Published:Updated:

அ முதல் ஃ வரை - 8

100% மதிப்பெண்கள்... இங்கே முக்கியமல்ல!சா.வடிவரசு, படங்கள்: பா.காளிமுத்து, பா.ஓவியா பணம் கொட்டும் கணினித்துறை! சென்ற இதழ் தொடர்ச்சி...

அ முதல் ஃ வரை - 8

100% மதிப்பெண்கள்... இங்கே முக்கியமல்ல!சா.வடிவரசு, படங்கள்: பா.காளிமுத்து, பா.ஓவியா பணம் கொட்டும் கணினித்துறை! சென்ற இதழ் தொடர்ச்சி...

Published:Updated:
##~##

 ணினித்துறை சார்ந்த படிப்புகள், வேலை வாய்ப்புகள், கொட்டும் சம்பளம், ஐ.டி துறை... என்று கணினித்துறை பற்றி கடந்த இதழில் பார்த்தோம். இத்துறையின் வேலைகளுக்கான தேர்வு முறைகள்; இது பெண்களுக்கு ஏற்ற துறைதானா; இத்துறையில் பணியாற்றுபவர்களின் மனநிலை; இதிலிருக்கும் ப்ளஸ் மற்றும் மைனஸ்கள்; ஆன்லைன் என்ற வகையில் வீட்டிலிருந்தே பணி செய்யும் வாய்ப்புகள் என்று அனைத்தையும் இந்த இதழில் பார்ப்போம்.

''மதிப்பெண்கள் மட்டுமே இத்துறைக்கு முக்கியமல்ல...'' என்று கடந்த இதழில் முடித்திருந்த சென்னையைச் சேர்ந்த 'காம்கேர்’ புவனேஸ்வரி, அதைப் பற்றி தொடர்கிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மதிப்பெண்கள் மட்டுமே முக்கியமல்ல..!

''கல்லூரி மாணவர்களுக்காக நடத்தப்படுகின்ற கேம்பஸ் இன்டர்வியூக்களில், மதிப்பெண் அடிப்படையிலான தேர்வு முக்கியத்துவம் பெறுகிறது. ஆனால், மதிப்பெண்களை வைத்து அவர்களின் அறிவை நிர்ணயம் செய்வதில்லை. அவர்களின் மனோநிலையை ஆராய்வோம். அதாவது ஒவ்வொரு செமஸ்டரிலும் ஏற்ற இறக்கமாக மதிப்பெண்களைப் பெற்று, ஒட்டு மொத்தமாக 80, 90, 95 சதவிகிதம் மதிப்பெண் பெற்றிருப்பவர்களைவிட, ஏற்ற இறக்கமில்லாமல் எல்லா செமஸ்டர்களிலும் ஆவரேஜ் மதிப்பெண் பெற்றிருப்பவர்கள் 60, 70 சதவிகித மதிப்பெண்ணே பெற்றிருந்தாலும், அவர்களுக்கே முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. ஏனெனில், அவர்களால்தான் புராஜெக்ட்டின் ஆரம்பத்தில் இருந்து இறுதி வரை ஒரே மாதிரி மனநிலையில் பணி செய்ய முடியும் என்பதுதான்.

படிப்புக் காலங்களில் புராஜெக்ட், இன்டன்ஷிப், பேப்பர் பிரசன்டேஷன் என்று விடுமுறை நாட்களை பயனுள்ளதாக்கும் மாணவர்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்படும். எந்நேரமும் சதா புத்தகமும், கையுமாக இருந்து படித்து 100 சதவிகித மதிப்பெண் பெற்றிருப்பவர்களைவிட, மதிப்பெண் குறைவாக பெற்றிருந்தாலும், தயக்கமில்லாமல் பேசுவது, தலைமை தாங்கும் திறன், ஆங்கிலப் புலமை, விரைவாக முடிவெடுக்கும் திறன், சகிப்புத்தன்மை, பொறுமை, விட்டுக்கொடுக்கும் ஆற்றல், குழுவாக இயங்குவதில் சிரமம் இல்லாமை, அனைவரையும் அனுசரித்துச் செல்லும் குணம், சொல்வதைப் புரியும்படி சொல்லுகின்ற ஆற்றல் போன்றவை உள்ளவர்களே இத்துறைக்கு தேவைப்படுகிறார்கள். எனவே, அப்படிப்பட்டவர்களை தேர்வு செய்வதிலேயே எல்லா நிறுவனங்களும் ஆர்வம் காட்டுகிறார்கள்'' என்றவரிடம், ''இது பெண்களுக்கு ஏற்ற துறைதானா?'' என்று கேட்டோம்.

அ முதல் ஃ வரை - 8

இத்துறையில் பெண்களால் சாதிக்க முடியும்!

''சவால் நிறைந்த துறைதான். ஆனால், சகிப்புத்தன்மை, பொறுமை, குழு மனப்பான்மை என நான் மேலே சொன்ன குணங்கள் எல்லாம் பெண்களுக்கு பொதுக்குணம் என்பதால், இது நிச்சயமாக அவர்களுக்குப் பொருத்தமான துறை. ஃப்ரீக் அவுட் ஆன இந்தத் துறையில், 'என் எல்லை, உன் எல்லை இதுதான்’ என்ற ஆளுமையை ஒவ்வொரு பெண்ணும் ஆரம்பத்தில் இருந்தே ஆண்களின் மனதில் விதைத்துவிட்டால், நல்லதொரு நட்பு வட்டத்தை உருவாக்கிக் கொண்டு வேலையில் முழுமையாக கவனம் செலுத்தினால்... நிச்சயம் பெண்களால் இத்துறையில் ஜமாய்க்க முடியும்'' என்றார் மகிழ்ச்சியுடன்.

சவாலே சமாளி!

பெங்களூரு ஐ.பி.எம். நிறுவனத்தில் பணிபுரியும் ஸ்ரீதேவி, இத்துறையில் உள்ள சவால்கள் பற்றிக் கூறும்போது, ''உடை, உணவு, உறங்கும் நேரம் என அனைத்திலும் ஏற்படும் வாழ்க்கை முறை மாற்றம், ஐ.டி. துறையில் வேலை பார்க்கும் பெண்களுக்கு சமூகம் கொடுக்கும் மதிப்பீடு, பணியிடத்தில் ஏற்படும் பாலியல் வன்முறை, குறிப்பிட்ட காலத் துக்குள் வேலையை முடிக்க வேண்டிய கட்டாயத்தினால் ஏற்படும் ஸ்ட்ரெஸ் என்று இங்கே நிறையவே சவால்கள் இருக்கின்றன. இது எல்லா வேலைகளிலும் இருந்தாலும், இந்தத் துறையில் கொஞ்சம் கூடுதலே! அதிலும் பெண்கள், அதிகமான சவால்களை இத்துறையில் எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

அ முதல் ஃ வரை - 8

எப்போதுமே மூளைக்கு வேலை தருகிற வேலை என்பதால், சில மணி நேரங்களுக்கு மேல் தொடர்ந்து வேலை செய்ய முடியாது. அதேபோல நினைத்த நேரத்தில் விடுமுறையும் எடுக்க முடியாது. அப்படியே சில தவிர்க்க முடியாத காரணத்தால் விடுமுறை எடுத்தாலும், சில நிறுவனங்களில் அன்றைய வேலையை வீட்டிலிருந்தபடியே செய்தாக வேண்டும். இதனை நிறுவனங்களும் தொடர்ந்து ஆன்லைன் வழியாக கண்காணித்துக் கொண்டே இருக்கும். கண்டிப்பான பணி ஒப்பந்தம், வேலைப் பளு காரணமாக மன அழுத்தம், இரவு நேரப் பணி என்று அனைத்தையும் கடக்க வேண்டும். இது பணி உத்தரவாதமில்லாத துறை என்பதும் இங்கே முக்கியமாகக் குறிப்பிடப்பட வேண்டிய ஒன்று.

மற்ற துறைகளைக் காட்டிலும் இந்தத் துறையில் பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள் அதிகமாக இருக்கிறது என்பது உண்மையே. அதற்கான காரணம்... பணிபுரியும் சூழல்தான். இதையெல்லாம் சரிசெய்ய எல்லா ஐ.டி நிறுவனங்களிலும் பாதுகாப்பு அமைப்புகள் தொடங்கப்பட்டு, தற்போது நன்றாகவே செயல்பட்டு வருகின்றன. இரவு நேரப் பணி என்றால் எல்லா நிறுவனங்களும் தங்களது பணியாளர்களை பேருந்தில் கொண்டு சென்று வீட்டிலேயே விடுகிறார்கள்'' என்றவர்,

''வீட்டில் இருக்கும்போது எப்படி இருந்தாலும், அலுவலகத்துக்கு வரும்போது, அலுவலக சூழலுக்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொள்ள வேண்டும். பல வீட்டில் இதையெல் லாம் ஏற்றுக்கொள்வதில்லை. குறிப்பாக கிராமப்புற பின்னணியிலிருந்து வரும் பெண்களின் குடும்பத்தினர் ஏற்றுக்கொள்வதில்லை. இந்த துறைக்கு ஏற்ப ஒருவர் தன்னை சரிவர மாற்றிக்கொண்டால், பாதுகாப்பாக வேலையில் நீடிப்பதோடு... அதிக பணத்தையும் நிச்சயம் சம்பாதிக்க முடியும்'' என்று நேர்பட சொல்லி முடித்தார்.

ஆன்லைன் வேலை!

கல்லூரியில் படிக்கும்போதே நண்பர்களோடு சேர்ந்து வீட்டிலேயே சொந்தமாக ஐ.டி கம்பெனி தொடங்கி, கடந்த மூன்று ஆண்டுகளாக அதை வெற்றிகரமாக நடத்திக் கொண்டிருக்கிறார்... சென்னையைச் சேர்ந்த மைக்கேல் ஆல்வின். ''2010-ம் ஆண்டு லயோலா கல்லூரியில் இளங்கலை மூன்றாமாண்டு கணிப்பொறி அறிவியல் படிக்கும்போது, நண்பர்கள் சிலர் இணைந்து வீட்டிலேயே ஐ.டி கம்பெனி தொடங்க முடிவெடுத் தோம். 'ஜெம் கியூப்ஸ் மென்பொருள் நிறுவனம்’ (Gem3s Software Solutions) என்ற பெயரில் தொடங்கிய எங்களது நிறுவனத் துக்கு, நண்பர்களின் உதவியோடு சின்னச் சின்ன புராஜெக்ட்கள் வரத்தொடங்கின. இரவு, பகல் பாராமல் சிறப்பாக செய்துகொடுத்தோம். அதனால் எங்களைத் தேடி பெரிய பெரிய புராஜெக்ட்கள் வர ஆரம்பித்தன. இன்னும் சில நண்பர்களும் இணைய... வெளிநாட்டு நிறுவனங்களிடம் இருந்தெல்லாம் ஆர்டர்களைப் பெற்றோம்.

அ முதல் ஃ வரை - 8

எங்கள் நிறுவனத்தில் பணிபுரியும் யாருக்கும் மாதத்துக்கு இவ்வளவு சம்பளம் என்று கிடையாது. கிடைக்கும் புராஜெக்டைப் பொறுத்து எவ்வளவு பணம் கிடைக்கிறதோ அதை பிரித்துக்கொள்வோம். எங்கள் நிறுவனத்தில் நான் உள்ளிட்ட சிலர் மேற்படிப்பை தற்போது தொடர்கிறோம். கல்லூரி முடிந்தவுடன் தினமும் நிறுவனத்துக்கு வந்து வேலை பார்க்க ஆரம்பித்துவிடுவோம்.

இன்றைக்கு அதிகமான வெளிநாட்டு நிறுவனங்கள், எங்களைப் போன்ற இளைஞர்களிடம் அதுவும் வீட்டிலிருந்தே செய்து கொடுக்கும் நபர்களிடம்தான் தங்களின் புராஜெக்ட்டை கொடுக்க விரும்புகிறார்கள். காரணம், குறித்த நேரத்தில், கூடுதல் கவனத்தோடும், சிறப்பாகவும் செய்துகொடுப்பார்கள் என்று நம்புவதுதான். ஆன்லைன் வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டால், வீட்டிலிருந்தபடியே நிம்மதியாக சம்பாதிக்க முடியும்'' என்று மகிழ்ச்சியோடு சொன்னார்.

வீட்டிலிருந்தே வேலை?!

'பெண்கள், வீட்டில் இருந்தே ஐ.டி துறையில் பணிபுரிவது சாத்தியமா?’ என்று டி.சி.எஸ் நிறுவனத்தின் சாஃப்ட் ஸ்கில் டிரெயினர் ரேகாவிடம் கேட்டதற்கு, ''வெளிநாடுகளில் இது பரவலாக நடைமுறையில் இருக்கிறது. பல நிறுவனங்கள் வீட்டில் இருந்தே பணிகளை முடித்து அனுப்பக்கூடிய (Work From Home) வசதியை பணியாளர்களுக்கு வழங்கிவருகின்றன. இந்தியாவைப் பொறுத்தவரையில் நிரந்தரமாக வீட்டிலிருந்தே பணிபுரிய எந்த நிறுவனமும் அனுமதிப்பது கிடையாது. மகப்பேறு காலம் உள்ளிட்ட சில தவிர்க்கமுடியாத காரணங்களுக்காக பெண்களுக்கு மட்டுமே அனுமதி கிடைக்கும். ஆனால், இப்படிச் செய்யும்போது, இந்தியக் குடும்பச் சூழலில் இருந்துகொண்டு அலுவலகப் பணியை சரிவர செய்ய முடிவதில்லை என் பதுதான் பெரும்பாலும் எதார்த்த மாக இருக்கிறது. காரணம், ஐ.டி துறை சார்ந்த வேலைகள் அனைத் தும் குழு சார்ந்த மற்றும் மூளைக்கு அதிக வேலை கொடுக்கக் கூடியதாகவே இருக்கும். அதனால், அலுவலகச் சூழலில் குழுவாக இணைந்தால்தான் சரிவர செய்ய முடியும். எனவே, இந்தியாவைப் பொறுத்த வரை வீட்டிலிருந்தே செய்வது 99 சத விகிதம் சாத்தியமில்லாத ஒன்றுதான்...'' என்றார்.

அ முதல் ஃ வரை - 8

வருங்காலம் எப்படி இருக்கும்..?

1990-களிலும் அதற்கு முந்தைய காலகட்டங்களிலும் நம் நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டம் தலைவிரித்து ஆடிக் கொண்டிருந்தது. அது 2000-த்தின் தொடக்கம் வரை நீடித்தது. அதன்பின் கால்சென்டர், பி.பீ.ஓ, ஐ.டி துறை என்று வெவ்வேறு பெயர்களில் உருவான கணிப்பொறி துறை சார்ந்த வேலைவாய்ப்புகள் இந்நிலையை அடியோடு மாற்றி, இன்றைக்கு எக்கச்சக்கமான வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளது.

பல நாடுகள் இன்றைக்கு கணிப்பொறித் துறையில் தங்களது கொடியினை நாட்டி வந்தாலும், அமெரிக்காதான் அதிக ஆதிக்கம் செலுத்தி வருகிறது. அமெரிக்க நிறுவனங்களில் பணிபுரிவதிலேயே, இந்தியாவைச் சேர்ந்த பலரும் ஆர்வம் கொண்டுள்ளனர்.

அ முதல் ஃ வரை - 8

சாஃப்ட்வேர் தயாரிப்புகளில் பெருமளவு பங்கெடுக்கும் 'ஆர்.என்.டி'  (RND-Research and Development) துறையில் பணிபுரிய இன்றைக்கு அதிக இளைஞர்கள் விரும்புவது கிடையாது. காரணம் இதற்கு, ஆழ்ந்த புலமையும், கடுமையான உழைப்பும் தேவைப்படுகிறது. இதனால், மேலைநாடுகளில் இருந்து புராஜெக்ட் ஆர்டர் எடுத்து செய்து கொடுத்து, வருமானத்தை ஈட்டும் நிறுவனங்களே இன்றைக்கு பெரும்பாலும் வளர்ந்துள்ளன. இதுவே சுலபமாக இருப்பதால், நம்நாட்டு நிறுவனங்களும், சாஃப்ட்வேர் தயாரிப்புப் பணிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல், புராஜெக்ட் செய்து கொடுக்கும் சுலபமான பணிகளுக்கே முக்கியத்துவம் கொடுக்கின்றன. இதனால் நாளுக்குநாள் கணிப்பொறித்துறை வளர்ச்சியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.  

தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்து வந்த இந்தத் துறை, சமீபகாலமாக இறங்குமுகத்தில் இருப்பதாக ஒரு பேச்சிருக்கிறது. அதற்கு தகுந்தாற்போல பல நிறுவனங்கள் சம்பளக் குறைப்பு செய்திருக்கின்றன. இத்துறையின் வளர்ச்சி, வீழ்ச்சி என்பது அயல்நாடுகளில் இருந்து கிடைக்கிற புராஜெக்ட்டுகளின் வரவு கூடுவதையும், குறைவதையும் பொறுத்தே அமைகிறது.

ஆனால்... கல்வி, மருத்துவம், கட்டடக்கலை, வங்கி என கணினித் துறை மூலமாக நம் நாட்டில் செய்ய வேண்டிய வேலைகளே இன்னும் ஏராளமாக உள்ளன. அந்த வகையில் இத்துறையில் கூடிய சீக்கிரத்தில் இன்னும் எக்கச்சக்கமான வேலைவாய்ப்புகள் உருவாகும். தயாராகுங்கள்!

அறிவோம்...

ப்ளஸ், மைனஸ்!

ப்ளஸ்: வொயிட் காலர் ஜாப், கை நிறைய சம்பளம், நினைத்ததை வாங்கக் கூடிய பொருளாதார வசதி!

மைனஸ்: பணி உத்தர வாதம் இல்லாமை; இரவு, பகல் பாராமல் வேலை; 8 மணி நேரத்துக்கும் மேல் வேலை; நேரத்துக்கு சாப் பாடு, தூக்கம் இல்லாதது; குடும்பத்தை சரிவர கவனிக்க முடியாதது; உடல் மற்றும் மனம் சார்ந்த பல்வேறு பிரச் னைகள். பெண்களுக்கு, திரு மணத்தில் ஏற்படும் பிரச்னை தொடங்கி... குடும்பம், குழந்தை, பணியிடம் என்று எக்கச்சக்கமான பிரச்னைகள். பணியிடங்களில் ஏற்படும் பாலியல் தொந்தரவுகள் பெரும்பிரச்னை. வேலை, பொருளாதார வளர்ச்சி இவற் றைச் சார்ந்த விஷயங்களுக்கே முக்கியத்துவம் கொடுப்பதால், உறவுகளுக்கும், உணர்வு களுக்கும் முக்கியத்துவம் கொடுக்க முடியாமல் போவது.

அ முதல் ஃ வரை - 8

மனமே நலமா!

ணிப்பொறித்துறையில் பணிபுரிபவர்களின் மனநிலை எப்படியெல்லாம் பாதிக்கப் படுகிறது என்பது பற்றி பிரபல மனநல மருத்துவர் அபிலாஷாவிடம் பேசியபோது, ''என்னதான் அதிகமாக சம்பளம் கொடுத்தாலும், அதற்கு ஏற்ப ஒருவரை வேலை வாங்கிவிடுகிறார்கள். மூளையைச் சார்ந்த வேலையாக இருப்பதால், மிக விரைவில் மன அழுத்தம் சூழ்ந்து விடுகிறது. இதனால், இத்துறை மூலமாக நாம் பெறுவதைவிட, தொலைப்பதே அதிகமாக இருக்கிறது.

முன்பெல்லாம் எதுவுமே சொல்லாத குடும்பம்கூட, ஒரு பெண் ஐ.டி வேலையில் சேர்ந்தபிறகு, 'நீ ஐ.டி கம்பெனியில வேலை செய்யுறல்ல.. அதான் இப்படி!’ என்பார்கள். சமூகத்தில் உள்ளவர்களும், 'இவ பாருடா எப்படி இருந்தவ.. இப்படி மாறிட்டா!’ என்று பேசுவார்கள். இது பலவிதமான பாதிப்புகளை உண்டாக்குவதோடு, அதிகபட்ச மன அழுத்தத்தையும் உருவாக்கிவிடும்.

குடும்பப் பெண்கள் இரவு, பகல் என்று மாறிமாறி வேலைக்கு செல்வதால் குடும்பத்தை கவனித்துக்கொள்ள முடியாமல் போகிறது. சில குடும்பங்களில் கணவன் - மனைவி இருவருமே ஐ.டி துறையில் பணிபுரிவதால் தாத்தா, பாட்டிகளிடமோ அல்லது மற்றவர்களிடமோதான் குழந்தைகள் வளர்கிறார்கள். குழந்தைகள், பெற்றோர்களின் பாசத்துக்காக ஏங்கித் தவிக்கிறார்கள்.

ஐ.டி துறையில் பணிபுரியும் அதிகமான ஆண்களும், பெண்களும் என்னிடம் ஆலோசனைக்காக வருகிறார்கள். இரு தரப்புமே அதிக ஈகோவுடனும், விட்டுக்கொடுத்தல் இல்லாமையுடனும் இருக்கிறார்கள் என்பதை நன்றாகவே உணர முடிகிறது. சூழலுக்கு ஏற்ப ஒவ்வொருவரும் தங்களை மாற்றிக்கொண்டு, குடும்பத்தினரை அனுசரித்துப் போகவேண்டும். 'நான்தான் அதிகமா சம்பாதிக்கிறேனே’ என்கிற எண்ணங்களை விட்டுவிட்டு, தனக்கான கடமைகளை சரிவர செய்தால், அதுவே குடும்பத்தில் பாதி பிரச்னைகளை ஒழித்துவிடும்'' என்று அக்கறையோடு சொன்னார் அபிலாஷா!

அ முதல் ஃ வரை - 8

40 வயதிலேயே ரிட்டையர்மென்ட்!

ணிப்பொறிதுறை வேலையைப் பொறுத்தவரை, பெரும்பாலும் ரிட்டையர்மென்ட் வயது வரை பணியில் இருப்பதில்லை. இதைப் பற்றி பேசுகிறார்... பதின்மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக ஐ.டி நிறுவனத்தில் பணிபுரிந்துவிட்டு, தற்போது தீவிர விவசாயியாக இருக்கும் திண்டுக்கல் பகுதியைச் சேர்ந்த மருதமுத்து. ''அதிக வேலை பளு, வேலை செய்யும் இடத்தில் ஏற்படும் மன அழுத்தம், தொடர்ந்து மெஷின் போன்று வேலை செய்து கொண்டிருப்பது... போன்றவையே ஒருவரை சீக்கிரத்தில் இந்தத் துறை வேலையை விட்டு வெளியேற வைக்கிறது. என்னதான் லட்சக்கணக்கில் சம்பாதித்தாலும் அது மனதளவில் திருப்தியைக் கொடுப்பதில்லை. இப்படி 40, 45 வயதிலேயே வெளியேறு பவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரிக்கிறதே தவிர, குறைந்தபாடில்லை. இப் படி வெளியேறும் நபர்கள், தாங்கள் இதுவரை சம்பாதித்த பணத்தைக் கொண்டு விவசாயம் உள்ளிட்ட வேலைகளை செய்வதிலேயே பெரிதும் ஆர்வம் காட்டுகிறார்கள். வெகு சிலரே சொந்தமாக தொழில் தொடங்க நினைக்கிறார்கள்'' என்கிறார் மருதமுத்து.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism