ஸ்பெஷல் 1
Published:Updated:

ஒரு கையில் கோப்பு... மறு கையில் அபிநயம்...

அசத்தும் கவிதா ராமு!ம.பிரியதர்ஷினி

##~##

கோப்புகள் அடுக்கப்பட்டிருக்கும் மேஜை, பரபரப்பான அலுவல் நிமிடங்கள், சுருக்கமாக - ஸ்ட்ரிக்டாகப் பேசும் சுபாவம்... இவை போன்றவைதான் பெரும்பாலான அரசு உயரதிகாரிகளின் பிம்பமாக இருக்கும்!

ஆனால், சென்னை மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் மாவட்ட கூடுதல் நீதிபதி என்ற பொறுப்பில் இருக்கும் கவிதா ராமு, முற்றிலும் வித்தியாசமாக ஆச்சர்யப்படுத்துகிறார்!

அடிப்படையில் இவர், ஒரு பரதநாட்டியக் கலைஞர். பல சபாக்களில் இவருடைய நிகழ்ச்சிகளுக்கான தேதிகள் இப்போதும் புக் செய்யப்பட்டு தயாராக இருக்கின்றன. நடன வகுப்புகள் எடுப்பதோடு, ஆல்பங்களுக்கு கொரியோகிராஃபர் என்பதிலும் ஆர்வம் காட்டுகிறார். பிளாக், ஃபேஸ்புக் என இணையத்திலும் செம ஆக்டிவ். தவிர, இளையராஜாவின் இசை, புத்தகங்கள் என்று அழகாக்கிக் கொள்கிறார் தன் அத்தனை நிமிடங்களையும்!

''ஹல்ல்ல்லோ!'' என்று அவர் சொல்லும்போதே, அந்த உற்சாகம் தொற்றிக்கொள்கிறது நம்மையும்!

ஒரு கையில் கோப்பு... மறு கையில் அபிநயம்...

''என் அப்பா ராமு, ஐ.ஏ.எஸ். அதிகாரியாக இருந்தவர். நேர்மையான, ஃப்ரெண்ட்லியான அதிகாரி. நான் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் பரீட்சை எழுதணும்ங்கிறதுதான் அவரோட ஆசை. அதற்காகவே சென்னை, அண்ணா ஆதர்ஷ் காலேஜ்ல இளங்கலை எக்கனாமிக்ஸ், முதுகலை பப்ளிக் அட்மினிஸ்ட்ரேஷன் படிச்சேன். சுவாரஸ்யமான விஷயங்களைக் கத்துக் கறதுக்கு என் கல்லூரி எனக்கு தாராளமா இடம் கொடுத்துச்சு.

முதல் முறை சிவில் சர்வீஸ் எக்ஸாம் எழுதினப்போ, ஏதோ சவாலான விளையாட்டாதான் அதை எதிர்கொண்டேன். தேர்ச்சி பெறல. அப்பாவை அது சோர்வாக்க, மறுமுறை அப்பாவோட கனவை நிறைவேற்ற 100 பர்சன்ட் சின்ஸியரா முயற்சி செய்தேன். வெற்றி கிடைச்சுது!'' என்பவரின் முதல் பயணம், திருப்பத்தூரில் வருவாய்த்துறை மண்டல அலுவலர் பதவியில் ஆரம்பித்திருக்கிறது.

''சின்ன வயசுல எனக்குள்ள இருந்த நடன ஆசையை, ஆர்வத்தைக் கண்டறிந்தது எங்கம்மா மணிமேகலை ராமுதான். எம்.ஏ., எக்கனாமிக்ஸ் படிச்சுட்டு அசிஸ்டென்ட் புரொஃபஸரா வேலை பார்த்த அவங்கதான், எங்க வீட்டோட ஜீவன். அம்மா, சேலம் ஜெயலஷ்மி மேடத்துக்கிட்ட அஞ்சு வயசுல என்னை நடன வகுப்புக்கு அனுப்பினாங்க. அப்புறம் அப்பாவோட வேலை காரணமா பல இடமாறுதல்கள். மதுரையில ஆறு வருஷம் தங்க நேரிட்டப்போ, பத்மா சுப்ரமணியம் மேடத்தோட அக்கா நீலா கிருஷ்ணமூர்த்தி மிஸ்கிட்ட நடனம் கத்துக்கிட்டேன். விடுமுறை நாட்கள்லகூட டீச்சர் வீட்டுலயே தவம் கிடந்து நடனம் படிக்கிற அளவுக்கு எனக்கு காதல். இன்னொரு பக்கம், வீணை, பாட்டு, விளையாட்டுனு கத்துகிட்டேன்.

சென்னைக்கு வந்ததுக்கு அப்புறம் நாட்டிய குரு சரஸா மேடத்துக்கிட்ட 15 வருஷம் நடனம் கத்துக்கிட்டேன். அவரோட வழிகாட்டலோடுதான் என்னோட முதல் நாட்டிய அரங்கேற்றம், முன்னாள் ஜனாதிபதி ஆர்.வெங்கட்ராமன் தலைமையில 93 வருஷம் நடந்துச்சு. இன்னிக்கு ஒரு திறமையான நடனக் கலைஞரா நான் இருக்கேன்னா, அதுக்குக் காரணம்... குரு சரஸா டீச்சர்தான்!' என்கிறவரின் நாட்டிய நிகழ்ச்சிகள் அமெரிக்கா, கனடா என வெளிநாடுகளிலும் நடந்திருக்கின்றன.

ஒரு கையில் கோப்பு... மறு கையில் அபிநயம்...

''அரசாங்க பதவியில இதுவரைக்கும் பல முக்கிய பொறுப்புகளை வகிச்சதுனால, பணி நிமித்தமாக பல இடங்களுக்கு டிராவல் பண்ண வேண்டிய பொறுப்பு இருந்தது. அப்படியான நேரத்துல என்னோட சில புரோகிராம்களை கேன்சல் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. அதனால இப்போவெல்லாம் சனி, ஞாயிறுகளில் எனது வசதிக்கேற்ப சபாக்களில் டேட்ஸ் வாங்கிடறேன். இந்த முறை கடந்த மாசம் என்னோட நடன நிகழ்ச்சிகளை தமிழ் இசை சங்கம், கார்த்திக் ஃபைன் ஆர்ட்ஸ், கிருஷ்ண கான சபா, சரஸா நாட்டிய மாலா, தபஸ் சங்கீத நாட்டிய விழா போன்றவற்றில் பெர்ஃபார்ம் செய்ததில் அத்தனை மகிழ்ச்சியாக இருக்கிறேன். என்னோட பணிச்சுமையில் இருந்து என்னை மீட்கும் நடனம், எனக்கு தியானம் மாதிரி!

வார இறுதி நாட்களில் மாணவர்களுக்கு என் வீட்டிலேயே நடன வகுப்புகள் எடுக்கிறேன். நடிகை அபர்ணா பிள்ளையோட 'காதலாகி கசிந்து’ ஆல்பத்துக்கு கொரியோகிராஃப் பண்ணியிருக்கேன். இன்னும் சில ஆல்பங்களுக்கும் கொரியோகிராஃப் பண்ணியிருக்கேன்'' என்றவர், சிறிது இடைவெளிவிட்டு,

''அப்பா, 'இதுதான் என் விருப்பம்’னு சொல்லாம இருந்திருந்தா, முழு நேர டான்ஸர் ஆகியிருப்பேன். ஆனா, அப்பாவோட ஆசையையும் பூர்த்தி செய்த பெருமையோட நடனத்திலேயும் முழுமையா என்னை ஈடுபடுத்திட்டு இருக்கேன். பரபரக்க வேலை, அப்பாவோட அன்பு, இனிக்க இனிக்க இசை, களைக்க களைக்க நடனம், புத்தகத் தோழிகள், என் எழுத்துக்களை அரங்கேற்றும் பிளாக்னு... வாழ்க்கை ரம்மியமா போயிட்டிருக்கு!''  

- அழகாகச் சிரிக்கிறார் கவிதா ராமு!