Published:Updated:

“கன்னுக்குட்டி கொம்புல 2 கிராம் மோதிரம்... பங்கு போட்டுக்க 15 பேர் மோதுறோம்!”

சூரியின் பளீர் ஜிலீர் பொங்கல்பொன்.விமலா, படங்கள்: பா.காளிமுத்து

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

##~##

 ''ஒரு பொண்ணு வேணும்.. ஒரு பொண்ணு வேணும்னு எங்க ஆத்தா தவமா தவம் கெடக்க, ஆத்தாவுக்கு ஆறும் பையங்களாவே பொறந்துட்டோம். எனக்கு முன்ன அண்ணனுங்க ரெண்டு பேரு, அடுத்து பொறந்த நானும் என் தம்பியும் ரெட்டைப் புள்ளைங்க... எம் பேரு ராம், அவன் பேரு லச்சுமணன், எங்களுக்கு அடுத்தாப்ல ரெண்டு தம்பிங்க.

ராம்னு இருந்த நான், அப்புறம் சூரியாவாகி, கடைசியா சூரியான கதை தெரியுமாய்யா..?''

- பேச்செல்லாம் மதுரை வாசம், நகைச்சுவை நடிகர் சூரிக்கு!

''அதாப்ல என்னன்னா... ஆத்தா, அப்பன், அண்ணந்தம்பிங்க எல்லாரையும் விட்டுட்டு சினிமா ஆசையோட 96-ம் வருஷம், ஊருலயிருந்து மெட்ராஸுக்கு பஸ் ஏறிட்டேன். சான்ஸ் தேடி கோடம்பாக்கத்துல நாயா, பேயா திரிஞ்ச ஆறு வருஷத்துல, ஒருவாட்டிகூட ஊருப் பக்கம் போகவே இல்ல... அண்ணன், தம்பிங்க கலியாணத்துக்குகூட! சினிமாவுல ஜெயிச்சுட்டுதான் ஊருக்குள்ள கால் வெக்கணும்னு ஒரு வைராக்கியம். ஒருவழியா 'வெண்ணிலா கபடி குழு’ படத்துல அடையாளம் கிடைச்சதுக்கு அப்புறந்தேன் ஊருக்குப் போனேன். பாத்தா... பொம்பளப் புள்ளைங்களே இல்லாத எங்க வீட்டுல, அண்ணன், தம்பி எல்லாருக்குமா சேர்த்து ஒரே நேரத்துல நாலு பொம்பளப் புள்ளைங்க! எனக்குச் சந்தோஷம் புடிபடல. என்னைய ஆறு வருஷம் கழிச்சுப் பாத்த ஆத்தா, 'ஏ யப்பு... எங்கய்யா போயிருந்த? இம்புட்டு நாளா ஆத்தாவப் பாக்காம எப்படி ராசா இருந்த..? இப்புடி மெலிஞ்சு போயி கெடக்குறியே...’னு அப்புடியே வாரி அணைச்சு அழுதுருச்சு.

“கன்னுக்குட்டி கொம்புல 2 கிராம் மோதிரம்... பங்கு போட்டுக்க 15 பேர் மோதுறோம்!”

அப்பாவைவிட, அதிகமா ஒழப்பெடுத்து எங்கள வளத்து ஆளாக்கிச்சு எங்க ஆத்தா. அஞ்சாறு ஆம்பளையாளுங்க பண்ற வேலைய எங்க ஆத்தா, ஒத்த ஆளா பண்ணிரும்.

'இந்தாருடா... இனிமே எம்பேரு சூரியா. அப்புடித்தான் கூப்பிடணும்’னு ஒரு ஸ்டைலுக்காக என் பேரை மாத்தி ஊருக்குள்ள உதார் விட்டுக்கிட்டு திரிஞ்சேன். இதப் பாத்த எங்காத்தா, 'இந்தாருடா... வெளக்கமாறு பிஞ்சுபோயிரும். சாமி குத்தமா போயிரும்டா’னு வெளக்கமாற தூக்கிக்கிட்டு தொரத்துச்சு. ஆனாலும் அடங்காம, சூரியா... சூரி ஆயிடுச்சு.

பண்டிக திருநாள்னா, மொதல்ல எங்க ஆத்தாதேன் மனசுல வந்து போகும். அதுலயும் மாட்டுப் பொங்கல்தேன் எங்க குலத்திருவிழா. வெவசாயக் குடும்பமான எங்களுக்கு சோறு போட்டது, மாடுங்கதேன். எங்க வீட்டுல அம்பது, அறுவது மாடுங்க இருக்கும். அத்தனை மாட்டையும்  ஒத்தை ஆளா ஆத்தா பாத்துக்கும். விடியக்காத்தால ரெண்டு மணிக்கெல்லாம் எந்திருச்சுடும். அம்புட்டு மாடுகளுக்கும் தண்ணி காட் டிட்டி, பால் கேனை காலுக்கும் நடுவுல வச்சுகிட்டு ஒக்காந்தா, பாலும் நொரையுமா சட்டி நெறையும். அப்புறம் மாடுகளுக்கு புல்லு போட்டு கம்மாய்க்கு அனுப்பிட்டு, கொட்டாயை கூட்டி அள்ளும். பொறவு, கம்மாய்க்குப் போயி கழுத்தளவு தண்ணியில நின்னுக்கிட்டு அந்த மாடுகள குளுப்பாட்டும். அதுகள கரைக்கு அனுப்பிட்டு, ஆத்தா குளிச்சுட்டு, மாடுகளுக்கு செத்த நேரம் மேய்ச்சல் காட்டும். அப்புடியே சீலைய சொருகிட்டு வரப்பு வெட்டுறது, களை பறிக்கிறதுனு வெவசாய வேலையும் பார்க்கும். அம் புட்டுக் கஷ்டப்பட்டுதேன் எங்க ஆறு பேரையும் ஆளாக்கிச்சு.

பொங்கல் வந்துட்டா போதும்... முளைப்பாரி கட்டிக்கிட்டு பொம்பளைங்க போறதும், கோவிலுக்கு முன்ன மானாட்டம், ஒயிலாட்டம்னு தூள் கிளப்புறதும், வீட்டுக்கு வீடு விருந்தாளிங்க மசமசனு குவியறதும்னு ஊரே ஜேஜேனு இருக்கும். மாட்டுப் பொங்கல் அன்னிக்கு ஊருக்குள்ளாற இருக்குற அம்புட்டு மாடு, கன்னு களையும் மந்தைக்கு கொண்டு போவாய்ங்க. காளைய அடக்க, வேடிக்கை பாக்க, அத்தை, மாமா பொண்ணுங்கள சைட் அடிக்கனு மந்தையில எல்லாப் பயலுகளும் கூடுவாய்ங்க. நானும் வயசு வித்தியாசமில்லாம லுக்கு விட்டுப் பாப்பேன். எதுவும் கண்டுக்காது. 'இந்த மொகரக்கட்டைக்கு இது வேற யாக்கும்...’னு மேக்கொண்டு திட்டிட்டுப் போகுங்க.

“கன்னுக்குட்டி கொம்புல 2 கிராம் மோதிரம்... பங்கு போட்டுக்க 15 பேர் மோதுறோம்!”

மந்தையில மைக் அனவுன்ஸு மென்ட்டு பறக்கும். 'உசுருக்கு உத்திரவாதம் இல்லய்யா... அம்புட்டுப் பொடிப் பயலுகளும் ஓடி ஒளிஞ்சிக்கிருங்க...’னு காட்டுக் கத்து கத்துவாய்ங்க. இருக்குறதுலயே சின்ன காளையாகூட பாத்து நான்... அடக்க மாட்டேன். மத்தவங்க அடக்கும்போது நானும் போயி சேர்ந்துருவேன். அப்புறம் அது கொம்புல கட்டியிருந்த ரெண்டு கிராம் மோதிரத்தை அதை அடக்குன (!) 15 பயலுகளும் பிரிச்சுக்கறதுக்கு மோதுவோம். அந்தக் கன்னுக்குட்டிய அடக்குனதுக்கே (!), 'ஏ ராசாவுக்கு கண்ணு பட்டுபோச்சு’னு சொல்லி வாசல்லயே நிக்க வெச்சு ஆத்தா திருஷ்டி சுத்திப்போடும்... பாருங்க, அடஅட!

“கன்னுக்குட்டி கொம்புல 2 கிராம் மோதிரம்... பங்கு போட்டுக்க 15 பேர் மோதுறோம்!”

ஒருவாட்டி எனக்கும் எந்தம்பிக்கும் சண்டை வந்திருச்சு. ஆத்தா எந்தம்பி பக்கம் சாதகமா பேசிருச்சு. கோவத்துல முறுக்கிக்கிட்டு நான் ஊர்ச் சாவடியில போயி ஒளிஞ்சுக்கிட்டேன். எங்காத்தா என்னைக் காணோம்னு தெருத் தெருவா தேடி அலைஞ்சுச்சு. எப்புடி..? தட்டுல சோத்தப் போட்டு, மீன் கொழம்ப ஊத்தி, அந்த தட்டுலயே ஓரமா செம்புல தண்ணிய வெச்சுக்கிட்டு. எங்கூட்டாளிக வீட்டுக்கெல்லாம் போயி, 'எஞ்சாமி இங்க வந்துச்சாயா..?’னு பாவமா கேட்டுச்சு. கடைசியில சாவடி பக்கம் வந்து நின்னுகிட்டு, 'சாமீ... உம் மேல தப்பு இல்லைனு பெறவுதான் தெரிஞ்சது. உந்தம்பிக்காரனை வெளக்குமாறலயே பிச்சி எடுத்துட்டேன்ல. அந்த புள்ள அழுதுட்டு கெடக்குறான்யா’னு சொல்லும்போதே, நெசந்தான்னு நம்பி வெளிய வந்துட்டேன். ஆத்தா ஒரே அமுக்கா அமுக்கி, மீன் கொழம்பு சோத்தை ஊட்டிக்கிட்டே வீட்டுக்கு கூட்டிட்டுப் போச்சி. எதுத்தாப்புல வந்த எந்தம்பிக்கிட்ட அழச்சொல்லி தூரத்துல இருந்தே சைகை காட்ட, அவனும் சிரிச்சுக்கிட்டே அழுதான்.

ஆறு புள்ளைங்க கெடந்தாலும் ஒத்த புள்ள வயிறு காய்ஞ்சா, ஆத்தாவால தாங்கிக்கிட முடியாது.

இன்னிக்கு சினிமாவுல இருக்கறதால, ஆத்தாவோட இருக்க முடியல. ஆத்தாவுக்கோ... சொந்த மண்ணை விட்டு வர முடியல. இப்போ எனக்கு என் ஆத்தா போலவே கூட இருக்குறது, எம் பொண்டாட்டி மகாலச்சுமிதேன். எம் பொண்ணு வெண்ணிலா, பையன் சருவான் எங்க எல்லாருக்குமே ஆத்தாதேன் குலசாமி. அந்த குலசாமி பேரு சேங்கை அரசி. ஆண்ட வங்கிட்ட நான் கேக்குறதெல்லாம் ஒரே ஒரு வரந்தேன்... ஆத்தாவுக்கு இன்னும் இருவது வருஷம் கூட கொடு சாமீ!''

துரை, ராஜாக்கூரில் இருக்கும் சூரியின் அம்மாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டோம்.

''என் ஆறு புள்ளைகதேன் ஒலகமே. இன்னிக்கும் எம் மகனுங்களுக்கும், எம் மருமக, பேரன் பேத்திகளுக்கும் நான் சமைச்சாதேன் புடிக்கும். ஆத்தா கஷ்டப்படக்கூடாதுனு பயலுக சொன்னதால மாடுகள வித்துட்டாலும், ஒழச்ச ஒடம்பு சும்மா கெடக்குமா..? வரப்பு, மேடுனு முடிஞ்சத பாத்துக்கிட்டுதேன் கெடப்பேன். எம் பேரப் புள்ளைங்க எல்லாம் ஊருக்கு போயி ருக்குக. வந்ததும் பாருங்க வீடே கலகட்டிரும்!' - ஆவலாய் காத்திருந்தார் ஆத்தா!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு