Published:Updated:

‘நேற்று, சுமார் படிப்பு ரூபிணி... இன்று, சூப்பர் படிப்பு ரூபிணி!’

ம.பிரியதர்ஷினி

‘நேற்று, சுமார் படிப்பு ரூபிணி... இன்று, சூப்பர் படிப்பு ரூபிணி!’

ம.பிரியதர்ஷினி

Published:Updated:
##~##

 ''படிப்புல ரொம்ப சுமார் ரகம்; ஸ்கூல்ல ஃபெயில் மார்க்ஸ்; காலேஜுல அரியர் வைக்காத செமஸ்டர் இல்லை; படிச்சது முக்கால்வாசி தமிழ் மீடியம்... இப்படி பிலோ ஆவரேஜ் ஸ்டூடென்ட்தான் நான். இப்போ அமெரிக்காவுல நிலச்சரிவுகளை சேட்டிலைட் மூலமா கண்டுபிடிக்கற பிஹெச்.டி ஆராய்ச்சியாளர். எங்கம்மாவோட உந்துதல்தான் என்னை இந்த உயரத்துக்குக் கொண்டு போயிருக்கு. அதனால, ஹோம்வொர்க் செய்யும்போது, 'நீயெல்லாம் வேஸ்ட்’ என்று பிள்ளைங்களோட மல்லுக்கட்டுற நம்ம ஊர் அம்மாக்கள்கிட்ட... 'அவள் விகடன்’ மூலமா நான் கொஞ்சம் பேசலாமா?''

- இப்படி ஒரு இ-மெயில், ரூபிணி நாராயணனிடம் இருந்து வந்துவிழ... 'அட, சூப்பர்ல' என்றபடி போன் மூலமாக தொடர்பு கொண்டோம். குஷி பொங்கப் பேசித் தள்ளினார் ரூபிணி.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''அப்பா சந்தனமகாலிங்கம், ரயில்வேயில டெபுடி சீஃப் இன்ஜினீயர். மதுரையில நாங்க குடியிருந்தாலும்... வேலை காரணமா பல ஊர்களுக்கு மாற்றல் ஆயிட்டே இருப்பார். அம்மா, நான், தம்பி, ரெண்டு வீட்டு பாட்டி, தாத்தா இதுதான் குடும்பம். ரொம்ப கண்டிப்பானது எங்களோட வீடு. அம்மா, அந்தக் கால ப்ளஸ் டூ. அப்பாவைப் பார்க்கறதுக்காக அடிக்கடி சிட்டிக்கு போயிட்டு வர்றப்போ எல்லாம், 'டவுனு குழந்தைங்க என்னம்மா இங்கிலீஷ் பேசுறாங்க! நீயும் அப்படி பேசினா சூப்பரா இருக்கும்ல!’னு தன்னோட ஏக்கத்தை, என் மேல திணிக்காத மாதிரி, அழகா சொல்வாங்க எங்கம்மா.

அவங்களுக்கு இங்கிலீஷ் தெரியாது. ஆனா, நான் கத்துக்கணும்ங்கிறதுக்காக அவங்க மெனக்கெட்டது கொஞ்சநஞ்ச மில்ல. டி.வி-யில வர்ற இங்கிலீஷ் நியூஸை ரெண்டு பேரும் சேர்ந்து பார்ப்போம். எனக்காக இங்கிலீஷ் நியூஸ் பேப்பர் வாங்கி, அதுல உள்ள வார்த்தைகளைப் படிச்சுக் காட்டி, சின்னச் சின்ன வாக்கியங்களா தானும் முயற்சி பண்ணி, என்னையும் முயற்சி பண்ணச் சொல்லுவாங்க.

‘நேற்று, சுமார் படிப்பு ரூபிணி... இன்று, சூப்பர் படிப்பு ரூபிணி!’

நான் படிச்ச மதுரை, மெட்ரிகுலேஷன் ஸ்கூல்ல புத்தகங்கள் மட்டும்தான் இங்கிலீஷ். மத்தபடி வகுப்பு பிரேயர் எல்லாம் தமிழ் மீடியம் போலத்தான். ஒரு சப்ஜெக்ட்ல 60 வாங்கினா, பல சப்ஜெக்ட்ல 20 தாண்டாது. அப்பா பயங்கரமா திட்டுவார். ஆனா, திட்டவோ, அடிக்கவோ, மற்ற பிள்ளைங்களோட ஒப்பிட்டுப் பேசவோ செய்யாம... 'ஒரு பாடத்துல 60 மார்க் எடுத்த உன்னால, மத்த பாடங்கள்லயும் எடுக்க முடியும்தானே? உண்மையில் நீ உங்க கிளாஸ்ல ஃபர்ஸ்ட் மார்க் எடுத்த பொண்ணைவிட அறிவு. ஆனா, அதைப் பயன்படுத்தி அவ படிக்கிறா... நீ படிப்புல கொஞ்சம் விளையாட்டா இருக்கே’னு பாஸிட்டிவா பேசி உற்சாகப்படுத்திட்டே இருப்பாங்க அம்மா. பத்தாவதுல நான் ஜஸ்ட் பாஸ் மதிப்பெண்கள்தான். ஆனா, அம்மாவோட தொடர் ஊக்கம், ப்ளஸ் டூ-ல ஆயிரத்துக்கு மேல வாங்க வெச்சுது.

ஸ்கூல் முடிச்சதுமே பொண்ணுங்களுக்கு கல்யாணம்கிறதுதான் எங்க வீட்டு வழக்கம். என் விஷயத்துல அதையும் அம்மா அதிரடியா மாத்தினாங்க. 'எதுவரைக்கும் படிக்கணுமோ... அதுவரை படி. எப்போ கல்யாணம் பண்ணிக்கணும்னு தோணுதோ அப்ப சொல்லு’னு அம்மா சொன்ன வார்த்தை இன்னும் மறக்கல.

அப்பாவோட ஆசைப்படி சிவில் இன்ஜினீயரிங் சேர்ந்தேன். ஆனா, பேப்பருக்கு பேப்பர் அரியர்ஸ். வெறுத்துப் போய் மாப்பிள்ளை தேட ஆரம்பிச்சுட்டார் அப்பா. அந்த சமயத்துலயும், சப்போர்ட்டா நின்னாங்க அம்மா. ஒருவழியா எல்லா அரியர்களையும் க்ளியர் பண்ணிட்டு, 'மேல படிக்கப் போறேன்'னு பிடிவாதம் பண்ணின எனக்கு, வீட்டுல தடை. வழக்கம் போல அம்மா துணை நின்னாங்க. புனே, 'சிம்பியாஸிஸ்’ல ஜி.ஐ.எஸ் படிக்கறதுக்கு நுழைவுத்தேர்வு எழுதினேன். இதுவும் அப்பா விருப்பப்படிதான். தனி ஆளா மதுரையையே தாண்டாத நான், புனேவுக்கு டிரெயின்ல போனப்போ, 'உன் படிப்பும், தன்னம்பிக்கையும் கூடவே வருது பயப்படாதே’னு தைரியம் சொல்லி அனுப்பினதும் அம்மாதான்.

‘நேற்று, சுமார் படிப்பு ரூபிணி... இன்று, சூப்பர் படிப்பு ரூபிணி!’

சிம்பியாஸிஸ் குரூப் டிஸ்கஷன்ல 'ஏன் இன்னும் டெக்னாலஜியில பெண்கள் பெருசா முன்னேற முடியலை'ங்கறதுதான் தலைப்பு. 'அதுக்கு பெண்கள் மட்டும்தான் காரணம். எனக்கு கிச்சன் வேணுமா... சயின்ஸ் வேணுமாங்கிறதை நான் மட்டும்தான் தீர்மானிக்க முடியும். தீர்மானிச்சுட்டா, எந்த முட்டுக்கட்டையையும் தாண்டி ஒரு பொண்ணால வர முடியும்’னு பேசினேன். எனக்கு ஸீட் கிடைச்சுது.

அங்க ஒரு அமெரிக்கன் புரொஃபசரை சந்திச்சப்ப, 'வெளிநாட்டுல நீ ஸ்காலர்ஷிப்போட பிஹெச்.டி படிக்கலாம், உன்னோட படிப்புக்கு நிறைய வாய்ப்புகள் இருக்கு. நீ டோஃபல், ஜி.ஆர்.இ டெஸ்ட் எல்லாம் எழுதணும்’னு வழிகாட்டினார். கிராமப் பின்னணியில வந்த எனக்கு இதெல்லாம் தெரியாம இருந்துச்சு. தேடித் தேடி தகவல்கள் சேகரிச்சு, ரெண்டு டெஸ்ட்லேயும் நல்ல மதிப்பெண்கள் வாங்க, அமெரிக்காவின் 'ஆரிகென் ஸ்டேட் யுனிவர்ஸிட்டி'யில ஸ்காலர்ஷிப்போட இடம் கிடைச்சுது. போராடி அப்பாகிட்ட அனுமதி வாங்கித் தந்த அம்மா, அடிப்படை செலவுகளுக்கும் பணம் வாங்கித் தந்தாங்க. ஒரு வருஷத்துக்கான படிப்பு செலவு 30 லட்ச ரூபாய். இதை யுனிவர்ஸிட்டியே ஏத்திருக்கு'' என்று பெருமை பொங்க பேசிய ரூபிணி, தன் படிப்பு பற்றி விஷயங்களுக்குள் புகுந்தார்.

''பொதுவா நில அதிர்வுகள்ல இருந்து மக்களைக் காப்பாத்திடலாம். ஆனா, நிலச்சரிவு ரொம்ப மோசமானது. அதை பத்தி படிக்கிறது, ஆராய்ச்சி பண்றதுதான் என் படிப்பு. எந்தப் பகுதியில நிலச்சரிவு ஏற்படப் போகுது, கடல் அரிப்புனால எவ்வளவு நிலச் சரிவுகள் ஏற்பட்டிருக்கு, நிலச்சரிவுகள் ஏற்படுறதுக்கான வாய்ப்புகள் எத்தனை சதவிகிதம் இருக்குதுங்கிறதையெல்லாம் கண்டுபிடிக்க நவீன சேட்டிலைட் அமெரிக்காவுல இருக்கு. ஆனா, நார்மல் கருவிகளை வெச்சு எப்படி கண்டுபிடிக்கிறதுங்கறதுதான் என் பிஹெச்.டி! கலிஃபோர்னியா பார்டர்ல இருந்து வாஷிங்டன் வரை நான் பொறுப்பேற்றிருக்கிற ஏரியா. வர்ற மே மாசத்தோட பிஹெச்.டி முடியுது'' என்றவர்,

''என் படிப்புக்கு கைநிறைய சம்பளம் அமெரிக்காவுலயே கிடைக்கும். ஆனா, எனக்கு அதுல இஷ்டம் இல்லை. பரந்து விரிந்து கிடக்கும் படிப்புகள், அதற்கான பயிற்சிகள், படிப்புக்கான வேலைவாய்ப்புகள், வெளிநாட்டுப் படிப்புக்கான ஸ்காலர்ஷிப் போன்ற விழிப்பு உணர்வு தகவல்களை நம்ம ஊர் மாணவ, மாணவிகளுக்கு சொல்லித் தரணும். 'என்னை மாதிரி ரொம்ப ஆவரேஜான பொண்ணே இந்தளவு படிச்சு வந்திருக்கும்போது, உங்களால எவ்வளவு முடியும்?!’னு எங்கம்மா எனக்குத் தந்த தன்னம்பிக்கையை, அவங்களுக்கும் தரணும். இதுதான் என் லட்சியம்!'' என்பவருக்கு, கோயம்புத்தூர், இன்கம்டாக்ஸ் அசிஸ்டென்ட் கமிஷனர் நாராயணனுடன் சமீபத்தில்தான் திருமணம் முடிந்திருக்கிறது!

''ஃபார்மலா சொல்லத் தெரியல. எல்லாத்துக்கும் தேங்க்ஸ் டு அம்மா!'' என்றார் குழந்தையாக!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism