Published:Updated:

கைகொடுக்கும் கல்லூரிச் சந்தை!

கைகொடுக்கும் கல்லூரிச் சந்தை!

பிரீமியம் ஸ்டோரி
##~##

'ஐ கேன்’ என்று உரக்க உற்சாகக் கூச்சலிடுகிறார்கள்... தஞ்சாவூர், பான் செக்கர்ஸ் கலை மற்றும் அறிவியல் பெண்கள் கல்லூரி மாணவிகள்! வருடா வருடம் 'ஐ கேன்’ என்ற பெயரில் இவர்கள் ஏற்பாடும் செய்யும் கல்லூரிச் சந்தை, வெகு பிரபலம். உணவில் இருந்து காஸ்மெடிக் அயிட்டங்கள் வரை முப்பதுக்கும் மேற்பட்ட ஸ்டால்கள் அமைத்து, அதில் வரும் தொகையை, கல்லூரியில் படிக்கும் ஏழை மாணவிகளின் படிப்புச் செலவுக்கு கொடுப்பதே இந்தச் சந்தையின் நோக்கம்!

இந்த வருட 'ஐ கேன்’ திருவிழாவில் பிஸியாக இருந்தது கல்லூரி. கிரவுண்டில் ஒரே கூட்டம். ஒவ்வொரு ஸ்டாலிலும் விற்பனை சூடுபிடித்துக் கொண்டிருந்தது. அனைத்தையும் பார்வையிட்ட நாம், கல்லூரி பிரசிடென்ட் சிந்துஜாவுடன் பேசிக்கொண்டே நடந்தோம்.

''2005-ம் வருஷம் சோஷியல் வொர்க் டிபார்ட்மென்ட் இந்த முயற்சியை ஆரம்பிச்சு வெச்சாங்க. கல்லூரியில் இருக்கிற 13 டிபார்ட்மென்டையும் ரெண்டு பாகமா பிரிச்சு, வருஷத்துக்கு ரெண்டு தடவை நிகழ்ச்சியை நடத்துவோம். இதுக்கான ஏற்பாடுகளைச் செய்யவேண்டிய பொறுப்பை, பிரசிடென்ட்டான என்னுடன் சேர்ந்து 9 பேர் கொண்ட குழுவும் ஏற்று நடத்துவோம். நிகழ்ச்சி நடக்கறதுக்கு முன்ன ஸ்டால் போட விரும்பும் மாணவிகள் என்ன மாதிரி ஸ்டால் போடப் போறாங்கனு லிஸ்ட் கொடுப்பாங்க. இதை வெச்சே ஒரே வகையான ஸ்டால் நிறைய வராம முறைப்படுத்திடுவோம். உணவு ஸ்டால் போடுற மாணவிகள் அவங்க அவங்க வீட்ல இருந்து அடுப்பு, விறகு, சமையல் சாமான்னு எல்லாத்தையும் காலேஜுக்கு கொண்டு வந்து, இங்க வெச்சு சமைச்சு, விற்பனைக்கு வைப்பாங்க. அதை மற்ற மாணவிகள் வாங்குவாங்க'' என்றார் சிந்துஜா.

கைகொடுக்கும் கல்லூரிச் சந்தை!

கல்லூரியின் டிரான்ஸ்போர்ட் செக்ரெட்டரி வித்யா, ''ஸ்டாலை பொறுத்தவரை, வெஜ் உணவுகள், நான்-வெஜ் உணவுகள், பேப்பர் கிராஃப்ட், ஹாரர் கேம்ஸ் ஸ்டால், ஃபன் கேம்ஸ், மெஹந்தி ஸ்டால், காஸ்மெடிக்ஸ் ஸ்டால்னு... எல்லாமே பொண்ணுங்களுக்கு பிடிச்ச ஏரியாதான். சொல்லப் போனா, தேவையைவிட... தன்னோட படிக்கிற பொண்ணுக்கு உதவ போறோம்ங்கிற நல்ல நோக்கத்துக்காகவே எங்க ஸ்டூடென்ட்ஸ் தாராளமா பர்ச்சேஸ் பண்ணுவாங்க. எங்களோட நோக்கத்தைச் சொல்லி உறவினர்கள், அக்கம் பக்கத்தினர்னு அவங்களுக்கும் வாங்கிப் போய் கொடுப்பாங்க.

வசூலாகும் பணத்தில், ஒவ்வொரு டிபார்ட்மென்டிலும் இருக்கும் ஏழை மாணவிகளைத் தேர்ந்தெடுத்து, காலேஜ் ஃபீஸ் கட்டுவோம். இந்த வருஷம் இப்போவே தோராயமா 80,000 ரூபாய்க்கு மேல கலெக்ஷன் இருக்கு. இதனால பயன்படப்போற எங்கள் தோழிகளை நினைக்கும்போது, நாங்க எடுத்த முயற்சிகளும், உழைத்த உழைப்பும் ஆத்ம திருப்தி தருது!'' என்றார் நெகிழ்ச்சியுடன்.

- கட்டுரை, படங்கள்: கு.கார்முகில்வண்ணன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு