ஸ்பெஷல் 1
Published:Updated:

வாட்டும் காய்ச்சல்கள்... வதைக்கும் வலிகள்!

இனம்புரியாத நோய்களை விரட்டும் டிப்ஸ்சா.வடிவரசு

##~##

''ஐயோ... ஒடம்பெல்லாம் வலிக்குதே..''

''வழக்கமா ஜுரம் வந்தா, கொஞ்சம் அசதியா இருக்கும். இப்பல்லாம் அநியாயத்துக்கு கை, கால் வலி எடுக்குதே!''

- கடந்த சில ஆண்டுகளாக, இப்படித்தான் பலரும் புலம்புகிறார்கள்.

இனம்புரியாத இத்தகைய காய்ச்சல் காரணமாக, தமிழகத்தின் மருத்துவமனைகள் எல்லாம் திடீர் திடீர் என்று நிரம்பி வழிகின்றன. 'சாதாரண ஜுரத்துக்கே ஏன் இப்படியெல்லாம் கை, கால் வலியெடுத்து, வாரக் கணக்கில், மாதக் கணக்கில் அவதிப்பட வேண்டியிருக்கிறது?' என்று புரியாமல் தடுமாறிக் கொண்டிருக்கிறார்கள்.

இதைப் பற்றி சென்னையைச் சேர்ந்த பொதுநல மருத்துவர் புகழேந்தியிடம் கேட்டபோது, ''தீவிரமான காய்ச்சல் வருவதற்கு காரணமே, பருவநிலை மாற்றம்தான். இது, ஆண்டுதோறும் இயற்கை நிகழ்த்தும் விஷயமே! என்றாலும், அதற்கேற்ப நாம் நம்மை மாற்றிக் கொள்ள பழகிக்கொண்டால், இதுபோன்ற அவதிகளில் சிக்காமல் தவிர்த்துவிடலாம். அதேபோல, தற்போதெல்லாம் காய்ச்சலுடன் கடுமையான வலிகள் வருவதற்குக் காரணம்... சத்தற்ற உணவுகளை உட்கொள்வது, சுயமருத்துவம் செய்துகொள்வது, மருத்துவர்களால் தேவையற்று பரிந்துரைக்கப்படும் மருந்துகளை உட்கொள்வது போன்றவைதான்'' என்று முன்னுரையாகச் சொன்ன டாக்டர், விளக்கமாக தொடர்ந்தார்...

வாட்டும் காய்ச்சல்கள்... வதைக்கும் வலிகள்!

''பொதுவாக, வெயில், மழை, குளிர் என்று பருவநிலை மாற்றத்தின்போதுதான் காய்ச்சல் மாறி மாறி தாக்கும். அந்தந்த காலகட்டத்துக்கு ஏற்ப, சில தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டால், நோயின் பிடியில் இருந்து தப்பலாம். சாப்பிடும் உணவு, குடிக்கும் தண்ணீர், சுற்றுப்புறத் தூய்மை போன்றவற்றில் நாம் எப்போதும் அதிக கவனம் செலுத்த வேண்டும். ஆனால், பலரும் இவற்றில் கவனமாக இருப்பதில்லை. எதிர்ப்பு சக்தி தரும் சத்துள்ள உணவுகளைத் தொடர்ந்து உண்ண வேண்டும். நாமோ சுகாதாரம்கூட பார்க்காமல், கண்ட இடங்களில் உணவு உட்கொள்கிறோம், தண்ணீர் அருந்துகிறோம், வீட்டைச் சுற்றி குப்பைகளைக் கொட்டி வைக்கிறோம், தண்ணீரைத் தேங்க விடுகிறோம். இதன் காரணமாக, டெங்கு, மலேரியா, வைரஸ் காய்ச்சல் போன்றவற்றின் பிடியில் சிக்குகிறோம். இந்த சீஸனில், நாடு முழுக்கவே அதிகமான குளிர் வாட்டியெடுப்பதால், ஜலதோஷம் முதல் கடும் காய்ச்சல் வரை எளிதில் வருவதற்கும், மற்றவர்களுக்குப் பரவுவதற்கும் அதிக வாய்ப்பாக இருக்கிறது. அதனால் கூடுதல் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்'' என்றவர், காய்ச்சலின்போது வழக்கத்துக்கு மாறாக, அதீத கை, கால் வலி காரணமாக மக்கள் அவதிப்படும் விஷயத்துக்கு வந்தார்.

''போதுமான நோய் எதிர்ப்பு சக்தி இல்லாதபட்சத்தில், கூடுதல் பிரச்னைகளையும் உருவாக்கிவிடும். இதுதான் இன்றைக்கு பலரும் காய்ச்சலோடு சேர்ந்து உடல் வலி, கூடுதல் சோர்வு என அவதிப்படக் காரணம். இன்றைக்கு அதிகமானோருக்கு சிக்குன்குன்யா நோய் வருகிறது. இதனால் அவர்களது உடல் முழுவதும் வலி ஏற்பட்டும், சிலருக்கு முகம் வீங்கியும், சிலருக்கு உடல் எடை குறைந்தும், அதிக சோர்வுடனும் காணப்படுவார்கள். இப்படிப்பட்டவர்கள் குணமடைய எந்தவிதமான மருந்து, மாத்திரைகளும் தேவையில்லை. சத்தான உணவும், சரியான ஓய்வுமே சிக்குன்குன்யா நோய்க்கு மருந்துதான். அதனால், வலி நிவாரணி மருந்துகளை எடுத்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது. இந்த நேரத்தில் வலிக்காக எடுத்துக் கொள்ளப்படும் நிவாரண மருந்துகள், வேறு பாதிப்புகளை உண்டாக்க வாய்ப்பிருக்கிறது.

இன்னொரு முக்கியமான தவறை நம்மில் பலரும் தொடர்ந்து செய்கிறோம். காய்ச்சலே வந்திருக்காத நிலையிலும், 'காய்ச்சல் வருவது போல இருக்கு டாக்டர்...’ என்று மருத்துவரிடம் ஓட, சில மருத்துவர்கள் கடமைக்கு சோதனை செய்து, இல்லாத நோய்க்கு மருந்து கொடுக்கிறார்கள். இதனால் ஏற்படும் பிரச்னைகள் இன்னும் கொடுமையானது. எனவே, நோயே இல்லாமல் நோயாளியாக ஆசைப்படாமல், உடல் அசதியாக தென்பட்டாலும் ஓரிரு நாட்கள் பொறுத்துக்கொள்ள வேண்டும். சத்தான உணவும், சரியான ஓய்வும் எடுக்க வேண்டும். அதன் பிறகு, காய்ச்சல் வந்து, தொடர்ந்தால் மட்டுமே மருத்துவரிடம் செல்ல வேண்டும். எந்தவொரு நோயும் இருப்பது உறுதியாக தெரிந்த பின்னரே அதற்கான சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும்.

வாட்டும் காய்ச்சல்கள்... வதைக்கும் வலிகள்!

இன்று பல மருத்துவமனைகளிலும் எந்தவித நோயாக இருந்தாலும் அதற்கு ஆன்டிபயாடிக் மருந்துகள் வழங்குவதை வழக்கமாக வைத்துள்ளனர். சமயங்களில் இந்த ஆன்டிபயாடிக் மருந்துகள்கூட ஆபத்தை விளைவிக்கலாம். இந்த விஷயத்திலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அதோடு, மருத்துவர்களும் தங்களது கடமையை உணர்ந்து, வருகிற நோயாளிக்கு என்ன பிரச்னை இருக்கிறது என்பதை முழுவதுமாக கண்டறிந்த பின்பே அதற்கான சிகிச்சையையும், நோய்க்கான மருந்துகளையும் வழங்க வேண்டியது அவசியம். அதேபோல் டாக்டர்கள் அறிவுறுத்தும் மருந்து, மாத்திரைகளை நோய் ஓரளவு குணமானவுடனே நிறுத்திவிடுவதும் நல்லதல்ல. டாக்டர் பரிந்துரைத்திருக்கும் நாட்கள் வரை அதை எடுத்துக்கொள்ள வேண்டும்'' என்று அழுத்தம் கொடுத்த டாக்டர் புகழேந்தி,

''நோய்கள் வேகமாகப் பரவுவதற்கு முக்கியக் காரணம் சூழல்மாறுபாடாக இருந்தாலும், ஆரம்பத்தில் சொன்னதுபோல வாழ்க்கை முறையை ஆரோக்கியமாகக் கட்டமைத்துக் கொள்வதன் மூலம் அதைஎல்லாம் தவிர்க்கலாம். 'நம்மை நாம்தான் பாதுகாத்துக்கொள்ள வேண்டும்’ என்ற உறுதிமொழி எடுத்துக் கொண்டாலே போதும்... பல பிரச்னைகளுக்குத் தீர்வு கிடைத்துவிடும்'' என்று நம்பிக்கையூட்டினார்.

தீவிர காய்ச்சல்களில் இருந்து தப்பிக்கும் டிப்ஸ்!

•  சத்து தரும், எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகள் உண்பது

•  காய்ச்சிய தண்ணீர் குடிப்பது

•  சுற்றுப்புறத்தை தூய்மையாக வைப்பது

•  ஐஸ்கிரீம் போன்ற சூழலுக்கு ஒவ்வாத உணவுகளைத் தவிர்ப்பது

•  தேவையான ஓய்வு எடுப்பது

• துணிகளைக் கிருமித்தொற்று மற்றும் ஈரமின்றி உலர்த்தி உடுத்துவது

•  முறையான உடற்பயிற்சிகள் மேற்கொள்வது.