Published:Updated:

அ முதல் ஃ வரை - 7

பணம் கொட்டும் கணினித்துறை! சா.வடிவரசு, படங்கள்: பா.காளிமுத்து, பா.ஓவியா

அ முதல் ஃ வரை - 7

பணம் கொட்டும் கணினித்துறை! சா.வடிவரசு, படங்கள்: பா.காளிமுத்து, பா.ஓவியா

Published:Updated:
##~##

'பையன் அரசு வேலையில் இருந்தால் பெண் தருவேன்’ என்றது அந்தக் காலம். 'மாப்பிள்ளை, கம்ப்யூட்டர் வேலையில் இருக்காரா..?’ என்று கேட்பது இந்தக் காலம். காரணம், இன்றைக்கு அதிக பணம் சம்பாதிக்கக் கூடிய துறையாக கம்ப்யூட்டர் துறை வளர்ந்திருப்பதுதான். அதனாலேயே மாணவர்கள் முதல் பெற்றோர் வரை அனைவரிடமும் கணினித்துறை சார்ந்த படிப்புகள், வரவேற்பைப் பெற்றுவருகின்றன.

சமீபகாலமாக, 'கணினித்துறைக்கு இறங்குமுகம்' என்கிற பேச்சுக்கள் ஒருபுறம் எதிரொலித்துக் கொண்டிருந்தாலும், இத்துறை படிப்புகள் மீதான ஆர்வம் என்னவோ அதிகரித்தபடிதான் இருக்கின்றன. இத்தகைய சூழலில், இத்துறை சார்ந்த முக்கியமான படிப்புகள், வேலைவாய்ப்புகள், சம்பளம், சவால்கள் அனைத்தையும் இங்கே அலசுவோம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இளங்கலை, முதுகலை, துணைப்படிப்புகள்!

சென்னை, ஸ்ரீ முத்துக்குமரன் தொழில்நுட்பக் கல்லூரி முதல்வர், முனைவர் சுரேஷ், கணினித்துறை சார்ந்த படிப்புகள் பற்றிக் கூறினார். ''பொறியியல் படிப்புகளைப் பொறுத்தவரை பி.இ., கம்ப்யூட்டர் சயின்ஸ் அண்ட் இன்ஜினீயரிங், பி.டெக்., இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி போன்ற நான்காண்டு இளங்கலை படிப்பில், ஒரு கணிப்பொறியாளர் அறிய வேண்டிய அடிப்படை

அ முதல் ஃ வரை -   7

தொடங்கி... வலைதளம், மென்பொருள் உருவாக்குவது கற்றுத்தரப்படும். இறுதி ஆண்டில் ஒவ்வொரு மாணவரும் நான்கு மாத காலம், ஒரு மென்பொருள் நிறுவனத்திலோ அல்லது கல்லூரியிலோ புராஜெக்ட் செய்து, கல்லூரியில் சமர்ப்பிக்க வேண்டும். இந்தப் படிப்புக்கான கட்டணமாக அரசு கல்லூரிகளில் ஆண்டுக்கு 22 ஆயிரம் ரூபாயும், தனியார் கல்லூரிகளில் அரசு இடங்களுக்கு 40 ஆயிரம் ரூபாயும், மேனேஜ்மென்ட் இடங்களுக்கு 70 ஆயிரம் ரூபாயும் வசூலிக்கப்படுகிறது.

முதுகலை படிப்புகளைப் பொறுத்தவரை, எம்.இ., கம்ப்யூட்டர் சயின்ஸ் அண்ட் இன்ஜினீயரிங், எம்.டெக்., இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி போன்ற இரண்டாண்டு படிப்பில்... செமினார், பேப்பர் பிரசன்டேஷன், புராஜெக்ட் என கணிப்பொறியாளருக்கு வேண்டிய அனைத்து கூடுதல் பயிற்சிகளும் வழங்கப்படும். இதற்கான கட்டணமாக அரசு கல்லூரிகளில் ஆண்டுக்கு 50 ஆயிரம் ரூபாயும், தனியார் கல்லூரிகளில் ஒரு லட்சம் ரூபாயும் வசூலிக்கப்படுகிறது'’ என்றவர் கலை, அறிவியல் கல்லூரிகளில் உள்ள கணிப்பொறி படிப்புகளைக் குறிப்பிட்டார்.

''பி.எஸ்சி., கம்ப்யூட்டர் சயின்ஸ், இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி, பி.சி.ஏ. உள்ளிட்ட மூன்றாண்டு இளங்கலை பட்டப்படிப்புகளும், எம்.எஸ்சி., கம்ப்யூட்டர் சயின்ஸ், எம்.எஸ்சி., இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி உள்ளிட்ட இரண்டாண்டு முதுகலை படிப்புகளும் அனைத்து கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளிலும் இருக்கின்றன. மூன்றாண்டு முதுகலை படிப்பான எம்.சி.ஏ., கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பல்வேறு பொறியியல் கல்லூரிகளில் நடத்தப்படுகிறது.  

அ முதல் ஃ வரை -   7

மற்ற துறைகளைப் போல் இதிலும் எம்.ஃபில்., பி.ஹெச்டி. படிப்புகள் உள்ளன. கல்லூரிப் பேராசிரியர் ஆக விரும்புகிறவர்கள் இவற்றை எடுத்துப் படிக்கிறார்கள். இந்தத் துறையிலும் ஆராய்ச்சி மாணவர்கள் அதிகளவில் படித்து வருகிறார்கள். இதையெல்லாம் தாண்டி இன்றைக்கு ஏராளமான துணைப்படிப்புகளும் உள்ளன. மற்ற துறை படிப்புகளைத் தேர்ந்தெடுத்திருப்பவர்களும், கணினி அறிவை வளர்த்துக்கொள்ளும் வகையில் அடிப்படை படிப்புகள் தொடங்கி ஜாவா, டாட் நெட் உள்ளிட்ட பல்வேறுவிதமான பயிற்சிகளை தனியார் மையங்கள் வழங்கிவருகின்றன. இதன் மூலமாகவும் கணிப்பொறி துறை சார்ந்த வேலைகளில் பணியமரலாம். அனிமேஷன் உள்ளிட்ட படிப்புகளும் இருக்கின்றன. இப்படி உலகெங்கிலும் எக்கச்சக்கமான வேலைவாய்ப்புகளைக் கொண்டுள்ள இந்தத் துறையில் நுழை யும் ஒவ்வொருவரும் தங்களை மென்மேலும் பட்டை தீட்டிக்கொண்டே இருந்தால், நிச்சயம் ஜெயித்துவிடலாம். இறங்குமுகம் என்பதைப் பற்றியெல்லாம் கவலைப்படத் தேவையிருக்காது'' என்று நம்பிக்கையூட்டினார்.

கொட்டும் சம்பளம்!

ஒரு காலத்தில் டாக்டர், பொறியாளர் பணிகளில்தான் அதிக சம்பளம் என்ற  நிலை இருந்தது. இன்றோ இவர்களை எல்லாம்விட அதிகமாகச் சம்பாதிப்பவர்கள் கணிப்பொறி துறையாளர்கள் என்பதுதான் உண்மையாக இருக்கிறது. உள்நாட்டில், ஆரம்ப சம்பளமாக 15 ஆயிரம் ரூபாய் தொடங்கி, மாதம் பல லட்ச ரூபாய் வரை செல்கிறது சம்பளம். வெளிநாட்டில் என்றால், ஆரம்ப சம்பளமே 30 ஆயிரத்துக்கும் மேல். சில ஆண்டுகள் பணி அனுபவம் பெற்ற பின் சம்பளம் கிடுகிடுவென லட்சங்களில் உயர்ந்துவிடும்.

அ முதல் ஃ வரை -   7

வேலை வாய்ப்புகள்!

சென்னை, லயோலா கல்லூரி கணிப்பொறித்துறை பேராசிரியர் நெஸ்டர் ஜெயக்குமார், கணினித்துறையில் விரிந்து கிடக்கும் வேலை வாய்ப்புகள் பற்றிப் பேசினார்.

''மற்றத் துறைகளைக் காட்டிலும் அதிகமாக பணம் ஈட்டக்கூடிய துறையாக இன்றைக்கு கணிப்பொறித்துறை, குறிப்பாக மென்பொருள் துறை விளங்குவதற்கு மிகமுக்கியக் காரணம்... இதற்கான தேவை அதிகரித்துக் கொண்டே இருப்பதுதான். கல்லூரிகளிலேயே 'கேம்பஸ் இன்டர்வியூ’ முறையில் தங்களுக்கான பணியாட்களைத் தேர்வு செய்யும் நிறுவனங்கள், அடுத்ததாக அவர்களுக்கு தங்கள் அலுவலகத்திலும் அடுத்தகட்ட தேர்வுகளை நடத்தி... புரோகிராமர், அட்மின், டெஸ்ட்டர் உள்ளிட்ட பல்வேறு பணிகளை வழங்குகின்றன. மேலும், வெளிநாட்டிலும் இதற்கிருக்கும் வேலை வாய்ப்பு, இரண்டு மடங்கு சம்பளத்தையும் வாங்கித் தருகிறது. கணிப்பொறி அலுவலகங்கள் தவிர, சிறு, பெரு வணிக நிறுவனங்கள்... வலைதளம், விளம்பரம், வாடிக்கையாளர்களின் ஆன்லைன் செயல்பாடுகளைப் பராமரிக்க என தங்கள் நிறுவனத்தின் கணினித் தேவைகளுக்கு வெப் டெக்னாலஜியில் அனுபவமுள்ள இளங்கலை பட்டதாரிகளைத் தேர்வு செய்கின்றனர். இவர்களுக்கு வெப் டிசைனர், வெப் டெவலப்பர், கன்டன்ட் ரைட்டர், வெப் சர்வீஸ் டெவலப்பர், சேர்ச் இன்ஜின் ஆப்டிமைசர் என பலவிதமான பணி வாய்ப்புகள் குவிந்துகிடக்கின்றன.

'இஸ்ரோ’வில், கணினியியலில் தகுதி வாய்ந்த முதுகலை பட்டதாரிகளுக்கு பொறியாளர், விஞ்ஞானி என்று பணி வாய்ப்புகளைப் பெறலாம். தவிர, இன்றைக்கு மிகப்பெரிய அளவில் தகவல்களை சேர்த்துவைக்கும் நிறுவனங்கள் 'பிக் டேட்டா' (Big data) எனும் தொழில்நுட்பத்தை அண்மைக் காலமாக பயன்படுத்துகின்றன. இதில், 'பிக் டேட்டா டெவலப்பர்' (Big data developer) எனும் பிரிவில் கணிப்பொறித்துறையில் முதுகலை மற்றும் இளங்கலை பட்டதாரிகளுக்கு ஏராளமான வேலைவாய்ப்புகள் காத்திருக்கின்றன.

எனவே, வாய்ப்புகள் எங்கே இருக்கின்றன... எதிர்காலத்திலும் வாய்ப்புகள் தொடருமா என்பதையெல்லாம் முன்கூட்டியே ஆராய்ந்து, அத்தகைய படிப்புகளாகத் தேர்ந்தெடுத்து படிப்பதும் வெற்றியைத் தரும்'' என்று சொன்னார் நெஸ்டர் ஜெயக்குமார்.

அ முதல் ஃ வரை -   7

ஐ.டி கம்பெனி வேலை!

கணிப்பொறித் துறையில் அதிகமானோர் விரும்புவதும், அதிகமாக சம்பாதிக்க முடிவதும் 'சாஃப்ட்வேர் இன்ஜீனியர்’ என்கிற மென்பொறியாளர் பணியைத்தான். அதைப் பற்றி சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த 'காம்கேர் சாஃப்ட்வேர் பிரைவேட் லிமிடெட்’ நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி புவனேஸ்வரி.

''உடல் உழைப்பு என்பதைத் தாண்டி, இது மூளை சம்பந்தப்பட்ட வேலை. கூர்மையாகச் சிந்திக்கத் தெரிந்தவர்களும், மாற்றி யோசிப்பவர்களும் இத்துறைக்கு மிகவும் பொருத்தமானவர்கள். உதாரணமாக, ஒரு பிராப்ளத்துக்கான தீர்வைக் கண்டுபிடிக்கும் போது, எத்தனை விரைவாக அது  கண்டுபிடிக்கப்படுகிறதோ, அதை வைத்துதான் ஒருவரின் சிந்திக்கின்ற திறன் அளவிடப்படுகிறது. எல்லோரும் ஒரே மாதிரியாக சிந்தித்துக் கொண்டிருக்கும் போது, சற்று

அ முதல் ஃ வரை -   7

மாற்றி யோசித்து வித்தியாசமாக சிந்தித்து அதற்கான தீர்வை விரைவாகக் கண்டறிய வேண்டும். தனியாக வேலை செய்வதில் திறமையாக இருக்கும் பலர், குழுக்களாகப் பணி செய்யும் போது பின்தங்கி விடுவார்கள். ஆனால், இத்துறைக்கு குழுவாக பணிபுரியும் திறமை நிச்சயம் வேண்டும். ஒருவரை ஒருவர் குறைசொல்லிக் கொண்டு இருந்தால், இத்துறையில் முன்னேற முடியாது'' என்றவர், இப்பணிக்கு எப்படி ஒருவரை தேர்வு செய்கிறார்கள் என்றும் விளக்கினார்.

தேர்வு முறை!

''பெரும்பாலும் சாஃப்ட்வேர் துறைப் பணி என்பது மேலை நாட்டவர்களுடன் சம்பந்தப்பட்டது என்பதால், அவர்களுடன் புராஜெக்ட் சம்பந்தமாக அடிக்கடி பேச ஆங்கிலப் புலமை முதல் தேவையாக இருக்கிறது. நுனிநாக்கு ஆங்கிலம் தேவையில்லை என்றாலும், சொல்ல வேண்டிய விஷயத்தைப் புரியும்படி பேசுகின்ற அளவுக்கான ஆங்கிலப் புலமை அவசியம். லாஜிக்குகளை விரைவாக போடக்கூடிய அளவுக்கு ஒருவருக்கு கணிதத்தில் ஆர்வம், திறமை இருக்க வேண்டும். அதேபோல மதிப்பெண்கள் மட்டுமே இத்துறைக்கு முக்கியமல்ல...'' என்ற புவனேஸ்வரி, தேர்வு முறை உள்ளிட்ட விஷயங்களை விரிவாகவே பேசினார்.

தேர்வு முறைகள், இது பெண்களுக்கு ஏற்ற துறைதானா; இத்துறையில் பணியாற்றுபவர்களின் மனநிலை, இதிலிருக்கும் ப்ளஸ் மற்றும் மைனஸ்கள், ஆன்லைன் என்ற வகையில் வீட்டிலிருந்தே பணி செய்யும் வாய்ப்புகள் என்று அனைத்தையும் அடுத்த இதழில் பார்ப்போம்.

அறிவோம்...

 அரசு வேலை..!

ற்ற துறைகளைப் போலவே கணிப்பொறித் துறையிலும் அரசு வேலை வாய்ப்புகள் உள்ளன. உதாரணமாக, கணிப்பொறித் துறையில் எம்.ஃபில்., பி.ஹெச்டி., படிப்பை முடித்தவர்கள், மத்திய அரசு நடத்தும் 'நெட்’ தேர்வினையும், மாநில அரசு நடத்தும் 'ஸ்லெட்’ தேர்வினையும் எழுதித் தேர்ச்சி பெற்றால், அரசு கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் பேராசிரியர் பணியில் சேரலாம். எம்.பில்., பி.ஹெச்டி. முடித்தவர்கள், தனியார் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் விரிவுரையாளராக சேரலாம். பி.எட்., எம்.எட். படிப்பில் கணிப்பொறித் துறையை தேர்ந்தெடுத்துப் படித்தவர்களுக்காக மாநில அரசு நடத்தும் 'டீச்சர் எலிஜிபிலிட்டி டெஸ்ட்' (Teacher Eligibility Test) மத்திய அரசு நடத்தும் 'நேஷனல் லெவல் டீச்சர் எலிஜிபிலிட்டி டெஸ்ட்' (National Level Teacher Eligibility Test) ஆகியவற்றை எழுதித் தேர்ச்சி பெற்றால், அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் பணிக்குச் சேரும் வாய்ப்பும் காத்திருக்கிறது!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism