Published:Updated:

உங்கள் தட்டில் உணவா... விஷமா?- 26

ஆரோக்கியம் பேசும் அலர்ட் தொடர் டாக்டர் பி.சௌந்தரபாண்டியன்

உங்கள் தட்டில் உணவா... விஷமா?- 26

ஆரோக்கியம் பேசும் அலர்ட் தொடர் டாக்டர் பி.சௌந்தரபாண்டியன்

Published:Updated:
உங்கள் தட்டில் உணவா... விஷமா?- 26
##~##

 த்தனை அத்தியாயங்களாக நான் சொல்லி வந்த அத்தனை விஷயங்களையும் நீங்கள் தொடர்ந்து உள்வாங்கியவர் என்றால், 'நாம் உண்ணுவதெல்லாம் உணவல்ல, விஷம்' என்பதை ஓரளவுக்கு உணர்ந்திருக்க முடியும். இப்போது, ஒரேயடியாக அதை உணர்த்தும் வகையில் வந்து கொண்டிருப்பவைதான்... மரபணு மாற்றப்பட்ட உணவுகள் (ஜி.எம். உணவுகள்). மனித இனத்தின் எதிர்காலத்தையே பெரும் கேள்விக்குறியாக்கும் புதிய பூதாகார பிரச்னை இது என்றால், பொய்யில்லை!

மேலோட்டமாக பார்க்கும்போது... 'மரபணு மாற்றுத் தொழில்நுட்பம் என்பது அறிவியலின் புதிய கண்டுபிடிப்பு. இது நல்ல விஷயம்தானே.. இதற்கு ஏன் எதிர்ப்பு?' என்று கேட்கத் தோன்றும்.

இதற்கு விடை மிகவும் சுலபம். ஒவ்வொரு விஷயத்துக்கும் இரண்டு பக்கங்கள் உண்டு. அணுசக்தியால் மின்சாரமும் தயாரிக்கலாம், அணுகுண்டும் தயாரிக்கலாம். மரபணு மாற்றமும் அப்படியே. 'இந்த விஞ்ஞான யுக்தியை தாவரங்களுக்குப் பயன்படுத்தினால்... உணவு உற்பத்தியை பல மடங்கு பெருக்கலாம், புது வகையான தானியங்கள், காய்கறிகள், பழங்கள் உற்பத்தி செய்யலாம், பூச்சிகள் தாக்குதல் இல்லாமல் அமோக வளர்ச்சி, கெட்டுப்போகாத - அழுகிப்போகாத தன்மை, நல்ல நிறம், நல்ல சைஸ் போன்ற குணங்களோடு உணவுப் பண்டங்களை உற்பத்தி செய்யலாம்' என்கிற கற்பனையில் மரபணு விஞ்ஞானிகள் தீவிரமாக முயன்றார்கள். அவர்கள் நினைத்தபடியே இது நடந்திருந்தால், இது ஒன்றும் அப்படி கெட்ட விஷயமாக இருந்திருக்காது. ஆனால், 'பிள்ளையார் பிடிக்க, குரங்காக முடிந்த கதை' என்பது போல அது மாறியிருப்பதுதான் சோகம்.

உங்கள் தட்டில் உணவா... விஷமா?- 26

மண்ணில் இருக்கும் 'பேசில்லஸ்துரிஞ்ஜியான்ஸிஸ்’ எனும் நுண்கிருமியின் மரபணுவை, செடியின் விதைகளில் செலுத்தினார்கள். இந்த மரபணு செடியில் புகுந்து ஒருவகை கிருமிநாசினியை உற்பத்தி செய்தது. இதனால் செடிகளைத் தாக்கும் பூச்சிகள், தானாகவே விரட்டப்பட்டன. இந்த தொழில்நுட்பத்தால் முதலில் விளைந்த பருத்தி, 'பி.டி. பருத்தி' என்று அழைக்கப்பட்டது. இதற்குப் பிறகுதான் ஆரம்பித்தது பிரச்னை.

'இந்தப் பருத்திச் செடியின் இலைகளைத் தின்ற கால்நடைகள் இறக்கின்றன; பருத்திக் காடுகளில் வேலை செய்யும் விவசாயிகளுக்கு உடலில் அரிப்பு, தும்மல், இருமல், ஆஸ்துமா ஏற்படுகிறது...' என்று பல்வேறு குற்றச்சாட்டுகள் கிளம்பின.

இந்தச் சலசலப்பு வேகமாகப் பரவவே... 'மரபணு மாற்று தொழில்நுட்பம் பாதுகாப்பானதா?' என்று ஆராய்ச்சி செய்து அறிக்கை தரும்படி 1996-ல் ஒரு குழுவை அமைத்தது இங்கிலாந்து அரசு! உலகின் தலைசிறந்த மரபணு விஞ்ஞானி புஜ்டாய், இதன் தலைமை ஏற்றார். ஆராய்ச்சியின் முடிவுகள் அனைவருக்கும் அதிர்ச்சி அளித்தன.

மரபணு மாற்ற முறையில் விளைந்த உருளைக்கிழங்கு, எலிகளுக்கு உணவாகக் கொடுக்கப்பட்டது. 90 நாட்களில் எலிகளின் உடலில் பல மாறுதல்கள் தோன்றின. முக்கியமாக குடலில் உள்ள செல்கள் நீண்டும், மெலிந்தும் வளர்ந்தன. இது புற்றுநோயின் முதல் கட்டம். இதே போன்ற மாற்றங்கள் மூளை, ஈரல், சிறுநீரகம், ஆண் விந்துப்பை, பெண் சினை முட்டைப்பை போன்ற உறுப்புகளிலும் ஏற்பட்டன. இந்த கண்டுபிடிப்புகள் லண்டனின் புகழ்பெற்ற 'லான்செட்’ மருத்துவ இதழில் வெளியிடப்பட்டது. உலகமே ஸ்தம்பித்தது.

மரபணு மாற்ற விதைகளை உற்பத்தி செய்து, உலகெங்கும் விற்று கோடிகளில் புரளலாம் என்று கற்பனை செய்திருந்த கம்பெனிக்கு இது பேரிடியாக விழுந்தது. அடுத்தடுத்து என்ன நடந்ததோ... அடுத்த வாரமே 'லான்செட்’ இதழ், தன் கட்டுரையை வாபஸ் பெற்றது. 'ரோவட்’ நிறுவனம், தன்னிடம் 36 வருடம் ஆராய்ச்சி பணிபுரிந்த விஞ்ஞானி புஜ்டாயை டிஸ்மிஸ் செய்தது. அவருடைய ஆராய்ச்சிக் குறிப்புகள் பறிமுதல் செய்யப்பட்டன. வழக்கம்போல, 'மரபணு மாற்றப்பட்ட உணவு மிகவும் பாதுகாப்பான அற்புத உணவு' என்று 'ஆராய்ச்சி’க் கட்டுரைகளை வெளியிட ஆறு 'விஞ்ஞானிகள்’ புறப்பட்டு வந்தனர்.

உங்கள் தட்டில் உணவா... விஷமா?- 26

விளைவு..?

மரபணு மாற்றப்பட்ட அரிசி, கோதுமை, சோயா, உருளைக்கிழங்கு, தக்காளி, கத்திரிக்காய், வாழைப்பழம், எண்ணெய் வித்துக்கள் என்று ஏகமாக உலகெங்கும் வியாபித்துவிட்டன. இப்போது, சராசரி அமெரிக்கனின் உணவில் 75% உணவுகள், மரபணு மாற்றப்பட்ட உணவுதான் என்கிறது ஒரு கணக்கீடு. அமெரிக்கர்கள் பெரிய கொடைவள்ளல் போல ஜி.எம். உணவுகளை, வறுமையில் வாடும் ஆப்பிரிக்க நாடுகளுக்குத் தானம் செய்தார்கள். ஆனால்... ஸாம்பியா, ஜிம்பாப்வே, மொசாம்பிக் போன்ற நாடுகள், 'செத்தாலும் பரவாயில்லை - எங்களுக்கு வேண்டவே வேண்டாம்!’ என்று மறுத்துவிட்டன.

ஒவ்வொரு நாட்டிலும் மந்திரிகளுக்கும் அதிகாரிகளுக்கும் கோடி கோடியாகப் பணம் இறைக்கப்பட்டது. நம் நாடு? பல்வேறு தரப்பிலிருந்து கிளம்பிய எதிர்ப்பு அலையால், மரபணு மாற்ற உணவுப் பயிர்களுக்கு தடை விதித்தது. ஆனால், வெறும் கண்துடைப்புதான். இப்போது பழங்கள், சோளம் என்று மரபணு மாற்றப்பட்ட உணவுப் பொருட்கள் பலவும் இந்திய கடைகளிலேயே தாராளமாகக் கிடைக்கின்றன.

ஆக, திருட்டுத்தனமாக கொல்லைப்புற வழியாக மரபணு மாற்ற உணவுகளும் பயிர்களும் நம் நாட்டில் நுழைந்துவிட்டன என்பதுதான் உண்மை.

ஜி.எம். உணவுகளால் என்னென்ன கெடுதல்கள் வரலாம்? ஒரு குறிப்பிட்ட பூச்சியைக் கொல்வதற்காகத் தயாரிக்கப்பட்ட ஜி.எம். விதைகள், பல புதிய பூச்சிகளை / கிருமிகளை / வைரஸ்களை உருவாக்கலாம். புதிய டி.என்.ஏ உருவாவதால்... அலர்ஜி சம்பந்தமான பாதிப்புகள் வரலாம். குடல், ஈரல், மற்ற உறுப்புகளில் எல்லாம் புற்றுநோய் வரலாம். உடலின் நோய் எதிர்ப்புசக்தி அழிக்கப்படலாம்.

'ஒரு புதிய மருந்து கண்டுபிடித்தால், அதை பல்வேறு சோதனைகளுக்கு உட்படுத்தி, விலங்குகளுக்குக் கொடுத்து ஆராய்ந்து, பிறகு மனிதர்களின் 'புரிந்துணர்வு ஒப்புதலோடு’ பரிசோதனை மேற்கொண்ட பிறகே... சந்தைப்படுத்தப்படும். ஆனால், நம் யாருடைய சம்மதமும் பெறாமலேயே, நம்மை லேபரேட்டரி எலிகளைப்போல் பாவித்து இந்த ஜி.எம். உணவுகளை உண்ணச் செய்வது என்ன நியாயம்..?

'மரபணு விஞ்ஞானம் இன்னும் குழந்தைப் பருவத்தில்தான் இருக்கிறது. இதைப் பற்றிய ஏராளமான விஷயங்கள் நமக்கு இன்னும் புரியவில்லை’ என்கிறார்கள் மனித இனத்தில் அக்கறையுள்ள விஞ்ஞானிகள். ஆனால், இந்த எச்சரிக்கைகள் யார் காதிலும் விழவில்லை.

உங்கள் தட்டில் உணவா... விஷமா?- 26

மனித ஆரோக்கியம் தவிர, வேறு பல பொருளாதார, சுற்றுச்சூழல் பிரச்னைகளும் ஏற்படும் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள். பூச்சிகளைக் கொல்லும் இந்த விதைகள், சகட்டுமேனிக்கு நன்மை பயக்கும் உயிரினங்கள் அத்தனையையும் அழித்துவிடும். வளமான விளைநிலங்கள் மலடாக்கப்பட்டுவிடும் என்றும் கவலைப்படுகிறார்கள்.

ஒவ்வொரு முறையும் அமெரிக்காவின் மான்சான்டோ கம்பெனியிடம் கையேந்தி விதை வாங்கும் அவலம் உண்டாகும். இந்தியா வெகு விரைவில் விவசாயத்தில் அமெரிக்காவுக்கு அடிமை நாடாக மாறும் என்பதெல்லாம் நிஜம்தான். அதுசரி, பூனைக்கு மணி கட்டுவது யார்? விஞ்ஞானிகள், டாக்டர்கள், சமூக ஆர்வலர்கள், பத்திரிகைகள், தொலைக்காட்சி போன்ற மீடியாக்கள் எல்லோரும் சேர்ந்து சமுதாய விழிப்பு உணர்வு ஏற்படுத்த முன்வர வேண்டும்.

இம்மாதிரி போராட்டங்களை வாழ்நாள் முழுவதும் தலைமை ஏற்று நடத்திய இயற்கை விஞ்ஞானி டாக்டர் நம்மாழ்வார் (என்னை இந்தத் துறையில் ஆர்வம்கொள்ள வைத்தவர்!), சில நாட்களுக்கு முன் இயற்கை எய்தியது, நாட்டுக்கே பேரிழப்பு. ஆனாலும், அவரின் பணியை தொடர்வதற்கு, பலர் தயாராக இருக்கிறார்கள் என்பது நமக்கு நிம்மதி.

தொடர்ந்து என் எழுத்துக்களில் மிகுந்த ஆர்வம் காட்டிய உங்களுக்கு நன்றி கூறி விடைபெறுகிறேன்... மீண்டும் ஒரு தருணத்தில் சந்திப்போம்!

நிறைவடைந்தது

தொகுப்பு: ஜெ.எம்.ஜனனி