ஸ்பெஷல் 1
Published:Updated:

வாடிக்கையாளர்களே... போட்டியாளர்கள்!

ம.பிரியதர்ஷினி

##~##

முயற்சிக்கு எப்போதும் மதிப்பு உண்டு என்பதை, தங்கள் திறமையால் மீண்டும் நிரூபித்திருக்கிறார்கள், 'ஆச்சி மசாலா' நிறுவனத்தினர். இந்தியாவிலிருக்கும் 'டிரஸ்ட் ரிசர்ச் அட்வைசரி’ என்ற நிறுவனம், உள்நாட்டில் தயாராகும் பல்வேறு நிறுவனங்களின் மசாலா பிராண்ட்களை ஆய்வுக்கு உட்படுத்தி, அதன் மூலமாக நிறுவனங்களை வரிசைப்படுத்தி விருதுகள் வழங்குவது வழக்கம். அந்த வகையில், கடந்த 2013-ம் ஆண்டுக்கான ஆய்வில் முதலிடத்தைப் பெற்றிருக்கிறார்கள் ஆச்சி மசாலா நிறுவனத்தினர்.

விருது வாங்கிய பூரிப்பில் இருந்த அதன் நிறுவனர் பத்மசிங் ஐசக்கின் பேச்சில், உற்சாக நெடி ஏகத்துக்கும் வீசியது.

''சுமார் 1,000 மசாலா தயாரிப்பு நிறுவனங்கள் களத்தில் நின்ற இந்த ஆய்வில், பொருளின் வீச்சு, விளம்பரம், தரம், நம்பகத்தன்மை, விலை... இப்படி 36 காரணங்களுக்காக, முதலிடத்தை நாங்கள் பிடித்திருக்கிறோம். ஆச்சி மசாலா தயாரிப்புகள், இதுவரை 4 கோடி மக்களிடம் சென்றடைந்திருப்பதற்கு, மேலே சொன்ன தகுதிகள்தான் காரணம்.

வாடிக்கையாளர்களே... போட்டியாளர்கள்!

வாடிக்கையாளர்களின் மனதறிந்து செயல்படுவது ஒன்றையே நாங்கள் தாரக மந்திரமாகக் கொண்டிருக்கிறோம். மற்ற நிறுவனங்களைவிட, எங்கள் நிறுவன தயாரிப்புகளை உபயோகப்படுத்தும் பெண்கள் மற்றும் ஆண்களின் மனதைத்தான் நாங்கள் பெரும் போட்டியாக நினைக்கிறோம். அந்தப் போட்டியாளர்கள் மனதை வென்றதால்தான், இன்று நம்பர் ஒன் இடம்!'' என்று கட்டை விரல் உயர்த்தியவர்,

''ஆரம்பத்தில் இருந்து இன்று வரை தினமும் எங்கள் தயாரிப்புகளை உபயோகிக்கும் ஒவ்வொரு புது வாடிக்கையாளரும் எங்கள் வெற்றிக்குக் காரணமானவர்களே. டிஸ்ட்ரிப்யூட்டர்கள், ஏஜென்ட்டுகள் என எங்களை முன்னிறுத்தி, இந்த வெற்றிக்குப் பின்னால் தங்களை மறைத்துக்கொள்ளும் நெஞ்சங்கள் இன்னும் அதிகம். அவர்களுக்கு எல்லாம் இந்த விருதை நான் சமர்ப்பிக்கிறேன்.

இந்த ஆய்வில், இந்தியாவில் பல்வேறு பொருட்களைத் தயாரிக்கும் 5,000 பிராண்டுகளில் நாங்கள் 174-வது இடத்தைப் பெற்றிருக்கிறோம் என்பதையும் இதன் மூலமாக தெரிவித்துக் கொள்கிறோம்!'' என்றார் பெருமிதத்துடன்!

வாழ்த்துக்கள் சார்!