அலைபாயும் நெஞ்சினிலே..! - 8

ஒரு பெண்ணைப் பார்த்தவுடன் அவளைப் பிடித்துவிட்டால் போதும்... அடுத்த நிமிடமே அவளிடம் தன் காதலை தெரியப்படுத்தி விடுகிறார்கள் இன்றைய காதலர்கள். ஆனால், 10, 15 ஆண்டுகளுக்கு முந்தைய காதலர்கள்..?

ராகவன், தன் காதலை செல்வியிடம் எழுத்து வடிவில் சொல்லவே கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள்; நேரில் சொல்ல, மூன்று ஆண்டுகள்; அந்தக் காதலை ஏற்றுக்கொள்ள, செல்விக்கு கூடுதலாக இன்னும் இரண்டு ஆண்டுகள்! ஆம்... 2002-ல் பார்த்துக் கொண்டவர்கள், 2009-ல்தான் காதலர்களாகிறார்கள்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

##~##

'காதலித்துவிட்டோம்' என்பதற்காக அவசரப்பட்டு திருமணம் செய்துகொள்ளாமல், இரு குடும்பங்களையும் சேர்த்து அரவணைத்து, 2011-ல் திருமணம் செய்துகொள்கிறார்கள் ராகவன் - செல்வி. 'இஸ்ரோ’வில் விஞ்ஞானியாக இருக்கும் ராகவன், தன் காதல் மனைவி செல்வியோடும், குட்டி மகளோடும் மகிழ்ச்சியோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

'பெயர் வேண்டாமே...’ என்று தம்பதி கேட்டுக்கொண்டதால், ராகவன் - செல்வி என்று அவர்களுக்குப் புதுப்பெயர்களைச் சூட்டி, தம்பதி பகிர்ந்துகொண்ட காதல் சுவாரஸ்யங்களை உங்களுக்காகத் தருகிறேன்!

10 ஆண்டுகளுக்கு முன், மிகப்பிரபலமாகப் பேசப்பட்ட தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்று, அந்த ஊரின் மிகப் பெரிய மண்டபத்தில் நடந்தது. மைக் பிடித்து, எல்லோரையும் மிரட்டியெடுத்துக் கொண்டிருந்தாள் செல்வி. அங்குதான் ராகவன், செல்வியை முதன் முறையாக பார்த்தான். நிகழ்ச்சி முடிகிறவரையிலும் பேச்சை கைத்தட்டி ஆரவரித்து ரசித்துக் கொண்டிருந்தான். அதே மேடை நிகழ்ச்சியில்தான் ராகவனின் தோழி வசந்தியும் பேசிக் கொண்டிருந்தாள். வசந்தியின் பேச்சை, பல முறை கேட்டுப் பிரமித்திருந்தாலும்... இன்று செல்வியின் பேச்சு அவனுக்குள் புதியதாக எதையோ இதயத்துக்குள் ஊற்றிக் கொண்டிருந்தது. நிகழ்ச்சி முடிந்து வீடு திரும்பியவனுக்கு இன்ப அதிர்ச்சி! அவன் அத்தனை ஆர்வமாக ரசித்த அந்த பேச்சுக்கு சொந்தக்காரி, அவன் வீட்டு வரவேற்பறையில் தேநீர் உறிஞ்சிக் கொண்டிருந்தாள்.

''நீங்க..?!''

''என்ன ராகவா... திருதிருனு முழிக்கறே.. இவ என்னோட ஜூனியர்... பேரு செல்வி. எனக்கு நல்ல தோழியும்கூட. இந்த வருஷம் தான் ஜாயின் பண்ணியிருக்கா...''

'அட... என் தோழியோட தோழியா இவ..?!’

- ஆனந்த தேனூற்று பொங்கியது ராகவனுக்குள்.

அலைபாயும் நெஞ்சினிலே..! - 8

''செல்வி... நான் சொன்னேன்ல ராகவன், இவன்தான். பி.இ., இன்ஜினீயரிங் படிச்சாலும், தமிழ் மேல இவனுக்கு தீராத காதல். கவிதை, கதை எழுதுறதுனு எப்பவும் கலக்கிட்டே இருப்பான்...''

''சும்மா இரு வசந்தி... என்ன இருந்தாலும் உங்க ரெண்டு பேரு மாதிரி என்னால மேடையில பின்னியெடுக்க முடியாதுல்ல..!''

- இப்படித்தான் ராகவனுக்கு, செல்வி அறிமுகமானாள். கூடவே ராகவன் தன் உயிர் நண்பன் குமரனையும் செல்விக்கு அறிமுகப்படுத்தினான்.

அன்றிலிருந்து ராகவன் - செல்வி - வசந்தி - குமரன் நால்வருமே நல்ல நண்பர்கள். தமிழ் சார்ந்த விழாக்களில் சந்திப்பது, புத்தகங்கள் பரிமாறிக் கொள்வது என்று நட்பு வளர ஆரம்பித்தது. ஒரு கட்டத்தில் படிப்பு முடிந்ததும் நான்கு பேருமே நான்கு திசைகளில் பயணித்தார்கள்... ஆனால், செல்விக்கும் ராகவனுக்குமான நட்பு மட்டும் கடிதங்களில் தொடர்ந்தது. பிறகு, கடிதங்களை கவிதைகளால் நிரப்பி, இலைமறை காயாக காதலையும் வெளிப்படுத்த ஆரம்பித்தான். செல்விக்கும் இது புரியாமல் இல்லை. ஆனாலும், புரியாத மாதிரியே கடிதங்களைத் தொடர்ந்தாள்.

குமரனின் சகோதரி திருமணத்துக்கு செல்வியும் வந்திருந்தாள். நீல நிறப் புடவை, தலை நிறைய மல்லிகைப்பூ, கை நிறைய கண்ணாடி வளையல்கள், உதிர்ந்து விழும் சிரிப்பு என அவள் மட்டுமே அவனுக்கு அழகாய்த் தெரிந்தாள்.

வெளிப்படையாகப் பரிமாறிக் கொள்ளாமலேயே, ராகவன் - செல்வி காதல், ஐந்தாண்டு களாகப் பயணித்துக் கொண்டிருந்த நிலையில், ஒரு நாள், வள்ளுவர் கோட்டத்தில் சந்திக்கிறார்கள். திக்கித்திக்கி காதலை செல்வியிடம் சொல்கிறான். அப்போது, அவன் வெறும் ராகவன் அல்ல... 'இஸ்ரோ’ அழைத்த நேர்காணலில் வெற்றிபெற்று, வேலையில் அமர்ந்துவிட்ட விஞ்ஞானி ராகவன். இப்போது செல்வி, தன் குடும்பச் சூழலை எடுத்துக் கூறி, தன் இயலாமையை அவனுக்குப் புரிய வைத்து விலகிச் செல்கிறாள்.

இருவரின் குடும்பமும் பொருளாதார ரீதியாக பின்தங்கி இருந்த சூழல் அது. ராகவன், தன் குடும்பத்தை மட்டும் தூக்கி நிறுத்தாமல், செல்வியையும் எம்.ஃபில் வரை படிக்க வைத்துக் கொண்டிருந்தான். 'நல்ல நண்பனாக தன்னை உயர்த்திக் கொண்டிருக்கும் ராகவனிடம், காதலுக்கு சம்மதம் சொன்னால், ஒருவேளை சாதியைக் காரணம் காட்டி இருவரின் குடும்பமும் ஒப்புக்கொள்ளாமல் போய்விடுமோ?' என்கிற பயத்தில், காதலை மனதில் ஒளித்து, அவனைப் பிரிந்தாள்.

நாட்கள் படுவேகமாகக் கடக்கின்றன. கவிதைகள் மட்டுமே அவன் டைரியில் நிறைகின்றன. ராகவன் வீட்டில் பெண் பார்க்கும் படலத்தை ஆரம்பிக்கிறார்கள். செல்வியை மறக்க முடியாத ராகவன், தன் நிலையை குமரனிடம் சொல்லியழ, 'ராகவா... செல்வி உன்னோட காதலை ஏத்துக்க முடியலைனுதான் சொன்னாளே தவிர, உன்னைப் பிடிக்கலைனு சொல்லலையே! இத்தனை வருஷம் நகர்ந்து போச்சு... காதலுக்காக நீ ஏன் கடைசியா ஒரு முறை முயற்சி பண்ணக் கூடாது..?’ என்று குமரன் கேட்க, ராகவனுக்குள் நம்பிக்கை துளிர்க்கிறது.

அலைபாயும் நெஞ்சினிலே..! - 8

மீண்டும் தன் காதலின் துயரத்தை செல்விக்கு கவிதைக் கடிதமாக எழுதுகிறான். கிட்டத்தட்ட அதேநேரத்தில், அவளும் ஒரு கடிதத்தை போஸ்ட் செய்கிறாள். இருவருமே மனதுக்குள் 'உனக்கு நூறு ஆயுசு’ என்று சொல்லிக் கொண்டே கடிதத்தைப் பிரிக்கிறார்கள். ராகவன் படிக்கப் படிக்க... ஆனந்தக் கண்ணீர் ததும்புகிறது. ஏழாண்டு காதல், மீண்டும் எழுச்சி கொள்கிறது. 'இத்தனை ஆழமான காதலை உள்ளே வைத்துக்கொண்டா, வேண்டாம் வேண்டாம் என புறக்கணித்தாய்!’ என மனதுக்குள் செல்லமாய் திட்டிக்கொண்டான்.

தங்கள் காதல், இரு குடும்பங்களையும் பிரித்துவிடக் கூடாது என்பதில் கவனமாக இருந்தார்கள் இருவரும். ஆரம்பத்தில் இரு வீட்டிலுமே சலசலப்புகள்தான். என்றாலும்... அவர்களின் காதலில் இருந்த காத்திருப்பு மற்றும் கண்ணியம் எல்லோருக்கும் பிடித்துப் போக... சாதி காணாமல் போனது.

கையில் தவழும் அழகிய பெண் குழந்தை, இவர்கள் காதல் திருமண வெற் றியைப் புன்னகைத்துக் காட்டுகிறாள். ராகவனிடம் இருந்த நிஜமான காதல் ஊற்றே... அவனை 'இஸ்ரோ’ விஞ்ஞானியாக்கியது. ''காதல் என்பது என் வாழ்க்கையில் வந்திருக்காவிட்டால், எனக்குள் இத்தனை வைராக்கியம் வந்திருக்காது. காதலில் ஜெயிக்க வேண்டும் என்கிற எண்ணம்தான் என் லட்சியத்தையும் அதே அளவில் நேசிக்க வைத்து... ஒரு விஞ்ஞானியாகப் பயணிக்க வைத்துக் கொண்டிருக்கிறது!'' என சொல்லும் ராகவனையும், எந்த வகையிலும் அவசரப்படாமல் காதலைப் பொறுமையாகக் கையாண்ட செல்வியையும் நிச்சயம் பாராட்டியே ஆகவேண்டும்தானே!

அதேசமயம், பொறுமை மட்டுமல்ல.... காதலுக்கு கண்ணும் இல்லாமல் போனதால் ஓர் அப்பாவிப் பெண்ணின் வாழ்க்கையோடு சேர்ந்து, ஒரு குடும்பமே சிதைந்து சின்னாபின்னமான கதை, நெஞ்சத்தை நொறுக்குகிறது. பெங்களூருவைச் சேர்ந்த அந்த அப்பாவியின் பெயர் தீபா... வயது 13.

அலைபாயும்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism