Published:Updated:

குழந்தையா... வேலையா...

அசத்தும் 'அனுபவ' அம்மாக்கள்!மோ.கிஷோர் குமார், லோ.இந்துபடங்கள்: பா.காளிமுத்து, எஸ்.கேசவசுதன்

குழந்தையா... வேலையா...

அசத்தும் 'அனுபவ' அம்மாக்கள்!மோ.கிஷோர் குமார், லோ.இந்துபடங்கள்: பா.காளிமுத்து, எஸ்.கேசவசுதன்

Published:Updated:
##~##

ன்றைய விலைவாசியும், காஸ்ட்லியான வாழ்க்கை முறையும், குடும்பத்தில் கணவன், மனைவி இருவரையும் 'வேலைக்குச் செல்' என்றே நிர்பந்திக்கின்றன. 'கணவன், மனைவி என்றிருந்தால் வேலைக்குப் போவது சுலபம். ஆனால், அப்பா, அம்மா என்றான பிறகு... இருவருமே வேலைக்குப் போவது சிரமம்' என்பதுதான் பலருடைய வாதம். ஆம்... குழந்தை பிறந்த பின் 'பிள்ளையா... பணியா?’ என்று திணறாத அம்மாக்கள் யாரும் இல்லை என்பதுதானே உண்மை!

இப்படியரு சூழல் தங்களுக்கு வந்தபோது, தாங்கள் எடுத்த முடிவுகளை இங்கே பகிர்கிறார்கள் இந்த 'வொர்கிங் மாம்’கள்... எதிர்கால 'வொர்கிங் மாம்'களுக்கு டிப்ஸாக!  

கிருஷ்ணவேணி (பேராசிரியை, மதுரை): ''எம்.எஸ்சி., எம்.ஃபில் கம்ப்யூட்டர் சயின்ஸ் படிச்சேன். காலேஜுல லெக்சரரா வேலை பார்த்தேன். திருமணத்துக்கு அப்புறம் சென்னையில் செட்டில் ஆனப்போ, சர்டி ஃபிகேட் எல்லாத்தையும் எடுத்துட்டு அலைஞ்சு, மூணே நாள்ல ஒரு பொறியியல் கல்லூரியில வேலைக்குச் சேர்ந்துட்டேன். சில மாதங்கள்ல கர்ப்பிணி ஆனப்போ, அவ்வளவு சந்தோஷம், கொஞ்சம் கவலை. 'குழந்தைக்காக வேலையை விட்டுட்டுட்டா, மறுபடியும் இதேமாதிரி நல்ல வேலை கிடைக்குமா?’னு குழம்பி குழம்பி, ஒரு வழியா வேலையை விட்டுட்டேன். ரெண்டு வருஷம் குழந்தையோட அவ்ளோ அழகா நாட்கள் ஓடுச்சு.

'நம்ம குழந்தையை நல்லா வளர்க்கணும்னா, நாமளும் வேலைக்கு போகத்தான் செய்யணும்’னு தோணுச்சு. ஒரு ஆளை நியமிச்சுட்டு, மறுபடியும் வேலைக்குப் போனேன்... அது தவறான முடிவுனு தெரியாம! நான் வெச்ச ஆள்... குழந்தை பாத்ரூம் போனாலும், வாமிட் பண்ணினாலும், அழுதாலும், சிரிச்சாலும் 'எனக்கென்ன கவலை’னு இருந்துட்டு, நான் ஆபீஸ் விட்டு வீடு திரும்புற நேரம் மட்டும் திடுதிடுனு எல்லாத்தையும் சுத்தம் பண்ணி, குழந்தையை ஒப்படைக்கறதை கண்டுபிடிக்க பல நாட்கள் ஆச்சு. அந்த நிமிஷமே மறுபடியும் வேலையை விட்டுட்டேன்.

குழந்தையா... வேலையா...

அப்புறம் குடும்பத்தோட மதுரைக்கு வந்துட்டோம். குழந்தை கொஞ்சம் வளர்ந்த நிலையில... மதுரை, காமராஜர் பல்கலைக்கழகத்துல வேலை கிடைச்சுது. அப்புறம், பாத்திமா கல்லூரியில வேலை கிடைச்சுது. இந்த வேலையில் அமர்ந்த சமயம், மறுபடியும் கர்ப்பமானேன். 'இதையும் குழந்தைக்காக விட்டுடாதே’னு பலரும் சொன்னாலும், அந்த வேலையையும் விட்டேன். இப்போ ரெண்டாவது குழந்தையும் வளர்ந்த பிறகு, தனியார் கல்லூரியில் வேலை பார்த்துட்டு இருக்கேன்.

'பல நல்ல வேலை வாய்ப்புகளை இழந்துட்டோமே'னு எந்த வருத்தமும் எனக்கில்ல. திறமை இருந்தா நிச்சயமா எந்த வயதிலும் நல்ல வேலை கிடைக்கும். ஆனா... நம்ம குழந்தையோட ஆரம்ப வயதுகள்ல... அதோட வளர்ச்சியில் முக்கிய கட்டமான முதல் மூன்று வயதுகளில் அதை வளர்க் கிற பொறுப்பை எதுக்காகவும் இழக்கக் கூடாது.''

கமலா சஹா, (ஹைதராபாத்): ''எம்.ஏ. ஃபிசிக்ஸ் படிச்சுட்டு பேங்க் ஆஃப் அமெரிக்காவுல வேலை பார்த்தப்போ, திருமணம் நடந்துச்சு. கர்ப்பமானப்போ, வேலையை விடலாமா... இல்ல, அம்மா பொறுப்பில் குழந்தையை விட்டுட்டு வேலைக்குப் போகலாமானு ஒரே குழப்பம். இறுதியா, வீட்டுல இருந்தே வேலை செய்யுற மாதிரி ஆபீஸ்ல அனுமதி வாங்கிக்கிட்டேன். தினமும் நாலு மணி நேரம் வேலை... மற்ற நேரமெல்லாம் குழந்தையோடதான். இந்த சமயத்துல இடியா வந்துச்சு புரமோஷன். வேலை அதிகமாகி,  குழந்தையை முழுசா கவனிக்க முடியாதுங்கற நிலையில, வேலையை விட்டுட்டேன்! குழந்தைக்கு நல்ல அம்மாவா இருக்கறதுதான் அவசியம், அழகுங்கறதால இந்த முடிவு.

குழந்தையா... வேலையா...

பையன் கொஞ்சம் வளர்ந்த பிறகு... பிடிச்ச வேலையா எதுவும் அமையல. கன்சல்டன்சி ப்ளஸ் டிரெயினிங் பிசினஸ் பண்ணலாம்னு களத்துல இறங்கினேன். நானே முதலாளிங்கறதால குழந்தையைக் கவனிக்க தாராளமா நேரம் ஒதுக்க முடியுது. முதல் வகுப்புப் படிக்கிற என் பையன்... போன வாரம் அவுட் ஸ்டாண்டிங் அவார்டு வாங்கினான். 'ரொம்ப பிரில்லியன்ட் ஸ்டூடென்ட், நல்ல பிராட் அப்!’னு டீச்சர்ஸ் சொன்னப்போ, 'இதைவிட பெருசா நீ என்ன சாதிச்சுட முடியும் கமலா'னு என்னை நானே கேட்டுக்கிட்டேன்!''

கண்ணகி (தமிழாசிரியை, தனியார் பள்ளி, மதுரை): ''என் பொண்ணு பொறந்தப்போ அவளுக்காக வேலையை விட்டேன். அவளுக்கு மூணு வயசாகும்போது என் பையனும் பிறந்துட்டான். குழந்தைகளோட அடித்தளம் நல்லா அமைஞ்சாதான் எதிர்காலம் சிறப்பா இருக்கும், அதுக்கு நாம அவங்க கூடவே இருந்து உணவு முதல் அறிவு வரை கவனம் எடுத்துக்கணும். அதனால, வேலைக்குப் போறது பற்றிய நினைப்பே இல்லாம பொறுப்பான அம்மாவா மட்டும் சில வருடங்கள் இருந்தேன்.

குழந்தைகள் ஓரளவுக்கு வளர்ந்ததுக்கு அப்புறம் வீட்டில் இருந்தபடியே 'கரஸ்’ல எம்.ஏ., எம்.ஃபில் முடிச்சு, வேலை தேட ஆரம்பிச்சேன். இப்போ நல்ல சம்பளத்துல தமிழாசிரியையா இருக்கேன், எப்பவும் என் குழந்தைகளுக்கு நல்ல அம்மாவா இருந்திருக்கேன்... இனியும் இருப்பேன் என்ற சந்தோஷத்தோட!''

குழந்தையா... வேலையா...

அகிபா ஹனி (ஆங்கில விரிவுரையாளர், காந்தி என்.எம்.ஆர் சுப்பராமன் கல்லூரி - மதுரை, எஃப் எம் ரெயின்போ 'ஆர்ஜே'): ''கணவருக்கு துபாய் தேசிய அருங்காட்சியகத்தில் வேலை. நான் மதுரை, அம்பிகா பெண்கள் கலைக்கல்லூரி ஆங்கில விரிவுரையாளர். அஞ்சு வருஷத்துக்கு முன்ன குழந்தையை வயித்துல சுமந்துட்டு, 9 டிபார்ட்மென்ட்டுக்கு இங்கிலீஷ் கிளாஸ் எடுத்துட்டு இருந்தேன். டெலிவரிக்கு ஒரு வாரத்துக்கு முன்னதான் லீவ் எடுத்தேன். ஜனவரி மாசம் பொண்ணு பொறந்தா. ஏப்ரல் மே, காலேஜ் லீவுங்கிறதுனால ஜூன்ல காலேஜுக்கு போக ஆரம்பிச்சேன். அப்போ பொண்ணு மாஷா, அஞ்சு மாச குழந்தை. எங்கம்மாதான் பாத்துக்கிட்டாங்க.

காலேஜ்ல அதிக வேலைகளை நான் செய்ததால, சலுகைகள் கொடுத்திருந்தாங்க. கிடைக்கிற சின்ன கேப், லெஷர் டைம், பிரேக் எல்லாத்தையும் பயன்படுத்தி வீட்டுக்கு போய் பாப்பாவுக்கு பால் கொடுத்துட்டு வருவேன். காலேஜ் நாலு மணிக்கு முடி யும்னா... மூணு மணிக்கு எல்லாம் கிளம் பிடுவேன். சிலநேரம் எங்கம்மா தவிர்க்க முடியாத காரணத்தால ஊருக்குப் போக வேண்டியது இருந்தா... காலேஜ்ல லாஸ்ட் பெஞ்ச்சை கொஞ்சம் நகர்த்தி, பாப்பாவை படுக்க வெச்சுட்டு கிளாஸ் எடுப்பேன்.

நான் வேலை பார்த்த ரேடியோ நிறுவனத்துக்கு போக, வீட்டிலிருந்து ஏழு கிலோ மீட்டர். பாப்பாவை மடியில வெச்சுக்கிட்டு எங்கம்மா பின்னால உட்கார, டூ வீலர்லயே ஆபீஸ் போயிடுவேன்.'’

ஆக, குழந்தை பெறுவது என்பது, பெண் களின் வேலை வாய்ப்புக்கு ஒரு வேகத்தடை மட்டுமே. பொறுமையாகக் கடந்தால், வெற்றிக் கோடு நம் வசமே!