Published:Updated:

இசை மழை பொழியும் தேஜஸ்வினி

ஜே.வி.நாதன்

இசை மழை பொழியும் தேஜஸ்வினி

ஜே.வி.நாதன்

Published:Updated:
##~##

பேண்ட் வாத்தியக் குழுவினர், சீருடை அணிந்து, பியூகிள், டிரம்பெட் வாத்தியங்களை இசைத்தபடி, ராணுவ வீரர்கள் போல வீதியில் நடப்பதைப் பார்க்கும்போது, பரவசமாக இருக்கும். ரயிலை எத்தனை முறை பார்த்தாலும் திகட்டாது என்பது போல, இந்த இசைக்குழுவையும் பார்த்துக் கொண்டே இருக்கலாம். அப்படியோர் ஈர்ப்பு கொண்டது பேண்ட் வாத்தியம். அப்படிப்பட்ட இசைக்குழுவை, முழுக்க முழுக்க பெண்களே கையில் எடுத்தால்... கூடுதல் அழகுதானே!

மொத்தம் 40 பெண்களுடன் இப்படி கேரளாவையே தங்கள் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்துக் கொண்டிருக்கிறது 'தேஜஸ்வினி பேண்ட்’ இசைக்குழு! கண்ணூர் மாவட்டம், தலிப்பரம்புஅங்காடி எனும் சிற்றூரில் இசைத்துக் கொண்டிருக்கும் இந்தக் குழுவில்... 25 வயது தொடங்கி 60 வயது வரையுள்ள பெண்கள் இடம்பிடித்துள்ளனர். கூலி வேலை செய்பவர்கள், அங்கன்வாடிப் பணியாளர்கள், முனிசிபல் கவுன்சிலர்கள், கூட்டுறவு வங்கிப் பணியில் உள்ளவர்கள், இல்லத்தரசிகள் என்று எல்லாத் தரப்பினரும் இதில் அடக்கம்!

இந்த 'தேஜஸ்வினி’ இசைக்குழு தோன்றியதே... ஒரு வரலாறுதான்!

இசை மழை பொழியும் தேஜஸ்வினி

தலிப்பரம்பு அருகில் உள்ள பெக்கலம் என்ற கிராமம், 'நீதிக்காகப் போராடும் மக்களைக் கொண்ட பகுதி' என்ற வகையில், கேரளா முழுவதும் பிரசித்தி பெற்றது. இங்கே இருக்கும் 'ஜனநாயக மகளிர் குழு' எனும் மகளிர் சங்கத்தினர், மக்கள் பிரச்னைகளுக்காக... குறிப்பாக பெண்கள் பிரச்னைகளுக்காக போர்ப்பரணி பாடுவது வழக்கம். இதன் மூலம் இவர்கள் சாதித்தது ஏராளம்! இப்படிப்பட்ட சூழலில், ஊர் கண்ணே படும் அளவுக்கு ஒற்றுமையாக இருக்கும் இந்தக் குழுவினரை, 'பேண்ட் வாத்தியக் குழு'வாகவும் உருவாக்கலாம் என்று கூட்டுறவுத் துறையில் பணியாற்றும் ஷாஜூ என்பவருக்குத் தோன்றவே... கூட்டுறவு வங்கியிலேயே இரண்டு லட்ச ரூபாய் கடன்பெற்று, குழுவை உருவாக்கிவிட்டார்.

''தேஜஸ்வினி என்பது கண்ணூர் மாவட்டத்தில் ஓடும் ஒரு நதியின் பெயர். இந்த நதியின் நீர், சிவப்பு நிறத்தின் குறியீடாக, புரட்சியின் அடையாளமாகக் கருதப்படுகிறது. அதனால்தான், மக்கள் பிரச்னை களுக்காக போராடும் இந்தக் குழுவுக்கு பொருத்தமான பெயராக அதையே தேர்ந்தெடுத்தோம்!

குழுவை ஆரம்பித்து ஒரு வருடம் ஆகிறது. கண்ணூர், அப்பர் பிரைமரி பள்ளியின் விளையாட்டுத் திடலில் தினமும் இரண்டு மணி நேரம் என, இரண்டு மாதங்களுக்கு கடுமையான பயிற்சிகளை எடுத்துக் கொண்டனர் எங்கள் பெண்கள். அதை முடித்து, வீதிகளில் பேண்ட் வாத்தியம் இசைத்தபடி 'மார்ச் ஃபாஸ்ட்' செய்தபோது, ஊர்மக்கள் பிரமிப்போடு திரும்பிப் பார்த்தனர்.

இசை மழை பொழியும் தேஜஸ்வினி

என்னதான் பயிற்சியை முடித்து விட்டாலும், பெண்கள் என்பதாலும், புதியவர்கள் என்பதாலும் ஆரம்பத்தில் வாய்ப்புகள் கிடைப்பது கடினமாகவே இருந்தது. ஆனால், அதையெல்லாம் ஒரு வழியாக சமாளித்து, தொடர்ந்து 'தேஜஸ்வினி'யை மாநிலம் முழுக்கவே நினைவுபடுத்திக் கொண்டே இருந்தோம். இப்போது கேரளா முழுவதும் டூர் போகும் அளவுக்கு அழைப்புகள் குவிந்து கொண்டிருக்கின்றன. சமுதாயக் கருத்தரங்கங்கள், மாநாடுகள், திருமண நிகழ்வுகள், அரசியல் கூட்டங்கள், ஓணம், கிறிஸ்துமஸ் விழாக்கள், ஊர்வலங்கள் என இசைப் பயணம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. ஒழுங்கும் ஒற்றுமையும் கொண்டு குழுவாக இயங்கும் இந்தப் பெண்கள், கேரளாவில் ஒரு புதிய வரலாறு படைக்கிறார்கள்!'' என்கிறார் ஷாஜூ, மகிழ்ச்சியுடன்.

குழுவில் மூன்று முனிசிபல் கவுன்சிலர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். அவர்களுள் ஒருவரான சதி, ''குழு உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் பலவிதமான வேலைகளில் ஈடுபட்டிருந்தாலும், வேறுபாடுகளுக்கு இடம் கொடுக்காமல் ஒன்றுபட்டு நிற்பதுதான் குழுவின் பலம். எங்கள் 40 பேரின் குடும்பத்தாரும் எங்களுக்கு உறுதுணையாக இருப்பதால் மட்டுமே, சுதந்திரமாகச் செயல்பட்டு, இதைச் சாதிக்க முடிகிறது!'' என்றார் பெருமிதமாக!

இசை மழை பொழியும் தேஜஸ்வினி

குழுவில் உள்ள லீலா சேச்சி என்ற மூதாட்டிக்கு வயது 60. அவருக்கு ஒருசமயம் உடம்பு சரியில்லையாம். வாத்தியக் குழு 10 கிலோமீட்டர் தூரம் வாத்தியம் முழக்கியபடி நடக்க வேண்டும் என்ற நிலையில், அவரை ஓய்வு எடுத்துக்கொள்ளச் சொல்லியிருக் கிறார்கள் மற்ற பெண்கள். ஆனால், பிடிவாதமாக கிளம்பி வந்த லீலா சேச்சி, உறுதியோடு பத்து கிலோமீட்டர் தூரம் முழுக்க இசை முழக்கியபடியே வந்து, அனைவரையும் சிலிர்க்க வைத்திருக்கிறார்.

இன்னொரு கவுன்சிலரான ஆஷாலதா, ''குழுவுக்கான முதலீட்டுக்காக வங்கியில் வாங்கிய இரண்டு லட்ச ரூபாய்க் கடனை, எங்களுக்குக் கிடைத்த வருவாயைக் கொண்டு முழுவதுமாக அடைத்துவிட்டோம். இனி வருவதெல்லாம் லாபம்தான்'' என்று சாதித்த தெம்போடு சொன்னவர், அடுத்து சொன்னதுதான் ஹைலைட்! அது...

''வரப்போகும் லாபத்தைக் கொண்டு ஏழைகள், சமுதாயத்தில் பாதிக்கப்படும் பெண்கள் என்று பலருக்கும் உதவிகளைச் செய்ய முடிவெடுத்திருக்கிறோம்!''

'தேஜஸ்வினி’, ஓர் முன்னோடி!