##~##

காலையில் எழுந்து பல் தேய்த்ததுமே, 'மச்சி... நான் பல்லு தேய்ச்சுட்டேன்’ என 'ஸ்டேட்டஸ்’ போடுவது, 'அப்டியா மச்சான்... அதான் பல்லு தாஜ்மகால் மாதிரி மின்னுதா?’ என 'கமென்ட்’ போடுவது... இதையெல்லாம் 'ஷேர்’ செய்து, 'லைக்’குகளை அள்ளிக் குவிப்பது... இன்றைய இளைஞர்களில் பலருடைய பொழுதுபோக்கே இப்படி ஃபேஸ்புக் மயமாகத்தான் இருக்கிறது. ஃபேஸ்புக் எனும் முகநூல் ஒரு மாய உலகம். யார் வேண்டுமானாலும் யாருடனும் பேசலாம் என்கிற நிலை இருப்பதால், விட்டில்பூச்சிகளாக விழுந்து வாழ்க்கையைத் தொலைத்துக் கொண்டிருக்கிறார்கள் பலரும். எட்டாவது மாடியிலிருந்து குதித்து உயிரை மாய்த்துக் கொண்ட விஜி, இவர்களின் பிரதிநிதி!

'மின்தடை நேரங்களில், ஓரக்கண்ணால் பார்த்தாலே, வெளிச்சம் பரவும்' என கவிதை எழுதத் தோன்றும் அளவுக்கு அழகுப் பெண்தான் விஜி. அப்பா, கணிதத்துறை பேராசிரியர். அம்மா, நடன ஆசிரியர். வீட்டுக்கு ஒரே மகள் என்பதால் அன்புக்கோ, அரவணைப்புக்கோ பஞ்சம் இல்லை.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இன்ஜினீயரிங் படித்துக் கொண்டிருந்த விஜியின் காதலைப் பெற, பலர் முயற்சி செய்தாலும், அவளிடம் எதுவும் பலிக்கவில்லை. அவளைப் பொறுத்தவரை காதலும் கரப்பான் பூச்சியும் ஒன்றுதான்.

ஆசை ஆசையாய் தோசை ஊற்றும் அம்மாவின் இடுப்பைச் செல்லமாகக் கிள்ளுவதும், அப்பாவின் குட்டி மீசையை சுட்டியாக இழுத்து விளையாடுவதும் விஜியின் பொழுதுபோக்குகள். வளர்ந்துவிட்ட குழந்தையாக நினைத்துப் பாசத்தைப் பொழிந்து கொண்டிருந்தனர், பெற்றவர்கள்.

அலைபாயும் நெஞ்சினிலே..! - 6

இப்படியே நாட்கள் நகர்ந்து கொண்டிருந்த நிலையில்தான்... எட்டாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டாள். உயிருக்குயிரான மகளை சடலமாகப் பார்த்த அதிர்ச்சி யில் இருந்து மீளாத பெற்றோருக்கு, அடுத்த அதிர்ச்சி... அவளுடைய பிரேதப் பரிசோதனை அறிக்கை. ஆம்... விஜி, ஓர் ஆணுடன் உடலுறவு கொண்டிருப்பதை அந்த அறிக்கை அம்பலப்படுத்தியது... அவர்களை உறைய வைத்தது!

''என்னது, விஜி தற்கொலை செஞ்சுகிட்டாளா? சத் தியமா நம்ப மாட்டேன். அவளாவது தற்கொலை செஞ்சிக் கறதாவது... காதுல பூ சுத்தாம போய் வேலையைப் பாருங்க...''

- சேதி சொன்ன நண்பர்களை இப்படி விரட்டி அடித்தாள், விஜியின் தோழி சௌம்யா.

''விஜி மட்டும் எனக்கு அட்வைஸ் பண்ணாம இருந் திருந்தா, போன வாரமே தற்கொலை பண்ணிக்கிட்டு செத்திருப்பேன். அந்த திலீபனோட சுயரூபத்தை கண்டு பிடிச்சு சரியான நேரத்துல அவதான் என்னை மீட்டெ டுத்தா. அவளைப் போய் தற்கொலை பண்ணிக்கிட்டானு சொல்றீங்களே...''

- சௌம்யாவால் இன்னமும் நம்பவே முடியவில்லை.

அந்த அளவுக்கு கல்லூரியில் தன் ஆளுமையை பதிய வைத்திருந்தவள் விஜி. மெடிக்ளைம் இன்ஷூரன்ஸ் போடுவதாக இருந்தால்கூட, விஜியைக் கேட்காமல் போடாத அப்பா, 'கலைநிகழ்ச்சிகள்ல புதுசா என்ன பண்ணலாம்’ என ஆலோசனை கேட்கும் கல்லூரிப் பேராசிரியர்கள், 'இந்த வாரம் எங்க போலாம்?’ என யோசனை கேட்கும் நண்பர்கள்... என வீடு, கல்லூரி எங்கும் விஜிதான் பலருக்குமான வழிகாட்டி.

அப்படிப்பட்டவள், முகநூலின் மாய வலையில சிக்கி, மரண தேவனின் கரங்களுக்குப் போய்ச் சேர்ந்த கொடுமையை என்னவென்று சொல்வது..?

அவன் பெயர் மகேஷ். முகநூல் முகப்பு புகைப்படத்தில் அத்தனை அம்ச மாக இருந்தான். படிப்பு எம்.பி.ஏ. தனித்திறமைகள் எதையுமே அவன் விட்டு வைத்ததில்லை. முகநூல் பக்கம் முழுக்க பெண்களுக்கு மரியாதை கொடுப்பது மாதிரியான புகைப்படங்களும் கருத்துக்களுமே நிரம்பி வழிந்து கொண்டிருக்கும். ஒரு நாள் மகேஷிடம் இருந்து விஜிக்கு, 'ஃப்ரெண்ட் ரெக்வஸ்ட்' வருகிறது. நண்பராக விஜி உறுதி செய்த மறுநிமிடம், 'ஹாய்’ என்ற சமிக்ஞை இன்பாக்ஸில் விழுகிறது. 'ஹாய்... ஹலோ வாகிறது. 'ஹலோ, நலமா’ என கேள்வி எழுப்புகிறது. 'நட்பு’ என்கிற பெயரில் தொடங்கியது, அந்த நாடகம். கொஞ்சம் கொஞ்சமாக விஜியை பற்றி முழு விவரங்களையும் அறிந்து கொண்டான்.

மகேஷ§க்கு அப்பா கிடையாது. நான்கு தங்கைகளுக்கு ஒரே அண்ணன். வறுமைக்கு வாக்கப்பட்ட குடும்பத்தில் பிறந்தவன். காலையில் கல்லூரி, மாலையில் ஹோட்டலில் பகுதி நேர வேலை. இது போதாதா அவன் மீது விஜிக்கு நம்பிக்கை வருவதற்கு..! ஒரு நாள் மகேஷின் அம்மாவுக்கு விபத்து நடந்ததாக தகவல் கிடைக்கிறது. கையில் காசில்லாமல் கைபேசியில் அழும் மகேஷ§க்கு, தன் நகையை அடகு வைத்து, அவன் வங்கிக் கணக்கில் பணம் செலுத்துகிறாள், விஜி. அந்த சம்பவத்துக்குப் பிறகு, இனம் புரியாத காதல் பிறக்கிறது. அதை மகேஷிடம் சொன்னபோது, ஏற்க முடி யாதென மறுக்கிறான் மகேஷ். விஜியின் தொடர்ந்த கெஞ்சல்களுக்குப் பிறகு, ஒரு வழியாக ஏற்கிறான். அழகாக நகர்ந்தன, அந்த காதல் சாட்டிங் காலங்கள். இதுவரை முக நூலில் மட்டுமே பார்த்த காதலின் முகத்தை, நேரில் பார்க்கத் துடிக்கிறது, விஜியின் மனது.

''நானும் உன்னைப் பாக்கணும்டி செல்லம். ஆனா, உன்னைப் பாக்கும்போது கண்டிப்பா ஒரு பொருளை உனக்குக் கொடுப்பேன். அதை நீ வாங்கிக்கணும்''னு மகேஷ் சொன்னதும் விஜிக்கு ஒன்றும் புரியவில்லை. ''மகேஷ் அது என்ன பொருள்னு தெரிஞ்சா தான் உன்னைப் பாக்க வருவேன்'' - அழுத்தமாகச் சொல்கிறாள் விஜி. ''நீ உன்னோட செயினை அடகு வெச்சு என் அம்மாவை காப்பாத்தியிருக்கே. உன்ன முதல் முறையா பாக்க வரும்போது அந்த செயினை மீட்டு உன் கழுத்துல போடணும்னு ஆசைப்படறேன்'’ மகேஷ் சொன்னதைக் கேட்டு, செல்லக் கோபத்தை காட்டினாலும், அவனின் பொறுப்பை எண்ணி அகம் மகிழ்கிறாள்.

விஜியை சந்திக்க, விருதுநகரிலிருந்து சென்னைக்குப் புறப்படுகிறான் மகேஷ். காதலனை சந்திக்கும் மகிழ்வில் திளைத்திருந்தாள், விஜி. நண்பர்களுக்குத் தெரியாமல் நட்சத்திர ஓட்டல் ஒன்றில் அறையை முன்பதிவு செய்துவிட்டாள். மகேஷ், பகுதி நேரமாக ஓட்டலில் வேலை பார்த்தாலும், ஒருநாள் கூட உயர்தர உணவகத்தில் உணவு உண்டதே இல்லை. மகேஷ் வாழ்க்கையில் எல்லா சந்தோஷங்களும் அனுபவிக்க வேண்டும் என எண்ணிய விஜி, கிட்டத்தட்ட அவனை தாலி கட்டிய கணவனாகவே நினைத்து இப்படியெல்லாம் ஏற்பாடு செய்கிறாள்.

அப்போது, விஜியின் செல்போன் சிணுங்கியது. ''விஜி, தப்பா எடுத்துக்காதே... உனக்கு செயின் மீட்டுக் கொடுக்கலாம்னு கொண்டு வந்த பணத்தை யாரோ பிக்பாக்கெட் அடிச்சுட்டாங்க. உன்னைப் பாக்கவே அவமானமா இருக்கு. ஊருக்குத் திரும்பிப் போனா... அம்மாவைப் பாக்கும்போதெல்லாம் உன் ஞாபகம் குற்ற உணர்ச்சியா குத்திகிட்டே இருக்கும். போதாக்குறைக்கு தங்கச்சிக்கு வேற காலேஜ் ஃபீஸ் ஒரு லட்ச ரூபாய் கட்டணும். இப்பதான் தங்கச்சி கால் பண்ணி சொன்னா. உன்னை நிமிர்ந்து பாக்குற தைரியமும் எனக்கு இல்ல. ஒரு நல்ல அண்ணனா, தங்கச்சிக்கு ஃபீஸ் கட்டிட்டு, உன் செயினை மீட்குற அளவுக்கு பணத்தை சேர்த்துக்கிட்டு வரேன் விஜி'' என மகேஷ் போனில் அழுதான்.

''மகேஷ்... ஐ லவ் யூடா. இப்பதான் உன்னை எனக்கு இன்னும் ரொம்ப புடிச்சுருக்கு. நீ எதுவும் பேச வேணாம். கிளம்பி வா, நேர்ல பேசிக்கலாம். ஒரு லட்சத்தை நான் ரெடி பண்றேன்.''

''விஜி, அதெல்லாம் எதுவும் வேணாம். உன்னைப் பாத்தாலே போதும்'' என மகேஷ் சொல்லி முடிப்பதற்குள், 'நீ உடனே வா’ என்று முகவரியை சொல்லி போனை கட் செய்கிறாள் விஜி.

திருமணத்துக்காக அம்மா சேர்த்து வைத்த 50 சவரன் நகையுடன் ஓட்டல் அறையில் அப்பாவியாக அமர்ந்திருக்கிறாள், விஜி. மகேஷ் வந்தவுடன் காற்றுக்கும் இடைவெளியில்லாமல் கட்டியணைத்துக் கொள்கிறாள். பஞ்சும் நெருப்பும் பற்றிக் கொள்கிறது. கணவன் - மனைவியாகவே ஆகிவிட்டனர். மகேஷ் கழிவறை சென்ற சமயத்தில் அவன் கைபேசிக்கு வரும் அழைப்பை விஜி, எதார்த்தமாக எடுத்து ஆன் செய்துவிட, அந்த அழைப்பு, மகேஷ் யாரென காட்டிக் கொடுக் கிறது.

''என்னடா மச்சான்... விஜி கதையை முடிச்சுட்டியா?'' எனக் கேட்க, விஜியின் தலையில் நெருப்பு... கண்களில் குபுகுபுவென கொட்டியது கண்ணீர். மகேஷ் என்பது அவன் நிஜப் பெயரே அல்ல. இத்தனை நாட்களாக தன்னுடன் பழகிய மகேஷ§க்கான குடும்பப் பின்னணி உண்மையானதல்ல. எல்லாமே மோசடி. அவன் செல்போனில் இருந்த பல நெருக்கமான பெண்களின் புகைப்பட வரிசையில் மார்பிங் செய்யப்பட்டு அவனோடு அரைகுறை ஆடையுடன் இருந் தாள் விஜி.

பேரதிர்ச்சிக்கு ஆளானவள், மயங்கிச் சரிய... நகைகளுடன் காணாமல் போனான், மகேஷ் எனும் 'ஃபேஸ்புக் பேய்'.

விஜி நல்லவள்தான். பெற்றவர்களும் நல்லவர்கள்தான். தகவல்தொழில்நுட்பத்தைத் தவறாகப் பயன்படுத்தியதன் விளைவு... இன்னுயிரை இழக்க வைத்துவிட்டது.

சரி... 'உலகத்திலேயே எங்க காதலைப் போல யாரோட காதலும் இல்லை’ என சவால் விடும் ஜோடிகளை பார்த்திருப்போம் தானே! அந்த வரிசையில் நிற்கிறார்கள் கல்பனா - கார்த்திக் ஜோடி. ஆனால்..?

அலைபாயும்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism