Published:Updated:

அ முதல் ஃ வரை - 6

டீச்சர் ஆகலாம் வாங்க!சா.வடிவரசு, படங்கள்: பா.காளிமுத்து, செ.சிவபாலன்

அ முதல் ஃ வரை - 6

டீச்சர் ஆகலாம் வாங்க!சா.வடிவரசு, படங்கள்: பா.காளிமுத்து, செ.சிவபாலன்

Published:Updated:
அ முதல் ஃ வரை - 6

 ருத்துவர்கள் தினத்தைவிட, ஆசிரியர்கள் தினத்தைதான் இந்தியர்கள் அதிகம் அறிவார்கள். அந்த மரியாதைக்குக் காரணம்... ஆசிரியப் பணி என்பது வேலை மட்டுமல்ல, எதிர்கால சமுதாயத்தின் அடிப்படையை பலமாக்கும் முக்கியமான பொறுப்பும் கொண்டது என்பதுதான்!

''சென்ற தலைமுறை மாணவர்கள் போல் அல்லாமல், இன்றைய மாணவர்கள் கொஞ்சம் சிக்கலானவர்கள். கண்டிப்பான ஆசிரியர்கள் மீது அவர்களுக்கு பயம் ஏற்படுவதில்லை. மாறாக, வெறுப்புதான் ஏற்படுகிறது. எனவே, கண்டிப்பை ஆசிரியர்கள் கைவிட்டு, கனிவாலே சாதிக்க வேண்டும்'' என்கிறார், ஆசிரியர் பணியில் சிறப்புடன் செயல்படுவதற்காக, சென்ற ஆண்டு சி.பி.எஸ்.இ. (Central Board of Secondary Education) அமைப்பின் தேசிய விருதைப் பெற்றிருக்கும் பத்மினி ஸ்ரீராமன்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

##~##

''மாணவர்களுக்கு இருக்கும் கட்டுப்பாடுகளைத் தளர்த்தி, சுதந்திர சுயசிந்தனையால் அவர்கள் வளர ஒவ்வொரு ஆசிரியரும் பாதையமைத்துக் கொடுக்க வேண்டும். கட்டுப்பாட்டுக்காக ஆசிரியர்களின் கையில் பட்டத்துக்கான நூல் இருக்க வேண்டுமே தவிர... அதுவே, அவர்களுடைய விண்ணோட்டத்துக்குத் தடையாக என் றைக்குமே அமைந்து விடக்கூடாது'' என்கிறார், திருவள்ளூர் மாவட்டம், தேவலம்பாபுரம், அரசு நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியை அமுதா.

நாளைய நற்சமுதாயத்துக்கான விதையைத் தூவக்கூடிய, புனிதமான ஆசிரியர் பணியைத் தேர்ந்தெடுப்பது எப்படி... அதற்கான பயிற்சிகள் என்னென்ன... வாய்ப்புகள் எந்த அளவுக்கு இருக்கின்றன... என்பது பற்றியெல்லாம் பார்ப்போமா!

தகுதிப் படிப்புகள்!

ஆசிரியர் பணிக்கான தகுதிப் படிப்புகள் பற்றியும், அதை எப்படிஎல்லாம் பெற வேண்டும் என்பது பற்றியும், தன்னுடைய அனுபவங்களிலிருந்தே எடுத்து வைக்கிறார் 'சென்னை, ஸ்டெல்லா மாட்டியூடீனா' (Chennai Stella Matutina) கல்வியியல் கல்லூரி முதல்வர் வல்லபி.

''ஆசிரியர் பணிக்கு வர விரும்புகிறவர்கள், அதற்கென உள்ள டி.டீ.எட், பி.எட், எம்.எட் படிப்புகளைத் தேர்வுசெய்து, படிக்க வேண்டும். இந்தப் படிப்புகள் மூலமாக, ஆசிரியருக்குத் தேவையான அனைத்துவிதமான பயிற்சிகளும் கற்றுத்தரப்படுகின்றன.

அ முதல் ஃ வரை - 6

டி.டீ.எட் (டிப்ளமோ இன் டீச்சர் எஜுகேஷன்): இதற்கு, ப்ளஸ் டூ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இரண்டாண்டு படிப்பான இதை முடித்தவர்கள், பள்ளிகளில் எல்.கே.ஜி. முதல் 5-ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு வகுப்பு எடுக்கத் தகுதியுடையவர்கள்.

பி.எட் (பேச்சுலர் ஆஃப் எஜுகேஷன்): இதற்கு, இளங்கலை பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். ஓராண்டு பட்டப்படிப்பான இதில் 40 நாட்கள் ஒரு பள்ளியில் பயிற்சி ஆசிரியர், 5 நாட்கள் சிறப்பு முகாம் போன்றவை கட்டாயம். இந்தப் படிப்பை முடித்தவர்கள் 6 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பாடம் நடத்தத் தகுதிஉடையவர்கள்.

எம்.எட் (மாஸ்டர் ஆஃப் எஜுகேஷன்): இதற்கு, பி.எட் முடித்திருக்க வேண்டும். இந்தப் படிப்பானது பணியில் பதவி உயர்வு பெறுவதற்கும், கல்வியியல் கல்லூரிகளில் ஆசிரியராக பணியில் சேரவும் உதவியாக இருக்கும். இதை முடித்தவர்கள் கல்வியியல் பாடத்தில் எம்.ஃபில் மற்றும் பிஹெச்.டி பாடங்களைப் படிக்கலாம். இது அரசு மற்றும் தனியார் கல்வியியல் கல்லூரிகளில் பணியில் சேர்வதற்கும் உதவியாக இருக்கும்.

தமிழ்நாடு, ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் கீழ்... சென்னை, கோவை, வேலூர், நாமக்கல், ஒரத்தநாடு, புதுக்கோட்டை உள்ளிட்ட இடங்களில் அரசு கல்வியியல் கல்லூரிகளும், சென்னை உள்ளிட்ட இடங்களில் அரசு உதவிபெறும் கல்வியியல் கல்லூரிகளும் செயல்பட்டு வருகின்றன. இதில் சேர, ஆண்டுதோறும் ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு கலந்தாய்வு நடத்தப்படுகிறது. மாணவர்கள் பெறும் இளங்கலை பட்டப்படிப்புக்கான மதிப்பெண் மற்றும் இடஒதுக்கீட்டின்படி தேர்வு செய்யப்படுகிறார்கள். இதில் தேர்வு செய்யப்படுகிறவர்கள் அரசு கல்லூரியில் இலவசமாகவும், அரசு உதவிபெறும் கல்லூரிகளில் குறைந்த கட்டணத்திலும் பி.எட் மற்றும் எம்.எட் பட்டங்களைப் படிக்கலாம்'' என்ற வல்லபி, பயிற்சிகள் பற்றி பேசத் தொடங்கினார்.

அ முதல் ஃ வரை - 6

பயிற்சிகள்!

''வருங்கால சமுதாயத்தை உருவாக்கக்கூடிய முக்கியப் பொறுப்பு ஆசிரியர்களிடத்தில் இருக்கிறது. அதை அவர்கள் கையில் எடுத்துக்கொண்டு எப்படியெல்லாம் மாணவர்களை உருவாக்க வேண்டும் என்பது பற்றிய பயிற்சிகள்தான், மேற்சொன்ன படிப்புகளின் கரு. பின்னர் அவர்களை வகுப்பு எடுக்கச் சொல்லி அதில் உள்ள நிறை குறைகளை ஒவ்வொன்றாக சுட்டிக்காட்டி அவர்களை தரமுள்ள ஆசிரியர்களாக மெருகேற்றுவோம். அடுத்ததாக, அவர்களை அருகில் உள்ள பள்ளிக்கு அனுப்பி, 40 நாட்கள் பயிற்சி ஆசிரியராக பணிபுரியச் சொல்வோம். அங்கே பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் அவர்களுக்கு உதவியாக இருந்து அவர்களை வழிநடத்துவார்கள். நாங்களும் அடிக்கடி மேற்பார்வையிடுவோம். இறுதியாக அவர்களுக்கு எழுத்து மற்றும் செய்முறைத் தேர்வுகள் நடத்தி அதற்கான மதிப்பெண்களை வழங்குவோம். ஓர் ஆசிரியர், எப்படியெல்லாம் இருக்க வேண்டுமோ அப்படி அவர்களை மாற்றுவதே கல்வியியல் கல்லூரியின் முக்கிய நோக்கம்'' என்றவர், இது பெண்களுக்கு எந்த அளவுக்குப் பொருத்தமான வேலை என்பது பற்றி தொடர்ந்தார்...

அ முதல் ஃ வரை - 6

பெண்களுக்கேயான துறை!

''ஆண்களைவிட, பெண்களுக்கு ஏற்ற சரியான துறை என்றே சொல்லலாம். இன்றைக்கும், என்றைக்கும் ஆண்களைக் காட்டிலும் பெண்கள்தான் அதிகமானோர் ஆசிரியர் பணியை விரும்புகிறார்கள். அதற்கு முக்கியக் காரணம், ஆசிரியப் பணி என்று வரும்போது, பெண்களால் இந்த வேலையையும் தங்கள் குடும்பத்தையும் சரிவர பேலன்ஸ் செய்ய முடிவதுதான். மேலும், இப்பணியின் இயல்பும் பெண்களுக்கானதே. மாணவர்களிடம் அன்பாகவும், அக்கறையாகவும் பழகி அவர்களை தங்கள் பிள்ளைகள் போல் வழிநடத்தி கல்வி கற்பிப்பதை, ஆண்களைவிட பெண்களே சிறப்பாகச் செய்வார்கள். அதனால் இன்றைக்கு அதிகமான பள்ளிகளும் பெண்களையே பணிக்கு எடுக்க விரும்புகிறார்கள். அதேசமயம், ஆண்களும் அதிக அளவில் ஆசிரியர் பணியில் சேர்வதற்கான முயற்சிகளை எடுக்கிறார்கள்'' என்றார் வல்லபி.

வேலைவாய்ப்புகள்!

இன்றைக்கு கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுவதால், ஆசிரியர் பயிற்சி முடித்தவர்களுக்கு அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் வாய்ப்புகள் காத்திருக்கவே செய்கின்றன. அரசுப் பள்ளியில் வேலையில் சேர மாநில அரசு 'டி.இ.டி’ என்கிற ஆசிரியர் தகுதித் தேர்வையும், மத்திய அரசு 'சி.டி.இ.டி’ என்கிற மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வையும் நடத்துகின்றன. தமிழக அரசு, 'டி.ஆர்.பி.' (டீச்சர்ஸ் ரெக்ரூட்மென்ட் போர்டு) எனும் அமைப்பு மூலமாக தேர்வுகளை நடத்தியும் ஆசிரியர்களைப் பணிக்குத் தேர்வுசெய்து வருகிறது. தனியார் பள்ளிகளில் நேரடியாக தங்களது திறமைகளை முன்வைத்துப் பணியில் சேரலாம். சொந்தமாக டியூஷன் சென்டர் தொடங்கலாம், ஹோம் டியூஷனும் எடுக்கலாம். கல்வியியல் பாடத்தில் எம்.எட், எம்.ஃபில், பிஹெச்.டி போன்ற உயர் படிப்புகளை முடித்தவர்கள், அரசு மற்றும் தனியார் கல்வியியல் கல்லூரிகளில் பணியில் சேரலாம். அத்தோடு வெளிநாடுகளிலும் வாய்ப்புகள் இருக்கவே செய்கின்றன. அதற்காக 'இங்கிலீஷ் லாங்குவேஜ் அசஸ்மென்ட் டெஸ்ட்’ போன்ற தேர்வுகள், பல்வேறு கல்வி நிறுவனங்களால் பரவலாக நடத்தப்படுகின்றன. இந்தத் தேர்வை எழுதுவதன் மூலம், வெளிநாட்டு வேலைவாய்ப்புகளைப் பெறலாம்.  

அ முதல் ஃ வரை - 6

சவால்கள்!

'ஆசிரியர் அடித்ததால் பள்ளி மாணவி தற்கொலை’, 'மாணவியிடம் தவறாக நடந்துகொண்ட ஆசிரியர் கைது’, 'தவறு செய்த மாணவனை கண்டித்த ஆசிரியை, கத்தியால் குத்திக் கொலை’ இப்படியெல்லாம் அடிக்கடி வரும் பகீர் செய்திகள், ஆசிரியர் சமூகத்துக்கு அதிர்ச்சி தந்தபடிதான் இருக்கின்றன. 'ஆசிரியர்கள் மாணவர்களைத் திட்டக் கூடாது, அடிக்கக் கூடாது’ என்பதற்காகவே சட்டங்களும் போடப்பட்டுள்ளன. சில ஆசிரியர்கள் செய்யும் தவறுகளாலும், இப்படிப்பட்ட சட்டங்களாலும்... ஆசிரியர்கள் மீதே சமூகத்தில் ஒரு வெறுப்பு உணர்வு ஏற்பட்டுள்ளது. இதைத் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு, கண்டிப்புடன் இருக்கும் ஆசிரியர்கள் மீதும், பிடிக்காத ஆசிரியர்கள் மீதும் வேண்டுமென்றே சில மாணவர்கள் பழி போடவும் வாய்ப்பிருக்கிறது.

சில தனியார் பள்ளிகளில், '100 சதவிகிதம் மாணவர்களைத் தேர்ச்சி பெற வைக்கவேண்டும், இல்லையென்றால் உங்களை வேலையை விட்டே நீக்கிவிடுவோம்’ போன்ற கட்டுப்பாடுகளையும் கடைபிடித்துவருகிறார்கள். இவையெல்லாம் ஆசிரியப் பணி ஏற்க இருப்பவர்களின் முன் இருக்கும் கடுஞ்சவால்களே!

இவற்றை எதிர்கொள்வதில்தான் இருக்கிறது ஓர் ஆசிரியரின் வெற்றியும்... வருங்கால சமுதாயத்தின் வெற்றியும்!  

அறிவோம்...

பதவி உயர்வு..!

சிரியர் பணியைப் பொறுத்தவரையில், மற்ற அரசு வேலைகளைப் போலவே பதவி உயர்வுகள் வழங்கப்படுகின்றன. உதாரணமாக, ஒருவர் ஆசிரியராக அரசுப் பள்ளியில் சேர்கிறார் என்றால், பணிபுரியும் இடம், சூழல், பணி அனுபவம் போன்றவற்றைக் கருத்தில் கொண்டு பதவி உயர்வு வழங்கப்படுகிறது. அதற்கேற்ற சம்பள உயர்வும் உண்டு. இது, முழுக்க கிரேடு முறைப்படியும், பதவி உயர்வு அடிப்படையிலும் வழங்கப்படுகிறது. ஒருவர் தொடர்ந்து பதவி உயர்வே பெறாமல், ஒரே பள்ளியில் பணிபுரிந்தாலும் அவரது கிரேடானது குறிப்பிட்ட ஆண்டுக்கு ஒருமுறை உயர்த்தப்பட்டு, அதற்கேற்றவாறு சம்பள உயர்வு வழங்கப்படும்.

தொடர்ந்து ஒரே இடத்தில் பணிபுரிந்தால், சீக்கிரத்தில் அவருக்கு பதவி உயர்வு கிடைத்துவிடும். வேறு மாவட்டங்களுக்கு பணிமாற்றம் பெற்று மாறிக்கொண்டே இருந்தால், சீக்கிரத்தில் பதவி உயர்வு கிடைக்காது. உதாரணமாக, இன்றைக்கு கிருஷ்ணகிரி போன்ற மாவட்டங்களில் அதிகமானோர் பணிபுரிய விரும்புவது கிடையாது. காரணம், அங்கே அவர்களுக்கு போதிய வசதி வாய்ப்புகள் குறைவாக இருப்பதுதான். அதனால், இங்கே தொடர்ந்து ஆறு ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்தாலே, பள்ளியின் தலைமை ஆசிரியராகக்கூட பதவி உயர்வு பெற வாய்ப்பிருக்கிறது. இதுவே சென்னை, திருவள்ளூர் போன்ற மாவட்டங்களில் பணிபுரிபவர்கள் அவ்வளவு சீக்கிரத்தில் பதவி உயர்வினை பெற்றுவிட முடியாது. காரணம்... வேண்டிய வசதி வாய்ப்புகள் அதிகளவில் கொட்டிக்கிடப்பதால், பணிமாற்றம் பெற்றுக்கொண்டு வேறு மாவட்டங்களுக்கு பெரும்பாலும் செல்வது கிடையாது என்பதுதான். அதனால் இருபது ஆண்டுகளைக் கடந்தும் பதவி உயர்வு பெறாமல் பணிபுரிபவர்களும் உண்டு.

அ முதல் ஃ வரை - 6

தனியார் பள்ளி வேலையா... உஷார் உஷார்..!

ரசு பள்ளிகளைப் பொறுத்தவரை ஆசிரியர்களுக்கு பெரிதாக பிரச்னைகள் இருக்காது. ஆனால், தனியார் பள்ளிகள் என்று வரும்போது ஏகப்பட்ட பிரச்னைகளை எதிர்கொள்ள வேண்டிவரும். உதாரணமாக இன்றைக்கு எத்தனையோ தனியார் பள்ளிகள், குறைந்த சம்பளத்துக்கு ஆசிரியர்களை வேலைக்கு எடுக்கின்றனர். அங்கே அவர்கள் அடிமைகளைப் போல் நடத்தப்படுகிறார்கள். சில பள்ளிகள் ஆசிரியர்களின் சான்றிதழ்களை வாங்கி வைத்துக்கொண்டு 'இத்தனை ஆண்டுகள் கட்டாயம் பணிபுரிய வேண்டும்’ என்று ஒப்பந்தப் படிவத்தில் கையப்பம் வாங்கிக்கொள்கின்றன. இதை வைத்தே சரிவர சம்பளம் கொடுக்காமல், அடிமைகளாக நடத்துகின்றன. சில பள்ளிகள் நல்ல சம்பளத்தைக் கொடுத்தாலும், ஆசிரியர் வேலையைத் தாண்டி மற்ற வேலைகளையும் வாங்குகின்றன. சில பள்ளிகளில் 'மாணவர்களை நல்ல மதிப்பெண் வாங்க வைக்க வேண்டும், இல்லையென்றால் உங்களது சம்பளத்தைப் பிடித்துக்கொள்வோம், வேலையை விட்டு நீக்கிவிடுவோம்’ என்று மிரட்டியும் வருகின்றன. இதையெல்லாம் கருத்தில் கொண்டு, தனியார் பள்ளிகளைத் தேர்வு செய்வது நல்லது.

ப்ளஸ்: பெண்களுக்கு ஏற்ற வேலை, 8 மணிநேரம் மட்டுமே வேலை, அதிக விடுமுறை, மாணவர்களின் வெற்றிக்கு உறுதுணையாக இருப்பது, அறிவுலகத்தில் எப்போதும் அப்டேட்டடாக இருப்பது, இளம் தலைமுறையினருடன் பேசிப் பழகும் வாய்ப்பு, நல்ல சம்பளம், பகுதி நேரமாக டியூஷன் எடுத்து சம்பாதிக்கும் வாய்ப்பு, தனியார் பள்ளியில் பணிபுரிந்தால் பிள்ளைகளுக்கு கல்விச் சலுகை, அரசுப் பள்ளியில் பணிபுரிபவர்களுக்கு வங்கிக் கடன், போனஸ், மருத்துவ விடுமுறைகள் என்று இன்னும் பல!  

மைனஸ்: தொடர்ச்சியாக பல மணி நேரம் நின்றுகொண்டு பாடம் நடத்துவது, தொண்டை சேதமுற சத்தமாகப் பாடம் எடுப்பது போன்றவற்றால் உடல்ரீதியான பிரச்னைகள் வர வாய்ப்பு, வன்முறையில் ஈடுபடும் மாணவர்களை எதிர்கொள்வது, மாணவர்கள் செய்யும் அதீத சேட்டைகள்... இன்னும் பல!

அ முதல் ஃ வரை - 6

டீச்சிங் டிப்ஸ்!

'ஆசிரியர் என்பவர் எப்படி இருக்க வேண்டும்’ என்பதற்கு விருதுபெற்ற ஆசிரியை   பத்மினி ஸ்ரீராமன் தரும் டிப்ஸ்.

• ஆசிரியரின் பேச்சு, நடவடிக்கை, உடை, உச்சரிப்பு என ஒவ்வொன்றும் மாணவர்களை பாதிக்கக் கூடியவை. வீட்டில் என்ன பிரச்னையாக இருந்தாலும், வகுப்பறைக்கு வெளியிலேயே வைத்துவிட்டு, மாணவர்களுக்கு மகிழ்ச்சியோடு பாடங்களைக் கற்பிக்க வேண்டும். தொடர்ந்து மாணவர்களது அறிவுக் கூர்மையை புரிந்துகொண்டு அதற்கு ஏற்றாற்போல் பாடங்களை கற்றுத்தர வேண்டும்.

•  சில ஆசிரியர்கள் எப்போதும் மாணவர்களிடம் கோபமாகவே இருப்பார்கள். அவர்களைப் பார்த்தாலே மாணவர்கள் பயப்படுவார்கள். சில ஆசிரியர்கள் எப்போதும் எரிந்து விழுவார்கள். இதையெல்லாம் கட்டாயம் விட்டொழிக்க வேண்டும்.

•  தனக்குத் தெரிந்தது போதும் என்று இருக்காமல், பல தரப்பட்ட பயிற்சிகளை வகுப்பறையில் அளிப்பவராக, தன்னை மேலும் மேலும் பட்டைதீட்டிக் கொள்பவராக இருக்கவேண்டும்.

•  'இன்றைய வகுப்பு வெற்றிகரமாக இருந்ததா? எனது மாணவர்கள் கற்றது என்ன? வகுப்பு நேரத்தை உபயோகமாக செலவழித்தேனா?' என்பது போன்ற கேள்விகளை, ஆசிரியர்கள் தினம்தோறும் தங்களிடம் கேட்டுக்கொள்ள வேண்டும். இதில் அவருக்கு திருப்தியான பதிலை, அவரே கண்டால்தான், பணியைச் செவ்வனே செய்ததாக அர்த்தம்.

ஆசிரியர் தினம்..!

''நான் டாக்டர் ஆகவில்லை... ஆனால், டாக்டர்களை உருவாக்குகிறேன்!''

- ஆசிரியராகப் பணியாற்றி, தனது சிந்தனையாலும், ஒழுக்கத்தினாலும் நாட்டின் மிக உயர்ந்த பதவியான குடியரசுத் தலைவர் பதவியை வகித்து, நாட்டுக்கும் ஆசிரியர் பணிக்கும் பெருமைகள் சேர்த்தவர் டாக்டர் ராதாகிருஷ்ணன். அதன் காரணமாகவே அவருடைய பிறந்த நாளான செப்டம்பர் 5-ம் தேதியை ஆசிரியர் தினமாக கொண்டாடி வருகிறோம். அதோடு தகுதியான ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அந்நாளில் நல்லாசிரியர்களுக்கான விருதுகள் வழங்கப்படுகின்றன.

ஆசிரியர் அமைப்புகள்..!

அரசு பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கென தனியாக அமைப்பு தொடங்கப்பட்டு, அதன்மூலமாக ஆசிரியர்களுக்கு வேண்டிய உரிமைகள், சலுகைகள் போன்றவை தொடர்ந்து அரசிடம் இருந்து பெறப்படுகின்றன. அதனால் அரசு பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு ஏற்படும் பிரச்னைகள் எதுவாக இருந்தாலும், இந்த அமைப்பின் மூலமாக தீர்க்கப்படுகின்றன.