பிரீமியம் ஸ்டோரி
##~##

 'பொங்க வைக்கும்’ சடங்கையும், சம்பிரதாயத்தையும் பற்றி கொஞ்சம் சொல்லட்டுமா..?!

திருமணமான பெண்ணுக்குத் தாய் வீட்டில் இருந்து வரும் சீர்களில் முக்கியமானது, பொங்கல் சீர். காரைக்குடியில் எங்கள் ஆயா வீட்டில் இருந்து வருடா வருடம், என் அம்மாவுக்கு பொங்கல் சீர் எடுத்து வருவார்கள். அதை 'பொங்க பானை கொடுப்பது’ என்பார்கள்.

பொங்கலுக்கு ஓரிரு நாட்கள் முன்பு...

சாமி வீட்டில், நடு வீட்டுக் கோலமிடுவார்கள் அம்மா. அன்று மாலை பொங்கலுக்குத் தேவையான பச்சரிசி, பாசிப்பருப்பு, வெல்லம், நெய், ஏலக்காய், கிஸ்மிஸு, கத்திரிக் காய், வாழைக்காய், கருணைக்கிழங்கு, பரங்கிக்காய், அவரைக்காய், பலாக்காய், சர்க்கரை வள்ளிக்கிழங்கு, பனங்கிழங்கு, கரும்புக்கட்டு, மஞ்சள்கொத்து, வாழை இலை, வெற்றிலை-பாக்கு, வாழைப்பழம், தேங்காய் எல்லாம் எடுத்துக் கொண்டு, எங்கள் ஆயா வீட்டு ஐயாவும், மாமாக்களும் வருவார்கள். அம்மா, சாமி வீட்டில் விளக்கேற்றி வைக்க.. கொண்டுவந்த சீரை நடுவீட்டுக் கோலத்தின் முன்பு வைத்து, ஐயாவும், மாமாக்களும் வணங்குவார்கள்!

'பொங்க பானை' கொண்டு வந்தவர்களுக்கு மாலை பலகாரமாக... கந்தரப்பம், வடை, விதம்விதமான இனிப்பு, வறுத்த முந்திரிப் பருப்பு, மிக்ஸர் - இதில் இனிப்பு ஒன்றும் காரம் ஒன்றும், அத்துடன் இட்லி, தோசை அல்லது மினி ஊத்தப்பம், வெங்காயக் கோஸ் / அவியல் / கோசுமல்லி என்று எல்லாம் இருக்கும்!

பொங்க பானை!

பொங்கலுக்கு முதல்நாள்...

மீண்டும் சாமி வீடு மெழுகி நடுவீட்டுக் கோலம் போடுவார் அம்மா. பச்சரிசியை ஊறவைத்து அம்மியில் அரைத்துக் கரைத்து, பருத்தித் துணியில் தொட்டு கோலமிட வேண்டும். சூரியன் உதிக்கும் திசை பார்த்துப் பொங்கலிடக் கோலம் போடுவோம். இதில், செவ்வகக் கோலத்துக்குள் அடுப்பு வைக்க மனைகள் போட்டு, தேர்க்கோபுரம் மற்றும் கால்கள் போட்டு, இரட்டை வரிசைப் புள்ளிகள் குத்துவோம். கோலம் போட்டுப் பழகுபவர்களுக்கு, புள்ளி வைக்க மட்டுமே அனுமதி. அதன்பின் பொங்கல் பானைகளுக்கு (முறிதவலைகள் - கல்யாண சீராக வைக்கப்பட்டிருக்கும் நல்ல கனமான பித்தளை உருளி) கோலமிடுவோம்.

விளக்குச்சட்டி என்பது ரொம்ப விசேஷம். இது ஒரு சட்டியும் மூடியும் கொண்டது. இதனுள்ளும் வெளியேயும் மயில், சங்கு, சக்கரம், பறவைகள் என விதம்விதமாகக் கோலங்கள் போடுவோம். அடுப்பு மனை, இரும்பு அடுப்பு, பொங்கல் இறக்கி வைக்கும் கலவடை, விளக்குச் சட்டி வைக்கும் சாமி வீடு, அரிசி புடைக்கும் முறத்தின் பின்புறம் என்று பல இடங்களிலும் கோலங்களாகவே தான் இருக்கும்.

பொங்கலிடும் கோலத்தில், ஆற்று மணலை கொட்டிப் பரப்பி, அடுப்பு மனைகளை அடுக்கி வைத்து, அதன் மேல் இரும்பு அடுப்புகளை வைத்து, சிரட்டைத் தூள், கொட்டான்கள், அரிசி, பருப்பு வகைகளைத் தயார் செய்து வைப்போம். விளக்குச்சட்டி, சாமி வீடு, உள் வீடு, வெளிவீட்டு வாசல் என்று எல்லா இடங்களிலும் ஒவ்வொரு கணு கரும்பு, பனங்கிழங்கு, கத்திரிக்காய், அவரைக்காய், சர்க்கரை வள்ளிக்கிழங்கு, கருணைக்கிழங்கு, வெற்றிலை-பாக்கு, வாழைப்பழம் வைத்துவிட்டுத்தான் தூங்கப் போவோம்.

பொங்க பானை!

பொங்கல் நாளன்று...

கோயில்களில் பொங்கலிட குறித்திருக்கும் நேரத்தில் சாமி வீட்டின் முன்பு பொங்கல் அடுப்புகளை பற்ற வைப்போம். பொங்கல் தவலைக்குள் காய்ச்சாத பாலை ஊற்றி, அடுப்பை மூன்று தரம் ஆலத்தி சுற்றி, சங்கு ஊதி, அடுப்பில் வைப்போம். பால் பொங்கி வரும்போது.... எல்லோரும் 'பொங்கலோ பொங்கல்!’ என்று சொல்லி, மீண்டும் சங்கு ஊதி அதில், கழுவிக் களைந்து வைத்திருக்கும் அரிசியை தவலையில் போடுவோம். அகப்பைக் கரண்டியால் பொங்கலைக் கிண்டுவோம். வெண்பொங்கலென்றால் அப்படியே சமைத்து, கும்பிட்டு இறக்கிக் கலவடையில் வைப்போம். சர்க்கரைப் பொங்கலென்றால் சோறும் பருப்பும் குழைந்ததும் நன்கு மசித்து, வெல்லத்தைப் போட்டுக் கரைத்ததும், நெய்யில் முந்திரி, திராட்சை பொரித்துப் போட்டுக் கும்பிட்டு இறக்கிக் கலவடையில் வைப்போம்.

பொங்க பானை!

அடுப்பின் முன் சூரியனுக்கு நேராக வாழையிலைகளைப் போட்டு, பள்ளயம் போடுவது போல நடுவில் வெள்ளைப் பொங்கலும், அதன் இருபக்கமும் சர்க்கரைப் பொங்கலும் வைத்து சதுரமாகச் செய்து வைப்பார்கள். அதன் நடுவில் பருப்பும் நெய்யும் விட்டு, சமைத்த குழம்பு காய்கறிகளை சுற்றிலும் படைத்து, தேங்காய் உடைத்து தீபதூப ஆராதனை செய்வார்கள்.

எங்கள் ஐயா முதலில் வணங்க, அதன்பின் அப்பா, அம்மா, சித்தப்பாக்கள், நான், என் தம்பிகள் அனைவரும் விழுந்து வணங்குவோம். பின்பு, முறத்தை எடுத்து வந்து வாழை இலையைப் படையலோடு வைத்து, அதில் விளக்குச்சட்டியில் இருக்கும் இரண்டு விளக்குகளையும் வைத்து, இருவர் இருவராக (கணவன் - மனைவி) எடுத்துச் சென்று சாமி வீட்டில் வைத்து வணங்குவார்கள். இந்தச் சமயம் ஆண்கள் தலைப்பாகை கட்டிக் கொள்வார்கள். ஒவ்வொருவரும் சாமி கும்பிடும்போதும் வாழை இலையை சாமி வீட்டில் வைக்கும் போதும் சங்கு ஊதுவோம்.

பின்பு, படைத்த இலைகளை எடுத்து வந்து பெரியவர்கள், ஆண் மக்கள் உணவு உண்பார்கள். அதன்பின், பெண்களும், வேலை செய்பவர்களும் உண்பார்கள். இதில் மிஞ்சும் பொங்கலை உருண்டைகளாக உருட்டி நீரில் போட்டு வைப்பார்கள். இரவில் இந்த சோற்று உருண்டைகளைக் கூட்டுக்குழம்போடு (மதிய உணவுக்குப் பின் மிச்சமாகும் குழம்பு, கூட்டு, மசியல், பொரியல், ரசம், பருப்பு அனைத்தையும் சேர்த்துக் கொதிக்க வைத்து இறக்கியது) சாப்பிடுவோம்.

இனிதே முடியும் தை ஒன்று இரவு!

'பால் பொங்கிருச்சா..?!’

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு