும், அரசு மருத்துவமனையில் 37 ஆண்டுகள் பணி புரிந்து ஓய்வு பெற்றிருக்கும் சுகுணா சரசா, ''நான் அரசுப் பணியில் இருந்தபோது, 5 ஆண்டுகள் பணிக்கால ஓய்வில் சவுதி அரேபியாவுக்குச் சென்று அங்கே ஒரு மருத்துவமனையில் வேலை பார்த்தேன். காரணம், அப்போது அரசுப் பணியில் நான் இங்கே வாங்கிய சம்பளம் வெறும் 1,000 ரூபாய். அதை வைத்து என் இரு பெண்களை படிக்க வைக்கவும், குடும்பம் நடத்தவும் கஷ்டமாக இருந்தது. அங்கே எனக்கு 35 ஆயிரம் ரூபாய் சம்பளம் கொடுத்தார்கள். அதனால் 5 ஆண்டுகள் வேலை செய்துவிட்டு, இந்தியா வந்து மீண்டும் அரசுப் பணியைத் தொடர்ந்தேன்.

வெளிநாடுகளில் நர்ஸுகளை ரொம்பவே மரியாதையோடு நடத்துவார்கள். கடவுளுக்கு நிகரான இடத்தில் வைத்து பார்ப்பார்கள். நாங்கள் நடந்துசென்றால், வழிவிட்டு மிகுந்த மரியாதையோடு நிற்பார்கள். அதையெல்லாம் நினைக்கும்போது, 'நாம் செய்து கொண்டிருக்கும் பணி, மிகமிக உயர்ந்தது' என்கிற பெருமை மனதுக்குள் குடிபுகுந்து கொள்ளும். நம்நாட்டில் இந்த அளவுக்கு இல்லாவிட்டாலும், உரிய மரியாதையும், மதிப்பும் கொடுத்தாலே... இந்தப் பணியைச் செய்பவர்களுக்கு அதில் கூடுதல் ஆர்வம் பிறக்கும்'' என்று சொன்னார்.

அ முதல் ஃ வரை! - 5

ஆரம்பத்தில் வெறுப்பு... பழகியதும் விருப்பு!

''இந்த வேலையையும் பார்த்துக் கொண்டு, குடும்பத்தையும் கவனிப்பது என்பது கொஞ்சம் சவாலான விஷயமோ..?'' என்று கேட்டால்...

''அதெல்லாம் இல்லை. நாம் நினைத்தால் எதுவுமே சவால் இல்லை... சாதாரணம்தான்'' என்று சொல்லும் நர்ஸ் பிரேமா, எஸ்.ஆர்.எம். மருத்துவமனையில் பணிபுரிகிறார்.

''ஆரம்பத்தில் நர்ஸுக்குப் படிக்க எனக்கு விரும்பமே இல்லை. அப்பாவின் விருப்பத்துக்காக படிச்சேன். முதல் ஆறு மாசம் ரொம்பக் கஷ்டமா இருந்துச்சு. பிறகுதான், இந்த படிப்போட பெருமை புரிஞ்சுது. அதுக்கப்புறம் ரொம்பவே ஈடுபாட்டோட படிச்சு முடிச்சு வேலையில சேர்ந்துட்டேன். திருமணத்துக்குப் பிறகு, கணவரோட ஒத்துழைப்பு முழுமையா இருந்ததால... வேலையைத் தொடர்ந்து சிறப்பா செய்ய முடிஞ்சுது. என்னதான் இது பெண்களுக்கான துறையா இருந்தாலும், திருமணம் ஆன பிறகு, புகுந்த வீட்டோட சப்போர்ட் இல்லாம எதுவும் செய்ய முடியாது. அதனால குடும்பத்தினர்கிட்ட இந்த வேலையைப் பத்தி முழுமையா பகிர்ந்துகிட்டே இருக்கணும். அப்பதான் நம்மளோட கஷ்டநஷ்டம் எல்லாம் குடும்பத்துக்கும் புரிய வந்து, தொடர்ந்து ஒத்துழைப்பு கொடுப்பாங்க'' என்று எதார்த்த நிலையைச் சொன்னார் பிரேமா.

நிஜம்தானே!

அறிவோம்...

ப்ளஸ்: உலகெங்கும் கொட்டிக்கிடக்கும் உடனடி வேலைவாய்ப்பு, நல்ல சம்பளம், சேவை செய்யும் வாய்ப்பு, மனநிறைவு, மருத்துவச் சலுகைகள், பக்குவம், பொறுமை, சகிப்புத்தன்மை போன்றவற்றுடன்... மருத்துவ முறைகளையும், மருந்து மாத்திரைகளையும் பற்றித் தெரிந்து கொள்ளுதல், முதலுதவி மற்றும் சிகிச்சை பற்றித் தெரிந்து கொள்ளுதல், ஆரோக்கிய வாழ்வுக்கான வழிகளைத் தெரிந்து கொள்ளுதல்... என ப்ளஸ் பட்டியல் இன்னும் நீளும்!

மைனஸ்: சமூகத்தின் தவறான பார்வை, தீவிர சிகிச்சைப்பிரிவு போன்ற இடங்களில் தொடர்ந்து வேலை செய்வதால் எழும் மனஅழுத்தம்; சரியான நேரத்துக்கு பணியை விட்டு வீட்டுக்குச் செல்ல முடியாதது; நினைக்கும் நேரத்தில் விடுமுறை எடுக்க முடியாமல் போவது; வீட்டு வேலைகளை சரிவரச் செய்ய முடியாமல் போவது; எப்போதும் குடும்பத்தினரின் ஒத்துழைப்பை எதிர்பார்த்தே நிற்பது; நோயாளிகளாலும், அவரது உறவினர்களாலும் அவ்வப்போது ஏற்படும் இன்னல்கள்; ரத்தம், அழுகை, உயிரிழப்பு போன்றவற்றை நேரடியாக பார்த்துக் கொண்டே இருத்தல்; ஜெயில், மனநல மருத்துவமனை போன்ற இடங்களில் சந்திக்கும் சவால்கள்; சமூகத்தின் தவறான பார்வையால் தடைபடும் திருமணம்; அப்படியே திருமணம் ஆனாலும், அதன் பிறகு தோன்றும் பிரச்னைகள்... என்று மைனஸும் அதிகம்தான். ஆனால், இதையெல்லாம் திருமணத்துக்கு முன்பாகவே துணையாக வரப்போகிறவரிடம் தெள்ளத்தெளிவாக புரிய வைத்துவிட்டால், பெருமளவு மைனஸ்கள்... ப்ளஸ்களாக மாறிவிடும்!

கேரளாதான் முதலிடம்!

இந்தியாவிலேயே கேரளாவில்தான் அதிக செவிலியர்கள் இருக்கின்றனர். தற்போது இந்தத் துறை படிப்பை தேர்ந்தெடுத்து படித்துக் கொண்டிருப்பவர்களில் முதலிடத்தில் இருப்பதும் அந்த மாநிலத்தினர்தான். கடந்த 2010-ம் ஆண்டு, தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலில், 'இந்தியாவில் ஆண்டுக்கு 10 லட்சம் பேர் புற்றுநோயால் பாதிக்கப்படுகிறார்கள். அவர்களில் நான்கு லட்சம் பேர் இறந்து போகிறார்கள். 80 சதவிகிதம் பேர் நோய் முற்றிய நிலையில்தான் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வருகிறார்கள். அவர்களுக்கு நர்ஸிங் சேவையாற்றுவதில் இந்தியாவிலேயே கேரளாதான் முதலிடத்தில் இருக்கிறது. நோயாளிகளுக்கு சேவையாற்றுவதில் போதுமான அளவுக்கு நர்ஸ்கள் தமிழகத்தில் இல்லை’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism