ஸ்பெஷல் 1
Published:Updated:

ஓவியப் பள்ளிக்கு பாதைபோட்ட ஓயாத ஆர்வம்!

உ.கு.சங்கவி, படங்கள்: எஸ்.கேசவசுதன்

##~##

''எனக்குள்ள ஓயாத ஓவிய ஆர்வம். படிப்பு, திருமணம், குழந்தைகள்னு திசைகள் மாறினாலும், என் ஆர்வத்தை அப்படியே ஆவியாகவிடாம, அதுக்கான முயற்சிகளை எடுத்துட்டே இருந்தேன். இன்னிக்கு ஓவியப் பள்ளியை நடத்துற அளவுக்கு வளர்ந்திருக்கேன்...''

- மென்மையாகச் சிரிக்கிறார் மேனகா நரேஷ். சென்னை, கோபாலபுரத்தில் தன் மாணவக் குழந்தைகளுக்கு நடுவில் நின்று, ஓவியம் வரைவதை சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்த மேனகா, எந்த வகுப்புக்கும் செல்லாமல் சுயம்புவாக ஓவியரானவர் என்பது ஹைலைட்!

''ஏழாவது படிச்சப்போ, பத்திரிகையில வந்த படத்தைப் பார்த்து பார்த்து இசைஞானி இளையராஜாவை வரைய முயற்சி பண்ணினேன். ஓரளவு நல்லா வந்துச்சு. அந்த சந்தோஷத்துல அழகுக்கு ஸ்ரீதேவி, கூந்தலுக்கு டயானா, கண்களுக்கு மீனானு எல்லாரையும் வரைஞ்சு பார்த்தேன். எங்க பள்ளி ஓவிய ஆசிரியர், 'எடுத்தவொடனேயே மனித முகங்களை வரையுறது பெரிய விஷயம்’னு ஆச்சர்யப்பட்டு பாராட்டினார். ஓவியப் படிப்பு படிக்கத்தான் ஆசைப்பட்டேன். ஆனா, வீட்டில் அனுமதிக்கல. அதனால, பி.எஸ்சி, எம்.எஸ்சி., எம்.ஃபில்னு கணினிப் படிப்பை முடிச்சேன். ஓவிய ஆர்வத்துக்குத் தீனியா, 'மாயா’ங்கற ஒரு சாஃப்ட்வேர் கத்துக்கிட்டேன். மாயா சாஃப்ட்வேர்ங்கிறது கம்ப்யூட்டர்ல பண்ற த்ரீ டி அனிமேஷனோட பேர்.

ஓவியப் பள்ளிக்கு பாதைபோட்ட ஓயாத ஆர்வம்!

கணவர் நரேஷ் கல்வித் துறையில உயரதிகாரி. அதனால அடிக்கடி இடமாறுதல் வந்துட்டே இருக்கும். ஒரு கட்டத்துல சென்னையில செட்டில் ஆனோம். ஓவியப் பயிற்சிப் புத்தகங்கள் வாங்கித் தர்றது, வெளியூர்கள்ல நடக்கும் ஓவியப் போட்டிகளுக்கு கூட்டிட்டுப் போறது, ஓவியக் கண்காட்சி நடத்தறதுக்கு உதவுறதுனு கணவர்தான் பெரிய சப்போர்ட். அக்கம் பக்கத்துல எல்லாம், 'இவ்ளோ அழகா வரையறீங்க, இத்தனை போட்டிகள்ல ஜெயிக்கிறீங்க... எங்க குழந்தைகளுக்கு ஓவிய வகுப்பு எடுங்களேன்’னு கேட்க, அப்புறம் ஆரம்பிச்சதுதான் என்னோட 'மேஜிக் பிங்கர்ஸ்’ ஓவியப் பள்ளி!'' என்று மேனகா சொல்லிக்கொண்டிருக்க, ஸ்கூல் முடிந்து வந்த அவரின் இரண்டு குழந்தைகளும், ஓடி வந்து அம்மாவைக் கட்டிக்கொண்டனர்.

ஓவியப் பள்ளிக்கு பாதைபோட்ட ஓயாத ஆர்வம்!

'''குழந்தைகளுக்கு ஓவியத்தோட அடிப்படையில் இருந்து வண்ணம் தீட்டுறது வரை ஒவ்வொண்ணையும் பொறுமையா சொல்லிக் கொடுக்க வேண்டியது அவசியம். ஒரு பொருளை வரைய, அதை பகுதி பகுதியா பிரிச்சுக் காட்ட, முதல்ல 'மாயா’ல அனிமேட் பண்ணிக் காட்டுவேன். அது ஃபாலோ பண்ண சுலபமா இருக்கும்'' என்று சிரிக்கும் மேனகா, பல பள்ளிகளுக்கு பாடம் பற்றிய பல அனிமேஷன்களையும் செய்து தந்துள்ளார்.

ஓவியப் பள்ளிக்கு பாதைபோட்ட ஓயாத ஆர்வம்!

ஓவியம் மட்டுமல்ல... கைவினைப் பொருட்கள் செய்வதிலும் கலக்குகிறார் மேனகா. ''எல்.கே.ஜி. குழந்தைகளில் இருந்து திருமணம் முடிந்த பெண்கள் வரை நிறைய பேர் என்கிட்ட ஓவியம் மற்றும் கிராஃப்ட் கத்துக்கறாங்க. கிராஃப்டில் ஸ்டோன் பெயின்ட்டிங், கிளாஸ் பெயின்ட்டிங், பாட் பெயின்ட்டிங், ஜுவல்லரி மேக்கிங், ஃப்ளவர் மேக்கிங், க்வில்லிங், ட்ரீ ஹோல் பெயின்ட்டிங்னு நிறைய எடுக்கிறேன். ட்ரீ ஹோல் பெயின்ட்டிங், சுவாரஸ்யமான ஒண்ணு. மரங்கள்ல இயற்கையாவே சின்னச் சின்ன ஓட்டைகள் உருவாகும். அந்த ஓட்டைகளுக்குள்ள தத்ரூபமா வண்ணம் தீட்டி அமர்களப்படுத்தலாம்'' என்றவர், தன் ஓவியக் கண்காட்சிப் புகைப்படங்களைக் காட்டியபடி தொடர்ந்தார்...

''நடிகர் சிவகுமார் ஐயா ஒரு முறை என் ஓவியக் கண்காட்சிக்கு வந்தப்போ, 'பரவாயில்லையே... பெண்கள் எல்லாம் இப்போ இவ்வளவு அற்புதமா ஓவியம் தீட்ட ஆரம்பிச்சுட்டீங்களே..?!’னு பாராட்டினார். ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு. என் மாணவர்களோட பெற்றோர்கள் எனக்குத் தரும் ஊக்க வார்த்தைகளும் ரொம்ப சந்தோஷமான விஷயமே! ஒவ்வொரு நாளும் மாணவர்கள் ஓவியத்துல ஏதாவது ஒரு புது விஷயத்தைக் கத்துக்கணும்கிறது என்னோட விருப்பம். அதனால துளி நேரம்கூட வீணாக்காம, அவ்வளவு சின்ஸியரா கத்துக்கொடுப்பேன். 'உங்ககிட்ட வந்துட்டு எங்க பசங்களோட டிராயிங்ல நல்ல முன்னேற்றம் இருக்கு...’னு பேரன்ட்ஸ் சொல்லும்போதுதான் நிம்மதி எனக்கு!'' என்று பூரிக்கிறார் மேனகா.