Published:Updated:

“மக்களுக்காகவாவது நீண்ட காலம் இருந்திருக்கலாம்...”

- சாவித்திரி நம்மாழ்வார்கு.ராமகிருஷ்ணன், படங்கள்: கே.குணசீலன்

“மக்களுக்காகவாவது நீண்ட காலம் இருந்திருக்கலாம்...”

- சாவித்திரி நம்மாழ்வார்கு.ராமகிருஷ்ணன், படங்கள்: கே.குணசீலன்

Published:Updated:
##~##

''வயசான தம்பதிகளை பாக்கறப்பல்லாம், என் மனசுக்கு ஆதங்கமா இருக்கும். 'நமக்கு இப்படி ஒரு கொடுப்பினை இல்லையே... கடைசி காலத்துலகூட, அவர் என்கூட இல்லாம, ஊர் ஊரா அலைஞ்சுட்டு இருக்காரே... சாப்பிட்டாரா, தூங்கினாரானுகூட தெரியலை’னு என் மனசு கிடந்து தவிக்கும். ஆனா, அவர் இறந்தப்போ அஞ்சலி செலுத்தறதுக்காக கூட்டம் கூட்டமா மக்கள் திரண்டு வந்ததும்... ஆண், பெண், வயசானவங்க, இளைஞர்கள்னு வித்தியாசம் இல்லாம எல்லோரும் பேரிழப்பை சொல்லி கதறினதும்... 'இவ்வளவு பேர், இந்தளவுக்கு இவர் மேல நம்பிக்கை வெச்சு, உயிரா இருக்கும்போது, இவரால எப்படி வீட்ல இருந்திருக்க முடியும்'கிற உண்மை எனக்கு புரிஞ்சுது!''

- பெரும் துயரத்தில் உறைந்திருக்கும் நிலையிலும், தன்னுடைய நியாயமான எதிர்பார்ப்புகளைக்கூட, மறு பரிசீலனை செய்து, உயர்ந்து நிற்கிறார் சாவித்திரி அம்மாள்; இந்த மண்ணுக்கும் மக்களுக்கும் தன்னை முழுமையாக அர்ப்பணித்து, பசுமைப் போராளியாக வாழ்ந்து மறைந்துள்ள 'இயற்கை வேளாண் விஞ்ஞானி' கோ.நம்மாழ்வாரின் மனைவி!

''ரசாயன உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகள் பயன்படுத்தி விளைவிக்கப்படும் உணவுகள் அனைத்திலுமே நஞ்சு கலந்திருக்கிறது. இந்த உணவுகளை உண்ணுவதால்தான் மக்கள் நோயாளிகளாகி, வாழ்க்கையை சீக்கிரம் சீக்கிரம் இழக்கிறார்கள்'' என கடந்த நாற்பது ஆண்டுகளாகவே உரத்துச் சொல்லிக் கொண்டிருந்தவர், நம்மாழ்வார். இயற்கை விவசாயத்தை வளர்த்தெடுக்க, தன்னையே கொடையாக வழங்கியதோடு... இயற்கை வளங்களை பாதுகாக்க கொட்டும் பனியிலும், சுட்டெரிக்கும் வெயிலிலும், கனமழையிலும் தொடர்ச்சியாக பல போராட்டங்களை நடத்திக் கொண்டிருந்த நம்மாழ்வார், டிசம்பர் 30 அன்று போராட்டக் களத்தினூடே... இயற்கையுடன் கலந்தார்.

“மக்களுக்காகவாவது நீண்ட காலம் இருந்திருக்கலாம்...”

கரூர் மாவட்டம், கடவூரில் நம்மாழ்வார் உருவாக்கிய வானகம் வேளாண் பண்ணையில்தான், அவருடைய உடல் அடக்கம் செய்யப்பட்டது. அப்போது, மனைவி சாவித்திரி அம்மாளும், மகள் மீனாவும் அருகிலிருந்தார்கள். 'இறுதி நிகழ்வுகள் நடத்தப்படும் இடத்துக்கு பெண்கள் வரக்கூடாது' என காலகாலமாக கடைபிடிக்கப்பட்டு வந்த தடைகளை உடைத்தெறிந்தார்கள். கணவனை இழந்த பெண்களுக்கு வழக்கமாக செய்யப்படும் சம்பிரதாயங்களையும் ஏற்க மறுத்துவிட்டார் சாவித்திரி அம்மாள்.

''இது நம்மாழ்வாருக்கு கொஞ்சம்கூட புடிக்காது. 'பொண்டாட்டி செத்தா, புருசனுக்கு ரெண்டாம் கல்யாணம் பண்ணி வெக்கறீங்க. ஆனா, புருசன் செத்தா, பொண்டாட்டியை அலங்கோலப்படுத்தறீங்க. இது எந்த விதத்துல நியாயம்?’னு அவர் பலமுறை கொந்தளிச்சிப் பேசியிருக்கார். இது, அவரோட கொள்கைக்கு எதிரானது'' என கோப வார்த்தைகளை அந்த இடத்திலேயே சாட்டையாகச் சுழற்றினார், சாவித்திரி அம்மாள். வழக்கமாக 16-ம் நாள் நடத்தப்படும் கருமாதி உள்ளிட்ட சடங்குக்கும் தடைவிதித்து விட்டார்.

தஞ்சாவூர், தென்றல் நகரில் உள்ள வீட்டில் தன் மகளோடு வசிக்கும் சாவித்திரி அம்மாளை சந்தித்தோம்.

“மக்களுக்காகவாவது நீண்ட காலம் இருந்திருக்கலாம்...”

''64-ம் வருஷத்துலயே தாலி மறுப்பு கல்யாணம் செஞ்சுக்கிட்டவங்க நாங்க. தாலி கட்டுறதுங்கறது, பெண்களை இழிவுபடுத்துற செயல்னு அவர் சொல்லுவாரு. 'எனக்குக் கல்யாணம் ஆயிடுச்சுங்கறதை எப்படிதான் மத்தவங்களுக்கு தெரியப்படுத்துறது?’னு நான் கேட்டப்ப, 'எனக்கு கல்யாணம் ஆயிடுச்சுங்கிறதை தெரியப்படுத்த, நானும் ஒரு தாலியை மாட்டிக்கட்டுமா?’னு சிரிச்சுக்கிட்டே சொல்லுவாரு. என் மனசு நோகுற மாதிரி ஒரு தடவைகூட கோபமா பேசினதே இல்லை. 'வாடி, போடி'ங்கற வார்த்தையைக்கூட பயன்படுத்தினது இல்லை. சிக்கனமா செலவு செஞ்சா, பணம் அதிகமா தேவைப்படாது. பணத்தாசையும் வராதுனு சொல்லுவாரு. அதேமாதிரி வாழ்ந்தும் காட்டினாரு. கல்யாணம் ஆன புதுசுல, 'காதலிக்க நேரமில்லை’ங்கற ஒரே ஒரு சினிமாவுக்குதான் நாங்க போயிருக்கோம். அதோடு சரி.

அவருக்குக் கோவில்பட்டியில அரசாங்க வேலை கிடைச்சதும், அஞ்சு வருஷம் அங்க இருந்தோம். மாசம் 400 ரூபாய் சம்பளம். பெண்கள்தான் நல்லா நிர்வாகம் செய்வாங்கனு சொல்லி, பணத்தை என்கிட்ட கொடுத்துடுவாரு. தன் செலவுக்கு மாசத்துக்கு 15 ரூபாய் மட்டும்தான் வாங்கிக்குவாரு. அதையும் முழுசா செலவு செய்யத் தெரியாம, பாதியை திருப்பி கொடுத்துடுவாரு.

தான் பார்த்துக்கிட்டு இருந்த அரசாங்க வேலையால், விவசாயிகளுக்கு எந்தப் பலனுமே இல்லைனு சொல்லி, ராஜினாமா செஞ்சுட்டாரு. பிறகு, திருநெல்வேலி பக்கத்துல தொண்டு நிறுவனத்துல வேலை பார்த்தாரு. ஏ.சி., வாட்டர் ஹீட்டர்னு எல்லா வசதியுமே செஞ்சு கொடுத்திருந்தாங்க. கை நிறைய சம்பளமும் வாங்கிக்கிட்டு இருந்தாரு. ஆனாலும் அங்க நடந்த சில செயல்கள், தன் கொள்கைக்கு விரோதமா இருக்குனு அந்த வேலையையும் விட்டுட்டாரு. அவரோட விருப்பத்துக்கு நான் எப்பவுமே குறுக்க நின்னது இல்லை.

கடந்த 10, 15 ஆண்டுகள்ல, ஒருநாள்கூட முழுசா வீட்டுல இருந்தது இல்லை. நான் அவரை வீட்ல இருக்கச் சொல்லி கட்டுப்படுத்தவும் மாட்டேன். அவர் மனசுக்கு எது சரினு படுதோ செய்யட்டும்னு தெளிவான புரிதலோடு இருந்தேன். தஞ்சாவூர் பக்கம் ஏதாவது நிகழ்ச்சிகளுக்கோ, போராட்டங்களுக்கோ வந்தா, வீட்டுப் பக்கம் எட்டிப்பார்த்துட்டு போவாரு. அவ்வளவுதான். 'என் சாவித்திரி பிடிவாதம் பிடிச்சுருந்தா, இந்தளவுக்கு வெளியில வந்திருக்க முடியாது’னு என்னைப் பத்தி அவர், பெரு மையா வெளியில பேசுவாருனு சொல்லுவாங்க. 'என் மனைவிதான் என்னை ரொம்ப சரியா விமர்சனம் செய்வாங்க’னும் சொல்லியிருக்காரு.

“மக்களுக்காகவாவது நீண்ட காலம் இருந்திருக்கலாம்...”

டி.வி, பத்திரிகைகள்ல அவரைப் பார்க்குறப்ப, எனக்கு ரொம்பப் பெருமையா இருக்கும். எங்களுக்காக இல்லைனாலும், இந்த மக்களுக்கு நல்லது செய்றதுக்காகவாவது நீண்ட காலம் உயிரோட இருந்திருக்கணும். ஆனா... தவிக்க விட்டுட்டுப் போயிட்டாரு. அடக்கம் செய்றது எங்க வழக்கம் இல்லை. ஆனாலும், 'எதையும் நெருப்பு வச்சு கொளுத்தக்கூடாது. மண்ணுக்கும் சுற்றுச்சூழலுக்கும் கேடு’ என்பது அவரோட கொள்கை அதனாலேயே, அடக்கம் செஞ்சுட்டோம். அப்ப சிலர் உப்பைக் கொட்டினாங்க. 'உப்புனாலதான் மண்ணு கெட்டுப்போகுதுனு சொன்னவரு. அவரை அடக்கம் செய்றப்ப உப்பைக் கொட்டலாமா..?’னு கொந்தளிச்சுப் போயிட்டேன். வெறும்

“மக்களுக்காகவாவது நீண்ட காலம் இருந்திருக்கலாம்...”

மண்ணு போட்டுதான் புதைக்கணும்கிற அவரோட விருப்பப்படிதான் எல்லாமே நடக்கணும்னு நான் உறுதியா இருந்தேன். அவரை அடக்கம் செஞ்ச இடத்துல அவர் ஆசைப்பட்ட மாதிரியே வேப்பங்கன்னு நட்டு வெச்சுட்டு வந்திருக்கோம்...''

- பேச்சை தொடர முடியாமல், வார்த்தை தடைபடுகிறது சாவித்திரி அம்மாளுக்கு.

மகள் மீனா, ''அவர் உச்சரிக்கும் ஒவ்வொரு வார்த்தையிலும் அன்பு இழையோடும். 'வாங்க மகளே!’னு எப்பவும் ரொம்ப மரியாதையாதான் என்னை கூப்பிடுவாரு. 'அப்பா... தோட்டத்துல உள்ள மாமரம் காய்க்கவே மாட்டேங்குது’னு நான் சொன்னேன்னா, உடனே அப்பா அந்த மரத்துக்கிட்ட போய், 'சீக்கிரம் காய்ச்சிடு... இல்லைனா உன்னை மீனா வெட்டிப் போட்டு டும்!’னு சிரிச்சுக்கிட்டே சொல்லுவாரு. அவரு பேச்சுக்கு மதிப்பு கொடுக்கற மாதிரி, அடுத்த சீஸன்ல மரம் காய்க்க ஆரம்பிக்கும்.

சட்டை போடுறதை அப்பா நிறுத்தினதும், அம்மா ரொம்பவே கவலைப்பட்டாங்க. மழை, பனி குளிரையெல்லாம் எப்படி உடம்பு தாங்கும்னு என்கிட்ட புலம்புவாங்க. 'அப்பாவும் காந்தி மாதிரிதான்!’னு சொல்லுவேன்!''

- மீனாவின் கண்களில் துளிர்த்த நீரில் துயரத்துடன் பெருமிதமும் கலந்திருந்தது!