Published:Updated:

சின்ன வயசு பெரிய மனசு!

ந.கீர்த்தனா 

சின்ன வயசு பெரிய மனசு!

ந.கீர்த்தனா 

Published:Updated:
##~##

'''60 வயதிலும், தலைமுடிக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பாங்க பெண்கள். அதிலும் டீன் ஏஜ் காலத்துல முடி மேல அவங்க காட்டுற அக்கறைபத்தி சொல்லவே வேண்டாம். அப்படித்தான் நானும் இருந்தேன். ஆனா, கேன்சர் நோயாளிகளுக்கு இதே கேசத்தால் ஏற்படும் உளவியல் பிரச்னை பத்தியும்... முடிதானம் செய்றது மூலமா அதுக்கு தீர்வை தர முடியும்ங்கிறது பத்தியும் தெரிய வந்தப்போ... அந்த நொடியிலிருந்து என் தலைமுடி, எனக்கு பெரிய விஷயமாவே தோணல. வெட்டினா வளரப் போற முடி, பலரோட வாழ்க்கைக்கு தெம்பு தருதே!''

- தன் தலையை தடவிக் காட்டியபடியே படபடவெனப் பேசுகிறார் சென்னை, மகளிர் கிறிஸ்தவக் கல்லூரியில் படிக்கும் ரெனி சாரதா. கிறிஸ்தவக் கல்லூரி மற்றும் 'க்ரீன் டிரெண்ட்ஸ்’ சலூன் ஆகியவை இணைந்து, பிப்ரவரி 4 அன்று புற்றுநோயாளிகளுக்காக தொடங்கியிருக்கும் 'டேங்கில்ட்’  முடிதானம் இயக்கத்தின் இதயம், இந்த ரெனி.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''ஆங்கில இலக்கியம் இறுதியாண்டு படிக்கிறேன். கல்லூரி 'ரோட்ராக்ட்’ கிளப்ல இருக்கேன். என்னோட ஃபைனல் இயர் புராஜெக்ட்டை 'ரோட்ராக்ட்’ அமைப்போட சேர்ந்து, சமூகத்துக்கு உதவற மாதிரி செய்யணும்னு தேடிட்டு இருந்தேன். அப்பதான் 'லேக்ஸ் ஆஃப் லவ்’ங்கற அமெரிக்க என்.ஜி.ஓ. அமைப்பு, கேன்சரால பாதிக்கப்பட்டு, அதுக்காக கீமோதெரபி சிகிச்சை செய்துக்கும்போது, முடிகளை இழக்குற பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் செயற்கை விக் தயாரிச்சு வழங்கிட்டு இருக்காங்கனு கேள்விப்பட்டேன். கீமோதெரபி செய்துக்கணும்னா... முடியை இழக்க வேண்டியிருக்கும். ஆனா, மனோரீதியா அதுக்கு தைரியமில்லாததால பல பெண்கள் கீமோதெரபிக்கே சம்மதிக்கிறது இல்லை. அப்படிப்பட்டவங்களுக்கு விக் தயாரிச்சு வழங்கி, தைரியத்தைக் கொடுக்கறதுதான் இந்த அமைப்போட வேலை. 'இந்தியாவுல செயற்கை விக் ரொம்ப காஸ்ட்லி. மேலும் சிந்தடிக் விக், நம்ம நாட்டோட வெப்பத்துக்கு உடம்புல மேலும் அலர்ஜியை ஏற்படுத்தும். என்ன பண்ணலாம்?'னு யோசிக்க ஆரம்பிச்சேன்'' என்பவரின் புராஜெக்ட், அதன்பிறகு சூடுபிடிக்க ஆரம்பித்திருக்கிறது.

சின்ன வயசு பெரிய மனசு!

''என்னோட பேட்ச் மேட்ஸ் ரம்யா, சுமையா ரெண்டு பேரையும் என் முயற்சியில் இணைச்சு, அடையார் கேன்சர் இன்ஸ்டிடியூட் சைக்கோ ஆங்காலஜிஸ்ட் டாக்டர் சுரேந்திரனை சந்திச்சோம். 'என்னோட கனவு புராஜக்ட், ஹெல்ஃப் பண்ணுங்க டாக்டர்’னு நான் வேண்டுகோள் வெச்சேன். இதைக் கேட்டதுமே... 'அட, இப்படி ஒரு விஷயத்தை நான் கேள்விப்பட்டதில்ல. இதையே என்னோட கனவு புராஜெக்ட்டாவும் எடுத்துக்கிறேன்'னு ஹெல்ஃப் பண்ண ஆரம்பிச்சார்'' என்று கண்களில் ஒளிபொங்கச் சொன்ன ரெனி, தொடர்ந்தார்...

''மாதம் 100 பேருக்கு விக் தேவைப்படுதுனு ஒரு தகவலை தெரிஞ்சுகிட்ட நாங்க, எங்க இலக்கை 200 என்ற எண்ணிக்கைக்கு உயர்த்திக்கிட்டோம். இயற்கை விக்... அலசுறது, காய வைக்கிறது, பராமரிக்கிறது சுலபம்ங்கிறதோட... விலையும் குறைவு. வெட்டினா வளரப்போற முடியை பலரும் தானமா தந்தா, இலவசமாவேகூட விக் தயாரிச்சு தரலாம். 'நான் முடிதானம் தர்றேன்'னு முடிவெடுத்தா மட்டும் பத்தாது, மக்கள்கிட்டயும் இந்த விழிப்பு உணர்வை கொண்டு போகணும்னு முடிவெடுத்தோம். 'ரோட்டரி கிளப்' கணேசன் சார் மூலமா 'கெவின் கேர்’ ரங்கநாதன் சாரை சந்திச்சோம். 'க்ரீன் டிரெண்ட்ஸ் மூலமா இதை அழகா பண்ணலாம்’னு வாக்கு கொடுத்தவர், அதோட பிசினஸ் ஹெட் கோபாலகிருஷ்ணன் மூலமா உதவிகளை செய்தார்.

'நீங்க உங்க முழு முடியையும் விருப்பத்தோட கொடுத்தா சந்தோஷம். அல்லது தகுந்த ஹேர் எக்ஸ்பர்ட்ஸோட உங்க முடியில இருந்து கொஞ்சமா வெட்டியெடுக்க அனுமதி கொடுத்தாலே, பலரோட உயிர் காக்கும் சிகிச்சையில் இதுவும் ஒரு பங்காகும்’னு பெரிய பெரிய மால், பள்ளி, கல்லூரிகளுக்கு எல்லாம் போய் விழிப்பு உணர்வு ஏற்படுத்தினோம். அதோட ஒரு அங்கமாதான், புற்றுநோய் விழிப்பு உணர்வு தினமான பிப்ரவரி 4 அன்னிக்கு இதை ஒரு விழாவா நடத்தினோம். மக்களுக்கு இந்த விஷயம் சேரணும்ங்கிற நல்ல எண்ணத்தோட... டாக்டர் சாந்தா, நடிகர் பார்த்திபன், மிர்ச்சி சிவா, சினிமா தயாரிப்பாளர் சிவா, ரோட்ராக்ட் ரெப்ரசன்டேட்டிவ் ராஜ்குமார் ராஜு எல்லாரும் அதுல கலந்துகிட்டாங்க.

அத்தனை பேர் முன்னால நான் மொட்டை அடிச்சுக்கிட்டேன். இதைப் பார்த்துட்டு, 'ரோட்டராக்ட்' அமைப்புல என்கூட இருக்கிற இலங்கை ஸ்டூடென்ட்ஸ் சரண்யா, பிரேமா ரெண்டு பேரும் மொட்டை அடிச்சுக்கிட்டாங்க!  

மொட்டை அடிக்கிறது பத்தி தயங்கிட்டே எங்கம்மா சாரதாகிட்ட சொன்னப்போ, 'குட்! உன் முடி ஒருத்தருக்கு முக்கியமான கட்டத்துல உதவுப் போகுது. அந்த திருப்தி, நீ அழகா டிரெஸ் பண்ணி அதுக்காக பலர் உன்னை பாராட்டினாகூட கிடைக்காது!’னு தோள் தட்டி தந்த தைரியம்தான், என்னோட இந்த முயற்சிக்கு பக்கபலம்!'' என்று சின்னதாக சிரிக்கும் ரெனி,

''இதோட எங்க வேலை முடியல. இப்படி கிடைக்கிற முடியை வெச்சு விக் தயாரிக்கணும். அதுக்கான செலவை சமாளிக்க... கலை நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிட்டிருக் கோம். இன்னும் நிறைய உழைக்கணும்!''

- சின்ன வயதில் பிரமாண்டமாக யோசித்திருக்கும் ரெனி, மிக அழகாகத் தெரிகிறார் முடியில்லாத தலையில்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism