Published:Updated:

‘ஸ்னேக்’ சந்தியா!

‘ஸ்னேக்’ சந்தியா!

‘ஸ்னேக்’ சந்தியா!

‘ஸ்னேக்’ சந்தியா!

Published:Updated:
##~##

ரப்பான் பூச்சி, பல்லி இதையெல்லாம் பார்த்துவிட்டால்கூட, 'ஆ...’ என்று அலறிக் குதித்து களேபரம் செய்யும் ஃபேன்டஸி பெண்களே... மீட் மிஸ். சந்தியப்பிரியா! 'ஸ்னேக்’ சந்தியா... இவரின் செல்லப் பெயர். பாம்பு பிடிப்பது, பெண்ணுக்கு இஷ்டமான பொழுதுபோக்கு!

19 வயதே நிரம்பிய சந்தியா, தஞ்சாவூரில் உள்ள 'பான் செக்கர்ஸ்’ கல்லூரியில் பி.எஸ்சி., ஐ.டி படிக்கும் மாணவி. ''படிச்சுக்கிட்டே பாம்பு பிடிக்கிறேன்!'' என்று கண்ணடித்துச் சிரிக்கும் சந்தியா, இதில் தனக்கு ஆர்வம் ஏற்பட வைத்த காரணத்தைப் பகிர்ந்தார்.

''எல்லாரையும் போல, பாம்புனா... எனக்கும் பயம்தான். என் அண்ணன், பாம்புகளை ஈஸியா பிடிப்பார். அதைப் பார்த்துட்டு தலைதெறிக்க ஓடி ஒளிஞ்சுக்குவேன். அப்புறம் அண்ணன் நடத்தும் 'அரிய காணுயிர் காப்பு - சுற்றுச்சூழல் அறக்கட்டளை' (என்டேஞ்சர்ட் வைல்ட்லைஃப் அண்ட் என்விரான்மென்டல் டிரஸ்ட்) அப்படிங்கற தொண்டு நிறுவனத்துல நானும் சேர்ந்தப்போ, இந்த மாதிரி ஜீவன்களை பத்தியெல்லாம் நல்லா புரிஞ்சுக்கிட்டேன். குறிப்பா, பாம்பை பத்தி நாம வெச்சுருக்கற பயம் அபத்தமானது. நாம அதோட வழியில் குறுக்கிடாதவரை, அது நம்மை ஒண்ணும் செய்யாது. ஆனா, இது புரியாம... நம்ம கண்ணில் பட்ட ஒரே காரணத்துக்காக எத்தனை பாம்பை அடிச்சுக் கொல்றோம்..?'' என்று கேட்டவரிடம், பாம்பு பிடிக்கும் அனுபவங்களைக் கேட்டோம்.

''பாம்பு பிடிக்கிறது என்பதைவிட, பாம்பு மீட்கறதுனு சொல்றதுதான் சரியா இருக்கும். எங்க வீட்டைச் சுற்றியுள்ள ஏரியாவில் யார் வீட்டிலாவது பாம்பு வந்துட்டா, யாரும் அடிக்க மாட்டாங்க. என்னையோ, அண்ணனையோ கூப்பிடுவாங்க. எந்த வேலையில இருந்தாலும், உடனே கிளம்பிப் போய் பாம்பை மீட்டு அப்புறப்படுத்தி, காட்டுப் பகுதியில கொண்டு விடுவோம்.

‘ஸ்னேக்’ சந்தியா!

இதுக்காக முறையான பயிற்சியை நாங்க எடுத்திருக்கோம். பாம்பு மீட்க ஆர்வம் உள்ளவங்கள காடுகளுக்கு கூட்டிட்டு போய் இலவச வகுப்புகளும் எடுக்கிறோம். சாரை, நாகம், கண்ணாடி விரியன்னு போன வருஷம் மட்டும் நான் பிடிச்ச பாம்புகளோட எண்ணிக்கை... நூறைத் தாண்டும்!'' என்று ஆச்சர்யப்படுத்தியவரிடம், பாம்பு மீட்கும் அந்த வித்தையைப் பற்றிக் கேட்டோம்.

''அது வித்தை இல்லை, நுணுக்கம். பாம்பைப் பார்த்ததுமே வீட்ல உள்ளவங்க, சுத்தி இருக்கிறவங்க எல்லாம் அதை தொந்தரவு பண்ணியிருந்தா, ரொம்பக் கோபமா இருக்கும். அப்படியிருக்கிறப்போ படம் எடுத்து 'என்கிட்ட வராதே’னு தன்னோட கோபத்தை நமக்கு உணர்த்தும். பாம்பை மீட்க, நுனி 'யூ’ வடிவில் வளைந்திருக்கும் ஒரு கம்பி வெச்சுருப்போம். முதல்ல கறுப்புத் துணியை அல்லது ஒரு இருட்டான பகுதியை காண்பிச்சு, பாம்போட கவனத்தை திசை திருப்பினா, அதையே பார்க்கும். அப்போ வாலைப் பிடிச்சுத் தூக்குவோம். அந்த நேரத்தில் கையை சுத்தாமலோ, அல்லது நம்மை நோக்கி மேல ஏறி வராமலோ இருக்கறதுக்காக, அந்த நீளமான கம்பி அதோட தலைப்பகுதிகிட்ட லாகவமா வைப்போம்.

அந்த 'யூ’ வடிவப் பகுதியில சரசரனு ஏறும். அதன் உடம்பு முழுக்க கம்பியில் சுற்றியிருக்கும். தாமதிக்காம சட்டுனு அந்தக் கம்பியை நீளமான கோணிப்பைக்குள் விட்டு, மேல் முனையை முடிச்சுப் போட்டுருவோம். அப்படியே எடுத்துப் போய் காட்டுக்குள்ள பாம்பை பத்திரமா வெளியில விட்டுருவோம்!'' என்று சந்தியா முடித்தபோது, விரிந்த விழிகள் மூடவில்லை நமக்கு.

''தமிழ்நாட்டுல மொத்தம் 65 வகை பாம்புகள் இருக்கு. அதுல 4 வகைதான் ரொம்ப விஷமானது. இதில் நல்ல பாம்பு விஷம், நரம்பைப் பாதிக்கும். கட்டுவிரியன், கண்ணாடிவிரியன் விஷம்... ரத்தத்தை பாதிக்கும். நல்ல பாம்பு ஒரு முறை கொத்துறதுக்கு ஐந்தாறு முறை எச்சரிக்கும். பாம்போட விஷத்தை வெச்சு பல வகையான மருந்துகள் தயாரிக்கறாங்க. சாரை, நாகம் மாதிரியான பாம்புகள் எலி, தவளை இதையெல்லாம் சாப்பிடும். மண்ணில் 100 மண்புழு செய்ய வேண்டிய வேலையை, ஒரே ஒரு மண்ணுளி பாம்பு செய்து மண்ணின் தரத்தை உயர்த்தும்!''

- சந்தியா அடுக்க, குறுக்கிடாமல் கேட்டுக் கொண்டோம்.

''என்ன ஏதோ சாதனை செய்துட்ட மாதிரி பார்க்கிறீங்க..? உண்மையில் நான்தான் அந்தப் பாம்புகளுக்கு எல்லாம் நன்றி சொல்லணும். ஏன்னா, ஒவ்வொரு பாம்பையும் மீட்டுக் காட்டில் விடும்போது, ரொம்ப திருப்தியா, இந்த வாழ்க்கைக்கு ஓர் அர்த்தம் கிடைத்ததா உணர்வேன். பிற்காலத்தில் நான் படிச்ச படிப்புக்கு வேலைக்குப் போன பின்னும், பாம்பு மீட்பதை தொடர்வேன். என்னைப் பார்த்து இப்போ இன்னும் பல பெண்களும் பாம்பு மீட்க கற்றுத் தரச்சொல்லி ஆர்வமா வர்றாங்க'' என்றவர்,

''எல்லோருக்கும் என்னோட வேண்டுகோள் ஒண்ணு இருக்கு. பாம்பை இனி பார்த்தாலே அடிக்காதீங்க. நாம் அதை தொந்தரவு செய்யாதவரை, அது ரொம்ப நல்ல ஜீவன்!''

- புன்னகைக்கிறார் 'ஸ்னேக்’ சந்தியா!

- ந.கீர்த்தனா

படம்: கு.கார்முகில்வண்ணன்