##~##

ள்ளியில் இருந்து வீட்டுக்கு வந்த மகளின் லன்ச் பாக்ஸைத் திறக்க, அதில் ரோஜாப்பூ இருந்ததைப் பார்த்ததும் அடிவயிறு குபீர் என குலுங்கியது அனிதாவின் அம்மாவுக்கு.

''என்ன அனிதா... லன்ச் பாக்ஸ்ல பூ இருக்கு?'' என்று அம்மா கேட்டதும், திருதிருவென விழித்தாள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''தெரியலயேம்மா... ஒருவேளை என் ஃப்ரெண்ட்ஸ் யாராச்சும் வெச்சுருக்கலாம்... நாளைக்கு கேட்டுச் சொல்றேன்...'' என்று அனிதா சொல்ல, ஆசுவாசப்படுத்திக் கொண்டாள் அம்மா.

மறுநாளும் லன்ச் பாக்ஸில் ரோஜா! இந்த முறை அம்மா கேட்டபோது அழுகையே வந்துவிட்டது அனிதாவுக்கு.

''என்னம்மா சொல்றே... ஸ்கூல்ல இருந்து வர்றப்போ லன்ச் பாக்ஸ்ல ஏதாச்சும் இருக்கானு செக் பண்ணிட்டுதான் வந்தேன். இப்போ எப்படி பூ வந்துச்சு?''

''உன்ன படிக்கத்தான் அனுப்புறேன். ஏதாவது தப்புத்தண்டா பண்றேனு   தெரிஞ்சா... கொன்னே போட்டுருவேன்!''

- கோபம் தலைக்கேற கத்தித் தீர்த்தாள் அம்மா.

அலைபாயும் நெஞ்சினிலே..! - 10

அடுத்த நாள் பள்ளி முடிந்து வீட்டுக்குச் செல்ல, வழக்கம்போல அதே பேருந்தில் ஏறினாள். வழக்கம் போலவே கூட்ட நெரிசல். புத்தகப்பையை இருக்கையில் இருக்கும் ஒருவனிடம் கொடுத்தபோதுதான்... தொடர்ந்து மூன்று நாட்களாகவே அந்த இருக்கையில் அவன் உட்கார்வது நினைவுக்கு வந்தது! இம்முறை, பையை அவனிடம் கொடுத்தாலும்... லன்ச் பாக்ஸை அவளேதான் வைத்திருந்தாள். அவளின் அனுமானம் சரியாக இருந்தது... வீட்டுக்குப் போனதும் புத்தகப் பையிலிருந்து ரோஜா சிரித்தது!

எதையும் மறைக்காமல் அம்மாவிடம் கூறினாள். 'காலம் கெட்டுக் கெடக்கு... நாளையில இருந்து ஸ்கூலுக்கு சைக்கிள்லயே போ’ என்று சொல்லிவிட்டாள் அம்மா.

இன்னும் சௌகரியமாகிவிட்டது... பிரவீனுக்கு! சொந்தமாக நான்கைந்து கடைகள் இருப்பதால், பத்தாம் வகுப்புக்கு மேல் படிக்கவில்லை. கடை வாடகை வருமானமே குடும்பத்துக்கு மிதமிஞ்சி இருப்பதால்... ஊர் சுற்றுவதே இவனுக்கு வேலை. எதேச்சையாக பேருந்தில் அவளைப் பார்த்தபோது, காதல் பற்றிக் கொண்டது. பேருந்தில் பயந்து பயந்து பின்தொடர்ந்தவன், இப்போது சைக்கிளை தைரியமாக மடக்கினான். ஒரு கட்டத்தில் தன் காதலை அவன் சொல்ல... அவள் பயந்து அழ, விடாப்பிடியாக துரத்தினான். ''நீ என்னைக் காதலிக்காவிட்டால்... தற்கொலை செய்துகொள்வேன்'’ என்று அவன் மிரட்ட... அம்மாவிடம் சொன்னாள். அம்மாவோ... படிப்பை நிறுத்துவதற்கான யோசனைகளில் ஆழ்ந்துவிட்டாள்.

ஒரு கட்டத்தில், 'பிரவீன் மாடிப்படியில் இருந்தே குதித்துவிட்டான்' என்று தகவல் கிடைக்க... பயந்து போன அனிதா, மருத்துவமனைக்கு ஓடினாள். சின்னச் சின்ன சிராய்ப்புகளுடன் படுத்துக்கிடந்தவன், ''என்ன... செத்துட்டேனானு பாக்க வந்தியா? இப்போ மாடிப்படியில இருந்துதான் குதிச்சேன். நீ ஒப்புக்கலைனா... மாடியிலிருந்தே குதிச்சிடுவேன்!'' என மிரட்ட... உறைந்து போனவள், அதீத பயத்தில்... அவன் காதலை ஏற்றுக்கொண்டாள்.

அலைபாயும் நெஞ்சினிலே..! - 10

ஆனால், அது ஒரு வெறித்தனமான காதல் என்பதை கொஞ்ச நாட்களிலேயே அவளை உணர வைத்துவிட்டான் பிரவீன். அவளை தன் கட்டுக்குள் கொண்டு வருவதையே முக்கிய குறிக்கோளாக நினைத்து செயல்பட்டவன்.... சக மாணவர்கள், கணக்கு வாத்தியார் என்று எந்த ஆணுடனும் அவள் சகஜமாகப் பேசுவதைக்கூட ஏற்றுக்கொள்ள முடியாமல் தவித்தான். 'அவர்களிடம் எல்லாம் பேசக் கூடாது’, 'கோ எட் டியூஷன் போகக் கூடாது’, 'ஸ்கூல் ஆண்டு விழாவில் பங்கேற்கக் கூடாது’, 'ஜீன்ஸ் போடக் கூடாது...’ என்று கண்டிஷன்களாக போட்டுத் தள்ளினான்.

'நான் உன் மேல அவ்வளவு பொசஸிவ்வா இருக்கேன்டி...’ என்று விளக்கம் வேறு. கூடவே, பழைய தற்கொலை மிரட்டலையும் அவன் அவ்வப்போது கையில் எடுத்தான்!

'இல்லை... இது காதல் இல்லை. நிர்ப்பந்தத்தால் பூட்டிக் கொண்ட விலங்கு. காதல் என்ற பெயரில் இதை கட்டியழுவதைவிட, இதில் இருந்து நம்மை விடுவித்துக்கொள்வதே நல்லது’ என்கிற தெளிவு அப்போதுதான் பிறந்தது அனிதாவுக்கு.

நிலைமையை வீட்டில் சொல்லி, அம்மாவின் காலைக் கட்டிக்கொண்டு மன்னிப்புக் கேட்க, காவல் நிலையத்தில் புகார் பதிவானது. இருக்கும் திசை தெரியாமல் ஓடி ஒளிந்தான் பிரவீன்.

'தற்கொலை செய்து கொள்வேன்' என்று மிரட்டல் ஆயுதத்தைக் கையில் எடுப்பற்கு பெயர் காதலா? இப்படியெல்லாம் ஆரம்பிக்கும் காதல்... இனிய இல்லறத்துக்கு வழி அமைக்கும் காதலாக இருக்குமா? நல்லவேளையாக.... 'காதல்' என்ற பெயரில் கட்டுண்டு கிடக்காமல்... தன்னை அதிலிருந்து விடுவித்துக் கொண்டாளே அனிதா. அந்த வகையில் அவள் அதிபுத்திசாலிதானே!

ஆனால், இப்படி காதலில் கட்டுண்டவர்கள் எத்தனை பேரால், அனிதா போல தீர்க்கமான முடிவை இங்கே எடுக்க முடிகிறது..? ஒருவேளை இந்த முடிவுக்கு நாம் வந்தாலும்... அதை அத்தனை எளிதில் நடைமுறைப்படுத்த அனுமதித்துவிடுகிறதா நாம் வாழும் சூழல்?

அடுத்த இதழுடன் நிறைவடைகிறது...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism