##~## |
'மாங்கல்யம் தந்துனானே...’ என சமஸ்கிருத சுலோகங்கள் ஒலிக்கும் திருமணங்களையே அதிகமாக நாமறிவோம். 'தமிழர்கள்' என்று சொல்லிக்கொண்டாலும், 'தமிழ் முறை திருமணம்' என்ற ஒன்று இருப்பதே பலரும் அறிந்திராதது... விந்தையே! இத்தகைய சூழலில், இலங்கையை பிறப்பிடமாகக் கொண்டு சுவிட்சர்லாந்து நாட்டின் சூரிச் நகரில் வசிக்கும் தர்ஷன் ராஜகோபால் - ஷோபா தேவராஜ் திருமணம்... செந்தமிழ் வளர்த்த மதுரை அருகே உள்ள கடம்பவனம் எனும் இடத்தில், முழுக்க முழுக்க தமிழ் ஓங்கி ஒலிக்க நடந்தது, குறிப்பிடத்தக்க நிகழ்வு!
திண்டுக்கல் - மதுரை இடையே உள்ள மலையும் மலை சார்ந்ததுமான அந்த நிலத்தில், 'கடம்பவனம்’ என்கிற பெயரில் தமிழ் பாரம்பரியம் நிறைந்ததாக அமைக்கப்பட்டிருக்கும் தனியார் ஓய்வு விடுதி அது! பெரிய அய்யனார் சிலை ஒன்று வாயில் அருகே நின்று வரவேற்க, வரிசையாக விநாயகர், முருகன், கடம்பவன சுந்தரர் என கடவுளர்கள் நிற்கிறார்கள். குன்று ஒன்றுக்குள் அமைந்திருக்கும் கலையரங்கம், மிக ரம்மியம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
வாழை மரங்கள் இருமருங் கிலும் வரவேற்க, சுவிட்சர்லாந்து, கனடா, துபாய், இலங்கை என பல்வேறு நாடுகளில் இருந்தும் வந்திருந்தனர் தர்ஷன் - ஷோபா சொந்தங்கள். ஆண்கள் அனைவரும் வேட்டி, பெண்கள் அனைவரும் புடவை அணிந்திருக்க... சுடிதார், கோட் - சூட் பார்ட்டிகளைத் தேட வேண்டியிருந்தது!
நாதஸ்வரம், மேளதாளம் அதிர மணமக்கள் அழைப்பு முடிந்து அரங்கின் மேடைக்கு அவர்கள் தனித்தனியே வந்தனர். முன்னதாக மேடை யில் பேரூர் மணிவாசகர் அருட்பணி மன்றத்தினர் (இவர்களை தமிழ் அருட் சுனைஞர்கள் என்றழைக்கிறார்கள்) அ.ம.லட்சுமிபதி ராஜ் மற்றும் ந.சீனிவாசன் தலைமையில் திருமணத்துக்கான ஏற்பாடுகள் தயாராக இருந்தன. அம்மை, அப்பன் (சிவன், பார்வதி) வழிபாட்டுக்காக மலர் மாலைகளால் அலங்கரிக்கப்பட்ட இரண்டு பெரிய கலசங்கள், மழைக்கடவுளை வழிபட மற்றொரு சிறிய கலசம்... மஞ்சள் அரிசி, நவதானியங்கள் மற்றும் வேள்விக்கான பொருட்கள் அனைத் தும் நிறைந்திருந்தன.

மணமக்களை அங்கே அமர்த்தி, விளக்கு வழிபாடு மற்றும் மழைக்கடவுள் வழிபாடு நடத்தப்பட்டது. அம்மை, அப்பனுக்கு வழிபாடு நடத்தி... 'கொடுத்தலும் கொள்ளுதலும்' (தாரை வார்த்தல்) நிகழ்வு முடிந்ததும் பெற்றோருக்கு பாதபூஜை செய்த பின், மாங்கல்ய வழிபாடு நடத்தினர். தேவாரம், திருவாசகம் உள்ளிட்ட தமிழ் வாழ்வியல் மற்றும் இறை வழிபாட்டுப் பாடல்கள் ஒலிக்க... சுமார் ஒன்றரை மணி நேரம் வழிபாடு நடத்தப்பட்டு, மணமக்களுக்கு ஒவ்வொரு பாட்டுக்கும் விளக்கம் சொல்லப்பட்டது. இறுதியில் மாங்கல்யம் அணிவித்தல் நடைபெற்றது.
''மனிதன், தன் பிறப்பு தொடங்கி இறப்பு வரையிலும் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் தமிழில் ஏராளமாக வகுக்கப்பட்டுள்ளன. ஆனால், பிறமொழிகளின் ஊடுருவல் காரணமாக, அவையெல்லாம் இன்றைய சந்ததிக்கு தெரியாமலும், புரியாமலும் போய்விட்டன. ஆனால், ஈழத்து வலிகள் ஏற்படுத் திய வடுக்களையும் தாண்டி, தமிழ்கூறும் நல்லுலகின் தனிச்சிறப்பை அனைவரும் உணர வேண்டும் என்பதற்காகவே தமிழ் வழி திருமணம் செய்துகொள்ள முடிவுசெய்தார் தர்ஷன்'' என்று இந்த இனிய நிகழ்வு பற்றி சந்தோஷத்துடன் நம்மிடம் பகிர்ந்தார் அவருடைய உடன்பிறப்பு வினோத் ராஜகோபால்.
புன்னகை பொங்க பேசிய புதுமாப்பிள்ளை தர்ஷன், ''திருமணத்தில் இணையும் ஆண், பெண்ணுக்கு... தாய், தந்தை, உடன்பிறப்புக்கள் என உறவுகளின் பெருமை, திருமணம் எதற்காக செய்யப்படுகிறது, அதன் மதிப்பு என்ன என்பதை எல்லாம் தெரியாத மொழி யில் சொல்லப்படுவதால் திருமணம் என்பது அவர்களுக்கு ஒரு சடங்காகவே ஆகிவிடுகிறது. மேலும், கணவனை இழந்த தாய்க்கு பொது வாக திருமணங்களில் தனிமைப்படுதலே நடைபெறுகிறது. என் தந்தை காலமான நிலையில், தாயின் வாழ்த்துக்கள் எனக்கு மிகவும் முக்கியம். அவரை புறக்கணிக்கும் திருமண முறையில் எனக்கு ஈடுபாடு இல்லை. தமிழ் வழி திருமண முறையில் அத்தகைய புறக்கணித்தல் இல்லை என்பதோடு, கணவன் இல்லாத பெண்ணுக்கு, மிகுந்த முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. எனவேதான், தமிழ் வழி முறையில் திருமணம் செய்ய முடிவெடுத்தேன்'' என்றார். இவர், ஒரு ஊடகவியலாளர்!
சுவிட்சர்லாந்து மருத்துவமனையில் பணி புரியும் மணமகள் ஷோபாவுக்கு, இதெல்லாம் மிகவும் புதிது. ''தமிழ் வழி திருமணம் என்றார்கள். அது எப்படி இருக்கும் என்று மிகுந்த ஆவலுடன் இருந்தேன். திருமண நிகழ்வின் ஒவ்வொரு நொடியையும் மிகவும் உளப்பூர்வமாக அனுபவித்தேன். சடங்குகள், மந்திரங்கள் ஒவ்வொன்றுக்கும் அர்த்தம் புரிந்து செய்தது, மிகச் சிறப்பு!'' என்றார்.
''செம்புலப் பெயல் நீர் போல அன்புடை நெஞ்சம் கலக்கட்டும்'' என்று அழகு தமிழில் வாழ்த்தி விடைபெற்றோம்!
புரிதல் தரும் பிரியாத உறவு!
திருமணத்தை நடத்தி வைத்த மணிவாசகர் அருட்பணி மன்ற சீனிவாசன் பேசும்போது, ''தமிழ் முறை திருமணத்தில் மணமக்கள் மட்டுமல்லாது வாழ்த்த வந்தவர்களுக்கும் புரியும் வண்ணம் திருமண பந்தத்தை ஒப்பந்தம் செய்து, அதன் பெருமை உணர்ந்து அனைவரும் சாட்சியாக நின்று மணமக்களை வாழ்த்தலாம். இத்தகைய புரிதல் காரணமாக அந்த இடத்தில் ஒருமித்த ஆற்றல் உருவாகி, மிகவும் திருப்திகரமான திருமண உறவு மேலோங்கும். இது நாங்கள் நடைமுறையில் கண்ட உண்மை.
இந்தத் திருமண முறையானது மிகவும் செலவு குறைவானதும்கூட. நடிகர் கார்த்தி உட்பட 1,500 மணமக்களுக்கு தமிழ் திருமண வழிபாட்டுமுறை மூலம் திருமணம் செய்துவைத்திருக்கும் நாங்கள், வர்த்தக நோக்கில் இதைச் செய்யவில்லை. யாரிடமும் கட்டணம் இவ்வளவு என்று சொல்லி நிர்பந்திப்பதும் இல்லை. பல ஏழை மணமக்களுக்கு எங்கள் சொந்த செலவிலேயே திருமணம் செய்து வைத்திருக்கிறோம். பூப்புனித நன்னீராட்டு விழா, புதுமனைப் புகுதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளுக்கும் தமிழ் வழி வழிபாட்டு முறைகளை செய்துவரும் எங்களது நோக்கம்... தமிழ் வாழ்வியல் முறைகள் வலிமையானவை, வெற்றி தரக்கூடியவை என்பதை உணர்த்துவதே!'' என்றார் அழுத்தமாக.